Advertisement

சூர்யா பேசத் தொடங்கியதும் வைஷ்ணவி பேசுவது திவ்யா இல்லை என்பதை சொல்ல முயற்சித்து தோற்று போகவும் ஒலிபெருக்கியை இயக்கி இருந்தார்.

பவித்ரா மெல்லிய குரலில், “பேசுடி” என்று கூற, திவ்யா கை முஷ்டியை அழுத்தமாக மூடியபடி ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

சூர்யா, “ஹலோ.. ஹலோ.. அக்கா லைனில் இருக்கிறியா?” என்று கத்தினான். 

“…” 

“ஹலோ அக்கா!!!” 

திவ்யாவின் உறுதியான மறுப்பையும், கலங்கிய மனதை மறைக்க அவள் கை முஷ்டியை இறுக்கியதையும் பார்த்த வைஷ்ணவி அறை வெளியே சென்று, “நான் பவித்ரா அக்கா அம்மா பேசுறேன் சூர்யா” என்றார். 

“அக்கா இங்கே தான் இருக்கிறாளா? ஊருக்கு போகலையா?” 

“இல்லை.. அது.. நானும் உன் அக்கா கூட தான் இருக்கிறேன்” 

“அக்கா எங்க?” 

“இப்போ வெளியே போயிருக்கா” 

“ஓ! எப்போ வருவா?” 

“தெரியலையே” 

“என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க? அக்கா தனியாவா போயிருக்கா?” 

“இல்லை பா.. பவித்ராவும் போயிருக்கா” 

“ஓ.. வந்ததும் எனக்கு பேச சொல்றீங்களா ப்ளீஸ்!!!!” 

“சரி” 

“மறக்காம சொல்லுங்க ஆன்ட்டி” 

“நிச்சயம் சொல்றேன்” 

“சரி ஆன்ட்டி” என்று அழைப்பைத் துண்டித்தான்.

அவர் பவித்ரா அறையினுள் சென்று வருத்தமான குரலில், “பாவம்.. சின்ன பையன் மா.. அவன் என்ன செய்தான்?” என்று கேட்டார். 

“அவனை வைத்து நூல் பிடிச்சு யாரும் சேர வேணாம்” 

“அவன் உன்னை ரொம்ப தேடுறான்” 

“பழகிடுவான் ஆன்ட்டி.. விலகினால் மொத்தமா விலகிடனும்” 

“உன் மேல் ரொம்ப பாசமா இருக்கிறான்……………” 

“வேணாம் ஆன்ட்டி.. அந்த வீட்டு பாசம் எனக்கு வேண்டாம்” 

“நீ வெளியே போயிருக்க, எப்போ வருவனு தெரியலைனு சொன்னதும் கோபத்துடன் ‘என்ன ஆன்ட்டி இப்படி சொல்றீங்க? தனியாவா போயிருக்கா?’ னு கேட்கிறான்.. இந்த சின்ன வயசிலேயே உன் பாதுகாப்பை பற்றி யோசிக்கிறான்” 

கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள், “ப்ளீஸ் ஆன்ட்டி.. வேண்டாம்.. அவனை பற்றி பேசாதீங்க” என்றாள். 

“உன்னை நீயே ஏன் வருத்திக்கிற?” 

“மத்தவங்க வருத்துரதை விட இது மேல் இல்லையா!” என்று கசந்த புன்னகையை உதிர்த்தாள்.

பவித்ரா, “அம்மா கோவிலுக்கு போகலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

வைஷ்ணவி, “எனக்கு வேலை இருக்குது.. நீங்க போயிட்டு வாங்க” என்றார்.

இருவரும் கிளம்பி வீட்டின் அருகில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்றனர்.

 

செல்லும் வழியில் விக்னேஷை பார்த்த திவ்யா, “உன் அக்காவை முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு வா” என்றாள்.

திவ்யாவும் பவித்ராவும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலினுள்ளே அமர்ந்த போது விக்னேஷும் அவனது அக்காவும் வந்தனர்.

திவ்யா, “சாமி கும்டுட்டு வாங்க” என்றாள். 

