அவன் சொன்னதை தான் அவரும் சொல்ல “குழந்தையை வச்சி என்னை மிரட்டுவாங்களே தவிர அந்த குழந்தையை அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கன்னு லேட்டா தான் சார் புரிஞ்சது. பரவால்ல குழந்தை அங்கயே இருக்கட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். என் கிட்ட கூட்டிட்டு வந்தா அதை என்னால நல்லா பாத்துக்க முடியுமானு கூட தெரியலை. என்னை விட அவங்க அவளை நல்லா பாத்துக்குவாங்க”, என்று சொல்லும் போது அப்படி அழுதாள்.
ராஜனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது அவளைக் கண்டு. “இப்போதைக்கு டைவர்ஸ் நல்ல படியா கிடைக்கட்டும் மா. அப்புறம் குழந்தை விஷயம் யோசிப்போம். இல்லைன்னா இழுத்தடிப்பாங்க”, என்று சொல்ல “சரி சார், இப்ப அங்க போய் என்னோட சர்ட்டிபிகேட், டிரஸ் எல்லாம் எடுக்கணும்”, என்றாள்.
“தாராளமா போ மா. போகும் போது ராஜனைக் கூட்டிட்டு போ”, என்று அவரும் சொல்ல அவனுடனும் சேர்த்து வைத்து பேசுவார்கள் என்று தெரிந்தாலும் சென்றாள்.
அவள் வீட்டுக்கு சென்றதும் அது தான் நடந்தது. வாய்க்கு வந்த படி பேசினாள் கல்யாணி. ராஜன் என்ன நடந்தாலும் அமைதியா வந்துரு என்று சொல்லி விட்டுருக்க எதற்குமே அவள் பதில் பேச வில்லை.
“என்னோட முக்கியமான பொருளை எடுக்க தான் வந்தேன். எடுத்துட்டு போயிறேன்”, என்று சொன்னவள் அறைக்குள் சென்று குழந்தையை தேடினாள்.
அது தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க அவசரமாக அதை நெருங்கி தூக்கிக் கொண்டவள் முகம் முழுக்க முத்தமிட்டு “என் வயித்துல நீ பிறக்காமலே இருந்துருக்கலாம் பாப்பா. இல்லைன்னா பையனாவாது பிறந்திருக்கலாம். உன் அம்மா ஒரு ராசி கெட்டவ டா. என் கூட இருந்தா நீ ரொம்ப ரொம்ப கஷ்ட படுவ. உன் சொந்தத்துக்கு என்னை தான் பிடிக்காது. உன்னை நல்லா தான் வச்சிக்குவாங்க. அதனால தான் அவங்க கிட்ட விட்டுட்டு போறேன். கூட்டிட்டு போனாலும் என் கூட சேந்து நீயும் கஷ்டப் படணும். ஒரு அம்மாவா உனக்கு பாதுகாப்பை கூட என்னால கொடுக்க முடியாது. என்னை மாதிரி நீயும் பயந்து தான் வாழனும். என் வீட்ல கூட எனக்கு நிம்மதியும் பாதுகாப்பும் இல்லை. அதனால நீ இங்கயே இரு. இந்த அம்மா உன்னை எப்பவும் மறக்க மாட்டேன்”, என்றவள் குழந்தையை மடியில் வைத்து போனில் பல புகைப்படங்களை எடுத்து தள்ளினாள்.
பின் குழந்தையை தொட்டிலில் போட்டவள் பேகை எடுத்து வைத்து அழுது கொண்டே தன்னுடைய முக்கிய பொருள்கள் நகைகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு மீண்டும் குழந்தையை கொஞ்சி விட்டு வெளியே வந்தாள்.
“போறது தான் பொற? இனி என் மகன் கட்டின தாலி எதுக்கு மா? கழட்டி கொடு. செயினும் எங்க வீட்ல போட்டது தானே?”, என்று கேட்டார் சோம சுந்தரம். அது சரி என்பது போல அனைவரும் அமைதியாக இருக்க அதை கட்டிய கணவனை ஒரு முறை பார்த்தாள்.
