Advertisement

சுதாரித்துக் கொண்டு பதில் சொல்ல வாய் திறந்த ராஜாராம் என்ன சொல்லி இருப்பாரோ, ஆனால் அதற்கு முன், “அவர் காலேஜில் படிக்கிற ஸ்டுடென்ட் என்ற உறவு தான்” என்றபடி ராஜாராமை முறைத்தபடி உள்ளே வந்த திவ்யா ஹரீஷின் பார்வை தன் பக்கம் திரும்பவும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு அவனை அழுத்தத்துடன் பார்த்தாள்.

 

 

      மணி அடித்து ஆசிரியர் மணிமேகலை வகுப்பினுள் வந்ததைக் கூட உணராமல் ஹரீஷை பற்றிய சிந்தனையில் இருந்த திவ்யா பவித்ராவின் ஊந்துதலில் தான் அவர் வந்ததும் எழுந்து அமர்ந்து, அவர் வருகை கணகெடுத்த பொழுது ‘எஸ் மேம்’ என்றாள்.

ஹரீஷை பற்றிய தீவிர சிந்தனையில் இருந்தவள், ஒரு கட்டத்தில் அவனை பற்றி அறிந்தே ஆக வேண்டும் என்ற வேகம் எழ, அதை அவனிடமே கேட்டால் தான் தெரிந்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அவனை பார்க்கும் எண்ணத்துடன் எழுந்தே விட்டாள்.

வகுப்பின் நடுவே திடீரென்று அவள் எழுந்து நிற்கவும் மணிமேகலை, “என்ன?” என்று வினவினார்.

அவள் அவளது சிந்தனையில் உழன்றபடி, “அவனிடம் கேட்கணும்” என்றாள்.

பாடத்தில் சந்தேகம் தான் கேட்கப் போகிறாள் என்று நினைத்தவர் அவளது பதிலில் குரலை சற்று உயர்த்தி, “வாட்?” என்றார்.

அவரது குரலில் சுதாரித்தவள், “வெளியே போகணும்” என்றாள்.

அவர் முறைக்கவும், “ரெஸ்ட்ரூம் போகணும்” என்றாள்.

“பிரேக்கில் என்ன பண்ண?” 

“வரப்ப தான் போக முடியும்” என்றவள் அவரது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.

அவர் அவளை திட்டியபடி பாடத்தை தொடர்ந்தார்.

பவித்ரா மேல் சுண்ணத்துண்டை எறிந்த விஜய், அவள் திரும்பியதும், செய்கையில் ‘என்ன?’ என்று வினவினான்.

பவித்ராவும் செய்கையில் ‘தெரியலை’ என்று கூற, அவன் முறைத்தான். பதிலுக்கு இவளும் முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

வெளியே சென்ற திவ்யா ஆண் ஆசிரியர்கள் அறைக்கு சென்று, “ஹரீஷ் சாரை பார்க்கணும்” என்றாள்.

ஆசிரியர் அரவிந்த், “உன் புண்ணியத்தில் சேர்மன் சாரை பார்க்க போயிருக்கார்” என்றதும் அவசரமாக ராஜாராம் அறையை நோக்கி வந்தவள் கதவை திறந்தப் பொழுது தான் ஹரீஷ் அவர்களின் உறவை பற்றிக் கேட்டான்.

 

திவ்யாவின் பதிலை கேட்டு, ‘சாதாரண ஸ்டுடென்ட் இப்படி தான் பெர்மிஷன் இல்லாமல் சேர்மன் அறைக்குள் வருவாளா?’ என்ற கேள்வி ஹரீஷ் மனதினுள் எழுந்தாலும் ராஜாராம் முன்னிலையில் அமைதியாக நின்றான்.

ராஜாராம், “யாராக இருந்தாலும் அனுமதி கேட்ட பிறகு தான் என் அறைக்குள் வரணும்” என்று அழுத்தத்துடன் கூறினார்.

திவ்யா அலட்டிக் கொள்ளாமல், “இதற்கு முன் இப்படி வந்தது இல்லையே! நீங்க என்னை பற்றி பேசுவதால் வந்தேன்” என்றாள்.

ஹரீஷ், “நாங்க உன்னை பற்றி பேசவில்லையே” என்றான். 

“நான் இவருக்கு என்ன உறவுனு கேட்டது என்னை…………….” 

“சாரை பற்றி தெரிந்துக்கொள்ள கேட்டேன்” 

அவள் அவனை முறைக்க, அவன் இதழோரம் மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான்.

திவ்யா கோபத்துடனும் கடுப்புடனும் ராஜாராமை பார்த்து, “இவனை எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று வினவினாள். 

“திவ்யா மரியாதை கொடுத்து பேசு” என்று ராஜாராம் கண்டிக்கும் குரலில் கூற, அப்பொழுது தான் ஹரீஷை ஒருமையில் பேசியதை உணர்ந்தாள்.

