Advertisement

ஐந்து வருடங்களுக்கு பிறகு………..

ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறிது நேரம் தூங்கி மாலையில் எழுந்த ஹரீஷ், “தியா” என்று அழைத்தபடியே கூடத்திற்கு வந்தான். திவ்யா அங்கே இல்லை என்றதும் வீடு முழுவதும் தேடியவன் மனதினுள் ‘ரியாவையும் காணும்.. ரெண்டும் இன்னைக்கு என்ன வம்பை இழுத்து வைக்க போகுதுங்களோ!’ என்று நினைக்கவும் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

கதவை திறந்தவன் வெளியே நின்றிருந்த நடுத்தர வயதில் இருக்கும் ஆளைப் பார்த்து, “வாங்க சார்” என்றான்.

அவரோ கோபத்துடன், “நான் ஒன்றும் உட்கார்ந்து பேச வரலை” என்றார். 

ஹரீஷ் புருவம் உயர்த்தியபடி, “என்னாச்சு சார்?” 

“எங்கே உன் மனைவி?” 

“வெளியே போயிருக்கா” 

“மனைவியை அடக்க துப்பில்லை……..” 

“சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. இப்போ எதுக்கு வந்தீங்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசுங்க” என்று இறுக்கத்துடன் கூறினான். 

“பொண்ணுனா அடக்கம் வேணாம்!!! கல்யாணம் ஆகியும்………” 

“நான் உங்க மனைவியை பற்றி விமர்சிக்கிறேனா?” 

“ஏய்!” 

“நான் விமர்சிக்காமலேயே உங்களுக்கு கோபம் வருதே!” 

“என் மனைவியும் உன் மனைவியும் ஒன்றா?” 

“நிச்சயம் இல்லை.. நேரா வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க” 

“வாலிப பசங்க கூட விளையாடுறா! இவ……..” 

“இதுக்கு மேல என் மனைவி பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் அடுத்து பேச வாய் இருக்காது.. எப்படி வசதி?” 

“எல்லாம் நீ கொடுக்கும் இடம்…” 

“தேங்க்ஸ்” 

அவர் முறைக்க, அவனோ அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு வேலை இருக்குது” என்றான். 

“அப்போ நான் வேலை வெட்டி இல்லாதவனா?” 

“அது பற்றி எனக்கு தெரியாது” 

“ஏய்” 

“யோவ்” என்று குரலை சற்று உயர்த்த, அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

ஹரீஷ், “என்ன லுக்கு! உனக்கு தான் என்னை பற்றி தெரியலை.. நீ வந்த பத்து நாளில் உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சுருச்சு.. சும்மா வளவளனு பேசிட்டு இருக்காம விஷயத்தை சொல்லு.. இல்லை இடத்தை காலி பண்ணு” என்றான். 

“இந்த தெருவில் இருக்கும் பசங்களுடன் சேர்ந்து கிரிகெட் விளையாடி என் உயிரை வாங்குறா.. போன வாரம் ஜன்னல் கண்ணாடியை உடைச்சா.. இன்னைக்கு என் கார் கண்ணாடி..” 

“அவ உடைத்ததை நீ பார்த்தியா?” 

“எங்கே! அதான் மரக்கிளை விழுந்து உடைந்த மாதிரி செட்-அப் செஞ்சு வச்சிருக்கிறாளே!” 

“ஏன் மரக்கிளை விழுந்து கூட அது உடைந்து இருக்கலாமே!” 

“அது எப்படி கிளை தானா உடையும்? இது நிச்சயம் உன் மனைவி வேலை தான்.. அவளை தவிர வேறு யாரு……….” 

“இந்த பேச்செல்லாம் வேணாம்.. நீ கண்ணால் பார்த்தால் மட்டும் வந்து பேசு” 

“எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான்.. பொண்டாட்டியை அடக்க………..” 

“தேவை இல்லாமல் வார்த்தையை விடாதனு முதலிலேயே சொன்னேன்..” என்றபடி அவன் ஒரு அடி முன்னால் வர, அவர் பயத்துடன் ஒரு அடி பின்னால் நகர்ந்தார்.

