“என்ன தான் ஆச்சு அண்ணா? அதுவும் சாகுற அளவுக்கு. என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்களா?”, என்று கேட்டாள்.
“அவங்களைப் பத்தி உனக்கு தெரியாதா? இருக்குறதுலே அதிக பைத்தியம் உன் அம்மாவும் அப்பாவும் தான். உங்க அப்பா கண்ணு முழிச்சிட்டார். இப்ப தான் பேசிட்டு வரேன். அவர் சொல்றதைக் கேட்டா எனக்கே அப்படி எரிச்சல் வருது மா. உங்களுக்கு பக்கத்து ஊர்ல ஒரு இடம் இருக்காமே?”
“ஆமா பூர்வீக சொத்து”
“அதை உன் சித்தப்பா தனக்கு வேணும்னு வந்து கேட்டுருப்பார் போல? உங்க அப்பா தம்பிக்கு கொடுக்கணும்னு சொல்ல உங்க அம்மா கொடுக்க கூடாது, என் மூத்த மகளுக்குன்னு பேச அந்த ஆள் சண்டையை மூட்டிட்டு போய்ட்டான் . இதுக ரெண்டும் இப்படி முடிவு எடுத்துருக்கு. உன் அக்காவுக்கு போன் பண்ணி சொன்னா காலைல வந்து பாக்குறேன்னு சொல்லி போனை வச்சிட்டா”
அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தாள். “இவங்க ரெண்டு பேரால நான் இன்னும் என்ன எல்லாம் பாக்கணுமோ? சாக போனவங்க ஒரேடியா செத்தா கூட நிம்மதியா இருந்துருக்கும் போல? இன்னும் ஹாஸ்பிட்டல் பில் அது இதுன்னு என் தலையை தான் உருட்டுவாங்க. ஏற்கனவே கொடுக்க வேண்டிய கடன் இருக்கு”, என்றவள் தாமரையை ஒரு முறை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
“அந்த கடனை அவன் எப்பவும் கேக்க மாட்டான். நீ இவங்களை மட்டும் பாரு”, என்று ராஜன் சொல்ல அவள் அவனை பார்க்க “தாமரை எல்லாம் சொன்னான் மா. எனக்கும் நீ நல்ல முடிவா அவனுக்கு சொல்லணும்னு ஆசையா இருக்கு. கொஞ்சம் சுயநலமா இருந்தா தான் இந்த உலகத்துல சந்தோஷம்ன்னு ஒண்ணும் வரும். அப்புறம் இங்க செலவு மொத்தமும் நீ பண்ணாத. உஷாரா இருந்துக்கோ. உன் அக்காவை கட்ட வை, இல்லையா உன் அம்மா காதுல கழுத்துல கிடக்குறதை கேளு”, என்றான் ராஜன்.
“அவங்க அம்மா அப்பாவுக்கு அவ செய்றா, நம்ம அதுல கருத்து சொல்ல வேண்டாம் ராஜா. இப்ப போலீஸ் வரும், கேட்டா என்ன சொல்ல?”, என்று கேட்டான் தாமரை.
போலீஸ் என்றதும் அவள் முகத்தில் சிறு மிரட்சி தெரிய “பயப்படாத மா, கடன் அதிகமா இருக்கு அதான் இப்படி பண்ணிட்டாங்கன்னு சொல்லிறலாம். அவங்களையும் சொல்ல வைக்கலாம். உன் அம்மா நாளைக்கு தான் கண்ணு முழிக்குமாம். சரி வா உன் அப்பாவைப் பாக்கலாம்”, என்று சொல்லி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே சென்று அவள் தந்தையை முறைத்துப் பார்க்க அவரோ தலை குனிந்து கொள்ள அவரிடம் என்ன பேசவாம்? “எப்படின்னாலும் என்னை நிம்மதியா மட்டும் இருக்க விடக் கூடாதுன்னு இருக்கீங்க அப்படி தானே?”, என்று கேட்டவள் வெளியே வந்து விட்டாள்.
போலீஸ் வந்து விசாரிக்கும் போதும் அவன் சொன்னதையே சொல்ல அதை எழுதிக் கொண்டவர்கள் சில விவரங்களை மட்டும் கேட்டு எழுதிக் கொண்டு சென்று விட்டார்கள்.
“சரி மா, வா சாப்பிட போகலாம்”, என்று அழைத்தான் ராஜன்.
“எனக்கு பசிக்கலை அண்ணா, சாப்பிடுற மன நிலைலயும் நான் இல்லை. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க”, என்றாள்.
“விடு டா வற்புறுத்தாத. கூப்பிட்டா தானே வர மாட்டா. வாங்கிட்டு வந்தா கொடுத்தா சாப்பிட்டு தானே ஆகணும்? இந்த மருந்து வாடைல சாப்பிட வேண்டாம்னு தான் வெளிய கூப்பிட்ட. ஆனா வரலைனா இங்கயே சாப்பிடட்டும். வா வாங்கிட்டு வருவோம். சாப்பாடு அருமை தெரிஞ்சவங்க அதை வீணாக்க மாட்டாங்க”, என்றான் தாமரை.
