இன்னும் திருமணத்திற்கு ஐந்து நாட்கள் இருக்கும் போது தாமரைக்கு ஒரு விபத்து நடந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வண்டியில் வரும் போது எதிரில் வந்த காரில் லேசாக இடித்து விட்டது.
பெரிய அடி எல்லாம் இல்லை. அவன் மெதுவாக வந்ததால் லேசாக ஆங்காங்கே சிராய்த்திருந்தது. உடனே ஆங்கிருப்பவர்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள்.
லேசாக கால் பிசகி கட்டு போட்டிருந்தது. கைகளில் லேசாக சிராய்ப்பு இருந்தது. மற்ற படி பெரிதாக இல்லை. முதலில் அவனது தந்தைக்கு தான் தகவல் சொன்னான். மொத்த குடும்பமே பதறி அடித்துக் கொண்டு வந்தது. அனைவரும் அவனுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்று பார்த்த பிறகு தான் நிம்மதியானார்கள்.
தந்தையை மட்டும் துணைக்கு இருக்க வைத்து விட்டு மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்து விட்டு அடுத்த நாள் கிளம்பும் படி சொல்லப் பட்டது.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மீனாவுக்கு எப்போதும் அழைப்பான். இன்று அழைக்க வில்லை/. விஷயத்தைச் சொன்னால் பயந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது.
மாலை வரை பார்த்தவள் அவன் அழைக்க வில்லை என்றதும் அவளே அழைத்து விட்டாள். தயக்கத்துடன் எடுத்தவன் “சொல்லு டி அழகி?”, என்று சாதாரணமாக பேச முயன்றான்.
“என்ன ஆச்சு? எங்க இருக்கீங்க? எதுக்கு கால் பண்ணலை? வீட்டுக்கு போய்ட்டீங்களா? இல்லை அடுத்த ஷிப்ட் பாக்குறீங்களா?”, என்று படபடப்பாக கேட்டாள்.
“வேலை முடிஞ்சிட்டு டி அழகி வீட்டுக்கு வந்துட்டேன். அப்படியே படுத்தேன், தூங்கிட்டேன். அதான் கால் பண்ணலை. சாரி”
“சாரி எல்லாம் வேண்டாம், எப்பவும் பண்ணுவீங்களா? இன்னைக்கு கால் வரலைன்னு கொஞ்சம் பயந்துட்டேன்”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “சிஸ்டர் எங்க அண்ணனுக்கு டிரிப்ஸ் முடிஞ்சிருச்சு. வேற பாட்டீல் மாத்துங்க“, என்ற ஒரு ஆணின் குரலும் “இதோ மாத்துறேன்”, என்ற நர்சின் குரலும் அவளுக்கு நன்கு கேட்டு விட்டது.
“என்ன டிரிப்ஸ்? நீங்க எங்க இருக்கீங்க? ஆஸ்பத்திரிலயா இருக்கீங்க?”, என்று படபடப்பாக கேட்டாள்.
“போச்சு டா, சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆன்அ உனக்கு தெரிஞ்சிருச்சு. வீட்டுக்கு போகும் போது எதிர்ல ஒரு கார் காரன் தப்பா வந்துட்டான். லேசா சுளுக்கு மட்டும் தான். நம்ம ஜிஹெச்ல தான் இருக்கேன். எனக்கு ஒண்ணும் இல்லை டி. அப்பா கூட இருக்காங்க”, என்று சமாதானமாக சொல்ல அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
“ஏய் அழகி அழுறியா டி?”
“உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு என் கிட்ட சொல்லலை? எனக்கு உங்களைப் பாக்கணும். நான் இப்ப வரேன்”
“ஏய் எனக்கு ஒண்ணும் இல்லை மா”, என்று அவன் சொல்வதைக் கேட்க அவள் லைனில் இருக்க வில்லை. அவள் தன்னைப் பார்த்தால் மட்டும் தான் சமாதானமாவாள் என்று தெரிந்து வரட்டும் என்று எண்ணிக் கொண்டான்.
அவசரமாக ஒரு சுடிதாரைப் போட்டவள் குழந்தைக்கும் ஒரு உடையைப் போட்டு கிளப்பி விட்டாள். “இவ்வளவு நேரத்துக்கு எங்க டி? அந்த தம்பி வருதா?”, என்று கேட்டாள் வடிவு.
“இல்லை அவருக்கு ஏதோ அடி பட்டுருச்சாம். ஆஸ்பத்திரில இருக்கார் பாக்க போறோம்”
“ஐயோ, பெருசா ஒண்ணும் இல்லை தானே?”
“இல்லைன்னு தான் சொல்றார். ஆனா போனா தான் தெரியும்”
“சரி ஒரு ஆட்டோ பிடிச்சு போ. உன் அக்கா இப்ப வாறேன்னு சொன்னா. அவ வந்ததும் நான் வரேன்”, என்று சொன்னதும் அடுத்த நொடி மீனா அங்கே இருக்க வில்லை. அவனுக்கு ஒன்று என்றதும் அவள் உயிர் வரை துடித்தது.
