“அவளை மன்னிச்சிருங்க, அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்றாள் வடிவு.
“நடந்து முடிஞ்சதை எதையும் யாராலயும் மாத்த முடியாது. சில பெரோட வளர்ப்பு அப்படி. அவங்களை எல்லாம் கண்டுக்காம தான் போகணும்”, என்று சொல்லி வடிவுக்கும் ஒரு கொட்டு வைத்தான் தாமரை. அடுத்து யாரும் எதுவும் பேச வில்லை.
மீனா மனது மட்டும் கொஞ்சம் அமைதியாக இருந்தது. அவளுக்கு இந்த பேச்சு பழையது தான் என்றாலும் அவளுக்காக வேலாயுதமும் தாமரையும் பேசிய பேச்சு புதிதாயிற்றே. சந்தோஷமாகவே இருந்தது.
“சரி மாமா”, என்றவள் அவனைப் பார்க்க “கால் பண்ணுறேன். பாத்து போ”, என்றவன் குழந்தையையும் கொஞ்சி அவர்களை வடிவு உடன் அனுப்பி வைத்தான்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்கு போக சொல்லி சொல்லி இருக்கும் நிலையில் அவர்களுக்கான மதிய உணவைக் கொடுக்க வந்திருந்தாள் வதனா.
“நீ எதுக்கு டா பாப்பா அலையுற?”, என்று கேட்டான் தாமரை.
“அப்பாக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குதாம் அண்ணா. எனக்கு லீவ் தானே? அதான் உன் கூட இருந்துட்டு சாயங்காலம் நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிறலாம். சரி இப்ப சாப்பிடுறியா?”
“ஆஸ்பத்திரி வாடைல சாப்பிட எங்க மனசு வருது? கொஞ்சமா கொடு மா”, என்று சொல்ல அவளும் அவனுக்கு எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னாள்.
அவன் பாதி உணவில் இருக்கும் போது தான் தாமரையைப் பார்க்க வந்தான் ராஜன். அவனைக் கண்டதும் “வாங்க”, என்று மட்டும் சிறு கூச்சத்துடன் சொல்லி விட்டு வதனா ஒரு ஓரத்தில் நிற்க “நம்ம வதனாவா டா இது? என்னமா வளந்துட்டா?”, என்று கேட்டான் ராஜன்.
அதைக் கேட்டு அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்தான். ஏனோ ஒரு நொடி இருவருக்குமே ஒரு தடுமாற்றம் வந்தது நிஜம்.
அவளுக்கு அவனை நினைவில்லை தான். ஆனால் அவனைப் பற்றி தெரியும். தாமரை உடல் நிலைப் பற்றி அவன் கேட்டுக் கொண்டிருந்தான். பின் “வதனாவை வேணா வீட்டுக்கு போகச் சொல்லு டா. நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு ரெஸ்ட் தான்”, என்றான்.
“இல்லை பரவால்ல நான் இருக்கேன்”, என்றாள் வதனா.
“நீ வேணும்னா வீட்டுக்கு போயேன் டா பாப்பா”, என்றான் தாமரை.
“ரெண்டு மணி பஸ் போயிருக்கும் அண்ணா. அடுத்து மூனே கால்க்கு தான் இருக்கு. அதுக்கு நான் உன் கூடவே வந்துருவேன்”
“இங்க டிஸ்சார்ஜ் முடிய நேரம் ஆகும். நான் வேணும்னா வதனாவை வீட்டுல விட்டுட்டு வரவா டா?”, என்று கேட்டான் ராஜன்.
அதற்கு தாமரை யோசிக்கும் போதே “இல்லை வேண்டாம், நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்”, என்று அவசரமாக சொன்னாள் வதனா. ராஜன் அதைக் கேட்டு அவளை முறைத்துப் பார்க்க “சரி டா ராஜா, அவளை ஒரு ஆட்டோ பிடிச்சு மட்டும் அனுப்பி விட்டுட்டு வா”, என்றான் தாமரை.