அவன் அவளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொள்ள ஒரு விரக்தி சிரிப்பை இதழில் படர விட்டவள் அப்படியே அதை கழட்டி அங்கிருந்த டீபாயில் வைத்தாள். காலில் கிடந்த மெட்டியையும் கழட்டி அங்கே வைத்தவள் “என்னோட பொருளை மெதுவா டெம்போல ஏத்தி அனுப்பிருங்க. பணம் நான் கொடுத்துறேன்”, என்று மட்டும் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டாள்.
இருவரும் ராஜனின் வண்டியில் தான் வந்தார்கள். அதனால் திரும்பிப் போகும் போது அழுது கொண்டே வந்தாள். அவனும் அவள் நிலை புரிந்து எதுவுமே கேட்க வில்லை.
வீட்டுக்கு வந்ததும் அவள் வந்த கோலமே வடிவுக்கு நடந்ததைச் சொல்லி விட மேலும் விசாரித்து அனைத்தையும் கேட்டதும் எந்த பாகுபடும் இன்றி கல்யாணியை விட அவள் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மீனாவை தவறாக பேச அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வீட்டுக்குள் சென்று படுத்து விட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் ஊராரின் பேச்சுக்கும் வடிவின் பேச்சுக்கும் பழகிக் கொண்டாள். எதிர்த்து பேசினாலும் எதுவும் மாறாது என்பதால் வீண் விவாதத்தை தவிர்த்து விடுவாள். சில நேரம் அதிகமாக பேசினால் திருப்பியும் கொடுப்பாள்.
அடுத்த வாரத்தில் அவளது பொருள்களை எல்லாம் குப்பை போல இறக்கி விட்டு சென்றார்கள் அவர்கள் ஏற்பாடு செய்த ஆட்கள்.
நாட்கள் நகர்ந்தது. மீனாவின் வீடு வேறு ஒரு பக்கமாக இடிந்து கொண்டிருக்க அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். அவளுடைய நகையை அடமானம் வைத்து அந்த வீட்டை கட்டினாள். அதுவும் தந்தை பெயரில். கடைசியில் நகையும் பேங்கில் இருக்க மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டிய நிலை.
ஒரு பக்கம் டைவர்ஸ் கேஸ் நடக்க ஜட்ஜ் முன்னிலையிலே கல்யாணி அவளை தவறாக பேச அன்று மீனாவும் நேருக்கு நேர் அனைத்தையும் பேசி விட்டாள். அதற்கு கல்யாணியும் சரி மகேஷூம் சரி அவளை முறைத்து தான் பார்த்தார்கள். அவர்கள் அவளுக்கு செய்ததை தவறு என்று ஒத்துக் கொள்ளவே இல்லை.
கேஸ் ஒரு பக்கம் நடக்க வேலை தேடி ஒரு பக்கம் சோர்ந்தாள். கடைசியில் ஒரு மெடிக்கல் கோடீங் அக்கடமியில் வரவேற்பாளர் வேலை தான் கிடைத்தது. அந்த ஓனர் தான் பாதி செலவில் அந்த கோர்சை அவளைப் படிக்கச் சொல்ல சம்பளம் வாங்கிக் கொண்டே அதில் படித்து அங்கேயே டிரைனராகவும் ஆகி விட்டாள்.
அவள் வாங்கும் சம்பளம் வீட்டு செலவுக்கும் லோன் கட்டுவதற்கும் இருந்தாலும் எப்போதாவது எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுக்கும் பணத்தை சேமித்து வைப்பாள். அதையும் வடிவு அது இது என்று சொல்லி பெரிய மகளுக்கு கறந்து கொடுத்து விடுவாள். கடைசியில் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவதில் வந்து நின்றது. அது கூட விருப்ப பட்டு தான் செய்தாள். ஏனோ அவர்களுக்கு செய்வது தன்னுடைய மகளுக்கு செய்வது போலவே எண்ணிக் கொள்வாள்.
அடிக்கடி மகள் நினைவு வரும். ஆனால் இரண்டு குடும்பத்துக்கும் உறவினர் ஒருவர் குழந்தையிடம் அதன் அன்னை இறந்து விட்டதாக சொல்லி தான் வளர்க்கிறார்கள் என்று சொன்னாள். அது மட்டுமா? கிஷோர்க்கு திருமணம் நடந்து விட்டது என்றும் அவன் மனைவியின் அக்காவுக்கும் மகேஷ்க்கும் தொடர்பு இருப்பதாகவும் சொன்னாள்.
இப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக தான் சுற்றுகிறார்கள் என்றும் கூடிய விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் சொன்னாள்.
