Advertisement

அத்தியாயம்- 5

சூரியன் சட்டென்று கருமேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு காணாமல் போக, காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போல மழை வருமா, இல்லியா என பயமுறுத்தி நின்ற மேகம் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து வேகமாய் தூறலைப் போடத் தொடங்கி இருந்தது.

அந்த உயர்தர ரெஸ்டாரண்டின் ஓரமாய் இருந்த மேஜை ஒன்றின் முன் கன்னத்தில் கை வைத்துக் கவலையுடன் அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அருகே அமர்ந்திருந்த வான்மதி தோழியை சமாதானப்படுத்த கல்பனாவின் முகத்திலும் கவலை தெரிந்தது.

மூவரும் கல்பனாவின் அலுவலகத்தில் இருந்து திரும்பும் வழியில் மழையில் மாட்டிக் கொள்ளவே அந்த ரெஸ்டாரண்டுக்குள் ஒதுங்கி ஒரு காபிக்கு ஐம்பது ரூபாய் மொய் வைக்க தீர்மானித்திருந்தனர்.

“சாரிடி… எங்க மேனேஜர் அவ்ளோ நம்பிக்கையா என்கிட்ட சொன்னதால தான் உன்னை உடனே சென்னை கிளம்பி வர சொன்னேன்… இப்ப என்னடான்னா அந்த லூஸு மண்டையன் அவரோட சொந்தக்காரப் பொண்ணு யாருக்கோ என் வேலையைக் கொடுக்க வாக்கு கொடுத்துட்டு நம்மகிட்ட கையை விரிக்கிறார்…” என்றாள் கல்பனா வருத்தத்துடன்.

“ப்ச்… நீ என்ன பண்ணுவ கல்ப்ஸ், உன் வேலையை எனக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு நல்ல எண்ணத்தில் தான என்னை வர சொன்ன… உன்னைக் குத்தம் சொல்ல என்ன இருக்கு, என் நேரம் சரியில்லை, என் அத்தை சொல்லுற போல நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ தான் போலருக்கு… வரும்போதே அவ்ளோ கெஞ்சிக் கேட்டு தான் கிளம்பி வந்தேன், இனி வேலை கிடைக்கலன்னு அவங்க கிட்ட எந்த முகத்தோட போயி நிப்பேன்…” சொன்னவளின் முகம் சிவந்து கண்களில் சிறு கலக்கம் தெரிந்தது.

“பாரு, என்னடி…? எந்தப் பிரச்சனை வந்தாலும் நீ தான் எங்களுக்கு சமாதானம் சொல்லுவ, நீ இப்படி கலங்கிப் பேசலாமா… இதில்லேன்னா இன்னொரு நல்ல வேலை உனக்குக் காத்திருக்குன்னு நினைச்சுப்போம், மனசைத் தளர விடாத…” வான்மதி சொல்ல சட்டென்று புன்னகைத்தாள்.

“ச்சேச்சே… இதுக்கெல்லாம் கவலைப்பட்டா பாரதிங்கற என் பேருக்கே அசிங்கமாப் போயிடும்… என் கவலை எல்லாம் இந்த எட்டு லட்சுமியை எப்படி சமாளிக்கிறதுன்னு தான்… விடு, காபியக் குடிச்சிட்டு மழை விட்டதும் கிளம்புவோம்…” பாரதி சொல்லவும் கேட்டவர்களின் முகமும் மலர்ந்தது.

“உன் அத்தையை எட்டுன்னு சொல்லாத பாரு, சரியான ஏழரைன்னு சொல்லு…” என்றாள் வான்மதி சிரிப்புடன்.

“சேச்சே, அப்படி சொல்லாத வானு… அத்தை என்னதான் சிடுசிடுன்னு வாயில வந்த போல பேசினாலும், அவங்க இல்லேன்னா எங்க நிலைமை என்னாகியிருக்கும்… அப்பா இறந்ததும் ஆதரவு இல்லாம நின்ன எங்களை மாமா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தப்ப அத்தை அமைதியா தான இருந்தாங்க… இப்ப வீட்டுல அம்மாவோட செலவு முன்னைவிட ஜாஸ்தியாகவும் கொஞ்சம் அதிகமா வார்த்தையை விட ஆரம்பிச்சுட்டாங்க… என்ன இருந்தாலும் அவங்க செய்த நன்மையை மறக்கக் கூடாதுல்ல…”

“ம்ம்… அதானே, நீ எப்ப யாரை விட்டுக் கொடுத்துப் பேசிருக்க… நாங்க யாரைக் குத்தம் சொன்னாலும் அவங்களுக்கு சப்போர்ட்டா கொடி பிடிக்க ஆரம்பிச்சுடு…”