மன்னிப்பு கேட்க மனம் நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக நின்றாள்.

ராஜாராம், “திவ்யா” என்று கடுமையான குரலில் அழைத்தார். அவரது குரலே ‘நீ மன்னிப்பு கேட்டே ஆகணும்’ என்று சொல்லியது.

அவள் வேண்டா வெறுப்புடன் “சாரி” என்று மெல்லிய குரலில் கூறினாள் ஆனால் அதை ராஜாராமிடம் தான் கூறினாள்.

அவர், “என்னிடம் ஏன் சொல்ற?” என்று கூற, 

அவள் கடுப்புடன், “ஏதோ ஒன்று.. சொல்லிட்டேன் தானே!” என்றாள். 

ஹரீஷ் சுவாரசியத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

ராஜாராம் அவளை முறைத்க்க, அவளோ, “இவரை எதுக்கு கூபிட்டீங்க?” என்று மீண்டும் கேட்டாள். 

ராஜாராம் பதில் சொல்லும் முன், ஹரீஷ், “சேர்மன் அண்ட் ஸ்டாஃப் பேசுறதை எதுக்கு ஸ்டுடென்ட் கிட்ட சொல்லணும்?” என்று கேட்டிருந்தான். 

“நான் உன்..உங்களிடம் கேட்கலை” என்று முகத்தை திருப்பிக் கொண்டு ராஜாராமை பார்த்தாள்.

அவரோ ‘இங்கே என்னங்கடா நடக்குது?’ என்பது போல் இருவரும் போடும் சண்டையை பார்த்தார். அவர் இருவரையுமே சிறு ஆச்சரியத்துடன் தான் பார்த்தார். ஒரு ஆசிரியர் முன் திவ்யா அவரிடம் இப்படி நடந்துக்கொள்வது இதுவே முதல் முறை. அதை போல் ஒரு ஆசிரியர் பயமின்றி திவ்யாவை கண்டிப்பதும், அவர் முன்னிலையிலேயே எதிர்த்து பேசுவதும்  இதுவே முதல் முறை.

திவ்யா, “சார்” என்று அழுத்தத்துடன் அழைத்தாள்.

ஹரீஷ் சொன்னதிற்கு சாதகமாக பேச நினைத்தவர் திவ்யா முகத்தில் தெரிந்த தன் மீதான நம்பிக்கையில், “காலையில் நடந்ததை பற்றி கேட்க கூப்பிட்டேன்” என்றார்.

திவ்யா ஹரீஷை வெற்றிப் பார்வை பார்க்க,

அவனோ அலட்டிக் கொள்ளாமல், “காலையில் நடந்ததுனு தான் சார் சொன்னாங்க.. உன்னை பற்றி பேசியதாக சொல்லலையே!” என்றான்.

‘இன்னுமாடா மீசையில் மண் ஓட்டலைனு சொல்ற’ என்பது போல் அவனை பார்த்தவள் ராஜாராமிடம், “இப்போ நான் இவர் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தால் என்னாகும் சார்?” என்றவள் முடிக்கும் போது ஹரீஷை மிதப்பாக பார்த்தாள்.

அவனோ சிறிதும் பதறாமல் ‘என்ன வேணாலும் பண்ணிக்கோ’ என்ற அலட்சியத்துடன் அவளை பார்த்தான்.

அவனது தைரியத்தை அவளது மனம் ரசித்தது ஆனால் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“நீ கம்ப்ளைன்ட் கொடுத்தால் சொல்றேன்” என்ற ராஜாராமின் குரலில், பார்வையை சிறு யோசனையுடன் அவர் பக்கம் திருப்பினாள்.

அவர், “நீ கம்ப்ளைன்ட் கொடுக்க நினைத்து இருந்தால், சம்பவம் நடந்ததும் கொடுத்து இருப்ப” என்றார். 

“அது.. நீங்க அப்போ வரலை” என்று சிறு தடுமாற்றத்துடன் கூறினாள்.

“நீ கம்ப்ளைன்ட் கொடுக்க நினைத்து இருந்தால், கம்ப்ளைன்ட் கொடுக்காமல் கிளாஸ் உள்ளே போயிருக்க மாட்ட” என்றவர் அவளை கூர்மையுடன் பார்க்கவும்,

“ஏன் இப்போ கொடுக்க கூடாதா?” என்று கேட்டாள். 

“கொடுக்கலாமே! அக்சன் எடுக்கட்டுமா?” 

அவளது மனம் முதல் முறையாக படபடத்தது. ஏனோ அவன் மேல் புகார் கொடுக்க அவள் மனம் சிறிதும் விரும்பவில்லை. அதை ராஜாராம் அறிந்துக் கொண்டதில் தான் அவளிடத்து இந்த படபடப்பு.

