“இவன் அந்த பொண்ணைக் கட்டிட்டு வந்தா நம்ம வீட்டுக்கு எவனும் பொண்ணு கேட்டு வர மாட்டான்”
“அப்படி எல்லாம் இல்லைங்க. இவங்களுக்குன்னு பிறந்தவன் வர தான் செய்வாங்க. கல்யாணம் முடிஞ்சு வாழ்க்கையை இழந்து குழந்தையை இழந்து நிக்குற பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு ஏன் நினைக்க மாட்டுக்கீங்க?”
“எனக்கு உன்னை மாறி பரந்த மனசு இல்லை வசந்தா. எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்”
“அப்படினா உங்க மகன் சந்தோஷம் முக்கியம் இல்லையா? அவன் பிள்ளைகளை கொஞ்சணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா? அந்த பொண்ணு தனியா வந்தா என்ன? குழந்தையோட வந்தா என்ன? இது வரை அந்த பொண்ணோட குழந்தை. இனி நம்ம வீட்டு குழந்தைன்னு நினைச்சிக்குவோம். நாளைக்கு நம்ம மகனுக்கு ஒரு குழந்தை பிறக்கும். அந்த ரெண்டு குழந்தைகளும் தான் நம்ம வீட்டு வாரிசு. நாம பிரிவினை காட்டாம இருந்தா போதும். அவங்க சந்தோஷமா இருப்பாங்க”
“எவ்வளவு ஈஸியா சொல்ற வசந்தா நீ? எனக்கு சகிச்சிக்கவே முடியலை”
“கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க பா. நாளைக்கு இதே நிலைமை நம்ம பொண்ணுக்கு வந்தா அப்பவும் இப்படி தான் யோசிப்பீங்களா? இல்லை அவளுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு யோசிப்பீங்களா?”
“வசந்தா”
“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துறாது. நம்ம ரெண்டு பேரும் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணலை. நம்ம பிள்ளைங்க கண்டிப்பா நல்லா தான் இருப்பாங்க. அவன் தானே வாழப் போறான். அவன் இஷ்டப் படி இருக்கட்டுமே?”, என்று வசந்தா சொல்ல அன்னையைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது தாமரைக்கு.
“உங்க கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவ கிட்ட சொல்லிறலாம்ன்னு கல்யாணத்துக்கு கேட்டேன் பா. ஆனா அவ முடியாதுன்னு சொல்லிட்டா”, என்ற உண்மையையும் சேர்த்து சொல்லி விட்டான். இது புதிய செய்தி தான் அவர்களுக்கு என்றாலும் அவன் மீது கோபம் எல்லாம் வர வில்லை.
“வேண்டாம்னு சொன்னாளா? நம்புற மாதிரியா இருக்கு?”, என்று நக்கலாக கேட்டார் வேலாயுதம்.
“மத்த பொண்ணுங்க கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்க பாப்பாங்க பா. ஆனா மீனா அப்படி இல்லை. நீங்க சொன்ன விஷயத்தை எல்லாம் அவளும் சொல்லி முடியாதுன்னு சொல்லிட்டா”
“அப்புறம் என்ன? நீயும் விட்டுரு”
“சரி விட்டுறேன். இனி நீங்களும் கல்யாணத்தைப் பத்தி பேசாதீங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். இதற்கு மேல் பேசினால் தந்தை மனது புண்படும் படி பேசி விடுவோமோ என்று பயமாக இருந்தது.
அப்படி பேச அவர் ஒன்றும் சாதாரண அப்பா எல்லாம் கிடையாது. பிள்ளைகள் மீது உயிரை வைத்து அவர்கள் நலனுக்காக வாழ்பவர். வசந்தா கடிந்து கொண்டால் கூட அவர் அவளைத் தான் திட்டுவார். அவர் பேச்சில் அவருடைய ஆதங்கம் வெளிப்படுவது இயல்பு தானே? அதனால் தான் அவரைக் காயப் படுத்தாமல் சென்று விட்டான்.
“என்ன வசந்தா இது?”
“ஒரு அம்மாவா நானும் உங்களை மாதிரி யோசிச்சாலும் ஒரு பொண்ணா அந்த பொண்ணு பத்தியும் நான் யோசிக்கணுமே? ஊர் நாலு நாள் பேசும் தான். அப்புறம் அவங்க சந்தோஷமா வாழுறதை பாத்துட்டு பேசுறதை விட்டுரும். கொஞ்சம் யோசிங்க”, என்றாள் வசந்தா.
“அந்த அக்கா ரொம்ப நல்ல மாதிரி அப்பா. அண்ணா வாழ்க்கை நமக்கும் முக்கியம் தானே?”, என்று கேட்டாள் வதனா. அவர் ஒரு மாதிரி யோசனையில் இருந்தார். சட்டென்று அவரால் முடிவு சொல்ல முடியவில்லை.
