அத்தியாயம் 12 

இதயம் கூட சிரித்துக் 

கொண்டே இருக்கும் 

நேசத்தின் அருகாமையில்!!!

கடையில் குழந்தைக்கு தேவையானது அவளுக்கு தேவையானது என வாங்கிக் கொடுத்தான் தாமரை. இரவு உணவை முடிக்க ஹோட்டலுக்கு சென்றார்கள். இருவரையும் வயிறு நிறையும் அளவுக்கு சாப்பிட வைத்தான்.

            உண்டு முடித்து பில் கட்டும் போது தான் மகேஷ் உள்ளே வந்தான். அவனை முதலில் பார்த்தது குழந்தை தான்.

            “அப்பா, அங்க பாருங்க டேடி”, என்ற அவளின் குரலில் தான் நடப்புக்கு வந்தார்கள்.

            அவனை அங்கே கண்டு இவர்கள் இருவருக்கும் திகைப்பு தான் என்றாலும் மகேஷ்க்கும் அதே நிலை தான். ஒரு வார்த்தை கூட யாராலும் பேச முடிய வில்லை. ஏனோ மீனவால் அந்த இடத்தில் நிற்க கூட முடிய வில்லை.

பயம் எல்லாம் கிடையாது. ஆனால் பழைய விஷயங்கள் லேசாக நினைவுக்கு வருவதால் சிறு எரிச்சல் அவ்வளவே. “நான் வண்டி கிட்ட நிக்குறேன். நீங்க பே பண்ணிட்டு வாங்க”, என்று அவனிடம் சொன்ன மீனா “ஏய் நீ வரியா டி அம்மா கூட?”, என்று கேட்டாள். மகளை அழைத்துச் சென்று விடுவான் என்ற பயம் எல்லாம் அவளுக்கு இல்லை. நிச்சயம் தாமரை பிள்ளையை கொடுக்க மாட்டான் என்று தெரியுமே?

            “நீ போ மா. நான் அப்பா கூட வரேன்”, என்று சொன்ன குழந்தை அவன் மீது சாய்ந்து கொள்ள மகேஷ் வெறும் பார்வையாளன் மட்டுமே.

            அவனைக் கண்டதும் தாமரைக்கும் எதுவும் பேச்சு ஓட வில்லை. அமைதியாக நிமிடங்கள் கழிய மகேஷ்க்கு குழந்தையை கொஞ்ச ஆசை வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான்.

தாமரை வேறு பிள்ளையை கங்காருகுட்டி போல இறுக்கமாக பிடித்திருக்க அவனிடம் இருந்து எப்படி வாங்கவாம்? பில் கட்டி விட்டு அவனிடம் எதுவும் பேசாமல் தாமரை குழந்தையுடன் வெளியே சென்று விட்டான். வேறு வழியில்லாமல் மகேஷ் ஹோட்டல் உள்ளே சென்றான். ஆனால் அவன் கண்கள் ஒரு நொடி நின்று அவர்களைத் திரும்பிப் பார்த்தது.

            மீனா ஏதோ கேட்க அதற்கு தாமரை ஏதோ நக்கலாக சொல்ல அதற்கு மீனா தாமரையை தலையில் லேசாக தட்ட தந்தையை அடித்ததும் குழந்தை அன்னையை முறைக்க என அந்த காட்சி ஒரு உயிரோட்டமாக இருந்தது.

            அவர்கள் வண்டி போன பிறகும் அவர்களைப் பார்த்த படியே இருந்தான் மகேஷ். தவறு யாரு பக்கம் என்று ஒரு நொடி  அவன் மனது எண்ணியது. ஆனால் அதற்கு விடை சொல்வார் தான் யாரோ?

            ஆர்த்தி வேறு திருமணத்திற்கு உடனே சம்மதம் சொல்ல வில்லை. இவர்கள் கேட்டதற்கும் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறாள் என்பது தெரியவும் நேற்று நேரடியாக அவளை சென்று பார்த்ததை இப்போது எண்ணிப் பார்த்தான்.

            “நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா ஆர்த்தி?”, என்று கேட்டான் மகேஷ்.

            “உடனே எதுவும் பேச வேண்டாம் மகேஷ். எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்”

“ஏன்? என்னை உனக்கு பிடிக்கலையா?”

“உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா கல்யாணத்தை நினைச்சா தான் பயமா இருக்கு. என்னோட முதல் கல்யாணம் பிரச்சனைல முடிஞ்சது உங்களுக்கு தெரியும் தானே மகேஷ்?”

“ஆமா”

“அங்கயும் எனக்கு மாமியார் நாத்தனார் பிரச்சனை தான். உங்க வீட்லயும் அந்த உறவு எல்லாம் இருக்கு. நான் அவங்களை வெறுக்க எல்லாம் இல்லை. அதே நேரம் என்னால அவங்க கூட ஒண்ணா இருக்க முடியாது”

“நீ என்ன சொல்ற ஆர்த்தி?”