அவன் சரி என்று சொல்லி கிளம்ப வதனாவும் அவனுடன் சென்றாள். போகும் போது “யாருன்னே தெரியாத ஆட்டோக்காரன் கூட போவ? உன் அண்ணன் பிரண்ட் நான். என் கூட வர மாட்டியா?”, என்று கேட்டான் எரிச்சலாக.
“நான் ஆட்டோல போகும் போது ஊருல உள்ள எல்லாருக்கும் அது ஆட்டோ, உள்ள இருக்குறது ஆட்டோ டிரைவர்ன்னு தெரியும். ஆனா உங்க கூட போனா அண்ணனோட பிரண்டுன்னு தெரியுமா?”, என்று கேட்டு அவனைப் பார்த்தாள்.
ஏனோ அப்போது தான் அவள் பக்க நியாயம் புரிந்தது. “சாரி”, என்றான்.
“உதவ தானே நினைச்சீங்க? இதுக்கு எதுக்கு சாரி?”, என்று கேட்க ஏனோ அவள் பேச்சில் கவரப் பட்டான் ராஜன்.
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் இருவரும் அமைதியாக ஆட்டோ இருக்கும் இடம் வந்தார்கள். அவள் உள்ளே ஏறி வந்ததும் “வீட்டுக்கு போனதும் கால் பண்ணி சொல்லுறியா? உன் அண்ணன் நம்பருக்கு தான்”, என்று சொன்னதும் அவனைப் பார்த்து புன்னகைத்தவள் சரி என்னும் விதமாய் தலையசைத்தாள்.
அவள் ஆட்டோ சென்ற பிறகும் அவன் அங்கேயே நிற்க அவளும் அவனைத் திரும்பி திரும்பி பார்த்த படி தான் சென்றாள். தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டு சிறு சிரிப்புடன் அவன் அங்கேயே நிற்க “என்ன பாஸ் தன்னால சிரிச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்ட படி அங்கே வந்தான் தாமரையின் நண்பர் கதிர்.
“இல்லை சும்மா தான்”, என்று அவன் கேவலமாக சமாளிக்க “நம்பிட்டேன்”, என்று சொன்ன கதிர் மனதுக்குள் எதுவோ சரியில்லையே என்று மட்டும் நினைத்துக் கொண்டான். பின் இருவரும் உள்ளே சென்று தாமரையிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்று மாலை இருவரும் சேர்ந்தே தாமரையை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வாசலில் போட்டிருந்த கட்டிலில் தாமரை அமர்ந்திருக்க அவனுடன் பேசிய படியே இருந்தார்கள் ராஜனும் கதிரும்.
அவர்களுக்கு டீ போட்டு எடுத்து வந்தாள் வதனா. ராஜனின் கண்கள் அவளை லேசான சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அவனைக் கண்டு கொண்டான் கதிர்.
கதிருக்கு ராஜனை தவறாக எல்லாம் நினைக்கத் தோன்ற வில்லை. இது பற்றி தாமரையிடம் பேச வேண்டும் என்று மட்டும் எண்ணிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் கிளம்பிச் செல்ல தாமரையை அழைத்தாள் மீனா. இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க அதற்கு பின் குழந்தைக்கு வீடியோ கால் செய்து அவளுடனும் பேசிக் கொண்டிருந்தான்.
அடுத்த இரண்டு நாளில் தாமரை வேலைக்கு சென்று விட்டான். “உடம்பு இப்ப பரவால்லயா டா?”, என்று கேட்டான் கதிர்.
“அதெல்லாம் சரியாகிருச்சு டா”
“நான் கூட கவலைப் பட்டேன் உன்னை நினைச்சு”
“அப்படியா? அப்படி என்ன சார் கவலைப் பட்டீங்க? நான் வரலைனா பஸ்ல வர பொண்ணுங்க கிட்ட தலைவர் சுதந்திரமா கடலை தானே டா போட்டுருப்ப?”, என்று தாமரை அவனைக் கலாய்க்க அவனோ முறைத்துப் பார்த்தான்.
