Advertisement

விலகல் 13

யோசனையில் இருந்த பவித்ராவிடம் திவ்யா, “சாப்பிடாம அப்படி இன்னும் என்னடி யோசிக்கிற?” என்று கேட்டாள். 

“இல்லை.. காலையில் அவர் மேல் அவ்வளவு கோபமா இருந்த.. ரெண்டு தடவ அடிக்க கையை வேற ஓங்கியிருக்க! ஆனா இப்போ லவ் பண்றனு சொல்ற! எனக்கு உன் லாஜிக்கே புரியலை” 

புன்னகையுடன், “காதலில் லாஜிக்கிற்கு இடமில்லை..” என்றவள் தீவிர குரலில், “அவன் மேல் இப்பவும் எனக்கு கோபம் இருக்கத் தான் செய்கிறது” என்றாள். 

“தெளிவா குழப்புறடி” 

விஜய் பவித்ராவை பார்த்து, “குழம்புறதுக்கு மூளைனு ஒரு சமாச்சாரம் வேணுமே!” என்றான். 

பவித்ரா அமைதியான குரலில், “உனக்கு குழப்பமா இல்லையா?” என்று வினவினாள். 

“இல்லை” என்று அவன் பெருமை போல் கூற,

பவித்ரா நக்கலுடன், “ஹ்ம்ம்.. மூளை இருக்க போய் தான் நான் குழம்புறேன்.. இல்லை என்பதால் தான் நீ குழம்பலை” என்றாள். 

“பார் டா! கலாய்ச்சிட்டாங்களாம்!!!” 

“இல்லையே! உண்மையை சொன்னேன்” 

“ஆமா இவ பெரிய உண்மை விளம்பி!” 

பவித்ரா திவ்யாவை பார்த்து, “இவன் கிடக்கிறான் லூசு பையன்.. நீ சொல்லுடி” என்றான். 

விஜய் சிலிர்த்துக் கொண்டு எழ, பவித்ரா அலட்டிக் கொள்ளாமல் பார்க்க, திவ்யா புன்னகையுடன், “விடு விஜி” என்றாள். 

“இந்த சுண்டைக்காய் இப்பலாம் ரொம்ப பேசுது.. நல்லது இல்லை சொல்லிவை” என்றபடி அமர்ந்தான்.

பவித்ரா அவனுக்கு அழகு காட்டி முகத்தை திருப்பிக் கொள்ள அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

திவ்யா பவித்ராவிடம், “இப்போ உனக்கு என்ன சந்தேகம்? கோபம் இருக்கும் இடத்தில எப்படி காதல் வந்தது? காதல் வந்த பிறகும் கோபம் எப்படி இருக்கிறது என்றா?” 

“ஹ்ம்ம்” 

“இன்னைக்கு அவனை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு வந்தது தான்.. ஆனால் ஈர்ப்பு வேறு காதல் வேறு.. அவனது தைரியமும் ஆளுமையும் எனக்கு பிடித்து இருக்கிறது.. அவனோட தீர்க்கமான நேர் கொண்ட பார்வை என்னுள் ஊடுருவி சென்று அந்த பிடித்ததை அவன் மீதான கோபத்தையும் மீறி காதலா மாத்திடுச்சு..

அவனை பார்க்கும் போது, எனக்கு என்னவோ அவன் எனக்கு நெருக்கமானவன் போல்  தான் தோணுது.. அது ஏன்! எப்படினு எனக்கு தெரியலை.. ஆனா அந்த உணர்வு என் மனசுக்கு ஒரு இதத்தையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருது..

சில உணர்வுகளுக்கு விளக்கம் கிடையாது.. இதுவும் அப்படி தான்” என்றவள் மெல்லிய புன்னகையுடன் தோழியை பார்த்து, “என்ன முதல் கேள்விக்கு பதில் கிடைத்ததா?” என்று வினவினாள்.

அவளது விளக்கத்தை கேட்டு சிறிது வாய் திறந்தபடி அமர்ந்திருந்த பவித்ராவின் தலை அவளையும் அறியாமல் ‘ஆம்’ என்பது போல் ஆடியது.

