அத்தியாயம் 2

மனதை கொள்ளையடிப்பதோ நீ

தண்டனை மட்டும் எனக்கா?!!!

அழகு மீனா, வயது இருபத்தி ஐந்து. அவளுக்கு பொருத்தமான பெயரை தான் வைத்திருந்தார்கள். மீன் போன்ற கண்கள், பொம்மை போன்ற முகம், சுண்டி விட்டால் சிவந்து போகும் அளவுக்கான நிறம் என அவ்வளவு அழகாக இருந்தாள். ஆனால் அழகு இருந்து என்ன பயன்?

இன்றைய உலகில் அறிவுக்கே அதிக மதிப்பு கிடைக்காமல் இருக்க அழகுக்கா கிடைக்கப் போகிறது? பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் ஒரு டிகிரி முடித்தவள் மெடிக்கல் கோடீங் கோர்ஸ் மட்டும் தனியே முடித்தாள். இப்போது மெடிக்கல் கோடிங் பயிற்சி மையத்தில் கிளாஸ் எடுக்கிறாள். சம்பளம் இருபதாயிரம். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரைக்கும் வேலை இருக்கும்.

அது போக இரவு ஒன்பது முதல் பதினொன்று வரை ஆன்லைன் கிளாசும் சில நேரம் இருக்கும். மற்ற நேரம் வீட்டு வேலை வேறு அதிகம் இருக்க அவளுக்கு ஓய்வு கிடைப்பதே அபூர்வம் தான்.

    பேருந்தில் நடந்ததை நினைத்துக் கொண்டே இரவு சமையலை முடித்தவள் கிடந்த பாத்திரங்களை கஷ்டப் பட்டு விளக்கி வைத்தாள். இப்போது அதை செய்ய வில்லை என்றால் இன்னும் அதிகமாக சேர்ந்து விடும் அபாயம் இருக்கிறது.

    அவர்கள் வீடு மிகப் பெரியது எல்லாம் இல்லை, இரண்டு அறைகள் அங்கே உண்டு. ஒரு அறையில் அவளது அப்பா படுத்திருப்பார், மற்றொரு அறையில் அவள் இருப்பாள். அவளது அன்னை எங்கே வேண்டும் என்றாலும் தூங்கிக் கொள்வாள்.

அவளது அறை மிகவும் சின்னது தான். அந்த அறையில் கட்டில் எல்லாம் கிடையாது. அவள் துணி வைக்க ஒரு செல்ஃப், கிளாசுக்கு செல்லும் போது கொண்டு போகும் பை, ஒரு தலையணை மற்றும் போர்வை அவ்வளவு தான் அவளது பொருட்கள். அவளது அறைக்கு கதவு கூட கிடையாது. ஒரு ஸ்கிரீன் மட்டுமே போட்டிருக்கும்.

    அனைவருக்கும் பொதுவாக வெளியே கழிவறையுடன் கூடிய குளியல் அறை உண்டு. சின்ன வீடு தான் ஆனால் அவள் சொந்த சம்பாத்தியத்தில் கட்டியது. ஆனால் அது கூட இப்போது அவளுக்கு சொந்தமில்லை.

அழகுமீனாவின் பெற்றவர்கள் வடிவு, துரைசாமி. அவர்கள் பெற்றவர்கள் தானா என்று இப்போது வரைக்குமே அவளுக்கு சந்தேகம் தான். அந்த அளவுக்கு தினம் தினம் அவளை உயிர் கொல்லியாக அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அழகு மீனாவுடன் பிறந்தது அவளது அக்கா வசுந்தரா மட்டுமே. அவளின் பெற்றவர்கள் அவளுக்கு வைத்த செல்ல பெயர் வசு. அந்த வீட்டில் வசு என்றால் தனி தான். கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்த ஜெகன் என்பவனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவள்.

    அப்போது கூட அவள் மேல் வடிவும் சரி துரைசாமியும் சரி கோபத்தையோ வெறுப்பையோ காட்டியது இல்லை. அவள் சுயநலத்தின் உச்சம். பெற்றவர்களை பார்க்க வந்தால் ஒரு நாள் கூட இந்த வீட்டில் தங்க மாட்டாள். ஒன்றும் வாங்கிக் கொண்டும் வர மாட்டாள். ஆனால் இங்கே இருக்கும் அநேக பொருளை சுருட்டிக் கொண்டு சென்று விடுவாள். அப்படிப் பட்டவள் அந்த வீட்டின் மகாராணி.

    காலையில் சீக்கிரம் எழுந்து காலை மதியம் என சமைத்து வைத்து விட்டு கிடக்கும் பாத்திரங்களை கழுவி போட்டு விட்டு அவசரம் அவசரமாக பேருந்தை பிடிக்க ஓடும் அழகு மீனாவுக்கு மதிப்பு என்னவோ சுழியம் மட்டுமே.

இன்றும் அவசரமாக சமையலை முடித்து விட்டு படுத்து விட்டாள். சிறிது நேரம் ஓய்வெடுத்தால் ஆன்லைன் கிளாஸ் எடுக்க தெம்பு கிடைக்குமே. ஆனால் அவள் அப்படி எல்லாம் நிம்மதியாக தூங்கி விட முடியாது.

“அடியே, என்ன போய் அதுக்குள்ள படுத்துட்ட? இங்க கிடக்குற வேலை எல்லாம் உங்கப்பனா செய்வான்?”, என்று காட்டு கத்தலாக கத்தினாள் அவள் அன்னை வடிவு.

