கல்யாணி அமைதியாக இருக்க மகேஷ் தாமரையிடம் என்ன சொல்ல என்று யோசித்துக் கொண்டிருந்தான். குழந்தையைக் கொடுக்க முடிவு எடுத்து விட்டான் தான். ஆனால் அது தாமரைக்கு பயந்து கொடுப்பது போல இருக்க கூடாதே.
“இதுல யோசிக்க என்ன இருக்கு? குழந்தைக்கு மீனா தான் அம்மா. அவ தப்பான பொண்ணு இல்லைன்னு அந்த கடவுளுக்கே தெரியும். அதுக்கு சாட்சி தான் இப்ப உன் தம்பி ஆஸ்பத்திரில படுத்து கிடக்குறது. அதனால குழந்தை அவ கூட தான் இருக்கணும்”, என்று தாமரை சொன்னதும் அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்த்தார்கள்.
“ஏய் என்ன சொல்ற நீ? என் தம்பிக்கு என்ன?”, என்று கேட்டான் மகேஷ்.
“நீங்க பண்ணின அராஜகத்துக்கு மீனா மாதிரியே எல்லாரும் அமைதியா போக மாட்டாங்க தானே? ஒரு பிரியாணி சாப்பிடணும்னு ஆசைப் பட்டு வாங்க நினைச்ச பிள்ளையை வாழ்க்கையிலே பிரியாணியைப் பத்தி நினைக்க விடாம பண்ணுனீங்க தானே? உங்க கிட்ட அடி உதை வாங்கி அவ சும்மா இருந்தா. ஆனா அடி வாங்கினவன் சும்மா இருப்பானா? அதான் கையில மாட்டின உன் தம்பியை அவனும் அவன் பிரண்டுகளும் சேர்ந்து பிரிச்சு மேஞ்சிட்டு இருந்தாங்க. நாங்க போகலைனா இந்நேரம் அவன் கைலாசம் போயிருப்பான்”
“ஐயோ என் பிள்ளை”, என்று பதறினாள் கல்யாணி.
“எம்மாடியோ உனக்கு மட்டும் தான் பிள்ளை. மத்த வீட்டு பிள்ளைகளை என்ன வேணும்னாலும் செய்வீங்க அப்படி தானே? உங்களுக்கு வந்தா ரத்தம். மத்த யாருக்கு வந்தாலும் அது தக்காளி சட்டினி. நல்ல நியாயம்”
“அவனுக்கு இப்ப எப்படி இருக்கு?”, என்று கேட்டான் மகேஷ்.
“யாருக்கு தெரியும்? வேணும்னா போய் பாருங்க. அதுக்கு முன்னாடி எங்க பிள்ளைக்கு வழி சொல்லுங்க. என்ன பாக்குற? இனி மீனா பிள்ளை என்னோட பிள்ளை தான். நான் தான் அப்பா அவ தான் அம்மா. நீயா தரியா இல்லை, கேஸ் போடவா? நீ அவளை தப்பா சொன்னா என் மீனாவை நல்லவன்னு நிரூபிக்க என் கிட்ட ஆதாரம் இருக்கு. அப்புறம் நீ தான் அசிங்கப் பட்டு போவ. அப்ப அவளுக்கு யாருமே இல்லைன்னு உங்க கிட்ட இருந்து விடுதலை கிடைச்சா போதும்ன்னு நினைச்சு உங்களை அப்படியே விட்டுட்டா. ஆனா இனி விட மாட்டேன். அவளுக்கு நான் இருக்கேன், என் குடும்பம் இருக்கு. உங்களை எப்படி எங்க பாக்கணும்னு எனக்கு தெரியும்”
“வேண்டாம் மறுபடியும் கோர்ட் கேஸ் எல்லாம் வேண்டாம். நாங்க குழந்தையை கொடுத்துறோம்”
“உடனே சரின்னு சொல்லிட்ட. எப்ப எப்பன்னு தான் இருந்துருப்ப போல?”
“இல்லை பொம்பளைப் பிள்ளை அம்மா கிட்ட இருந்தா தான் நல்லா இருக்கும்”, என்று மகேஷ் நல்லவன் போல பேச “அட பரவால்ல பா. உங்க அம்மாவை விட நீ நல்லாவே நடிக்கிற? பிள்ளை இருந்தா உன்னை எவ கட்டிக்குவா? அதுக்கு தானே இப்ப பிள்ளையையும் துரத்த பாக்குற? ஆனா உன்னை எல்லாம் நம்பி ஒருத்தி வரானா ஒண்ணு அவ மீனா மாறி ஏமாளியா இருக்கணும். இல்லைன்னா உங்களை எல்லாம் கண்ணுல விரலை விட்டு ஆட்டுறவாளா இருக்கணும். என்னோட ஆசை அவ ரெண்டாவது விதமா இருக்கணும். விதியை அறிவார் யாரோ? சரி குழந்தை எங்க?”
