Advertisement

ஹரீஷை தேடியவள் அவன் அங்கு இல்லை என்றதும், ‘ப்ச்.. போயிட்டானே! இப்போ என்ன பண்றது?’ என்று யோசித்தவள் ‘இது காதல் தானே!’ என்று சிறிது நேரம் யோசித்தாள்.

பிறகு, ‘நிச்சயம் காதல் தான்’ என்று உறுதியுடன் முடிவெடுத்தவள் ‘என் ஆசை நிறைவேறுமா? அவனும் என்னை காதலிப்பானா? என்னை பற்றி தெரிந்த பிறகும் என்னை உயிராய் நேசிப்பானா?’ என்று பெரிதும் தவித்தாள்.

சில நொடிகளிலேயே, ‘பாஸிடிவ்வாவே யோசிப்போம்.. அவன் காதலிக்கலைனா என்ன! நான் என் மேல் காதலை மலர செய்வேன்’ என்று உறுதிமொழி எடுத்தவள் ‘இப்போ என்ன செய்றது?’ என்று மீண்டும் யோசித்தாள்.

பின் ‘காதலை சொல்றதுக்கு முன் அவன் ஏன் அப்படி சொன்னான்னு தெரிஞ்சுக்குவோம்.. என் மேல் தவறான எண்ணத்தில் இருக்கும் போது என் காதலை சொன்னால், அதுக்கு மதிப்பு இல்லாமல் போய்டும்’ என்ற முடிவிற்கு வந்தாள்.

அப்பொழுது பியூன் வந்து, “சேர்மன் சார் கிளாஸ்க்கு போக சொன்னார்” என்றான்.

அவள் புன்னகையுடன், “கிளாஸ்க்கு தான் போறேன்” என்று கூறியபடி எழுந்தாள்.

மணியை பார்த்தவள் ‘நல்ல வேளை ஃபோர்த் ஹவர் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் ஆச்சு’ என்று கூறிக் கொண்டு வகுப்பை நோக்கிச் சென்றாள்.

 

அவள் வகுப்பிற்கு சென்றபோது மணிமேகலை தான் வகுப்பில் இருந்தார்.

திவ்யா மனதினுள், ‘இன்னுமா பெல் கிளம்பலை!’ என்று நினைத்தாள்.

பாடம் நடத்தியபடியே திரும்பிப் பார்த்த மணிமேகலை இவளை கண்டதும் முறைக்க, இவளோ பல்லை காட்டி சிரித்தாள்.

மணிமேகலை, ‘இவ லைட்டா சிரிச்சதுக்கே சேர்மன் முன்னாடி போய் நின்னோம்! இப்போ என்ன ஆப்போ!’ என்று மனதினுள் அலறியபடி அவளை உள்ளே வருமாறு செய்கை செய்தார்.

உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தவள் பவித்ராவிடம், “இந்த ஹவரும் பெல் தானா?” என்று கேட்டாள். 

“ஆமா” என்றவள், “எதுக்குடி வெளியே போன?” 

“அதை அப்புறம் சொல்றேன், இப்போ ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா?” 

“என்ன?” என்று பவித்ரா சிறு ஆர்வத்துடன் தோழியை பார்த்த்துக் கேட்டாள்.

மணிமேகலை, “பவித்ரா லிஸன் தி கிளாஸ்” என்றதும், பவித்ரா, “எஸ் மேம்” என்றாள்.

கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த மணிமேகலையின் முதுகை திவ்யா சிறு எரிச்சலுடன் முறைத்தாள்.

இரண்டு நிமிடங்கள் கழித்து பவித்ரா, “திவி” என்று அழைத்தாள்.

“என்ன?” 

“குட் நியூஸ் என்னனு சொல்லு” 

“லஞ்ச் பிரேக்கில் சொல்றேன்” 

“அதுக்கு நீ சொல்லாமேயே இருந்திருக்கலாம்” 

“உன்னிடம் தான் பஸ்ட் சொல்லப் போறேன்.. தடையில்லாமல் சொல்லணும்.. ஆனா பெல் விடாது.. நீ கிளாஸ்ஸை கவனி” என்றாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த பவித்ரா, “ப்ளீஸ்டி சொல்லேன்” என்றாள். 

“சரி வா கேன்டீன் போய் பேசிட்டு வருவோம்” 

பவித்ரா முறைக்கவும், திவ்யா, “முடியாது தானே, அப்போ அமைதியா கிளாஸ் கவனி” என்றாள்.