ஹரீஷ், “உன்னை போல் என் மனைவியை சந்தேகப் பட்டு அடிமையா நடத்த என்னால் முடியாது.. என் மனைவி ஏதும் தப்பு செய்தால், அதை நீ நேரில் பார்த்தால் மட்டும் வந்து பேசு” என்று கறாரான குரலில் கூறியவனோ மனதினுள் அவனது ரௌடி பேபியை திட்டிக் கொண்டிருந்தான்.

அவர் பல்லை கடித்துக் கொண்டு கிளம்பினார்.

அவர் சென்றதும் மாடி முகப்பிற்கு(பால்கனி) வந்து நின்ற ஹரீஷின் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

அவர் வீட்டை விட்டு போறதையும், ஹரீஷ் கோபத்துடன் வந்து நின்றதையும் விக்னேஷ்(கிரிகெட் விளையாடியவன்) வீட்டின் மொட்டை மாடியில் மறைவில் இருந்து பார்த்த திவ்யா தன் அருகே இருந்த விக்னேஷிடம், “டேய் குமாரு! அந்த பரதேசி பெருசா பிரச்சனை பண்ணிட்டான் போலவே!” என்றாள். 

“அக்கா என் பெயரையே மாத்திட்ட” 

“இப்போ இது ரொம்ப முக்கியம்!” 

“பின்ன இல்லையா! நீ குமாருனு கூப்பிட்டு கூப்பிட்டு எனக்கே என் பெயர் மறந்துரும் போல” 

“ச்ச்.. நானே ரிஷிகேஷை எப்படி சமாளிக்கிறதுனு யோசிச்சிட்டு இருக்கிறேன்”

“உனக்குத் தான் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாபிடுறது போல தானே!” 

“டேய்!” 

“மாம்ஸ்ஸ சமாளிக்கிறது உனக்கு என்ன கஷ்டமா?” 

அவள் முறைக்கவும், “சரி சரி.. நோ கண்ணகி அவதாரம்” என்றவன் பின் புன்னகையுடன், “அதான் கைவசம் ஒரு பலி ஆடு இருக்குதே!” என்று கூறி கண் சிமிட்டினான். 

கண்கள் ஒளியுர திவ்யா விக்னேஷுடன் கை தட்டி, “சூப்பர் டா” என்றாள்.

விக்னேஷ் கைபேசியில் நந்தகுமாரை அழைத்தான். நந்தகுமார் தான் காதலித்த விக்னேஷின் அக்காவை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து ஆறு மாதம் ஆகிறது.

 

நந்தகுமார் அழைப்பை எடுத்ததும், விக்னேஷ், “மாமா மேல வாங்க.. திவ்யா அக்கா சிக்கன் 65 சூப்பரா செஞ்சிருக்கா” என்றான். 

“வாசனையே வரலையேடா” 

“உங்க மூக்கு சரி இல்லை மாமா.. சரி விடுங்க நான் சரவணாவை கூப்பிட்டுக்கிறேன்” என்றபடி அழைப்பைத் துண்டிப்பது போல் பாவனை செய்ய,

நந்தகுமார், “டேய்.. இருடா.. என்னைக் கொல்லும் முயற்சில் உன் அக்கா நெட்டில் பார்த்து கிச்சனில் ஏதோ  ரிசர்ச் பண்ணிட்டு இருக்கா.. நான் இதோ வரேன்” என்றான்.

விக்னேஷ் புன்னகையுடன், “சீக்கிரம் வாங்க” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

அடுத்த நிமிஷம் நந்தகுமார் படிகளில் ஏறுவதை பார்த்த திவ்யாவும் விக்னேஷும் வாய்விட்டு சிரித்தபடி கை தட்டிக் கொண்டனர். 

அப்பொழுது திவ்யாவின் கைபேசி அலறியது.

விக்னேஷ், “யாருக்கா? மாம்ஸ்ஸா?” 

“இல்லைடா.. விஜி கூப்பிடுறான்” என்றபடி அழைப்பை எடுத்தவள், “சொல்லு மச்சி கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்குது?” என்று கேட்டாள்.

“சூப்பரா போயிட்டு இருக்குது.. வீட்டில் தான் இருக்கிறீங்களா? இன்விடேஷன் கொடுக்க அகிலாவை கூட்டிட்டு வீட்டுக்கு வரவானு கேட்க தான் கூப்பிட்டேன் மச்சி”
(அகிலா விஜய் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண். பவித்ரா திருமணம் முடிந்து பெங்களூரில் இருக்கிறாள்.) 

