வேறு வழியில்லாமல் மகனுக்காக சென்று பேசினாள் கல்யாணி. அவர்களும் ஆர்த்தியின் கண்டிஷனை சொல்லியே சம்மதம் சொன்னார்கள். திருமணமும் முடிந்தது. வீடும் கிடைத்து விட்டது. ஒரு பத்து நாட்கள் கழித்து அங்கே செல்லலாம் என்ற முடிவில் அவன் இருக்க திருமணம் முடிந்த அடுத்த நாளே அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

அப்போதும் “போகலாம் டா. ரெண்டு மூணு நாள் ஆகட்டும்”, என்றான் மகேஷ்.

“என்னை ஏமாத்துறீங்க. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு தானே? இன்னும் அங்க போகலைனா என்ன அர்த்தம்? உங்க அம்மா பேச்சைக் கேட்டு என்னை இங்கயே தான் இருக்க வைப்பீங்க? அப்புறம் கொடுமை படுத்துவீங்க. எனக்கு தெரியும். இப்படி தான் ஆரம்பிக்கும்”, என்று ஒரு மாதிரி கத்திய படி அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

பதறித் தான் போனான். அவசரமாக அவளை எழுப்பி அமர வைத்து தண்ணீர் தெளித்து அவளுக்கு தண்ணீரும் கொடுத்து அவனது வீட்டினரிடம் விஷயத்தை சொல்லி அவளுடைய அம்மா அப்பாவையும் வர வைத்தான். அதற்கு பிறகு தான் அவள் மன அழுத்தத்தில் இருப்பதும் அதற்காக அவள் மருந்து உட்கொள்ளுவதும் அவனுக்கு தெரிந்தது. அதிர்ந்து தான் போனான்.

“உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன் மாப்பிள்ளை. அவளை முதல் கல்யாணம் பண்ணிக் கொடுத்த வீட்ல கொடுத்த டார்ச்சல்ல தான் அவ அப்படி ஆகிட்டா. அவளுக்கு பிடிச்சதை பண்ணிக் கொடுத்துட்டா அவளை மாதிரி நல்ல பிள்ளையை பாக்க முடியாது மாப்பிள்ளை. சீக்கிரம் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

“ஐயோ ஒரு பைத்தியக்காரியை என் மகனுக்கு கட்டி வச்சிட்டாங்களே?”, என்று கல்யாணி ஒப்பாரி வைக்க அப்போது தான் கண் விழித்த ஆர்த்தி “யாருக்கு பைத்தியம்? எனக்கா பைத்தியம்? என்னையா பைத்தியம்ன்னு சொன்ன?”, என்று கத்திய படி அருகில் இருந்த அயர்ன் பாக்ஸை தூக்கி கல்யாணி மீதே எரிந்து விட்டாள்.

அனைவரும் இதை எதிர் பார்க்கவே இல்லை. உடனே எல்லாம் நடந்து முடிந்து விட்டது. கல்யாணி மண்டை உடைந்து ரத்தம் வடிய அதிர்ச்சியாக நின்றாள். சத்தியமாக ஆர்த்தியிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை யாரும் எதிர் பார்க்கவே இல்லை.

“ஐயோ அம்மா ரத்தம்”, என்ற படி மகேஷ் அன்னை அருகில் செல்லப் போக அவன் கையைப் பற்றிக் கொண்ட ஆர்த்தி “அவங்களை உங்க அப்பா பாக்கட்டும். எனக்கும் தானே உடம்பு சரி இல்லை. நீங்க என்னைக் கவனிங்க”, என்று சொல்லி பிடித்து வைத்துக் கொண்டாள்.

“கடைசியில் இந்த பைத்தியத்தை உன் தலையில கட்டிட்டாங்களே  டா? வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன் என் பேச்சு கேட்டியா? ஐயோ வலிக்குதே?”, என்று கல்யாணி அலற “மறுபடி மறுபடி என்னை பைத்தியம்னா சொல்ற? உன்னைக் கொல்லாம விட மாட்டேன்”, என்று சொன்ன ஆர்த்தி கல்யாணியை அடிக்க வர அவளைப் பிடித்துக் கொண்டான் மகேஷ்.

            “அம்மா சும்மா இரு மா. அப்பா அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. நான் பின்னாடியே வரேன்”, என்று சொன்ன மகேஷ் ஆர்த்தியை சமாதானப் படுத்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சோமசுந்தரம்.