அவளை ராஜாராம் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, ஹரீஷ் ஆச்சரியம் கலந்த ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

அவள் ‘ஏன்டா வந்தோம்’ என்று நொந்துக் கொண்டாள். அதை மறைக்க ஹரீஷை முறைத்தவள் அவனது இதழோர சிரிப்பை கண்டு கோபம் கொண்டாள். கூடவே ஒரே நேரத்தில் அவனை ரசிப்பதும், கோபம் கொள்வதுமாக அவளது மனமே அவளுக்கு எதிராக செயல்பட, இயலாமையில் அதிகம் கோபம் கொண்டாள்.

அவள் அவளாக இல்லாத நிலையில் அவளையும் அறியாமல் அவனை நெருங்கி அடிக்க கையை ஓங்கியவள், ராஜாராமின் “திவ்யா!” என்ற அழைப்பில் சுதாரித்து கையை இறக்கி, “உன்னை எதிர்த்தால் என்னை பொண்ணு இல்லைனு சொல்லுவியா?” என்று கோபத்துடன் வினவினாள்.

அவனை அடிக்க கையை ஓங்கியதிற்காக மனதினுள் வருந்தினாலும் எப்பொழுதும் போல் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

ராஜாராம் கோபத்துடன், “திவ்யா என்ன காரியம் செய்யப் பார்த்த! சாரி கேள்” என்றார். 

“என்னை அடித்ததிற்கும், என்னை தவறா பேசியதிற்கும் அவர் மன்னிப்பு கேட்டால், நானும் மன்னிப்பு கேட்கிறேன்” என்றாள். 

“திவ்யா.. எல்லோரும் சொல்றது போல் நான் தான் உன்னை கெடுத்துட்டேன் போல! ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோபமும், தெனாவெட்டும் ஆகாது…………….” 

“அது என்ன! ஒரு பொண்ணு கோபப் பட்டால் மட்டும் அது தப்பு!” என்று கோபமாக கேட்டவள் ஹரீஷை கை காட்டி, “இவர் என்னடானா நான் பொண்ணே இல்லை என்பது போல் சொல்றார்” என்றபோது அவளையும் மீறி அவளது குரல் சிறிது கலங்கியது.

ஆனால் அடுத்த நொடியே நிமிர்வுடன் ராஜாராமை பார்த்து, “அவர் மேல் டீயை கொட்டியது தப்பு தான்.. அதுக்கு நான் சாரி கேட்டுட்டேன்..” என்றவள் அவனை பார்த்தபடி, “அவர் என்னை அடித்திற்கும், இதுவரை என்னை தப்பா பேசிய எல்லாதிற்கும் மன்னிப்பு கேட்டால், நானும் கேட்கிறேன்” என்றாள்.

பின் மீண்டும் பார்வையை ராஜாராம் பக்கம் திருப்பி, “அவர் என் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தால் தாராளமா என்னை காலேஜை விட்டு தூக்குங்க.. நான் அவர் மேல் எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்கலை” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

 

ராஜாராம், “சாரி ஹரீஷ்..” என்று ஆரம்பிக்க, அவரை இடையிட்டு,

“நீங்க ஏன் சார் சாரி சொல்றீங்க! இதை இத்துடன் விடுங்க சார்” என்றவன், “அவள் அப்பா பிரச்சனை பண்ணால் நான் பார்த்துக்கிறேன் சார்” என்றான்.

ராஜாராம் சங்கடத்துடனும் சிறு கவலையுடனும் அவனை பார்க்க,

புன்னகையுடன், “இங்கே நடந்ததை மறந்துருங்க சார்..” என்றவன், “நானும் மறந்துறேன்” என்று அழுத்திக் கூறினான்.

அதையும் மீறி அவர், “திவ்யா” என்று தயங்க,

அவன், “பழிவாங்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை சார்.. கவலைப் படாதீங்க.. உங்களிடம் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.. என்றைக்கும் உங்கள் நிம்மதி கெடும்படி நான் நடந்துக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியான குரலில் கூறினான். 

“எதையும் எதிர் பார்த்து நான் உதவி செய்வதில்லை” என்றவர், “திவ்யா பிரச்சனை செய்தால் சொல்லுங்க” என்றார். 

“அவளை நானே சமாளிச்சுப்பேன் சார்.. சரி சார், நான் கிளம்புறேன்” என்று புன்னகையுடனே விடை பெற்றான்.

அவள் ராஜாராம் முன்னிலையில் அடிக்க  கை ஓங்கியதும் அவனுக்கு அவள் மேல் கடும் கோபம் வந்தது தான் ஆனால் அவளது கலங்கிய குரலையும், வருந்திய விழிகளையும் கண்ட நொடியில் கோபம் எங்கே சென்றது என்று அவனுக்கே தெரியவில்லை.

இணைய காத்திருப்போம்…

Advertisement