அவள் அவனை முறைத்துப் பார்க்க அவனோ அவள் பார்வையை தாங்கி அவளைப் பார்த்தான். “நானே வரேன் அண்ணா”, என்று சொல்லி அவள் எழுந்து கொள்ள ஆண்கள் இருவரின் முகத்திலும் புன்னகை.
“எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேருக்கும் கடவுளா ஒரு முடிச்சை இறுக்கிப் போட்டுட்டார்ன்னு தோணுது. இனி எல்லாம் நல்ல படியா நடக்கும். வாங்க சாப்பிட போகலாம்”, என்று சொல்லியே அழைத்துச் சென்றான்.
ஹோட்டல் சென்றதும் “எனக்கு ரெண்டு இட்லி போதும்”, என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டவளை கட்டாயப் படுத்தி ஒரு தோசையும் சேர்த்து சாப்பிட வைத்து தான் விட்டான் தாமரை.
மீண்டும் மருத்துவமனையில் அவளை விட்டுவிட்டு இருவரும் கிளம்பினார்கள். போகும் முன் “செலவுக்கு பணம் இருக்கா வேணுமா?”, என்று கேட்டான் தாமரை.
அவன் அக்கறை அவள் உயிர் வரை தீண்ட “நேத்து தான் சம்பளம் ஏறுச்சு. என் கிட்ட இருக்குது”, என்றாள்.
“நாளைக்கு வேலைக்கு போறியா மா?”, என்று கேட்டான் ராஜன்.
“இதுகளுக்கு துணைக்கு இருக்கணுமே அண்ணா. எங்க அக்கா கண்டிப்பா இருக்க மாட்டா. எப்படியும் ரெண்டு நாள் கழிச்சு தான் டிஸ்சார்ஜ் செய்வாங்க. நான் லீவ் தான் போடணும். லீவ் இருக்கு, பிரச்சனை இல்லை. நீங்க ரெண்டு பேரும் பாத்து போய்ட்டு வாங்க. அப்புறம் போகும் போது உங்க நண்பனுக்கு கொஞ்சம் உலகத்தைப் பத்தி சொல்லிக் கொடுங்க. கஷ்ட படுறவங்களுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுக்கணும்னு நினைச்சா அவங்க வாழ்க்கை வம்பா போயிரும்ன்னு”, என்று ஒரு குட்டையும் சேர்த்து வைத்தாள்.
“சொல்றேன் மா, மீனா மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். எப்பவும் அவளை விட்டுறாதன்னு கண்டிப்பா சொல்றேன் மா”, என்று சொன்ன ராஜன் அவள் முறைத்துப் பார்க்கவும் “நீ ஏதாவது பேசணும்னா பேசிட்டு வாங்கிக் கட்டிக்கிட்டு வா டா. நான் பாரக்கிங்ல நிக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அவன் சென்றதும் அவள் அமைதியாக இருக்க “இந்த இடத்துல இதைப் பத்தி பேசக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா நீயா ஆரம்பிக்கவும் சும்மா போக மனசில்லை. அன்னைக்கு என்னென்னவோ பேசி கடைசி வரை ஐ லவ் யு சொல்லவே இல்லை. இப்ப சொல்லவா?”, என்று சிறு சிரிப்புடன் கேட்க அவள் கண்கள் தெறித்து விடுவது போல விரிந்தது.
சிறு சிரிப்புடன் அவள் பார்வையை கண்டவன் “இல்லை வேண்டாம். அதெல்லாம் ஸ்பெஷல் மொமெண்ட்ஸ். இங்க வச்சு சொல்லி அதைக் கெடுத்துக்க கூடாது. மாமா காலைல பாக்க வரேன் அழகி. பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் பிம்பம் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் நினைவில் அவள் உதடு மலர அவள் கண்களும் அதில் சேர்ந்து சிரித்தது. முகம் மட்டும் அல்ல அகத்தையும் மலர வைத்தான் அவளவன்.
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டு இரண்டு ஆண்களும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். தாமரை வீட்டுக்கு போன போது வசந்தா அவனை எதிர் பார்த்து அமர்ந்திருந்தாள்.
“சாப்பாடு எடுத்து வைக்கவா பா?”
“சாப்பிட்டேன் மா”
“சரி, முகம் கழுவிட்டு வா. கொஞ்சம் பேசணும்”
“என்ன மா சொல்லு”
“உன் கல்யாண விஷயம் பா”, என்று சொல்ல அன்னையை அதிர்ந்து பார்த்தான். அந்த அதிர்ச்சியான பார்வையில் வசந்தா புருவம் உயர்ந்தது. அவனது தந்தையும் அங்கே வர இருவரும் இன்று ஏதோ ஒரு முடிவில் இருப்பது புரிந்தது.
ஒரு வாரமாக இருவரும் அவனிடம் ஒரு பெண் இருக்கிறது எப்போது பார்க்க செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். அவனோ தட்டிக் கழித்துக் கொண்டிருக்க இன்று வசமாக சிக்கி விட்டோம் என்று புரிந்தது.