“இதுக்கு மேல நீங்க தான் முடிவு எடுக்கணும் பா”, என்றாள் வசந்தா.
“லவ் மேரேஜ்ன்னு மட்டும் சொல்லிக்கலாம். யாருக்கும் அவளைப் பத்தி எதுவும் தெரியாது தானே? அப்படியே பின்னாடி தெரிய வந்தாலும் பாத்துக்கலாம்”
“அப்படி எல்லாம் மறைக்க கூடிய விஷயம் இல்லை. கெட்ட விஷயம் உடனே பரவும். அது மட்டுமில்லாம மறைக்காம இருந்தா தான் உண்மையான விஷயம் பரவும். நாம மறைச்சு வச்சி அது வெளிய தெரிஞ்சா தப்பான விஷயமா பரவும்”
“நீங்க சொல்றதும் சரி தான். நம்ம மகன் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துருக்கான்னு சந்தோஷம் தான் படணும்?”
“உங்க எல்லாருக்கும் வேணும்னா சந்தோஷமா இருக்கலாம். எனக்கு இதுல துளி கூட உடன்பாடு இல்லை. அதுக்கு மேல உங்க விருப்பம்”, என்று சொல்லி விட்டார் வேலாயுதம்.
“இப்படி சொன்னா எப்படிங்க?”
“என்னை என்ன பண்ண சொல்ற? எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க. எனக்கும் சம்மதம் தான். அதுவும் அவனுக்காக தான்”, என்று சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.
“ரொம்ப சந்தோஷம்ங்க”
“ரொம்ப சந்தோஷப் படாதே. அந்த பொண்ணு இன்னும் சரின்னு சொல்லலை. அதை ஞாபகம் வச்சிக்கோ”
“நான் அவ கிட்ட பேசுறேங்க. தாமரை ரொம்ப பொறுப்பான பையன். அவன் கூட படிச்சவனுங்க எல்லாம் எப்படி இருக்கானுங்கன்னு பாத்துட்டு தானே இருக்கோம்? அவன் இது வரைக்கும் ஏதாவது நம்ம கிட்ட கேட்டுருக்கானா? சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்”
“ம்ம், சந்தோஷமா இருந்தா சரி தான். சரி போய் துரையை சமாதானப் படுத்து”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த நாள் மாலை வதனா அன்னையை மீனாவைப் பார்க்க அழைத்துச் சென்றாள். நேராக ஹாஸ்டலுக்கு தான் சென்றார்கள். ஹாஸ்டல் வெளியே மீனா வருவதற்காக இருவரும் காத்திருக்க யாரோ வந்திருப்பதாக சொன்னதும் உண்மையிலே தன்னுடைய அன்னையும் அக்காவும் தான் வந்திருப்பதாக நினைத்தாள் மீனா. இவர்களை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லையே.
ஆனால் அங்கு அமர்ந்திருந்த வதனாவைக் கண்டதுமே அது அவளின் அன்னை என்றும் புரிந்து கொண்டாள். அவளைப் போல இல்லாமல் போனாலும் வசந்தா அப்படியே தாமரையைப் போன்று இருந்தாள்.
அவர்கள் அருகே சென்று “வா வதனா, வாங்க மா”, என்று வரவேற்றவளுக்கு தாமரை தன்னிடம் காதல் சொன்னது இவர்களுக்கு தெரியுமா என்ற கேள்வி வந்தது.
“அம்மா உங்களை பாக்கணும்னு சொன்னாங்க அக்கா. அதான் கூட்டிட்டு வந்தேன்”, என்று சொன்னதும் கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது மீனாவுக்கு.
நிச்சயம் வசந்தா தன்னை மிரட்ட தான் வந்திருப்பதாக எண்ணிக் கொண்டாள். அதுவும் அவள் மனதில் “என்ன டி, என் மகனை மயக்க பாக்குறியா? வேற ஆளே உனக்கு கிடைக்கலையா?”, என்று வசந்தா திட்டுவது போலவே ஒரு உணர்வு வர எச்சில் விழுங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தாள்.
வசந்தாவும் அவளை அளவிட்டுக் கொண்டு தான் இருந்தாள். அழகான அதே நேரம் அப்பாவியான முகம், அறிவுக்களையும் முகத்தில் தெரிந்தது.
மீனா தனக்குள், “என் கிட்ட அப்படி ஏதாவது கேட்டா நான் ஒண்ணும் உங்க பையனை காதலிக்கலைன்னு சொல்லிறனும்”, என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளது அம்மா அவளிடம், “உனக்கு தாமரையை பிடிக்கலையா?”, என்று கேட்டார்.
அந்த கேள்வியில் அதிர்ச்சியடைந்த மீனா, “எதுக்கு மா இப்படி கேட்குறீங்க?”, என்று கேட்டாள்.