Advertisement

விலகல் 11

திவ்யா குழுவினர் வெளியே சென்றதும் ஒரு ஆசிரியர் ஆச்சரியத்துடன், “அவ மன்னிப்பு கேட்டு இப்போ தான் சார் பார்க்கிறேன்.. எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை” என்றார். 

தங்ககுமார், “அதெல்லாம் கேட்டிருக்கா.. ஆனா அவளோட தப்பை உணர்ந்து கேட்டது இல்லை.. அவளோட நண்பன் விஜயை காப்பாற்ற கேட்டிருக்கா” என்றார். 

ஹரீஷ் புருவம் சுருங்கவும், தங்ககுமார், “என்ன சார்?” என்றார். 

ஹரீஷ், “இப்போ அவ உண்மையா தான் கேட்டுட்டு போறா” என்றான். 

தங்ககுமார் புன்னகையுடன், “அவள் நடிப்பை நம்பிட்டீங்களே!” என்றார். 

ஹரீஷ் ‘இல்லை’ என்பது போல் தலையை அசைக்க,

அரவிந்த் என்ற ஆசிரியர்(ஹரீஷை நக்கல் செய்தவர்), “ஹரீஷ் சார் சொல்றது சரி தான்.. இப்போ உண்மையா தான் மன்னிப்பு கேட்டாள்.. அவ முகத்தை நான் பார்த்துட்டு தான் இருந்தேன்.. அதில் அலட்சியமோ போலித் தன்மையோ இல்லை” என்றார். பின் ஹரீஷிடம், “அது என்ன சார் டீயை ஊத்தியதிற்கு மட்டும்னு அழுத்தி சொல்லிட்டு போறா!” என்று கேட்டார். 

ஹரீஷ் மெல்லிய புன்னகையுடன், “அதை அவளிடம் தான் கேட்கணும்” என்றதும், 

“நீங்க அழுத்தகாரர் சார்” என்றவரின் புன்னகை ‘நான் நீ சொன்னதை நம்பவில்லை’ என்று சொல்லாமல் சொன்னது.

அதற்கும் அவன் புன்னகையை தான் பதிலாகத் தந்தான்.

அப்பொழுது ஏவல் பணியாள்(peon) வந்து ஹரீஷை சேர்மன் அழைப்பதாக கூறிச் சென்றார்.

ஹரீஷ் சாதாரணமாக கிளம்ப, தங்ககுமார், “உங்களுக்கு கொஞ்சம் கூட பதற்றமா இல்லையா?” என்று கேட்டார். 

“எதுக்கு பதற்றப் படனும்? நான் தப்பெதுவும் செய்யலையே!” என்றவன், “தப்பே செய்திருந்தாலும் அதை எப்படி சரி செய்றதுன்னு யோசிக்கணுமே தவிர பதற்றப் படக் கூடாது” என்று கூறி செல்ல,

தங்ககுமார், “இப்போ என்ன சொல்லிட்டு போறார்! தப்பு செய்ததா சொன்னாரா செய்யலைனு சொன்னாரா?” என்று குழப்பத்துடன் கேட்டார். 

இன்னொரு ஆசிரியர், “இப்போ அது எதுக்கு! பெல் அடிச்சாச்சு.. கிளாஸ் போகலையா?” என்றதும், 

“ஆமா.. மறந்துட்டேன்” என்று கூறி அவசரமாக கிளம்பினார்.

 

 

வகுப்பறைக்கு வந்ததும் பவித்ரா, “அது என்னடி அப்படி ஒரு சாரி கேட்ட?” என்று வினவினாள். 

“அதுக்காக மட்டும் தான் கேட்க தோனுச்சு, அதான் அப்படி கேட்டேன்” 

“அதுக்கு என்ன அர்த்தம்?” 

“நீ என்ன நினைக்கிற!”

 “நீ நினைப்பதை நீயா சொன்னால் தான் உண்டு” 

“அப்படிங்கிற!” 

“அதில் என்ன சந்தேகம் உனக்கு?” 

திவ்யா சிறு யோசனையுடன், “ஆனா அவனுக்கு புரிஞ்சிருச்சே!” என்றாள். 

“அப்படியா!!! நீ எதை வைத்து அப்படி சொல்ற?” 