அப்பொழுது திவ்யா மேல் சுண்ணத்துண்டு விழுந்தது. அவள் திரும்பி பார்த்ததும், விஜய், “என்ன பண்ணிட்டு வந்த?” என்று செய்கையில் வினவினான்.

“ஒண்ணும் பண்ணலை” என்று அவளும் செய்கையில் கூறினாள்.

“அப்போ எதுக்கு போன?” 

அவள் புன்னகையுடன், “சும்மா” என்றாள்.

அவன் அவளை நம்பாமல் பார்க்கவும், அவள், “அப்புறம் சொல்றேன்” என்று செய்கை செய்தாள்.

அப்பொழுது மணிமேகலை சிறு கோபத்துடன், “திவ்யா” என்று அழைத்தார்.

அவள் அவரை பார்க்கவும், “நீ தான் கிளாஸ் கவனிக்கலை.. மத்தவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ற?” என்றார்.

திவ்யா திரும்பி, “விஜி நீ கிளாஸ் கவனிக்கிற!?” என்று வினவியதும், ஒரு நொடி முழித்தவன் அடுத்த நொடி, “இல்லையே” என்றான்.

திவ்யா புன்னகையுடன் மணிமேகலையை பார்க்க, அவர் கோபத்துடன், “ரெண்டு பேரும் வெளியே போங்க” என்றார்.

 

திவ்யா எழுந்து நின்று புன்னகையுடன் ஆங்கிலேயர் முறையில் தலை குனிந்து, “தன்க் யூ மேம்” என்று கூறிவிட்டு வெளியே சென்று நின்றாள். விஜய்யும் புன்னகையுடன் அவள் அருகில் வந்து நின்றான். இருவரும் கை தட்டிக் கொள்ள மணிமேகலை கோபத்தில் பல்லை கடித்தார்.

அவர் அவர்களை முறைத்துக் கொண்டு நிற்கவும், திவ்யா, “கவனிக்கிறவங்களுக்கு கிளாஸ் எடுங்க மேம்” என்றாள்.

அவர் முறைத்துவிட்டு வகுப்பைத் தொடர்ந்தார்.

விஜய் மெல்லியக் குரலில், “எங்கே போன?” என்று கேட்டான். 

“அதுவா! அவனை பற்றி யோசிச்சிட்டு இருந்தேனா.. அவன் குணம் என்னனு குழப்பமாவே இருந்தது.. தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு அவனிடமே கேட்டிரலாம்னு நினைத்தேன்.. என்னையும் அறியாமல் எழுந்து நின்னுட்டேன்.. பெல்லை சமாளிக்க வெளிய போயிட்டேன்.. சரி வந்தது வந்தாச்சு அவனை போய் பார்க்கலாம்னு போனா அங்கே நம்ம கருத்து(அரவிந்த் அவர்களுக்கு சில நேரம் அறிவுரை கூறுவதால் கருத்து கந்தசாமி னு பெயர் வைத்தவள் அதை கருத்து என்று சுருக்கி இருந்தாள்) மட்டும் தான் இருந்தார்.. அவனை சேர்மன் கூப்பிட்டதா சொன்னதும் அங்கே போனேன்” என்றவள் அங்கே நடந்ததை மட்டும் சுருக்கமாக கூறினாள்.

விஜய், “அம்மாடியோவ் எம்புட்டு பெரிய பிளாஷ்-பக்!!!” என்று போலியாக வியந்தான்.

திவ்யா முறைக்கவும், சிரித்தபடி, “சும்மா டா” என்றவன், “சரி நீ ஏன் அவர் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்கலை?” என்று கேட்டாள். 

“நீயும் பவி மாதிரி அவர்னு சொல்ற!!!” என்றவள் “சரி சரி அபப்டியே சொல்லு” என்று சேர்த்து சொன்னாள்.

அவன், “நீயா பேசியது! நீயா பேசியது!” என்று ராகம் இழுத்தான்.

“ஏன் அரவிந்த் சாரை ஒருமையில் பேச மாட்டேன் தானே!” 

“ஆனா இவர் உன்………………..” 

“உன்னை தான் அவர்னு பேசிக்கோனு சொன்னேன் நான் அப்படி பேசுவேன்னு சொல்லலையே!” 

“அதானே பார்த்தேன்” 

“நீ ஏன் அவர்னு சொன்ன?” 

“காலையில் அவர் பார்த்த பார்வையே அப்படி சொல்ல வைக்குது.. சரி நீ ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னு கேட்டேனே!” 

“அது” என்று அவள் சிறிது திணற, அவன் அவளை வினோதமாக பார்த்தான்.