“வீட்டில் தான் இருக்கிறோம் ஆனா நீ அடுத்த வாரம் வா மச்சி” 

“ஏன் வீட்டில் நிலவரம் கலவரமா இருக்குதோ! யார் மண்டையை உடைச்ச?” என்று சிரிப்புடன் கேட்டான்.

“அதை தான் செய்து இருக்கணும்னு இப்போ நினைக்கிறேன்” 

“ஹா.. ஹா.. யாரு அந்த ஆளு?” 

“அது ஒரு வேஸ்ட் பெல்லோ.. விடு.. பவி அடுத்த வாரம் ஊருக்கு வரேன் சொன்னா, ஸோ நீ அடுத்த வாரமே வா” 

“ஓ சூப்பர் மச்சி.. அப்போ அடுத்த வாரமே வரேன்.. இனி தான் பவி கிட்ட பேசணும்.. ரீ பேபி எப்படி இருக்கா?” 

“சூப்பரா இருக்கா” என்றவள், “பலியாடு ரிஷியை பார்க்க போயாச்சு.. இப்போ நான் என்ட்ரி குடுத்தா சரியா இருக்கும்.. ஸோ நாளைக்கு பேசுறேன் மச்சி” 

விஜய் புன்னகையுடன், “ஓகே மச்சி.. சேதாரம் எவ்ளோனு நாளைக்கு சொல்லு.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.      

பின் திவ்யா விக்னேஷிடம், “சரிடா நான் வைஷு மாதா(பவித்ராவின் அன்னை) கிட்ட இருந்து ரீ குட்டியை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்” என்றாள். 

“பாப்பா பெயரே ரியா-னு ரெண்டு எழுத்து தான்.. அதையும் சுருக்கி ரீ-னு சொல்றியே!” 

திவ்யா தனது டீ-ஷர்ட் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கிளம்பினாள். 

 

 

மேலே சென்ற நந்தகுமார் ஹரீஷ் கோபமாக இருப்பது அறியாமல், “என்னடா! அதுக்குள்ள காலி பண்ணிட்டியா?” என்று கேட்டான். 

“என்னடா சொல்ற?” 

“அட பாவி! எத்தனை நாள் உனக்கு ருசியா சமைச்சு போட்டிருப்பேன்” 

“சமைச்சேன்னு மட்டும் சொல்லு.. ருசியா சமைச்சேன்னு சொல்லாத” 

“ஏன்டா பேச மாட்ட! நல்லா சமைக்கிற பொண்டாட்டி அமைந்து இருக்கிற கொழுப்பு” 

“இப்போ உனக்கு என்ன வேணும்?” 

“வேற என்ன சிக்கன் 65 தான்” 

ஹரீஷ் கடுப்புடனும் கோபத்துடனும் முறைக்க,

நந்தகுமார், “முறைச்சா பயந்துருவோமா! எங்கே என் பங்கு? கீழே வீடு காலியானதும் வந்தது எதுக்கு? இப்படி ஆத்திர அவசரத்துக்கு நீ உதவுவனு தானே!” 

“எது டா ஆத்திர அவசரம்?” 

“இது தான்! சோறு ரொம்ப முக்கியம் மாப்பி” 

“டேய்! நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? இம்சை.. கல்யாணம் ஆகியும் கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா! உன்னை நம்பி பொண்ணு கொடுத்தார் பாரு, அந்த மனுஷனை சொல்லணும்……………………..” என்று ஆரம்பித்து எதெதுக்கோ சேர்த்து திட்டினான்.

நந்தகுமார் மனதினுள், ‘எப்போ நடந்ததுக்கு இப்போ திட்டுறான்! என் பொண்டாட்டி கூட இப்படி ஞாபகம் வைச்சு திட்டியது இல்லை.. இப்போ நான் என்ன கேட்டுட்டேன் இப்படி திட்டுறான்!’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

ஒருவாறு ஹரீஷ் திட்டி ஓய்ந்ததும், நந்தகுமார், “சிக்கன் தர மாட்டேன் சொன்னா போய்ட போறேன்.. அதுக்கு ஏன்டா இப்படி பக்கம் பக்கமா திட்டுற!” என்றான். 

“டேய்!” என்று ஹரீஷ் அடிக்க வர, நந்தகுமார், “ஸ்வேதா காப்பாத்து” என்று கத்தியபடி வெளியே ஓடினான்.

Advertisement