“முதலில் புரியலை ஆனா புரிந்ததும் அவன் இதழோரம் சின்னதா ஒரு சிரிப்பு தெரிந்தது” 

“அவர் சிரிக்கவே இல்லை.. நீ தப்பா…………….” 

“அவன் சிரித்தான்.. ஒரு நொடி தான் என்றாலும் நான் கவனிச்சேன்” 

“அப்போ உன் கவனம் முழுவதும் அவரிடம் மட்டும் இருந்திருக்கிறது!” என்று பவித்ரா கிண்டலாக கூற, 

திவ்யா, “அவனை தானே பார்க்க போனோம்! உன் கவனம் மட்டும் அந்த நொந்த குமாரிடமா இருந்தது?” என்று சிறிது உதட்டை பிதுக்கியபடி கிண்டலாக வினவினாள். 

“ஆனாலும் நாங்க பார்க்காததை நீ பார்த்து இருக்கிறியே!” 

“நீங்க கவனிக்கலைனா நான் என்ன செய்றது!!” என்று தோளை குலுக்கினாள்.

“சரி நீ சொன்னதுக்கு அர்த்தம் என்ன?” 

“நீங்க எல்லோரும் ராகிங் பண்ணதுக்கு சாரி சொன்னீங்க ஆனா நான் அதுக்கு சொல்லலை.. ஏன்னா அதில் நம்மோட தவறு இல்லை.. அவன் வந்ததும் சார்னு சொல்லி இருந்தால், நாம ராகிங் பண்ணியிருக்கவே மாட்டோம்.. ஸோ நம்ம மேல் தப்பு இல்லை..

அப்புறம் அவனை அடிக்க கை ஓங்கியதுக்கும் என்னால் சாரி கேட்க முடியாது.. அவன் அடித்த பிறகு தான் நான் கை ஓங்கினேன்.. ஸோ அதிலும் என் மேல் தவறு இல்லை” 

“அடிபாவி” 

“என்ன!” 

“முதலில் சொன்னது கூட ஓகேடி.. அடுத்து சொன்னது!” 

“அதுக்கென்ன! அதுவும் சரி தான்” 

“அவர் நம்ம சார்” 

“சார்னா என்னை அடிக்கலாமா?” என்று அவள் கோபமாக கேட்க,

பவித்ரா இறங்கிய குரலில், “அப்படி சொல்லலைடி.. ஆனா நீ சொன்னது அவருக்கு புரிந்ததுன்னு வேற சொல்றியே! அதான்” என்று இழுத்தாள்.

திவ்யா சிறு யோசனையுடன், “அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்குது.. கோபப்படுவான்னு நினைத்தேன், ஆனா சிரிக்கிறான்!” 

“ஒருவேளை முதலில் சொன்னதை மட்டும் நினைத்து இருப்பார்” 

“இல்லை அவன் கண்ணில் தனியா தெரிந்த ஒளி! நிச்சயம் அவனுக்கு புரிந்து தான் இருக்கும்.. இல்லைனா நான் கை ஓங்கியது பற்றி ஏதாவது கேட்டு இருப்பான்” 

“ஒருவேளை நீ கை ஓங்கியதை பற்றி மற்ற சார் முன்னாடி பேசுறது கௌரவக் குறைச்சலா நினைத்து இருக்கலாம்” 

“இல்லை.. ‘அவ்ளோ தானா!’ என்பது போல் அழுத்தமா பார்த்து, பார்வையிலேயே கேள்வி கேட்டு இருப்பான்” என்றவள், “அவன் என்னிடம் ரியாக்ட் பண்றது எப்போதும் முன்னுக்கு பின் முரணாவே இருக்குது” என்று சிறு எரிச்சலுடன் கூறினாள். அவனை புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்ற எரிச்சல் அது.

“என்னடி எப்போதும்னு சொல்ற! இன்னைக்கு தான் இரண்டாவது முறை பார்க்கிற!” 

“..” 

“என்னடி?” 

“இல்லை.. காலையில் இருந்து அவனை பற்றியே யோசித்ததாலோ என்னவோ! இது தான் இரண்டாவது சந்திப்புனு தோன்றவே இல்லை” என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

பவித்ரா குழப்பத்துடன் தோழியைப் பார்த்தாள்.

 

 

சேர்மன் அறை:
ராஜாராம் அனுமதியுடன் உள்ளே சென்ற ஹரீஷ், “குட் மார்னிங் சார்” என்றான்.

