கதிரும் அழகாக தான் இருப்பான். ஆனால் அமைதி என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது. தாமரைக்கு மாறாக பேருந்தில் ஏறும் அனைத்து கல்லூரி பெண்களிடம் சரளமாக கடலை போடுவான். இத்தனைக்கும் அவனுக்கு திருமணம் முடிந்து மூன்று மாத பெண் குழந்தை வேறு இருக்கிறது.
“ஏன் டா உன் வாய் மூடவே மூடாதா? பஸ்ல உன் சத்தம் மட்டும் தான் கேக்குது”, என்று தாமரை சொன்னாலும் “நம்ம பேசலைனா அந்த பிள்ளைங்க மனசு வருத்தப் படாது?”, என்று வேறு கேட்பான்.
இப்போதும் தாமரை ஸ்டியரீங்கைப் பிடித்த படி அமைதியாக இருக்க கதிர் தான் ஒவ்வொரு ஊராக சொல்லி ஆள் ஏற்றினான்.
அதுவும் அதிகம் எல்லாம் மெனக்கெட வில்லை. முன்பு போல எல்லாம் நடத்துநர்கள் கத்தி சொல்வதில்லை. அதுவும் அரசு பேருந்து என்பதால் அதுவும் அதிகம் இல்லை. முன்னால் இருக்கும் போர்ட் பார்த்து ஏறுபவர்களும் இந்த நேரத்தில் இந்த பேருந்து தான் வரும் என்று நேரக் கணக்கு பார்த்து ஏறுபவர்களும் தான் அதிகம்.
ஒரு வழியாக சந்தைக்கு வந்தவர்கள், பூ மார்க்கெட் வந்தவர்கள், கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் என அனைவரும் ஏற கூட்டம் அதிகம் இல்லாமல் போனாலும் ஓரளவு எறினார்கள்.
“மாப்பிள்ளை போகலாமா டா?”, என்று கேட்டான் தாமரை.
“போட் ரைட்”, என்ற கதிர் விசில் ஊத பேருந்து மெதுவாக பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்தது.
இப்போது எடுக்கும் வண்டி நாளை காலையில் விடும் வரைக்குமே ஆறு ட்ரிப் வரும். இப்போது மதிய நேரம் என்பதால் பேருந்து அமைதியாக நல்ல படியாகவே சென்றது.
நேராக அவன் செல்லும் தடத்தில் ஒவ்வொரு ஊராக ஆள் ஏற்றி இறக்கி என அவன் கவனம் பேருந்து ஓட்டுவதில் இருக்க கதிரின் கவனம் டிக்கட் கொடுப்பதிலும் ஆட்கள் சரியாக இறங்குகிறார்களா ஏறுகிறார்களா என்பதிலும் இருந்தது.
அந்த டிரிப் அமைதியான முறையில் செல்ல அடுத்து நான்கரை மணிக்கு இரண்டாம் முறையாக வண்டியை எடுத்தான். அப்போது பேருந்து கூட்டமாகவே இருந்தது. நான்கு மணிக்கு கல்லூரி முடிந்து மாணவ மாணவிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இத்தனைக்கும் தாமரையின் இரண்டு தங்கைகள் வதனா மற்றும் கலை இருவரும் கூட அந்த பேருந்தில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு தாமரை சீட் போட வில்லை என்றாலும் கதிர் போட்டு விடுவான்.
அதுவும் தாமரை அமர்ந்திருக்கும் முன் பக்கம் தேவைக்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது. பள்ளி பிள்ளைகளும் கல்லூரிப் பிள்ளைகளும் நிறைந்திருக்க கொஞ்சம் மெதுவாகவே பேருந்தை இயக்கினான்.
பேருந்து மெதுவாக செல்ல ஆரம்பிக்க முன்னாள் அமர்ந்திருந்த மற்றும் நின்றிருந்த கல்லூரிப் பெண்கள் சிரித்து பேசி என வந்தார்கள்.
அதிலும் ஒரு பெண் கொஞ்சம் ஆரவாரமாகவே வந்தாள். கத்தி பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு என அனைவரும் இருந்தாலும் அவள் குரலும் சத்தமும் அதிகமாக கேட்டது அனைவருக்குமே.
இன்றைய கிளாசில் நடத்த சம்பவங்களை அவர்கள் பேசிக் கொண்டு வர அந்த ஆரவாரம் அதிகமாக தான் சென்றது. அடுத்த நிறுத்தம் ஒரு பள்ளி நிறுத்தம் என்பதால் கூட்டம் வேறு அலைமோத கதிர் கூட பிஸியாக தான் இருந்தான்.
சூரியன் வேறு தாமரையின் முகத்துக்கு நேராக அடிக்க அவனுக்கு சற்று எரிச்சல் கலந்த கடுப்பு தான். இதில் அவள் வேறு சத்தம் போட்டு அரட்டை அடித்துக் கொண்டு வர கோபமாக வந்தது.
அந்த பெண்கள் கூட்டம் எப்போதும் காலையிலும் சரி மாலையிலும் சரி இந்த பேருந்தில் தான் வரும். ஆனால் அவன் தனியாக யாரையும் கவனித்தது இல்லை.
