கொஞ்சம் தயக்கத்துடனே தான் மீனா அவளுடைய வீட்டுக்குள் வந்தாள். அவள் வந்த போது அவளுடைய தாயும் தந்தையும் சாதாரணமாக இருக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்றதும் தான் நிம்மதியாக இருந்தது. வடிவு கொடுத்த குடுப்பில் வசு ஊருக்கு சென்றிருந்தாள்.
அவள் என்னவோ ஏதோ என்று பதட்டத்துடன் வந்திருக்க அவர்கள் இருவரும் சாதாரணமாக டிவி பார்த்த படி அமர்ந்திருப்பதைக் கண்டு அவளுக்கு கடுப்பாக இருந்தது.
“என்னைப் பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? என்னை கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்களோ? எதுக்கு அவசரமா வரச் சொன்னீங்க? அதுவும் லீவ் போட்டுட்டு? பதறி அடிச்சிட்டு வந்தா சாவகாசமா டிவி பாத்துட்டு இருக்கீங்க? மாத்திரை எதுவும் விழுங்கிட்டு உக்காந்துருக்கீங்களா? முன்னாடியே சொன்னா ஆம்புலன்ஸ் வரச் சொல்லணும்”, என்று கத்தி விட்டாள்.
“இப்ப எதுக்கு கத்துற? இன்னும் சாப்பிட்டுருக்க மாட்ட தானே? சாப்பாடு செஞ்சு வச்சிருக்கேன். அப்புறம் பேசலாம். முதல்ல போய் சாப்பிடு”, என்றாள் வடிவு.
அவள் பேச்சில் மீனா தான் நே என்று விழித்தாள். அப்படி எல்லாம் வடிவு அவளை இது வரை சாப்பிடச் சொன்னதே இல்லை. அதனால் இந்த பேச்சு அதிசயமாக தான் இருந்தது. நம்பவே முடியவில்லை என்று கூட சொல்லலாம்.
“என்ன விளையாடுறீங்களா? நான் உங்க கிட்ட கேட்டேனா சாப்பாடு வேணும்னு? எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க? ஆஸ்பத்திரி எங்கயாவது போகனுமா?”, என்று கேட்டாள்.
“நீ சாப்பிடாம நாங்க எதுவும் பேசுறதா இல்லை. போய் சாப்பிடு”
“இது என் வீடு இல்லை. இங்க எனக்கு சாப்பிட பிடிக்கலை? நான் சாப்பிடவும் மாட்டேன். எதுவும் வேண்டாம். என்ன விஷயம்ன்னு சொன்னீங்கனா கேட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்”
“சாப்பாடுல நான் எதுவும் கலந்து வைக்கலை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. தைரியமா போய் சாப்பிடலாம். அப்புறம் இந்த வீடும் உன்னோடது தான். உன் பேருக்கே எழுதி வச்சிட்டேன். வசு கிட்டயும் சொல்லிட்டேன். அவ உன் கிட்ட கேக்க மாட்டா. ஏதோ எங்களால முடிஞ்சது. நம்ம பழைய இடத்தையும் உனக்கே உன் அப்பா கொடுக்க சொல்லிட்டார்”, என்று சொல்ல வடிவு வேற்று கிரக வாசி போல தான் மீனா கண்களுக்கு தெரிந்தாள்.
“எனக்கு உங்க சொத்து எதுவும் வேண்டாம். படிக்க வச்சிருக்கீங்க தானே? நான் பொழைச்சுக்குவேன். தயவு செஞ்சு படுத்தி எடுக்காம என்ன விஷயம்ன்னு சொல்லுங்க”
“நீ சாப்பிடாம நாங்க எதுவும் சொல்லப் போறது இல்லை”, என்று வடிவு சொல்ல “இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு?”, என்று குழப்பத்துடன் அவள் தந்தையைப் பார்க்க “எனக்கும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை மா. நான் குளிக்கவும் வெண்ணி எல்லாம் வச்சி கொடுத்தா. நீயும் போய் சாப்பிட்டு வா. என்ன சொல்றான்னு பாப்போம்”, என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.
அதற்கு மேல் பேசினாலும் பதில் வராது என்று தெரியும். பசியும் அவளை படுத்தி எடுத்தது. சாப்பிடுவதே சரி என்று எண்ணிக் கொண்டவள் வேகமாக அடிப்படிக்கு சென்று தட்டை எடுத்து சப்பாடை வைத்தாள்.
மீன் குழம்பு சட்டியில் இருக்க உண்மையிலே அவளுக்கு எச்சில் ஊறியது. “இதுல உண்மையிலே ஏதாவது கலந்துருப்பாங்களோ? அப்படியே கலந்துட்டாலும் செத்தா செத்துட்டு போறேன்?”, என்று ஒரு நொடி எண்ணியவளின் மனம் தன்னாலே தாமரை பற்றி எண்ணியது.
“ஏன் இந்த உலகத்துல நீ மட்டும் தான் பொண்ணா? நீ இல்லாம போனா உன்னை விட நல்ல பொண்ணா முதல் தாரமே அவனுக்கு கிடைப்பா”, என்று மனசாட்சி சொல்ல குழம்பை சோற்றின் மீது ஊற்றியவள் அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“சம்படத்துல பொரிச்ச மீன் இருக்கு. எடுக்கலையா? இரு நான் எடுத்துட்டு வரேன். நீ உக்காரு”, என்று சொல்லி விட்டு வடிவு எடுத்து வர நிச்சயம் அன்னைக்கு ஏதோ ஆகி விட்டது என்று எண்ணிக் கொண்டாள்.
