அவர்கள் போனதும் மூன்று பேரும் அமைதியாக இருக்க “பாத்தீங்களா மா இவன் எப்படி பேசிட்டு போறான்னு? இந்த மீனா எதுக்கு இப்படி எல்லார் கூடயும் பழகிட்டு சுத்துறான்னு தெரியலை”, என்றாள் வசுந்தரா.
எப்போதும் அவள் பேச்சுக்கு ஒத்து ஓதும் வடிவு என்று எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க “என்ன மா அமைதியா இருக்க?”, என்று கேட்டாள்.
“இப்ப என்ன பண்ணணும்னு சொல்லுற வசு?”
“நாளைக்கு இவன் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வருவான்ல? அப்ப நீ அவங்களை அசிங்க படுத்தணும். நீ பேசுற பேச்சுல இந்த வீட்டு பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு போகணும் அவன்”
“போனா? அதுக்கு அப்புறம்?”, என்று கேட்டாள் வடிவு.
“அதுக்கு அப்புறம் என்ன? என்ன மா?”
“இல்லை தெரியாம தான் கேக்குறேன்? இவன் போனதுக்கு அப்புறம் மீனா வாழ்க்கை என்ன ஆகும்?”
“நாம அவளை எப்பவும் பாத்துகிட்டது இல்லை. அவ தான் இப்ப வரை நம்மளை பாத்துக்குறா? அன்னைக்கு ஆஸ்பத்திரில சாக கிடக்குறப்ப உடனே பதறி அடிச்சிட்டு வர வேண்டாம்? ஆனா நீ எப்ப வந்த? பிள்ளைகளை உன் புருஷன் கிட்ட விட்டுட்டு நீ என் கூட துணையா இருப்பேன்னு பாத்தேன். இருக்கலை. சரி வீட்ல இருந்து எனக்கும் உன் அப்பா அப்புறம் எங்களுக்கு துணையா இருந்த அவளுக்கு ஒரு வாய் கஞ்சியாவது எடுத்துட்டு வருவேன்னு நினைச்சேன். அதுவும் இல்லை. கடையில ஹாஸ்பிட்டல் பில் கூட பாதி பாதின்னு கணக்கு வச்சு தான் கொடுக்க? எங்களையே உன்னால பாக்க முடியாது? நீ எப்படி அவளை பாப்ப வசு?”
“அம்மா”
“சில விஷயங்கள் ரொம்ப தாமதமா தான் புரியுது வசு. உன்னை குறை சொல்ல நான் விரும்பலை. நான் எப்படியோ அது மாரி தான் நீ இருக்க? ஆனா இனியாவது மீனா நல்ல இருக்கணும்னு எனக்கு தோணுது. அவ நல்லா இருக்கட்டும். நாளைக்கு அவங்க வந்தா மரியாதையா பேசி இந்த கல்யாணத்தை முடிச்சு தான் வைக்க போறோம்”, என்று சொல்ல வசுந்தரா ஒன்றும் சொல்ல வில்லை என்றாலும் அவளின் தந்தை வடிவு சொன்னதற்கு ஆமோதிப்பாய் தலையை மட்டும் அசைத்தார்.
“சரி டா நாளைக்கு அம்மா அப்பாவை கூட்டிட்டு வா பேசிக்கலாம்”, என்றான் ராஜன்.
“ஏன் இப்ப என்னை விரட்டுற? உனக்கு ஏதாவது வேலை இருக்கா?”
“வேலை எல்லாம் இல்லை டா, நீ கிளம்புறியோன்னு தான் சொன்னேன். எங்கயாவது போகணுமா? இல்ல வீட்டுக்கு வரியா? அம்மாவை டீ போட சொல்றேன்”
“டீ குடிக்க போகலாம். அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் வா”, என்று சொல்லி வண்டியைக் கிளப்ப “எங்க மச்சான்?”, என்று கேட்டுக் கொண்டே வண்டியில் ஏறினான்.
“நல்லா கிளப்புங்க டா பீதியை. சொல்லித் தொலை எங்க போறோம்?”
“எங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கு தான்”
“அங்க எதுக்கு?”
“உனக்கு பொண்ணு பாக்க?”
“ஏன் டா எங்க அம்மா படுத்துறது பத்தாதுன்னு நீ வேற?”
“ஏன் அத்தை என்ன செய்றாங்களாம்?”
“பொண்ணு பாத்து சளிச்சு போற அளவுக்கு பாத்துக்கிட்டு இருக்கு”
“அப்படியும் ஏன் அமையலை?”