“அவங்க வாழ்க்கை, அதை அவங்க எப்படி வேணாலும் வாழட்டும். எங்களுக்கு டைவர்ஸ் காப்பி கைக்கு வந்துருச்சு. இனி எதுவும் பேச வேண்டாம். பிள்ளை நல்லா இருக்குதான்னு மட்டும் அப்ப அப்ப பாத்துக்கோங்க மா. அவளுக்கு ஏதாவது ஒண்ணுண்ணா தயவு செஞ்சு எனக்கு சொல்லுங்க”, என்று அந்த பெண்மணியிடம் முடித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு வலி மட்டும் இருந்தது. அது அவனை நினைத்து அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
வருடங்கள் காற்றைப் போல வேகமாக சென்று கொண்டிருந்தது. பிள்ளையும் நன்கு வளர்ந்து விட்டாள் என்றும் இன்னும் மகேஷ்க்கு திருமணம் ஆக வில்லை என்றும் இவளுக்கு தெரியும். ஆனால் ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. ஆனால் இப்போதும் மகேஷ் அந்த பெண்ணுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக செல்வதை மீனாவுமே பார்த்திருக்கிறாள். ஆனால் அவன் அவளைப் பார்க்க வில்லை. இது தான் மீனாவின் வாழ்வில் நடந்தது. பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு படுத்திருந்த மீனாவுக்கு தூக்கம் தாமதமாக தான் வந்தது.
அடுத்த நாள் கண் விழித்ததும் மனது பாரமாக இருந்தது. இன்று அவள் குழந்தைக்கு பிறந்த நாள். அவள் பெயர் மஹிஷா. அவள் நினைவு அதிகம் வந்தது. வெகு நாட்களாக கோவிலுக்கு செல்லாதவள் இன்று கோவிலுக்கு சென்று மகள் பெயரில் அரச்சனை செய்தாள். கோவிலில் இருந்து வேலைக்கு செல்லும் வழியில் அவள் மனதில் பல யோசனைகள்.
குழந்தையை வாரம் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கேஸ் கொடுக்கலாமா என்ற யோசனை வந்தது. ராஜன் அண்ணாவிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்டாகிராமில் அவள் கணவன் ஒரு போஸ்ட் போட்டிருந்தான். அதில் குழந்தை பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது வீடியோவாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு மகளைப் பார்க்கிறாள்.
பார்த்தவளுக்கு சந்தோஷமும் கண்ணீரும் ஒருங்கே வந்தது. மகிஷா அங்கே நலமாக இருப்பதையும் சந்தோஷமாக இருப்பதையும் பார்த்தவள் “உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் செத்து போனவ பாப்பா. செத்தவ செத்தவளாவே இருக்கட்டும். மறுபடியும் உன்னை பாக்கணும்னு கேட்டு உனக்குள்ள குழப்பதை ஏற்படுத்த விரும்பலை. ஆனா அம்மா அடிக்கடி உன்னை கண்காணிச்சிட்டே இருப்பேன். உனக்கு ஒரு கஷ்டம் வந்தா நிச்சயம் நான் உன்னை கூட்டிட்டு வந்துருவேன் பாப்பா”, என்று சொல்லிக் கொண்டவள் அன்று முழுவதும் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இது தான் அழகு மீனா என்ற பெண்ணின் வாழ்க்கை. புகுந்த வீடு தலை முழுகி விட்டது. இப்போது பிறந்த வீட்டை விட்டும் வந்தாகி விட்டது. அடுத்து என்ன என்று ஒன்றும் புரிய வில்லை.
யார் தோளிலாவது சாய்ந்து அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் ஆண்கள் என்றால் கொஞ்சம் பயமும் வந்தது. அவள் தந்தை, காசி, அவள் கணவன், மாமனார், கொழுந்தனார் என எல்லா ஆண்களுமே அவளுக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை புகட்டி இருக்க ராஜனும் சரி தாமரையும் சரி கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தார்கள்.
ஆனாலும் இன்னொரு ஆணை நம்பவோ இன்னொரு வாழ்க்கையை யோசிக்கவோ அவளுக்கு துளி கூட மனது இல்லை என்பது மட்டுமே நிஜம். இந்த விடுகதைக்கு தாமரை விடையாவானா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.