இன்று அவள் சத்தம் அதிகரிக்க பொறுத்து பொறுத்து பார்த்தவன் “ஏமா கொஞ்சம் அமைதியா வரியா? அப்ப இருந்து நானும் பாக்குறேன்.இந்த கத்து கத்திக்கிட்டு இருக்க? மனுஷன் வண்டி ஓட்டனுமா வேண்டாமா? நொய் நொய்ன்னுட்டு வர, எங்கயாவது கொண்டு போய் முட்டவா? காதுக்குள்ள நண்டு போன மாதிரி எரிச்சலா இருக்கு”, என்று கத்தி விட்டான்.
அந்த பெண்ணோ சிரிப்பை தொலைத்து திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள். அனைவரும் அவளைப் பார்க்க ஒரு மாதிரி முகம் சிறுத்து கண்கள் கூட லேசாக கலங்கி விட்டது அவளுக்கு.
திடீரென்று அவன் சத்தம் கேட்டதில் பேருந்தே அமைதியாகி விட அனைவரும் அவளைத் தான் கவனித்தார்கள். ஒரு மாதிரி அவமானப் பட்ட உணர்வு அவளுக்கு.
அவன் அப்படி பேசியதும் இரண்டு பாட்டிகள் வேறு “தம்பி சொல்றதும் சரியாக தானே இருக்கு? வயசு பிள்ளைகளுக்கு வாயடக்கம் வேணும். பொது இடத்தில் இப்படியா பேசிக்கிட்டு வரது?”, என்று சொல்ல “ஆமா ஆமா வந்ததுல இருந்து நானும் பாக்குறேன், பல்லை காட்டுறது என்ன? கத்தி சிரிக்கிறது என்ன?”, என்று வேறு பேச அந்த பெண் அப்படியே அமைதியாக வெளிப்பக்கம் திரும்பி விட்டாள்.
தாமரை என்னவோ ஒரு முறை சொல்லி விட்டு அமைதியாக வண்டியை இயக்க ஆரம்பித்து விட்டான் தான். ஆனால் மற்றவர்கள் அவளையே பார்க்க அந்த பாட்டிகள் அவளையே திட்ட என இருக்க அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
அவள் அழுது கொண்டே வர தோழிகள் அவளை சமாதானப் படுத்த என இருக்க இப்போது தான் தாமரைக்கு ஒரு மாதிரி இருந்தது.
“கொஞ்சம் ஓவரா பேசி அழ வச்சிட்டோமோ?”, என்ற குற்ற உணர்வு அவனிடம்.
அவளுடைய நிறுத்தம் வரும் வரைக்கும் அவள் அழுது கொண்டே வர அவனுக்கு நிம்மதி தூர போய் இருந்தது. இது வரை அவனது தங்கைகளை கூட அவன் கடிந்து கொண்டது இல்லை. அப்படி இருக்க அவன் இன்று செய்தது அவனுக்கே அதிகப் படியோ என்று தோன்றியது.
அவனுக்கு தொந்தரவு கொடுத்தால் பிடிக்காது தான். அந்த பெண் இல்லாமல் வேறு யார் பேசினாலும் சொல்லியிருப்பான் தான். ஆனால் வயது பெண் என்றதும் மற்றவர்கள் முன்னால் அவள் காட்சிப் பொருளாக ஆகிப் போனாள்.
அவளுடைய நிறுத்தம் வரும் போது அவள் பேகை தோளில் மாட்டிக் கொண்டு எழுந்து நிற்க அப்போது தர்மசங்கடத்துடன் அவளைப் பார்த்தான் தாமரை.
பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். ஏனென்றால் ஏற்கனவே நல்ல கலராக இருந்த அந்த பெண்ணின் முகமும் கண்களும் அழுததில் மேலும் சிவந்திருந்தது.
பார்த்த உடனே தெரியும் அவள் அழுதிருக்கிறாள் என்று. அதைக் கண்டு அவனுக்கு அச்சோ என்று ஆகிப் போனது.
அனைவரும் அவளைப் பாரத்துக் கொண்டிருக்க யாரையும் பார்க்காமல் தலை குனிந்த படியே கீழே இறங்கிச் சென்றவள் தலை இந்த பக்கம் திரும்பவே இல்லை.
ஏனோ அனைவரும் தன்னையே பார்ப்பது போன்ற பிரம்மை. ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது. கூடவே “நான் அப்படி என்ன பண்ணிட்டேன். பேசி சிரிச்சிட்டு வந்தது குத்தமா?”, என்று அவள் மனதுக்குள் கேள்வி எழுப்ப “குத்தம் தான். அதுவும் நீ சிரிச்சா அது பெரிய குத்தம் தான். உனக்கு சிரிப்பு என்பது கிடையவே கிடையாதுன்னு அந்த கடவுள் எழுதி வச்சிருக்கும் போது நீ சிரிச்சிட்டு வந்தா அது அவருக்கு பொறுக்குமா? அதான் இத்தனை நாள் சிரிச்ச முகமா வரவன் கூட உன்னை திட்டிட்டான்”, என்று அவள் மனசாட்சி அவளிடம் பேசியது.
“இனி எப்படி இந்த பஸ்ல வரது? ஆனா இந்த நேரத்துக்கு இந்த ஒரு பஸ் மட்டும் தானே இருக்கு? நாளைக்கு காலைலயும் இந்த பஸ் தானே இருக்கு?”, என்று எண்ணி சோர்ந்த படியே ஊருக்குள் நடந்தாள்.
ஊரை நெருங்க நெருங்க எரிச்சலாக இருந்தது. அவள் செல்வது அவளுடைய வீட்டுக்கு தான். ஆனால் அங்கே போகவே அவளுக்கு பிடிக்க வில்லை. ஆனால் வேறு வழியும் இல்லையே.