சாமியை அவர்கள் தரிசனம் செய்துவிட்டு திவ்யா அருகே அமர்ந்தனர்.

திவ்யா விக்னேஷை பார்க்க, அவன் புன்னகையுடன், “உங்களை பற்றியும் உங்கள் வீரத்தை பற்றியும் பறைசாற்றிவிட்டேன்” என்றான்.

திவ்யா புன்னகையுடன், “கொக்கி குமாருனு உனக்கு வச்ச பெயரை சொன்னியா?” என்று கேட்டாள்.

 “வொய் கா! வொய்! வொய் திஸ் கொலைவெறி?” என்று அலற, பெண்கள் மூவரும் சிரித்தனர்.

திவ்யா விக்னேஷின் அக்காவை பார்த்து, “அவனை பார்த்து உனக்கு என்ன பயம்?” என்று நேரே விஷயத்திற்கு வந்தாள்.

அவள் சிறு பயத்துடன், “இல்லை.. என் ஸ்கூல் பிரெண்ட் ஒருத்திகிட்ட ஒருத்தன் இப்படி தான் பீகேவ் பண்ணான்.. அவ பிடிக்கலைனு சொன்னதும் அவ.. அவ மேல.. அசிட் ஊத்திட்டான்” என்றாள்.

திவ்யா, “இவன் அவ்வளவெல்லாம் வொர்த்தே இல்லை” என்றாள்.

அப்பொழுது அவர்களுக்கு பின்னால் இருந்த தூண் அருகே நின்றுக் கொண்டிருந்த இளைஞன்(திவ்யாவிடம் பந்தால் அடி வாங்கியவன்) பல்லை கடித்துக் கொண்டு நண்பனிடம், “என்னை எப்படி எல்லாம் டேமேஜ் செய்றா பார் டா!” என்றான். 

நண்பன் புன்னகையுடன், “விடுடா உண்மையை தானே சொல்றா!” என்றான். 

அவன் நண்பனை முறைக்க, நண்பனோ, “சரி.. சரி.. என்ன சொல்றானு கேட்போம்” என்றான்.

திவ்யா, “அவன் சும்மா ஒரு டைம் பாஸ்ஸா தான் பண்றான்.. அவன் வரம்பு மீறி எதுவும் செய்யலையே… என்ன! எதுக்கு இவ்ளோ ஷாக்? கண்ணடிப்பதை வரம்பு மீறல் இல்லைனு சொல்றேனேனு பார்க்கிறியா! இப்பலாம் அது சர்வ சாதாரணமா போயிடுச்சு.. அவனைப் பார்த்தால் மோசமானவனா தெரியலை.. நீ உனக்கு பிடிக்கலை.. தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொன்னா, அவனே விலகி போய்டுவான்.. திரும்பவும் சொல்றேன்.. நீ பயப்படுற அளவு அவன் வொர்த்தே இல்லை.. பெண்களுக்கு தைரியம் அவசியம்.. இப்போ இருக்கிற காலத்தில் பாரதியார் சொன்ன ‘ரௌத்திரம் பழகு’ பெண்களுக்கும் பொருந்தும்.. பயப்படாம போய் பேசு.. அதையும் மீறி தொந்தரவு செய்தால் உன் வீட்டில் சொல்லு” என்று தைரியம் சொன்னாள்.

விக்னேஷின் அக்கா முகம் தெளிந்திருக்க, திவ்யா அவள் கையை தட்டிக் கொடுத்தாள்.

அவள், “தேங்க்ஸ் கா” என்றாள்.

“உன்னை விட ரெண்டு வயசு தான் மூப்பு.. ஸோ திவ்யானே கூப்பிடு” 

“ஹ்ம்ம்” 

“சரி கிளம்பலாமா?” என்றபடி கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அந்த இளைஞனின் நண்பன் வாய்விட்டு சிரிக்க, அவன் முறைப்புடன், “உன்னை எவன்டா சனிக்கிழமை விளக்கு போட சொன்னான்?” என்றான். 