அப்பொழுது வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவேளை தொடங்குவதற்கான மணி அடிக்கவும் இருவரும் உள்ளே சென்றனர். மணிமேகலை இவர்களை முறைத்துவிட்டே வெளியே சென்றார்.

பவித்ரா பரபரப்புடன், “இப்போ சொல்லுடி.. என்ன குட் நியூஸ்?” என்று கேட்டாள். 

விஜய் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.

திவ்யா, “கேன்டீன் போய் பேசலாம்” என்றாள். 

பவித்ரா முறைக்கவும், “முக்கியமான விஷயம்டி.. வா” என்ற திவ்யா தோழியையும் நண்பனையும் இழுத்துக் கொண்டு கல்லூரி உணவகத்திற்கு சென்றாள். செல்லும் வழியில் நண்பனிடம் கூறியதை தோழியிடமும் சுருக்கமாக கூறியிருந்தாள்.

 

மூவரும் சற்று ஒதுங்கி இருந்த மேஜையில் அமர்ந்தனர். பவித்ராவும் விஜய்யும் தோழியை யோசனையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்தனர்.

திவ்யா புன்னகையுடன், “நான் ரிஷியை லவ் பண்றேன்” என்றாள்.

பவித்ராவும் விஜய்யும், “என்ன!!” என்று அதிர்ந்தனர். முதலில் சுதாரித்த விஜய், “அது யாரு ரிஷி?” என்று வினவினான்.

“எதுக்கு இவ்ளோ ஷாக்?” என்ற திவ்யா பவித்ராவை பார்த்து, “பவி அன்னைக்கு உன்னிடம் சொன்னது போல் எனக்கே எனக்கானவனை நான் கண்டு பிடிச்சுட்டேன்.. அவனுடன் திகட்ட திகட்ட காதல் வாழ்க்கை வாழ்வேன்” என்று கண்ணில் காதலுடன் கனவில் மிதப்பவள் போல் புன்னகையுடன் கூறினாள்.

பவித்ரா மகிழ்ச்சியுடனும் கவலையுடனும் தோழியை பார்க்க, விஜய் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தான்.

பவித்ராவின் கவலை தோழி விரும்புகிறவன் நல்லவனாக இருந்து அவளின் மனம் புரிந்து அவளது ஆசையை போல் அவளை உயிராக விரும்ப வேண்டுமே என்று!

முதல் முறையாக தோழியை இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பரவச நிலையில்  பார்த்த விஜய் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் கொண்டாலும் அவள் வாழ்க்கை இனியாவது இனிமையாக செல்லும் என்று மகிழ்ச்சிக் கொண்டான்.

விஜய் அவள் கையை குலுக்கி, “சூப்பர் மச்சி.. நிச்சயம் உன் விருப்பம் போல் நடக்கும்” என்றான்.

கனவில் இருந்து வெளியே வந்த திவ்யா, “தேங்க்ஸ் விஜி” என்றாள்.

“அப்படியே அந்த ரிஷி யாருன்னு சொல்லிடு” 

திவ்யா சிறு வெட்கத்துடன், “ஹரீஷ்” என்றாள்.

பவித்ரா நெஞ்சில் கை வைத்து, “என்ன!” என்று அதிர்ந்தாள்.

திவ்யாவோ அதை கண்டு கொள்ளாமல், “ஹரீஷை எல்லோரும் ஷார்ட்டா ஹரி-னு தானே கூப்பிடுவாங்க, அதான் எனக்கு மட்டும் ரிஷி” என்றாள் புன்னகையுடன்.

விஜய் பெயரை கேட்டதும் சிறிது அதிர்ந்தாலும் வெளியே கட்டாமல், “பார் டா! நம்ம திவிக்கு வெக்கமெல்லாம் வருது” என்று புன்னகையுடன் கிண்டல் செய்தான்.

திவ்யா, “டேய்!” என்று புன்னகையுடன் செல்லமாக மிரட்டினாள்.

“அதான் மேடம் சார் மேல் கம்ப்ளைன்ட் பண்ணலையா!!!!” என்று மீண்டும் கிண்டல் செய்தான்.

“ஹ்ம்ம்.. ஏன் கம்ப்ளைன்ட் பண்ண தோணலைனு யோசிச்சிப்ப தான் என் மனதை நான் உணர்ந்தேன்” என்றவள் பவித்ராவை பார்த்து, “இன்னுமாடி நீ ஷாக்கில் இருந்து வெளி வரலை!!!” என்றாள். 