“அவ தூங்குறா. நாளைக்கு வந்து வாங்கிட்டு போ”
“சரி. நாளைக்கு நான் வரதுக்குள்ள நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. குழந்தை மீனாவையும் என்னையும் அம்மா அப்பான்னு கூப்பிடனும்”, என்று தாமரை சொல்ல ராஜனே அவனை வியந்து தான் பார்த்தான்.
“அது எப்படி முடியும்?”, என்று கேட்டான் மகேஷ்.
“ஒரு சின்ன குழந்தை கிட்ட உயிரோட இருக்குற அம்மாவை செத்துப் போய்ட்டான்னு சொல்லி உங்களால நம்ப வைக்க முடியுதுன்னா இப்ப லேசா விவரம் தெரியுற பிள்ளையை கண்டிப்பா நம்ப வைக்கலாம். சரி உங்க பையனை டவுன் ஆஸ்பத்திரில தான் சேத்துருக்காங்க. போய் அள்ளிக்கோங்க”, என்று சொன்னவன் சோமசுந்தரம் புறம் திரும்பி “வெங்காயம் வாங்க போறேன் தேங்காய் வாங்கப் போறேன்னு வெளிய போயிறாதீங்க? உங்களையும் வெளுக்க காத்துக்கிட்டு இருக்கானுங்க. நீங்க வீரமான ஆளா இருந்தா பரவால்ல. பொண்டாட்டிக்கு கூஜா தூக்குற ஆள் ஆச்சே? அவங்க அடிக்கிற அடியை உங்க பாடி தாங்காது”, என்றான் நக்கலாக.
அவர் எச்சில் விழுங்கிய படி அவனைப் பார்க்க அவன் முகத்தில் அங்கிருந்த யார் மீதும் துளி மரியாதை கூட இல்லை.
“தாமரை வா டா போகலாம்”, என்றான் ராஜன்.
“போகலாம் டா, பின்ன இங்க என்ன விருந்தா சாப்பிட முடியும்? இந்த வீட்ல பச்சை தண்ணி குடிச்சா கூட மீனாவோட ரத்த வாடை தான் டா வரும். பாவப் பட்ட பூமி. நான் சாபம் எல்லாம் விடலை. ஆனா அவளை காயப் படுத்துனவங்க என்ன வழி ஆக போறாங்கன்னு பாரு. நான் கும்பிடுற எம்பெருமான் இவங்களை வச்சி செய்வார் டா. நாம அதை பாத்து சந்தோஷப் படாம இருக்கணும்? ஏன்னா நாம எல்லாம் மனுசங்களாச்சே?”, என்று சொன்னவன் மீண்டும் ஒரு முறை நாளை வருவதைப் பற்றி நினைவூட்டி விட்டே அங்கிருந்து சென்றான்.
வெளியே வந்ததும் ராஜன் அமைதியாக வர “என்ன டா சைலன்ட்டா வர?”, என்று கேட்டான்.
“நீயெல்லாம் லாயர்க்கு படிச்சிருந்தா எங்க பொழப்பு எல்லாம் என்ன ஆகுமோன்னு நினைச்சு பாத்தேன் டா. பக்குன்னு ஆகிருச்சு ஒரு நிமிஷம்”, என்று ராஜன் சொல்ல வாய் விட்டு சிரித்தான் செந்தாமரை. உண்மையிலே அவன் சிரிப்பு தாமரை மலர்வது போல தான் இருந்தது.
ராஜனை அவனது வீட்டில் இறக்கி விட்ட தாமரை “சரி டா நாளைக்கு பாக்கலாம். கால் பண்ணுறேன்”, என்றான்.
“கடைசி வரை டீ வாங்கித் தரவே இல்லையே?”
“உன் வீட்ல டீ போடுற நேரம் தான். போய் குடி”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல இடுப்பில் கை வைத்து நண்பனை முறைத்துப் பார்த்தவன் பின் சிறு சிரிப்போடு வீட்டுக்குள் சென்றான்.
அன்னையிடம் நடந்ததை சொல்லி விட்டு அறைக்கு வந்த ராஜனுக்கு இந்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது.
ஆனால் இதை எல்லாம் முதலில் தாமரை அவளிடம் சொன்ன பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி அப்படியே விட்டுவிட்டான்.
தன்னுடைய வீட்டுக்கு வந்த தாமரையும் அன்னை தந்தையிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டுமே சொன்னான். மூவரும் பேசிக் கொண்டிருக்க “ஓஹோ எனக்கு தெரியாம இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?”, என்ற குரல் கேட்டு மூவரும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே தாமரையின் அத்தை சீதா நின்றிருந்தாள். “அத்தை”, என்று அவன் அழைக்க அவன் தந்தையும் “வா அக்கா”, என்றார்.