“குட் மார்னிங்.. இன்னைக்கு தான் ஜாயின் பண்ணியிருக்கீங்க போல!” 

“எஸ் சார்.. கொஞ்சம் உடம்பு சரி இல்லை.. இன்போர்ம் பண்ணியிருந்தேன் சார்.. தாமதமா ஜாயின் பண்ணதுக்கு சாரி சார்” 

“ஹ்ம்.. இப்போ ஹெல்த் ஓகே தானே?” 

“எஸ் சார்” 

“காலையில் என்ன பிரச்சனை?” 

“பைனல் CSE ஸ்டுடென்ட்ஸ் என்னை பஸ்ட் இயர்னு நினைத்து ராகிங் பண்ண ட்ரை பண்ணாங்க” 

“ட்ரை பண்ணாங்கனா?” 

“ராகிங் பண்ணலை” 

“நீங்க சார்னு சொல்லிட்டீங்களா?” 

“இல்லை.. திவ்யா என் பெயரை கேட்டாள்.. பதிலுக்கு நான் அவள் பெயரை கேட்டேன்.. அப்படியே கொஞ்சம் வாக்குவாதம் வந்தது.. நான் பெயரை சொல்லாமல் கிளம்பவும், அவள் என் மேல் டீயை ஊத்தினாள்.. நான் கோபத்தில் அவளை அடித்து, திட்டிட்டு போயிட்டேன்” 

“ஒரு பொண்னை அடிப்பது தப்புனு உங்களுக்கு தோணலையா?” என்றபோது அவர் தன் கோபத்தை கட்டுப்படுத்துவது அவனுக்கு புரிந்தது.

“அது, அந்த பொண்ணு நடந்துக் கொள்ளும் முறையை பொருத்தது சார்” 

“அவள் டீயை ஊதியத்திற்கு பதிலாக நீங்க அடித்தது தப்பு” 

“வேற என்ன செய்திருக்கணும் சார்?” என்று வினவியவன், தீர்க்கமான குரலில், “அடித்ததிற்கு பதிலாக நானும் அவள் மேல் டீயை ஊற்றி பிறரிடம் அவளை காட்சி பொருளாக்க சொல்றீங்களா?” என்று வினவினான். 

“இல்லை.. நீங்க கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கணும்.. அதை விட்டுட்டு கை நீட்டியது தப்பு” என்று கண்டிப்புடன் கூறியவர், “திவ்யா யாருனு தெரியுமா?” என்று வினவினார். 

“உங்கள் ரிலேடிவ்னு கொஞ்ச நேரத்திற்கு முன் தெரியும்” என்று அவன் பயமின்றி நேர்பார்வையுடன் கூறியதில் மனதினுள் அவனை மெச்சினார்.

அவர், “திவ்யா இடத்தில் யாராக இருந்தாலும் நான் இதை தான் சொல்லியிருப்பேன்.. நீங்க செய்தது தப்பு தான்” என்றார். 

“எடுத்ததும் என்னை குற்றம் சொல்லாமல் என் தரப்பை நீங்க கேட்டதில் இருந்தே உங்கள் நேர்மை புரியுது சார்.. ஆனா திவ்யா இடத்தில் உங்கள் மகளே இருந்திருந்தாலும் நான் அடித்து தான் இருப்பேன் சார்” 

ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவர், “அவள் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் சும்மா விட மாட்டார்” என்றார். 

“மிரட்டுறீங்களா சார்?” 

“இல்லை நிலவரத்தை சொல்றேன்” 

“அவர் வந்து கேட்டால் நான் பேசிக்கிறேன் சார்” 

“திவ்யா என்ன செய்தாள்?” 

“புரியலை சார்” 

“நீங்க அடித்ததும், அவள் கை ஓங்கி அதை நீங்க தடுத்தது.. இப்போ உங்களிடம் மன்னிப்பு கேட்க வந்தது வரை தெரியும்.. ஆனா என்ன பேசினீங்கனு தெரியாது” 

அவன் மென்னகையுடன், “என் மேல் டீயை ஊத்தியதிற்கு மட்டும் மன்னிப்பு கேட்டா” என்றான். 