“நீ நிஜமா தான் சொல்றியா திவி?” என்று பவித்ரா வினவ, திவ்யா அவளை முறைத்தாள்.

பவித்ரா, “இன்னைக்கு தானே இரண்டாவது முறை பார்க்கிற!” 

“லவ் அட் பஸ்ட் சைட் இருக்கிறப்ப லவ் அட் செகண்ட் சைட் இருக்க கூடாதா?” 

விஜய், “அதானே! நான் உனக்கு தான் சப்போர்ட் மச்சி” என்று கை தட்டினான்.

அவனை முறைத்த பவித்ரா, “அவரை பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதே!” என்று சிறு கலக்கத்துடன் கூறினாள். 

திவ்யா, “கொஞ்சம் முன் கோபக்காரன்.. பெண்களிடம் வழியிறது இல்லை.. தியேட்டர் விஷயத்தில் இருந்தே ‘எட்டி நில் எச்சரிக்கிறேன்’ என்ற அவனது மனோபாவனை புரியுது..

அதிகம் பேசாமல் பார்வையிலேயே எதிரில் இருப்பவர் எண்ணத்தை படிக்கிறான்.. பார்வையிலேயே நம்ம கிளாஸ்ஸை கண்ட்ரோல் பண்ணது, இன்ட்ரெஸ்டிங்கா சூப்பரா பாடம் நடத்துறதுனு எல்லாமே கெத்து..

கலர் கம்மினாலும் பார்க்க ஸ்மார்ட்டா இருக்கிறான்” என்று அடுக்கினாள். 

பவித்ரா ‘அடி பாவி’ என்பது போல் பார்க்க, விஜய், “சூப்பர் மச்சி” என்றான்.

திவ்யா, “ஆனாலும் தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு தெரிஞ்சுக்கணும்… அது மட்டும் இடிக்குது” என்றாள். 

பவித்ரா, “இதெல்லாம் சரி ஆனா அவர் உன் மேல் கோபத்தில் இருக்கிறாரே!” என்றாள். 

“கோபத்தில் தானே இருக்கிறான்! வெறுப்பில் இல்லையே!” என்றவள் யோசனையுடன், “ஆனா எனக்கு என்னவோ அவன் உள்ளுக்குள் என் செய்கையை, பேச்சை ரசிப்பது போல் தான் தோணுது” 

“ஆமா ரசிக்கிறவர் தான் உன்னை அடிச்சாராக்கும்!” என்று பவித்ரா கூற,

“என்னவோ பச்சி அப்படி தான் சொல்லுது” என்றாள். 

“எனக்கு என்னவோ காதல் கொண்ட உன் மனம் உனக்கு சாதகமா யோசிப்பதுப் போல் தோணுது.. பார்த்துடி”  என்று பவித்ரா சிறு கவலையுடன் கூறினாள்.

“இல்லை.. ஒரு சாராக ஸ்டுடென்ட்டான என் மேல் அவனுக்கு கோபம் இருக்கலாம் ஆனா அதையும் மீறி அவனுள் என் மீது ஒரு பிடித்தம் இருப்பது போல் தான் எனக்கு தோணுது” என்றவள் உணவு விடுதியில் நடந்ததை சுருக்கமாக கூறி, “என் உணர்வுகளை அவன் துல்லியமா படிக்கிறான்.. ‘என்னாச்சு? ஏன் இப்படி இருக்கிற?’ னு அவன் கேட்ட போது அவன் குரலில் அக்கறையை நான் உணர்ந்தேன்” என்றாள். 

பவித்ரா, “உன் இடத்தில் வேறு ஒரு பொண்ணு இருந்தாலும் அப்படி தான் கேட்டிருப்பாரோ என்னவோ!” 

அவளை முறைத்த திவ்யா விஜயை பார்த்து, “நீ என்ன நினைக்கிற விஜி?” என்று கேட்டாள். 

“அவர் உணர்வுகளை சரியா கவனிக்கலை.. இனி என் வேலை அது தான்” என்று புன்னகையுடன் கட்டை விரலை காட்டினான்.

திவ்யா புன்னகைக்க, தன் கலக்கத்தை மறைத்து, “இதையாவது ஒழுங்கா செய்” என்ற பவித்ரா மனதினுள் தோழிக்காக பிராத்தனை செய்தாள்.

பவித்ரா கூறியதை கேட்டு விஜய் அலட்சிய பாவனையில் உதட்டை சுழித்தான்.

இணைய காத்திருப்போம்…

Advertisement