“நீ போலீசை கூப்பிடு. இல்லை யாரை வேணா கூப்பிடு. இவனை எல்லாம் கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்”, என்றவன் ஓங்கி அவனை மிதிக்க “முதல்ல என்னன்னு பேசிக்கலாம், விடுங்க. செத்துற போறான்”, என்று சொல்லி அவனை சமாதானப் படுத்தினான் ராஜன்.
அவர்களும் அடித்தது போதும் என்று நிறுத்தினார்களோ என்னவோ? “என்ன அச்சு? இவ்வளவு கோப படுற அளவுக்கு இவன் என்ன பண்ணினான்?”, என்று கேட்டான் தாமரை.
“இவனால என் வாழ்க்கையே போச்சு சார். அதிகம் படிக்கலைனாலும் பெட்ரோல் பங்க், கேட்டரிங், புட் டெலிவரின்னு என் பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருந்தேன்? நான் என்னோட மனைவி குழந்தைன்னு அழகா போய்ட்டு இருந்துச்சு என் வாழ்க்கை. இந்த நாயால இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறேன் சார்”
“என்ன பண்ணினான்?”, என்று கேட்டான் ராஜன்.
“ஒரு பொண்ணு பிரியாணி கேட்டதுன்னு டெலிவரி பண்ண போனேன். அங்க அவங்க கூட சேத்து வச்சு என்னை பேசி அது மட்டுமில்லாம என்னை அடிச்சு போலீஸ் கேஸ் ஆகி தப்பான பேர் எடுத்து வேலையும் போய் என் பொண்டாட்டி கோச்சிக்கிட்டு போய்ட்டா. ஊரெல்லாம் என்னை பத்தி தப்பா நியூஸ் பரவிருச்சு? எல்லாத்தையும் இழந்து வலி தாங்க முடியாம குடிச்சு குடிச்சு சீரழிஞ்சு போய்ட்டேன். என்னால முடியலை. அவ்வளவு வேதனை. நேத்து என் பிள்ளையை ஸ்கூல்க்கு பாக்க போறேன்? அவ கேக்குறா உனக்கு வேற குடும்பம் இருக்கா பா? நான் உனக்கு வேண்டாமாபான்னு? எப்படி இருக்கும்? இவன் பாத்தானா சார் நானும் அந்த பொண்ணும் ஒண்ணா இருந்ததை?”, என்று கேட்டவன் மீண்டும் அவனை மிதிக்க தாமரையும் ராஜானும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அடி பட்டுக் கிடந்தவனை பார்த்தார்கள்.
அது மகேஷ் உடைய தம்பி தான். அவனைக் கண்டு இருவருக்கும் திகைப்பாக இருந்தது. அவனை அடிக்காதீங்க என்று சொல்ல கூட வாய் வர வில்லை இருவருக்கும்.
“சரி விடுப்பா. அடிக்கிறதுனால எதுவும் மாறப் போறது இல்லை. இவனை இப்படியே இழுத்துட்டு போய் உன் பொண்டாட்டி பிள்ளைங்க கிட்ட உண்மையைப் புரிய வை. இன்னும் அடிச்சா இவன் செத்து போயிருவான். அப்புறம் நீ ஜெயிலுக்கு போய் உன் பிள்ளை அனாதையா தான் நிக்கும்”, என்று காரில் வந்த ஒருவர் சொல்ல அதற்கு பின் தான் அடிப்பதை விட்டார்கள்.
“உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும் சார். அந்த பொண்ணும் ஒரு இக்கட்டான சூழ்நிலைல தான் அப்படி ஒரு பொய் சொல்லுச்சு”, என்றான் தாமரை.
“எனக்கு தெரியும் சார். இவனுங்க தான் மிரட்டி அப்படி சொல்ல வச்சிருப்பாங்கன்னு அப்பவே அது கண்ணீரைப் பாத்து தெரிஞ்சிக்கிட்டேன். ஆமா நீங்க யாரு?”
“அந்த பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்? இவனுங்க பண்ணின கொடுமை தாங்க முடியாம அது வீட்டை விட்டு வந்துருச்சு. அப்படி கூட சொல்ல முடியாது. ரத்த களரியா அடிச்சு விரட்டிருக்கங்க. இப்ப தான் நிம்மதியா இருக்கா. நீங்க கவலைப் படாம போங்க. நான் அவளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். உங்க மனைவி கிட்ட உங்களைப் புரிய வைக்க வேண்டியது என் பொறுப்பு. உங்க நம்பர் மட்டும் கொடுங்க. உங்களுக்கு நல்ல வேலையும் நான் ஏற்பாடு பண்ணுறேன். ஆனா உங்க பெண் குழந்தைக்காக நீங்க இனி குடிக்க கூடாது”, என்று சொன்ன பிறகு தான் அவனும் நிம்மதியாக நம்பரைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
“இவனை என்ன டா செய்யுறது?”, என்று கேட்டான் ராஜன்.