திவ்யா, “அடுத்தது.. அவன் மேல் கோபம் குறைந்து இருந்தாலும் மறையவில்லை.. என்ன தான் நான் செய்தது தப்பு என்றாலும் அவன் என்னை அடித்தது தப்பு தான்.. என் அப்பா கூட என்னை அடித்தது இல்லை” என்றவளின் குரல் சிறிது கமறியது ஆனால் அடுத்த நொடியே தன்னை சமாளித்து மெலிதாக புன்னகைத்தாள்.

பவித்ரா அவளது தடுமாற்றத்தை கண்டுக்கொள்ளாதது போல், “சரி.. அடுத்து என்ன செய்யப் போற?” என்று தோழியின் எண்ணத்தை திசை திருப்பினாள். 

“என்னை பற்றிய அவனது எண்ணத்தை அறிந்த பின் என் காதலை சொல்லணும்” 

“இருந்தாலும் உன் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்குது” 

திவ்யா விரிந்த புன்னகையுடன், “நீ பயப்படலைனா தான் அதிசியம்” என்றாள்.

 

அப்பொழுது அங்கே வந்த சைமன் என்ற மின் மற்றும் மின்னணுவியல்(EEE) துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவன் மகிழ்ச்சி மற்றும் நக்கல் குரலில், “என்ன திவ்யா! சேதாரம் அதிகமோ!” என்றான். பின், “ச! அந்த கண்கொள்ளாக் காட்சியை நான் பார்க்காமல் போயிட்டேனே!” என்று போலியான வருத்தக் குரலில் முடித்தான்.

விஜய், “டேய் வேணாம்!” என்றபடி கோபத்துடன் எழுந்தான். அது நால்வர் அமரும் சதுர மேஜை. திவ்யாவும் பவித்ராவும் எதிர் எதிரே அமர்ந்திருக்க விஜய் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தான். சைமன் விஜய் எதிரில் இருந்த இருக்கை அருகே நின்றிருந்தான்.

விஜயின் கையை பற்றி அமர வைத்த திவ்யா அலட்டிக் கொள்ளாமல், “விடு விஜி.. இவன் எல்லாம் ஒரு ஆள்னு உன் எனர்ஜியை ஏன் வேஸ்ட் பண்ற?” என்றாள். 

சைமன் கோபத்துடன் திவ்யா அருகே வந்து, “அடி வாங்கியும் உன் திமிர் அடங்கலையே!” என்றான்.

திவ்யா அவனை கண்டுக்கொள்ளாமல் உணவில் கவனத்தை திருப்பினாள்.

சைமன் அதிகரித்த கோபத்துடன், “உன் திமிரை அடக்கலை என் பெயர் சைமன் இல்லைடி” என்றான். 

அவனை நிமிர்ந்து பார்த்த திவ்யா நிதான குரலில், “உன் பெயர் சூட்டும் விழாவிற்கு சொல்லி அனுப்பு, மறக்காமல் வரேன்” என்றதும் விஜய் வாய்விட்டு சிரித்தான்.

சைமன் விஜயை பார்த்து, “அனாலும் உன்னை பாராட்டியே ஆகணும்டா! அது எப்படிடா ஒரே நேரத்தில் ரெண்டு பிகரை கரெக்ட் பண்ணின!” என்று அதித நக்கலுடன் கூறினான். 

விஜய் கோபத்துடன், “டேய்” என்றபடி எழுந்தான்.

திவ்யா பல்லை கடித்துக் கொண்டு, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! நம் நட்பை பற்றி இவனுக்கு எல்லாம் புரியாது” என்றாள். 

சிரித்தபடி அதே நக்கல் குரலில், “நட்பு!” என்ற சைமன் விஜயை பார்த்து, “அது எப்படிடா ஒரே நேரத்தில் ரெண்டு பேரையும் திருப்திப் படுத்துற! முடியலைனா சொல்லு.. நான் வேணும்னா இவளை கவனிச்சிக்கிறேன்” என்றவன் துச்சாதனன் பார்வையுடன் பவித்ராவை நெருங்க, பவித்ராவை மறைத்தபடி வந்து நின்ற விஜய் கோபத்துடன் சைமன் சட்டையை பிடிக்கும் முன் திவ்யா சைமனின் கன்னத்தில் அடித்து இருந்தாள்.