சோர்வுடன் படுத்திருந்தவளுக்கு எரிச்சலாக வந்தது. எழுந்து வந்தவள் “இப்ப இதை நான் விளக்காம இருந்தாலும் வீடு அசிங்கமா கிடக்குன்னு நீ கழுவி வைக்க போறியா மா? இல்லை தானே? எப்பனாலும் அதை நான் தானே செய்ய போறேன்? உன்னால முடிஞ்சா இன்னும் வீட்டை அதிகமாக அழுக்காக்கி வை, நான் சுத்தம் பண்ணி வைக்கிறேன். சும்மா மிரட்டுற வேலை வச்சிக்கிட்ட எல்லாத்தையும் நீயே பண்ணுன்னு போட்டுட்டு போயிருவேன்”, என்று சொன்னாள்.

    “இந்த வாய்க்கு தானே அனுபவிக்கிற?”

    “ஆமா ஆமா, நல்லா தான் அனுபவிக்கிறேன். அனுபவிச்சிட்டு போறேன். எனக்கு தூங்கணும். ஏதாவது சத்தம் போட்டா இந்த மாசம் சம்பளத்துல ஒத்த ரூபாய் தர மாட்டேன். மாத்திரை மருந்துன்னு உன் பெரிய மக கிட்ட தான் கேக்கணும்”

    “ஆன் அது எப்படி தராம இருப்ப? நீ இந்த வீட்ல தானே இருக்க? தந்து தான் ஆகணும்?”

    “அப்படின்னா என்னை நிம்மதியா தூங்க விடு. இல்லைன்னா வேற வீடு எடுத்துட்டு போயிருவேன்“

    “ஆமா ஆமா, போனா தானே கண்டவன் கூட படு..து நிறைய சம்பாதிக்க முடியும்?”, என்று நக்கலாக சொல்லும் போதே பெற்ற அன்னை என்றும் பாராமல் அடிக்க தான் தோன்றியது அழகு மீனாவுக்கு.

    “இதுக்கு நான் பதில் சொல்லிருவேன். ஆனா அம்மானு பாக்குறேன். என் பொறுமையை ரொம்ப சோதிச்ச, அப்புறம் உனக்கு தான் கேவலம். அதனால கம்முன்னு போ”, என்று சொன்னவள் அங்கே ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து அவர்கள் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துரைசாமியைப் பார்த்தாள். அவர் எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்க “இவர் எல்லாம் ஒரு மனுஷன்”, என்ற எண்ணம் வர அறைக்குள் சென்றவள் உறங்க ஆரம்பித்தாள்.

    மாத்திரை போட்டிருந்ததால் தூக்கம் கூடிய விரைவில் அவளை தழுவிக் கொண்டது. இல்லையென்றால் அவள் தூங்குவதே அரிது தான். அவளை எல்லாம் கடவுள் எதற்கு தான் படைத்தார் என்று தினம் தினம் அவளுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டு விடிய விடிய விழித்திருந்த காலம் எல்லாம் உண்டு.

    சிறிது நேரம் கழித்து கண் விழித்தவள் மொபைலை எடுத்துப் பார்க்க ஆன்லைன் கிளாஸ் கிடையாது என்று தகவல் வந்திருக்க அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு. “சோறாவது ஒன்னாவது, தூங்கு டி கைப்புள்ள”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் உண்ணக் கூட இல்லாமல் தூங்கி விட்டாள். அவளை எழுப்பி உண்ணச் சொல்லக் கூட ஆள் இல்லை என்பதால் நிம்மதியாக தூங்கினாள்.

    அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு தான் அவளுக்கு  விழிப்பு வந்தது. காய்ச்சல் சற்று விட்டிருந்தாலும் தலை வலி மட்டும் மிச்சம் இருந்தது. எரிச்சலுடன் அவள் எழுந்து வரும் போது அவளது தந்தை வாசலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

தினமும் அவள் காலை எழுந்து சமைத்து வேலைக்கு கிளம்பும் போது தான் மனிதர் வாசலுக்கே எழுந்து வருவார். இன்று என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறார் என்று குழப்பம் வந்தது.

    “என்ன சீக்கிரம் எந்திரிச்சு வெளிய நிக்கீங்க? உள்ள போங்க. குளிரா இருக்கு. அப்புறம் படுத்துக்குவீங்க?”, என்றாள். அது அக்கறையா இல்லையா என்று தெரியாது. ஏதாவது வியாதியை இழுத்து வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு இழுத்து அடிப்பார். அதனால் தான் சொன்னாள்.

    “உன் அத்தை வாரா, ஆறு மணி பஸ்க்கு. இந்நேரம் பஸ் வந்துருக்கும். ஆனா வீட்டுக்கு வரலையேன்னு பாத்துட்டு இருக்கேன்”

    “ஐயோ அதுவா?”, என்று திக்கென்று இருந்தது அழகு மீனாவுக்கு. வனஜா அவளது தந்தையின் தங்கை. வனஜாவுக்கு அழகு மீனாவைக் கண்டாலே ஆகாது. பெற்ற அன்னையும் தந்தையும் மதித்தால் அல்லவா சொந்தங்கள் அவளை மதிக்கும்.

    சமையல் அறைக்குள் நுழைந்து விட்டால் விதவிதமாக மெனு கேட்பாள். செய்து கொடுக்க வில்லை என்றால் பல பிரச்சனை வரும். அவளது தந்தையும் அவளை திட்டுவார். இன்று எப்படி தப்பிக்க என்று எண்ணியவள் அவசரமாக சமையல் அறைக்குள் சென்று அனைவருக்கும் காப்பி மட்டுமே போட்டாள்.