“ஆஸ்பத்திரிக்கு தான் தூக்கிட்டு போகணும்? ஆம்புலன்ஸ்க்கு சொல்றேன்”, என்று தாமரை சொல்ல “நாங்க டவுனுக்கு தான் போறோம். அங்க இருக்குற ஆஸ்பத்திரில தூக்கி போட்டிட்டு போறோம். ஆம்புலன்ஸ் வர வரைக்கும் நீங்க இங்க காத்துட்டு இருக்க வேண்டாம் ”, என்று சொன்னார் காரில் வந்தவர்.
இவர்களும் சரி என்று சொல்ல நால்வரும் சேர்ந்து அவனை காரில் ஏற்றினார்கள். கார் கிளம்பியதும் தாமரையும் ராஜனும் குழந்தையைப் பார்க்கச் சென்றார்கள். ஆனால் அப்போது குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
கதவை திறந்த மகேஷ்க்கு ராஜனை ஏற்கனவே தெரியும் என்றாலும் இப்போது தாமரையையும் தெரிந்தது. “இவன் எதுக்கு இங்க?”, என்று எண்ணிய படி தான் உள்ளே அழைத்தான்.
உள்ளே சென்று அமர்ந்ததும் ஒரு பேச்சுக்காக “எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டான் ராஜன்.
“ம்ம்”, என்று சொன்னாயானே தவிர வேறு ஒன்றும் சொல்ல வில்லை.
வீட்டில் இருக்கும் மற்ற அனைவரும் அங்கே வர “யாரு டா இது?”, என்று கேட்டாள் கல்யாணி.
என்ன சொல்ல என்று தெரியாமல் அவன் அமைதியாக இருக்க “நான் மீனாவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை”, என்று சொன்னான். அதைக் கேட்டு அனைவருக்கும் திகைப்பு தான்.
கல்யாணி மகனைப் பார்க்க அவனும் ஆம் என்னும் விதமாய் தலையசைத்தான்.
“அந்த சனியனை கல்யாணம் பண்ண இங்க எதுக்கு டா வந்து கேக்குற?”, என்று கல்யாணி வாயைத் திறக்க அடுத்த நொடி கண் முன் இருந்த டீப்பாயை ஓங்கி மிதித்தான் தாமரை. அது அப்படியே அவன் காலில் சரிந்தது.
ஆ”, ஏன்று அவன் அலற கல்யாணி பதட்டத்துடன் நிற்க “இன்னொரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசுனீங்க? டீப்பாய்க்கு விழுந்த மிதி உங்களுக்கு விழும்”, என்று சொல்ல அடுத்து யாரும் எதுவும் பேச வில்லை.
“ஒண்ணும் தெரியாத பிள்ளையை நீங்க பண்ணின கொடுமைக்கு உங்க அத்தனை பேரையும் கொன்னு போடனும்ன்னு வெறியே வருது. மனுசங்களா நீங்க? இளிச்சவாய் கிடைச்சா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா?”, என்று கேட்ட தாமரை மகேஷிடம் “நீயெல்லாம் என்ன ஆம்பளை? உன்னை நம்பி வந்த பொண்ணை மனசளவுலயும் உடல் அளவுலயும் சிதைச்சு அனுப்புறதுக்கு எதுக்கு டா உங்களுக்கு கல்யாணம்? அப்புறம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. பன்றிகளின் முன்னால் முத்துக்களைப் போடாதீங்கன்னு? ஏன்னா அதுக்கு அதோட அருமை தெரியாதாம். அதே மாதிரி தான் நீயும். என்னோட மீனா அருமை உனக்கு தெரியலை. அவளை எனக்கு கொடுத்ததுக்கே உனக்கு நன்றி சொல்லணும்”, என்றான்.
மகேஷ்க்கு என்ன சொல்ல என்றே தெரிய வில்லை. அவன் அமிதியாக இருந்தான். ஆனால் கல்யாணி வாய்க்கு வந்த படி பேச ஆரம்பிக்க அன்னையை அடக்கினான் மகேஷ்.
அதற்கு காரணங்களில் ஒன்று தாமரையின் மிரட்டல் மற்றரொன்று குழந்தையை ஒப்படைக்க வேண்டுமே.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மகேஷ்க்கு வேறு ஒரு சூழநிலை இல்லை. அதனால் வந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தான்.
“என்னை எதுக்கு டா அமைதியா இருக்க சொல்ற? அவளைக் கல்யாணம் பண்ணி நம்ம முகத்துல வந்து கரியை பூசுவானா இவன்? இவனை எல்லாம்…”, என்று கல்யாணி சொல்ல “அம்மா இப்ப சும்மா இருக்க போறியா இல்லையா?”, என்று கேட்டான் மகேஷ்.
கல்யாணி அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ குழந்தை இருக்கும் அறையைக் கண் காட்டினான். கல்யாணிக்கும் அப்போது தான் புரிந்தது. வாயைக் கப்பென்று மூடிக் கொண்டாள்.