இதயம் படபடத்தது என்றால் அவள் மனதோ எனக்கு எதுவுமே நிலைக்காதா என்ற அளவுக்கு யோசித்தது. பதறி அடித்துக் கொண்டு தான் அவனைக் காண வந்தாள் மீனா.
மருத்துவமனை வந்ததும் அவனுக்கு அழைத்து எந்த பிரிவு என்று கேட்டு அங்கே சென்றாள். அவர்களைக் கண்டு அவன் புன்னகைத்தான் என்றால் அவனைக் கண்டதும் அவள் கண்கள் கலங்கியது.
“அப்பா”, என்ற மகிஷா குரலில் தான் நடப்புக்கு வந்து அவனை நெருங்கிச் சென்றாள். அவள் கண்கள் அவன் தலை முதல் கால் வரை வருட “ரொம்ப வலிக்குதா பா?”, என்று கேட்ட குழந்தை அவன் காலை பிஞ்சு விரலால் தடவ “அப்பாவுக்கு சரியாகிரும் டா பட்டு”, என்று சமாதானப் படுத்தியவன் “அழகி அழக் கூடாது. எனக்கு ஒண்ணும் இல்லை. வலி கூட அவ்வளவா இல்லை. நாளைக்கு வீட்டுக்கு போயிருவேன்”, என்று இருவருக்கும் சமாதானம் சொன்னான்.
அப்போது உள்ளே வந்த அவனது தந்தை “வா மா, அவனுக்கு ஒண்ணும் இல்லை. கவலைப் படாத. சின்ன அடியோட போச்சு. சரி நீ அவன் கூட இரு. நான் உன் அத்தை நைட்டுக்கு சமைச்சு வச்சிருக்காளாம். போய் வாங்கிட்டு வந்துறேன்”, என்று அவளிடம் சொன்னவர் “பேத்தி போகலாமா? தாத்தா கூட வரியா?”, என்று கேட்டார்.
அவள் சரி என்று சொன்னதும் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட இருவர் மட்டும் தான் இருந்தார்கள். “டீ, ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரவா? குடிக்கிறீங்களா?”, என்று கேட்டாள்.
“இப்ப தான் அப்பா கூட டீ குடிச்சேன் டி அழகி”
“வலிக்குதா ரொம்ப?”
“அப்படியே நம்ம குட்டிமா மாதிரியே கேக்குற? அவளுக்கும் உனக்கும் வித்தியாசமே இல்லை. நிஜமா எனக்கு வலிக்கவே இல்லை போதுமா?”
“நான் ஒரு ராசி கெட்டவ. என்னால தான் உங்களுக்கு இப்படி ஆகிருச்சு?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்க அவளை முறைத்துப் பார்த்தான் தாமரை.
“பைத்தியமா டி நீ? இந்த அளவுக்கு நீ யோசிக்கிற அளவுக்கு எனக்கு ஒண்ணும் இல்லை. இங்க கிட்ட வந்து உக்காரு வா”. என்று சொல்லி அருகில் வரச் சொன்னான்.
அந்த நீளமான அறையில் பலர் இருந்தாலும் இவர்களை கண்டு கொள்ள வில்லை என்பதால் அவன் கரங்கள் லேசாக அவள் இடையை வளைத்து பிடித்துக் கொண்டது.
அவளும் அவனை நெருங்கி அமர அவள் மன உணர்வுகள் அவனுக்கு புரிந்தது. “இன்னொரு தடவை ராசி அது இதுன்னு பேசாத டி அழகி கஷ்டமா இருக்கு”, என்றான்.
“உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா என்னால உயிரோடவே இருக்க முடியாது”, என்று சொன்னவள் தன்னுடைய விரல்களால் அவன் முகத்தை வருடினாள்.
அவள் உதடுகள் லேசாக அவன் கை விரலில் வேறு பதிய ஆனந்தமாக அவளைப் பார்த்தான் தாமரை.
“அடி பட்டுச்சுனா முத்தம் எல்லாம் கிடைக்குமா டி அழகி? இது நல்லா இருக்கே”
“உங்களுக்கு தராம யாருக்கு தரப் போறேன்? ஆனா கவனமா இருங்க. எங்களுக்காக நீங்க கவனமா இருந்து தான் ஆகணும். உங்களை விட்டா எனக்கும் பாப்பாவுக்கும் வேற யாரும் இல்லை”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“பேசாம இந்த கல்யாணத்தை நிறுத்திறலாம்ன்னு பாக்குறேன்”, என்று சொன்னதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அவன் சொன்னதை அவளால் நம்ப கூட முடிய வில்லை. அவள் கண்கள் மேலும் கலங்க அவனும் சளைக்காமல் அவளைப் பார்த்தான்.