நண்பன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்க, அவன், “நீ எதுக்குடா சனி பகவானுக்கு விளக்கு போடுற! உன்னை எல்லாம் அவர் அண்டவே மாட்டார்..” என்று பொரிந்தான். 

“சரி.. சரி.. வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்துச் சென்றான்.

 

 

அன்று இரவு உறங்கும் முன் வைஷ்ணவி கணவரிடம், “சூர்யா பாவம்ங்க.. திவ்யா பேசியிருக்கலாம்” என்றார். 

“அவளும் பாவம் தான்.. வெளியே எவ்வளவு துருதுருனு இருக்கிறாளோ அவ்வளவு உள்ளுக்குள் மருகிட்டு இருக்கிறா” 

“ஹ்ம்ம்.. என்ன பண்ண!” 

“அன்பு காட்ட ஆள் இருந்தும், பணம் இருந்தும், எதுவும் வேண்டாம்னு விலகி நிற்கிறா.. இங்கே இருந்து கிளம்புறதுக்கு முன், முடிந்தால் கொஞ்சம் அவள் மனதை மாற்றுவோம்” 

“ஹ்ம்ம்”                                                                       

ஆனால் அடுத்த நாள் காலையில் அவர் அலுவலகம் கிளம்பிய போது தனது பையுடன் வந்து நின்ற திவ்யா, “நான் காலேஜ் ஹாஸ்டல் கிளம்புறேன் அங்கிள்” என்றாள்.

மூவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

சந்திரன், “நேற்று நான்……………” என்று ஆரம்பிக்க, 

“நிச்சயம் நீங்க பேசியது காரணம் இல்லை அங்கிள்.. நீங்க என் நல்லதிற்காக பேசினீங்கனு எனக்கு தெரியும்.. நான் இங்கே இருந்தால் தேவை இல்லாத போன் காள்கள் உங்களுக்கு வரும்.. நான் உங்களுக்கு தொந்திரவா இருக்க விரும்பலை” என்ற திவ்யா புன்னகையுடன், “ஒரு நாள் என் தொல்லைகளை பொறுத்துக் கொண்டதுக்கு தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.

பின் வைஷ்ணவி பக்கம் திரும்பி, “உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றாள்.

சந்திரன், “எனக்கு எந்த தொந்திரவும் இல்லை.. லீவ் முடியும் வரை இங்கேயே இரு” என்றார். 

“சாரி அங்கிள்.. நான் சேர்மன் சாரிடம் பேசிட்டேன்.. அவர் ஹாஸ்டலில் இருக்க சம்மதம் சொல்லிட்டார்” 

“தனியா?” 

“துணைக்கு சமையல் தெரிந்த ஒரு ஆளை ஏற்பாடு பண்றதா சொன்னார் அங்கிள்” 

“இதை எந்த முறையில் அவரிடம் கேட்ட?” 

திவ்யா உடல் இறுக, “சேர்மன் என்ற முறையில் தான்” என்றாள். 

“இதை பவித்ரா கேட்டால் அவர் செய்வாரா?” 

“வேண்டாம் அங்கிள் வார்த்தைக்காக கூட அப்படி சொல்லாதீங்க” 

“சரி வேறு யாரும் கேட்டால் செய்வாரா?” 

“..” 

“அப்போ…………” 

“என்னை பொறுத்தவரை அவர் சேர்மன் சார் மட்டும் தான்.. வேறு வழி இல்லாமல் தான் அவரிடம் உதவி கேட்டேன்.. இனி அவரிடம் உதவி கேட்கும் நிலை வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டியிருக்கிறேன்” 

சிறு பெருமூச்சை வெளியிட்டவர், “சரி வா.. நான் உன்னை காலேஜில் விட்டுட்டு போறேன்” என்றார். 

“நானே…………” என்று ஆரம்பித்தவள் அவர் பார்வையில் அமைதியாகி ‘சரி’ என்று தலையை ஆட்டினாள்.

பவித்ராவிடம், “சாரி பவி” என்று கூறி கிளம்பினாள். 

இணைய காத்திருப்போம்…

 

Advertisement