அதே நேரம் மீனாவும் தாமரையும் அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள். ஒரு வாரம் முன்பு எப்போதும் காலையில் அவனுக்கு முன்பாக எழுந்து கொள்வாள் மீனா. குழந்தையும் அவனும் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் இருவரையும் ரசித்துப் பார்த்து விட்டு தான் அவனை எழுப்புவாள். அவள் கையில் டீயும் இருக்கும்.

இன்று அவன் எழுந்து கொள்ளும் போது குழந்தை அவனைக் கட்டிக் கொண்டு தான் படுத்திருந்தாள். அவள் அருகில் மீனாவும் படுத்திருந்தாள்.

            “இன்னும் மேடம் எந்திக்கலையா? நைட் ரொம்ப கஷ்ட படுத்திட்டோமோ? சரி இன்னைக்கு லீவ் தானே? கூட கொஞ்ச நேரம் தூங்கட்டும்”, என்று எண்ணிக் கொண்டு சென்றான்.

“மீனா எங்க டா?”, என்று கேட்டாள் வசந்தா.

            “ஏதோ அசதி போல மா தூங்குறா”

            “சரி தூங்கட்டும். டீ தரவா?”

            “சரி மா”, என்று சொல்லி வாங்கிக் கொண்டவன் அதை குடிக்க ஆரம்பித்தான்.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்தும் அவள் எழுந்து கொள்ள வில்லை என்றதும் லேசான பயம் வந்தது. அவள் அருகே சென்று அமர்ந்தவன் “மீனா ஏய் அழகி, எந்திரி டி? இன்னும் என்ன தூக்கம்?”, என்றான்.

            அவன் பேசியதில் உறக்கம் கலைந்தவள் சிறு சிரிப்போடு அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அவள் நெற்றியில் தவழ்ந்த முடியை ஒதுக்கி விட்டவன் அப்போது தான் அவளுடைய உடல் சூட்டையே உணர்ந்தான்.

            சிறு சந்தேகம் தோன்றியதும் அவள் நெற்றி மற்றும் கழுத்தின் அடியில் கை வைத்து பார்த்தவனுக்கு அப்போது தான் காச்சல் அடிப்பதே உரைத்தது.

            “ஏய் அழகி காச்சலா டி? இப்படி உடம்பு சுடுது”

            “ஹம் திடீர்னு டயர்டா இருக்கு. பீவரும் இருக்கு போல?”,

            “வா ஹாஸ்பிட்டல் போகலாம்”

            “வேண்டாம், இப்ப கஞ்சி ஏதாவது சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்குறேன். சாயங்காலம் காச்சல் விடலைன்னா போகலாம்”

            “சரி இரு, அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்”, என்று சொன்னவன் வெளியே சென்று விஷயத்தைச் சொல்ல அனைவருமே அவளை தனித் தனியாக வந்து பார்வையிட்டு சென்றார்கள்.

            குழந்தை பெற்ற தையல் பிரியும் அளவுக்கு அடி வாங்கியது எல்லாம் இப்போது கண் முன் வந்தது மீனாவுக்கு. இன்றோ ஒரு குடும்பமே அவளைத் தாங்க அவள் கண்கள் ஆனந்த கண்ணீரால் நிறைந்தது. அதை அவளது குழந்தையின் பிஞ்சி கரம் துடைத்து விட “அத்தை கிட்ட போ டா பட்டு. அம்மா கிட்ட இருந்தா உனக்கும் ஜுரம் வந்துரும்”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

            சற்று நேரத்தில் வசந்தா அவளை கஞ்சி குடிக்க வைக்க தாமரை மாத்திரை வாங்கி வந்து விழுங்க வைத்தான். வேலாயுதமோ மருமகள் உருவில் இருக்கும் மகளுக்காக யுக்கலிப்ட்டஸ் இலை, வேப்பிலை, துளசி என எல்லாம் கொண்டு வந்து கொடுத்து ஆவி பிடிக்க வைத்தார்.

கலை மற்றும் வதனா இருவரும் குழந்தையை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டாள். அன்று மாலையும் காச்சல் விடவே இல்லை என்றதும் அருகில் இருக்கும் கிளினிக் அழைத்துச் சென்றான். அங்கே நார்மல் செக்கப் செய்து ஊசி போட்டு  மாத்திரை கொடுத்தார்கள்.