பவித்ரா சிறு பயத்துடன் விஜயின் பின் மறைந்தபடி அவனது கையை இறுக்கமாக பற்றினாள். பவித்ராவின் பிடியில் இருந்தே அவளது பயத்தை உணர்ந்த விஜய் அவளை திரும்பிப் பார்த்து கண்களில் தைரியம் அளித்தான்.   

சைமன் திவ்யாவை அடிக்க கை ஓங்க, அவன் கையைத் தடுத்த திவ்யா, “சைமன் நீ இயல்பில் கேட்டவன் இல்லை.. என்னை காயப்படுத்துவதாக நினைத்து உன் தரத்தை நீயே தாழ்த்திக்காதே!” என்றாள். 

சைமன் தனது பேச்சில் பவித்ராவை இழுத்தது மட்டுமின்றி அவளை நெருங்கவும் கோபம் கொண்டு சட்டென்று அவனை அடித்த திவ்யா, அடித்த பிறகே சற்று சிந்தித்தாள். பிரச்சனை பெரிதாகி பவித்ராவின் பெயர் தேவை இல்லாமல் பேசப்படுவதை தவிர்க்கவே தற்போது அமைதியாக பேசினாள்.

சைமன் கோபம் மற்றும் நக்கல் குரலில், “என்ன! சாத்தான் வேதம் ஓதுது!!!” என்றான். 

“நான் சாத்தான்-னா நீ யாரு?” 

“ஏய்! நீ ரொம்ப பேசுற” 

“நீ மட்டும் குறைத்து பேசுறியா?” 

“அப்படி என்ன நான் இல்லாததை கேட்டுட்டேன்” 

“இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது திவி” என்றபடி விஜய் நகர பார்க்க, பவித்ரா பயத்தில் இன்னும் இறுக்கமாக அவன் கையைப் பற்றினாள்.

“விஜி” என்று அழைத்த திவ்யா கண்ணசைவில் ‘வேண்டாம்’ என்று நண்பனை தடுத்தாள். சைமன் திவ்யாவின் செய்கையை சிறு யோசனையுடன் பார்த்தான்.

பின் நிதானமான குரலில் விஜியிடம், “இவன் கேட்ட கேள்வியை செகண்ட் இயர் வினீத் கிட்ட கேளு” என்ற திவ்யா, சைமனைப் பார்த்து சிறு நக்கல் கலந்த மென்னகையுடன், “வினீத் யாருனு தெரியலையா! உன் தங்கை ஷரோனோட நண்பன்” என்றாள். 

சைமன் கோபத்துடன், “ஏய்!” என்று கத்தியபடி அவளை அடிக்க கையை ஓங்கினான்.

அவன் கையை மீண்டும் தடுத்தவள், “இப்போ புரியுதா! நான் ஏன் உன்னை அடித்தேன்னு” என்றவள் நண்பன் மற்றும் தோழியிடம், “வாங்க போகலாம்” என்று கூறி கிளம்பினாள்.

வெளியே சென்றதும் விஜய் ஏதோ பேச வாய் திறக்க, அவனை கண்ணசையில் தடுத்த திவ்யா பவித்ராவின் தோளில் கை போட்டு, “பவி அவன் சும்மா ஸீன் போட்டான்.. அவ்ளோ தான்.. நீ பயப்பட ஒன்றுமில்லை” என்றாள். 

“அவன் பார்த்த பார்வை” என்று அவள் உடல் சிலிர்க்க சிறு பயத்துடன் கூற, விஜய் கோபத்தில் பல்லை கடித்தான்.

திவ்யா, “அதெல்லாம் சும்மாடா.. நிஜமாவே அவன் அப்படிப் பட்ட கரெக்டர் இல்லை” என்றாள். 

“..” 

“ஏய் அவன் சும்மா தான்டி அப்படி பார்த்தான்.. ஏன் இப்போ நம்ம விஜியை ஒரு டிராமாவில் நடிக்கச் சொல்லி அப்படி பார்க்க சொன்னா அவன் கூட அப்படி பார்ப்பான்” என்றதும் விஜய் ‘என்னது!’ என்று மனதினுள் அலறியபடி திவ்யாவை பார்த்தான். அவள் புன்னகையுடன் கண்சிமிட்டவும் அவன் அவளை முறைத்தான்.