“எனக்கு கூட்டு குடும்பமா இருக்குறது பிடிக்கலை? ஒரு காலத்துல பிடிச்சது தான். ஆனா இப்ப இல்லை. ஒரே வீட்ல இருந்து சண்டை போட்டு பிரியுறதுக்கு நாம வேணா கல்யாணத்துக்கு அப்புறம் தனியா போயிறலாமே? இப்ப நீங்களும் இங்க நம்ம ஊர்ல தான் வேலை பாக்குறீங்க? உங்க ஆபீஸ் பக்கத்துல வீடு பாருங்க. வாடகை கூட நான் என் சம்பளத்துல இருந்து கொடுத்துறேன்”

“அது எப்படி சரி வரும்? என்னோட சம்பளத்துல தான் குடும்பம் ஓடுது”

“அது தான் எனக்கு பயமா இருக்கு. நீங்க உங்க வீட்டுக்கு கொடுக்க கூடாதுன்னு சொல்ல மாட்டேன். ஆனா எல்லாத்தையும் கொடுக்க கூடாது தானே? ஏன்னா நாளைக்கு நமக்கும் பிள்ளைங்க வரும். நம்ம குடும்பமும் முக்கியம் தனே? உங்க அம்மா அப்பாவுக்கு ஒரு அமெளண்ட் கொடுங்க போதும். அதான் உங்க தம்பி இப்ப வேலைக்கு போறானே? அவனும் உங்க குடும்பத்துக்கு கொடுக்கட்டும். அதை வச்சு உங்க அம்மா அப்பா வாழட்டும். எனக்கு ரெண்டாவது வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு ஆசையா இருக்கு. இன்னொரு பிரச்சனையையோ  நிம்மதி இல்லாத வாழ்க்கையையோ ennalஅ நினைச்சு கூட பாக்க முடியாது. தனியா இருப்போம். அப்ப அப்ப உங்க வீட்டுக்கு போவோம். நீங்க தினமும் கூட போங்க. இதுக்கெல்லாம் உங்களுக்கு சம்மதம்னா வீட்ல பேசுங்க. இல்லைனா நீங்க வேற பொண்ணு பாத்துக்கோங்க”, என்று நெற்றியில் அடித்தது போல சொல்லி விட்டாள்.

            அதையும் அவன் வந்து கல்யாணியிடம் சொல்ல “அவளுக்கு அவ்வளவு திமிரா? இப்பவே குடும்பத்தை பிரிக்க பாக்ககுறா. அவ உனக்கு வேண்டாம். எனக்கு நீயும் உன் சந்தோஷமும் தான் முக்கியம். நான் உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்”, என்றாள்.

            “அம்மா, அப்படி எதுவும் செய்யாத. நானும் ஆர்த்தியும் பழகுறது ரெண்டு ஊருக்கும் தெரியும்? நாங்க கல்யாணம் பண்ண போறோம்ன்னு தான் எல்லாரும் பேசுறாங்க. இப்ப போய் வேற பொண்ணு பாக்குறது தெரிஞ்சு இன்னும் எத்தனை பொண்ணோன்னு பேசுவாங்க. இதுவே முடிச்சிறலாம் மா”

            “அப்ப வேற வீட்டுக்கு போயிருவியா? நான் உனக்கு முக்கியம் இல்லையா? நம்ம குடும்பம் முக்கியம் இல்லையா?”, என்று கேட்டு கல்யாணி கண்ணீர் விட பதில் சொல்ல முடியாமல் மகேஷ் தான் அமைதியாக சென்று விட்டான்.

            ஆக மொத்தத்தில் அவனுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்குமா என்று தெரியாத பட்சத்தில் மீனாவை குடும்பமாக பார்த்தது ஒரு மாதிரி பொறாமை தீயை அவனுக்குள் விதைத்தது.

            “சார் என்ன வேணும்? பார்சலா சாப்பிடுறீங்களா?”, என்று கடை ஊழியன் கேட்க “பார்சல் தான் பா. நாலு நாலு இட்லியா அஞ்சு பார்சல் கட்டிருங்க”, என்றவன் அதற்காக காத்திருந்தான்.

            அவன் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போன போது மனது ஒரு மாதிரி பாரமாக இருந்தது. வீட்டில் தம்பி மனைவியுடன் சேர்த்து மூன்று பெண்கள் இருந்தாலும் காலை இரவு கடையில் தான் என்று ஆனது.

            அவன் வெளியூரில் இருக்கும் போது கூட தெரிய வில்லை. இப்போது அவன் கையில் இருந்து அவ்வளவு பணம் செலவானது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

            “அண்ணா சீக்கிரம் தா பசிக்குது”, என்று சொல்லி உணவை வாங்கிக் கொண்டு சென்றாள் அவன் தங்கை.

            ஏனோ அவன் காதில் மீனா பேசிய பேச்சு கேட்டது போல ஒரு பிரம்மை. “என்னங்க, ரொம்ப வேலையா இருக்குங்க. மூணு வேளைக்கும் தனித் தனியா சமைக்க வேண்டியது இருக்கு. அது கூட பரவால்ல. மூணு வேளையும் ஆளுக்கு ஏத்த மாதிரி விதவிதமா சமைக்க வேண்டியது இருக்கு. வயித்துல குழந்தை இருக்குறதுனால என்னால ரொம்ப நேரம் நிக்க முடியலை. கொஞ்சம் ஒரு மாசம் உங்க அம்மாவை சமையல் செய்ய சொல்லுங்களேன். இல்லைன்னா நான் என் அம்மா வீட்டுல வேணா கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா?”, என்று அவள் கேட்டதும் அதற்கு அவன் அவளை மனுஷியாக கூட மதிக்காமல் பேசியதும் கல்யாணியிடம் சொல்லிக் கொடுத்து அவள் தரம் கெட்டு பேசியதும் என அனைத்தும் காதுக்குள் நினைவுகளாக பயணித்தது.