“சரி சரி கோபப் படாத. சொல்லு என்ன கவலைப் பட்ட? அதெல்லாம் லேசான அடி தான் டா”
“என் கவலை அது இல்ல மச்சி”
“அப்புறம்?”
“கல்யாணம் வேற முடிய போகுது? பெரிய பெரிய கனவோட இருந்துருப்ப? அடி கொஞ்சம் அதிகமா இருந்துச்சுனா வெறும் தாலி மட்டும் தானே கட்டியிருக்க முடியும்? மத்ததுக்கு எல்லாம் கூட கொஞ்சம் நாள் ஆகிருக்கும்ல?”, என்று கேட்டவன் அவன் அடிக்கும் முன் அங்கிருந்து ஓடியே விட்டான்.
சிறிது நேரம் கழித்து வந்தவனின் முதுகில் தாமரை இரண்டு அடி அடித்து விட்டே ஓய்ந்தான். “அப்புறம் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் டா தாமரை”
“ரொம்ப நல்லவன். அவன் கூட பிறந்தது ஒரு பொண்ணு தான். அதையும் கட்டிக் கொடுத்துட்டாங்க. வீடு சொந்த வீடு தான். நிலம் எல்லாம் இருக்கு. அவங்க அப்பா விவசாயம் பாக்குறாங்க. கொஞ்சம் இறங்குற மனசுனால அதிகமா சம்பாதிக்க தெரியாது. கலகலப்பா இருப்பான். பிடிச்சவங்களுக்கு அவனே போய் உதவி செய்வான். அவ்வளவு தான். ஏன் பொண்ணு கொடுக்க போறியா?”
“பொண்ணு கொடுக்க என் வீட்ல பொண்ணா இருக்கு? உன் வீட்ல தான் பொண்ணு இருக்கு கொடுக்குறது”
“என்ன டா சொல்ற?”
“வதனாவுக்கு பாக்கலாம்ல?”
“வதனாவுக்கா? அவ சின்ன பொண்ணு டா”
“இன்னும் ரெண்டு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் தான் பண்ணி வைப்ப. இப்ப படிக்கிறதை கல்யாணம் முடிச்சிட்டு படிக்க வைக்க சொல்லு. அவன் செய்யாமலா இருப்பான்?”, என்று சொல்ல தாமரை யோசனையில் ஆழ்ந்தான்.
“நல்ல பையனா இருக்கான். எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. ஒரு வேளை அவங்க அம்மா தேடுற பொண்ணு நம்ம வதனாவா ஏன் இருக்க கூடாது? அம்மா அப்பா கிட்ட பேசு. அவங்களுக்கு சம்மதம்னா அவன் கிட்ட கேளு”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டான் தாமரை.
ஏனோ இந்த பேச்சு வந்ததும் தாமரையின் மனதுமே ராஜனையும் வதனாவையும் அருகருகே நிற்க வைத்து பார்த்து சந்தோஷப் பட்டது. பஸ் எடுக்க நேரமானதால் அந்த நினைவை கை விட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.
அடுத்த நாளே அவன் வீட்டில் பேச “நாங்க எதுக்கு பா மறுப்பு சொல்லப் போறோம்? அவங்க வீட்ல சரின்னு சொன்னா எங்களுக்கும் சம்மதம் தான். பேசி பாரு. ஒத்து வந்தா முடிச்சிறலாம்”, என்று சொல்லி விட்டார் வேலாயுதம்.
இது எதுவும் வதனாவுக்கு தெரியாது. முடிவு தெரியாமல் அவள் மனதை கலைக்க யாரும் தயாராக இல்லை. அதே நேரம் அவர்கள் சொன்னால் அவள் சரி என்று தான் சொல்லுவாள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது.
தாமரை அடுத்து இந்த விஷயத்தைச் சொன்னது மீனாவிடம் தான். அவளோ “நல்ல முடிவு தான். வதனாவுக்கு அண்ணா பொருத்தமா இருப்பாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அண்ணா கிட்ட பேசிருங்க”, என்றாள்.