பவித்ரா, “இன்னைக்கு காலையில் கூட சஞ்சய் விஷயத்தில் நீ அவனை பொறுக்கினு தானே சொன்ன” என்றாள். 

“அது.. இப்போ பேசியது போல் சில நேரம் அவன் வரம்பு மீறி பேசுவான், அதனால் எப்போதும் நான் அவனை அப்படி தான் சொல்வேன்.. மத்தபடி நீ பயப்படும் அளவிற்கு அவன் கெட்டவன் இல்லைடா” என்றவள் மெல்லிய புன்னகையுடன், “அதான் அவன் உன்னை நெருங்கும் முன் விஜி ஹீரோ மாதிரி வந்து உன்னை மறைத்து நின்று காத்தானே!” 

திவ்யாவின் எண்ணம் போல் பவித்ரா சட்டென்று பயத்தில் இருந்து வெளி வந்து முகத்தை சுளித்து, “சீ! இவன் ஹீரோ வா!” என்று கூற,

அதே நேரத்தில் விஜய், “என்ன திவி! நீயும் மத்தவங்க மாதிரி தப்பா ஓட்டுற!” என்றான். 

நண்பனின் பின் தலையில் தட்டிய திவ்யா, “டேய் லூசு! உன்னை ஹீரோனு சொன்னேனே தவிர பவியின் ஹீரோனு சொல்லலையே! ஏன் ஹீரோ அவன் தோழியை காப்பாற்ற மாட்டானா?” என்றாள். 

விஜய் தெளிந்தவனாக, “ஓ காப்பாத்தலாமே!” என்றான்.

பவித்ரா, “யார் என்ன சொன்னாலும் நானும் திவியும் எப்பொழுதும் உன்னை சந்தேகப் பட மாட்டோம்.. நட்பிற்குள் சந்தேகத்திற்கு இடமில்லை” என்றவள் கிண்டலாக, “இருந்தாலும் திவி இவனை போய் ஹீரோனு சொல்லி ஹீரோ என்ற வார்த்தையை நீ கேவலப் படுத்தி இருக்க கூடாது” என்றாள். 

விஜயும் கிண்டல் குரலில், “பயத்துடன் என் கையை இறுக்கமாக பிடிக்கும் போது இது தெரியலையா!” என்றான். 

“அது.. என்னை விட நீ பலமானவன் அதான் பிடித்தேன்.. ஆனா அதுக்காகலாம் உன்னை ஹீரோனு ஒத்துக்க முடியாது” 

“உன்னை யாரு ஒத்துக்க சொன்னா! எனக்காக காத்திரும் என் தேவதை சொல்லுவா” 

பவித்ரா, “யாரு அந்த சுனிதா வா!” 

விஜய் முகத்தை சுளித்து, “சீ! ஏன்டி உனக்கு இந்த கொலை வெறி!” 

பவித்ரா நக்கலுடன், “இதை அவளுடன் கடலை வறுக்கும் போது சொல்றேன்” 

“ஹீ..ஹீ..ஹீ” என்று அவன் அசடு வழிய, தோழிகள் இருவரும், “ஐயோ பேய்!!” என்று போலியாக அலறியபடி ஓடினர்.

“அடிங்க!!” என்றபடி விஜய் புன்னகையுடன் அவர்கள் பின் ஓடினான்.

வேகத்தை குறைத்து பின் தங்கிய திவ்யா, “விஜி இந்த விஷயத்தை இத்துடன் விடு.. அவன் தேவை இல்லாமல் பவி பற்றியும் பேசியிருக்கான்.. அவள் பெயருக்கு பங்கம் வரக் கூடாது.. ஸோ இந்த விஷயத்தை இங்கேயே மறக்கிற!” என்றாள்.

“ஹ்ம்ம்… புரியுது” என்றவன் சிறு கோபத்துடன், “அவனை வேறு விஷயத்தில் வச்சு செய்யணும்” என்றான். 

“கண்டிப்பா” என்றபடி வகுப்பினுள் நுழைந்தவள் தன் இடத்தில் அமரவும் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்தது.

முதல் வகுப்பு தகவல்மறைப்பியல். ஹரீஷ் உள்ளே வந்து வருகை கணக்கெடுப்பை முடித்துவிட்டு பாடத்தை தொடங்கினான்.

 

Advertisement