அடுத்து வந்த நாட்களில் அந்த வெள்ளை மனிதர்களின் அன்பால் பூரணமாக குணமானாள். மருந்து குழம்பு, மிளகு ரசம் என சத்தான ஆகாரமாக வேறு உள்ளே சென்றது.

            ஆனாலும் காச்சல் சரியானாலும் அவள் ஒரு மாதிரி சோர்வாகவே இருந்தாள். வசந்தாவுக்கு தான் முதலில் இது குழந்தையோ என்று சந்தேகம் வந்தது. அதனால் கார்ட் வாங்கி பரிசோதிக்க சொன்னாள். அது இரட்டைக் கோடு காட்டியது. அதனால் தான் இன்று மருத்துவமனை வந்தார்கள் தாமரையும் மீனாவும்.

            இவர்கள் வீட்டில் அனைவரும் சேர்ந்து மீனாவை ரத்தம் வரும் வரைக்கும் அடித்து அட்மிட் செய்த அதே மருத்துவமனை தான். வண்டியில் இருந்து இறங்கியதும் அவளுடைய கையைப் பற்றி “மெதுவா வாடி அழகி. எப்பவும் வேகம் தான்”, என்று கடிந்த படி உள்ளே அழைத்துச் சென்றான் தாமரை.

            அவனை பொய்யாக முறைத்தவள் “சும்மா திட்டுனீங்க அப்புறம் நான் நடக்க மாட்டேன்? நீங்க தான் தூக்கிட்டு போகணும்னு சொல்லிருவேன். பாத்துக்கோங்க”, என்று மிரட்டினாள் மீனா.

            “அதெல்லாம் தண்டனையா டி? உன்னைத் தூக்குறது எல்லாம் வரம்”, என்று சொல்ல அவனைப் பார்த்து சிரித்தாள்.

            அவர்கள் உள்ளே சென்று மருத்துவர் ரங்கநாயகியை விசாரித்தார்கள். “மேடம் ஒரு ஆப்பரேஷன்ல இருக்காங்க மேடம். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க. கால் மணி நேரத்துல வந்துருவாங்க”, என்று சொல்ல அங்கே சென்று அமர்ந்தார்கள் கணவன் மனைவி இருவரும்.

            அவர்கள் அமர்ந்திருக்கும் போது தான் சோமசுந்தரம் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். அவர்களை முதலில் பார்த்தது தாமரை தான்.

            “அழகி அங்க பாரேன்”, என்றான்.

            “எங்கே?”, என்று திரும்பிப் பார்த்தவள் அவர்களை அங்கே எதிர் பார்க்க வில்லை போல? இவர்கள் தான் அவர்களைப் பார்த்தார்களே தவிர அவர்கள் மீனாவையும் தாமரையையும் பார்க்க வில்லை.

            ரத்தம் ஒழுக கல்யாணி நின்றிருக்க சோமசுந்தரம் பதட்டத்துடன் டாக்டரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

            “என்ன ஆச்சு இவங்களுக்கு?”, என்று நர்ஸ் கேட்க அந்த நேரமும் சும்மா இருக்காமல் “என் மருமக தான் என்னை அடிச்சு மண்டையை உடைச்சிட்டா நர்சம்மா. அவ ஒரு பைத்தியமாம். மாத்திரை எல்லாம் சாப்பிடுறாளாம்? ஐயோ வலிக்குதே”, என்று புலம்பினாள் கல்யாணி.

            நர்ஸ் அவர்களை மருத்துவரைப் பார்க்க அழைத்துச் செல்ல “கடவுள் இருக்க தான் செய்யுறார்ல மீனா?”, என்றான் தாமரை.

            “இது எனக்கு எப்பவோ தெரியுமே? என்னோட கடவுளான உங்களைப் பாத்தப்பவே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்துருச்சு”, என்று சொல்ல அவனுக்கு வார்த்தையே வரவில்லை.

            அடுத்த அரை மணி நேரம் கழித்து தான் அவர்கள் மருத்துவரைப் பார்க்க முடிந்தது.

            “அடடே, வா மா மீனா எப்படி இருக்க?”, என்று கேட்டார் ரங்கநாயகி.