“ஸோ அடித்ததை தப்புனு நீங்க ஒத்துக்காதது போல், கை ஓங்கியது தப்புன்னு அவளும் ஒத்துக்கலை” 

அவன் மெளனமாக இருந்தான்.

அவர், “திவ்யா கம்ப்ளைன்ட் செய்தால் நான் உங்களுக்கு எதிரா தான் அக்சன் எடுப்பேன்” என்றார். 

“திவ்யாவிற்கு பதில் வேறு பெண் இருந்திருந்தாலே நீங்க எனக்கு எதிராக தான் அக்சன் எடுப்பீங்கனு உங்க பேச்சில் இருந்து தெரிகிறது.. நான் அடித்தது திவ்யா என்ற போது என் வேலை போனால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை” 

“பிரச்சனை வந்தால் அதன் தீவிரத்தை பொருத்து அதிக பட்சம் சஸ்பெண்டு செய்யலாம்..” 

“ஓகே சார்”

அவர் யோசனையுடன், “நாம் இதற்கு முன் சந்தித்து இருக்கிறோமா?” என்று கேட்டார். 

அவன் கண்ணில் சிறு ஆச்சரியத்துடன், “நான்கு வருடங்களுக்கு முன் ஒரு முறை ஐந்து நிமிடம் சந்தித்து இருக்கிறோம்” என்றான்.

சிறிது யோசித்தவர் புன்னகையுடன், “ஹரீஷ் டுவெல்த் டிஸ்ட்ரிக்ட் பஸ்ட் அண்ட் IIT பஸ்ட் ரங்க் ஹோல்டர்” என்றார். 

“எஸ் சார்” என்றான் புன்னகையுடன். 

“இந்த ஷர்ட் ஞாபகம் இருக்குதா?” 

அவன் புன்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான். அந்த சட்டை அவன் அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

ஹரீஷ் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலாவதாக வந்தவன் ராஜாராம் நடத்தும் கல்வி அறக்கட்டளை மூலமாக IITயில் பொறியிலை படித்து முதலாவதாக தேர்ச்சி பெற்றான். இரவு நேர வேலையில் சேர்ந்து IITயில் மேல் படிப்பை தொடர்ந்தவன் முதல் மாத சம்பளத்தில் ராஜாராமிற்கு ஆடை வாங்கிச் சென்று அவரை பார்த்து நன்றி கூறினான்.    

“நீ.. நீங்க இங்கே வந்து ஜாயின் பண்ணதில் ரொம்ப சந்தோஷம்” என்றவர் அவன் கையை குலுக்கியபடி, “மென் மேலும் வளர வாழ்த்துக்கள்” என்றார்.

அவனும் புன்னகையுடன், “தன்க் யூ சார்” என்றான்.

“ஓகே கேரி ஆன்” என்றவர் சிறு புன்னகையுடன், “திவ்யா கிட்ட ஜாக்கிரதையா இருங்க” என்றார்.

அவன் சிறு யோசனையுடன் பார்க்கவும்,

“ஏதாவது கலாட்டா செய்துக் கொண்டே தான் இருப்பாள்.. நீங்க அடித்ததை வைத்து பெருசா கலாட்டா செய்ய வாய்ப்பு கிடைத்தும் அமைதியா இருக்கிறா.. அதான் சொன்னேன்” என்றார். 

“ஒண்ணு கேட்கலாமா சார்?” 

“என்ன?” 

“திவ்யா உங்களுக்கு என்ன உறவு?” என்ற அவனது கேள்வியில் அவரது முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அந்த கல்லூரியில் வேலை செய்யும் அநேகபேரின் மனதிலும் ஓடும் கேள்வி தான் என்றபோதிலும் இதுவரை யாரும் நேரிடையாக அவரிடம் கேட்டது இல்லை.

தங்ககுமார் மூலம் திவ்யாவின் கலாட்டாக்களை அறிந்த ஹரீஷ் அவள் வேண்டுமென்றே அவற்றை செய்ததை புரிந்துக் கொண்டான். தலைமை ஆசிரியர் வெளியே சென்றதில் இருந்து அவளுக்கு ராஜராமிடத்து இருக்கும் ஆளுமையை அறிந்துக் கொண்டவன் அவளை பற்றி அறிந்துக் கொள்ளும் எண்ணத்துடன் தான் இந்த கேள்வியை கேட்டான்.

Advertisement