ஒரு வாய் எடுத்து வைத்தவளுக்கு நிச்சயம் கண் கலங்கியது. ஏனென்றால் நிறைய வருடங்களுக்கு பிறகு அன்னையின் கையில் சாப்பிடுகிறாள். ஏனோ இப்போது இருக்கும் வடிவின் அன்பு உண்மையா பொய்யா தெரியாது. ஆனால் சுவை நன்றாகவே இருக்க விஷமோ என்னவோ சோறு தான் முக்கியம் என்று எண்ணியவள் உண்ண ஆரம்பித்தாள்.
உண்டு முடித்து கை கழுவி தட்டையும் கழுவிப் போட்டு விட்டு வந்து “இப்பவாது சொல்லுங்க. எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
“என்னமோ ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்குற? நீயே உனக்கு மாப்பிள்ளை பாத்துட்ட தானே? அவனை வந்து பேச வேற சொல்லியிருக்க? இன்னைக்கு அவன் குடும்பத்தோட வாரானாம் இங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது பொண்ணு நீ இங்க இருக்க வேண்டாமா? அதுக்கு தான் வரச் சொன்னேன்? உனக்கு அவனை தெரியும் தானே?”, என்று கேட்டாள் வடிவு.
அதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது மீனாவுக்கு. தாமரை இவ்வளவு சீக்கிரம் வீட்டில் வந்து பேசி இருப்பான் என்று அவள் கனவில் கூட நினைக்க வில்லையே.
“ஐயோ இந்த அம்மா சும்மாவே சாமி ஆடும். இப்ப அவன் சலங்கை வேற கட்டி விட்டுருக்கானே? எல்லாத்தையும் சொல்லிட்டான் போலவே? இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணிக் கொண்டு அன்னையைப் பார்த்தாள். வடிவு முகத்தில் இருந்து எதையுமே அவளால் கண்டு பிடிக்க முடிய வில்லை.
“என்ன அமைதியா இருக்க? அவனை எப்படி தெரியும்?”
“அது.. வந்து… பஸ்ல.. அன்னைக்கு கீழே விழுந்து.. “, என்று பயத்துடன் பதில் சொன்னாள். ஏனென்றால் ஒரு இன்டர்வியூ போனதற்கே அப்படி தரம் இல்லாமல் பேசிய ஆள். ஏன் வதனாவும் தாமரையும் அவளை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்ததற்கே அப்படி பேசி இருந்தாளே? இப்போது இரண்டாவது திருமணம் என்று வரும் போது என்னவெல்லாம் பேசுவாள் என்று பயமாக இருந்தது.
அவர்களிடம் மனதில் உள்ளதை, அவனை பிடித்திருக்கிறது என்பதை முழுதாக அவளால் சொல்ல முடிய வில்லை. அதனால் மீனா அமைதியாக இருக்க “உண்மையிலே நீ தான் அவனை எங்க கிட்ட பேச சொன்னியா?”, என்று கேட்டாள் வடிவு.
“ம்ம்”
“நாங்க சம்மதிக்கலைனா என்ன பண்ணுவ?
“நானே கல்யாணம் பண்ணிப்பேன்”, என்றெல்லாம் அவள் சொல்ல வில்லை. அப்படிச் சொல்லி அவர்களின் கோபத்தை அதிகரிக்க அவள் தயாராக இல்லை.
அவள் அமைதியாக இருக்க “அவங்க வீட்ல இருந்து எப்ப வருவாங்கன்னு கால் பண்ணி கேளு. அப்படியே முகம் கழுவி தயாரா இரு. நீ இன்னைக்கு நைட் இங்க தான் இருக்கணும். நாளைக்கு ஹாஸ்டல்க்கு போய் உன்னோட பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துரு. இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இது உன் வீடு. அப்பா ரூமை நீ எடுத்துக்கோ. நான் எல்லாம் மாத்தி வச்சிட்டேன். இனி நீ இங்க தான் இருக்கணும், அவ்வளவு தான்”, என்று சொல்ல மீனா முகம் அதிர்ச்சியில் உறைந்தது.
அவள் அதிர்ந்து விழிக்கையில் “உன்னை தான் சொல்றேன், அந்த தம்பி நம்பர் இருக்கும் தானே? கால் பண்ணி கேளு. எப்ப வராங்க? நான் பால் எல்லாம் வாங்கி வச்சிட்டேன். வந்ததும் டீ போட்டுக்கலாம்”, என்று சொல்ல கண்களில் சிறு கனவோடு அவளும் உடனே அவனை அழைத்தாள். அவள் மனது முழுக்க ஒரு வித சந்தோஷம் நிறைந்திருந்தது.
ஆனால் அவள் அழைக்கும் போது சரியாக வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. போனைக் காதில் வைத்த படியே மீனா சென்று கதவை திறக்க அங்கே தாமரையின் மொத்த குடும்பமும் நின்றது, அவனைத் தவிர.
அவள் ஆனந்த அதிர்ச்சியோடு திகைத்துப் போய் நிற்க “ஹாய் அண்ணி”, என்றாள் வதனா. அதற்கு பிறகு தான் மீனா நடப்புக்கு வந்தாள்.
“உள்ள வாங்க, எல்லாரும் வாங்க”, என்று அழைத்தவள் வடிவைப் பார்க்க அவளும் சரி அவள் தந்தையும் சரி அனைவரையும் உள்ளே அழைத்து அமர வைத்தார்கள்.