“வேலை நிரந்தரம் இல்லையே டா. கேஸ் எப்பவும் கிடைக்காது. கிடைக்கிற கேசையும் ஏழைகளா இருந்தா நமக்கு நிறைய பீஸ் வாங்க மனசு வரது இல்லை. மத்த லாயர் பத்தாயிரம் வாங்கினா நாங்க ஆயிரம் தான் வாங்குறோம். அப்புறம் எப்படி பொண்ணு கொடுப்பாங்க?”
“ஆமா அவ குழந்தையைப் பாக்க தான் போறோம். பாக்க மட்டும் இல்லை. அவங்க வீட்ல பேசி குழந்தையை மீனாவுக்காக கேக்கப் போறோம்?”
“டேய் என்ன விளையாடுறியா? இதெல்லாம் பெரிய விஷயம். மனு எல்லாம் போடணும்?”
“அது ரெண்டாவது. முதல்ல வாய் எதுக்கு இருக்கு? கேட்டு பாப்போம்?”
“எப்படி டா தருவாங்க?”
“எனக்கு என்னமோ தருவாங்கன்னு தோணுது”
“எப்படி சொல்ற?”
“நேத்து அவங்க ஊரு பக்கம் போய் லேசா விசாரிச்சேன்”
“என்னன்னு?”
“குழந்தை எப்படி இருக்கா? அவங்க எப்படி பாத்துகுறாங்கன்னு? நல்லா தான் பாத்துக்குறாங்களாம். ஆனா அவ அப்பன் வேற ஒரு பொண்ணை விரும்புறானாம்? அவ குழந்தையோட அவனை கல்யாணம் கட்ட மாட்டேன்னு சொல்லுது போல? இப்ப கேட்டா கொடுப்பான்”
“ஓ, ஆனாலும் தருவாங்களா டா?”
“இப்ப இருக்குற சூழ்நிலைல அந்த சுயநல பிசாசுங்க தறதுக்கு தான் யோசிக்கும். அதை உடனே நாம பயன்படுத்திக்கனும். இல்லைனா கஷ்டமாகிரும். கேஸ் கொடுத்தா அம்மா பொண்ணு ரெண்டு பேர் மனசும் ஏதாவது ஒரு விதத்துல காயப் படும். அப்படி ஒரு வேளை நாம கேட்டும் அவங்க கொடுக்கலைனா நாளைக்கே கேஸ் கொடுக்கலாம்”
“சரி டா, நீ சொல்றதும் சரி தான். முயற்சி பண்ணி பாக்கலாம். ஆனா அந்த குழந்தையோட அவளை ஏத்துக்க உனக்கு சம்மதமா டா?”
“அவ மீனாவோட குழந்தை. இனி என் குழந்தையும் தான். அதுகிட்ட பிரிவினை காட்டினா அடுத்த நிமிஷம் இந்த தாமரை உயிரோட இருக்க மாட்டான்”
“என்ன டா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?”, என்று கேட்க அவனுமே அமைதியாகி விட்டான்.
இருவரும் ஏதோ ஒரு எண்ணத்தில் அமைதியாக செல்ல அப்போது தான் அந்த காட்சி ராஜனின் கண்ணில் பட்டது. தூரத்தில் பனை மரங்களாக காட்சி அளிக்க அதற்கு கீழே ஒரு ஆணை மூன்று ஆண்கள் தரையில் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அருகே வண்டிகளும் கீழே சரிந்து கிடக்க “டேய் தாமரை அங்க பாரேன். ஒருத்தனை போட்டு அடிக்கிறாங்க டா”, என்று சொன்னதும் தாமரையும் அதைப் பார்த்து வண்டியை நிறுத்தி விட்டான்.
“இப்ப என்ன டா பண்ணுறது?”, என்று கேட்டான் ராஜன்.
“பாத்துட்டு சும்மா போனா நல்லாவா இருக்கும்? வா என்னன்னு பாப்போம்”, என்று சொல்லும் போதே அங்கு ஒரு கார் வர அதில் இருந்து இறங்கிய இரண்டு ஆண்களும் அவர்களுக்கு துணையாக வந்தார்கள். நால்வருமாக அவர்களை நெருங்கினார்கள்.
இவர்கள் வந்த பிறகும் அந்த மூன்று ஆண்களும் அவனை அடித்துக் கொண்டிருக்க உடை கிழிந்து முகம் எல்லாம் ரத்தத்தில் மறைந்து முகம் வீங்கிப் போய் கீழே கிடந்தான் ஒருவன்.