“அப்படி இல்லடி வானு… எல்லார்கிட்டயும் நல்லது, கெட்டது ரெண்டுமே கலந்து தானே இருக்கு… மொத்தமா ஒருத்தரை மோசமானவங்கன்னு சொல்லிடக் கூடாது தானே, அவங்களோட சரி நமக்கு தப்பாத் தோணலாம்… நம்ம சரி அவங்களுக்கு தப்பாத் தோணலாம்… அதான், நான் எப்பவும் ஒருத்தரோட குறையை யோசிக்கும்போது அவங்க நிலைல இருந்து யோசிச்சுப் பார்க்கறேன்…”

பாரதி சொல்ல அவளைத் திகைப்புடன் நோக்கிய வான்மதி, “ம்ம்… நீ சொல்லுறது சரிதான், ஆனாலும் உன் அத்தைகிட்ட நல்லது இருக்குன்னு சொன்னதைத் தான் என்னால ஜீரணிச்சுக்க முடியல… இவ்ளோ பேசற நீ எதுக்கு அவங்க எதாச்சும் சொன்னா அமைதியாப் போகாம எதிர்த்துப் பேசற…”

“நான் எது செய்தாலும் குத்தம் கண்டு பிடிக்கிறது அவங்க சுபாவம், அதுக்காக நான் அமைதியாப் போயிட்டா அப்புறம் அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது, சொல்லு… அவங்க பேசறது எல்லாமே சரின்னு நினைச்சு பேசும்போது என்னோட சரியை நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்… அவங்களை நான் வெறுக்கல, அதுக்காக என்னை வெறுப்பேத்தினா அமைதியா இருக்க மாட்டேன்… அமைதியா இருக்கிறது வேற, அடிமையா இருக்கிறது வேற… என்னால யாருக்கும், எதுக்கும் அடிமையா இருக்க முடியாது…” தெளிவான குரலில் அழுத்தமாய் சொன்னவளை ஆச்சர்யமாய் பார்த்தனர் தோழியர்.

“இதான் பாரதி, உன்கிட்ட எங்களுக்குப் பிடிச்ச பிரமிக்க வைக்கிற விஷயம்… அன்புன்னா குழந்தையாட்டம் சுருண்டு போற நீ தான் உரிமையை விட்டுக் கொடுக்காம எரிமலையா வெடிக்கவும் செய்யற… நிஜமாலுமே பாரதிங்கற பேரு உனக்கு எவ்ளோ பொருத்தம் தெரியுமா…?” கல்பனா சொல்லிக் கொண்டிருக்க புன்னகையுடன் தோழியை ஏறிட்டவளின் பார்வை சட்டென்று எதிர்ப்பக்க மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்த இரண்டு இளம்பெண்கள், இரண்டு இளைஞர்கள் மேல் படிய விழிகள் உன்னிப்பானது.

கல்லூரி மாணவர்கள் போல் இருந்த நால்வரில், ஒருவன் ஒரு பெண்ணிடம் தலை குனிந்து ரகசியம் பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவன் விரல்கள் அப்பெண்ணின் அந்தரங்க இடங்களை யாரும் கவனிக்காதபடி உரசிக் கொண்டிருக்க, அப்பெண்ணும் அதை ரசித்து சிணுங்கிக் கொண்டிருந்தாள். துணைக்கு வந்திருந்த அப்பெண்ணின் தோழி மொபைலில் எதையோ பார்த்தபடி மேஜையில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இடையிடையே அப்பையனின் நண்பனிடமும் தனது மொபைலைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் உடன் வந்த பையனின் செய்கை சற்று வித்தியாசமாய்த் தெரிய அவனை கவனித்தவள் அதிர்ந்து போனாள்.

அவன் அவர்கள் இருவரையும் அந்த நெருக்கமான நிலையில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.

பாரதி பதில் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கவும் வான்மதியும், கல்பனாவும் திரும்பிப் பார்க்க, அதற்குள் எழுந்தவள் அவர்களை நெருங்கினாள்.

“ஏய், என்னடா பண்ணிட்டு இருக்க…” கேட்டுக் கொண்டே அந்தப் பையனின் கையிலிருந்த மொபைலைப் பறிக்க அப்பெண்கள் சட்டென்று பயந்து போக, மற்றவன் புரியாமல் பார்க்க அப்பையன் கோபமாய் பாரதியை ஏறிட்டான்.

“ஏய், எதுக்கு என் மொபைலைப் புடுங்கறிங்க, குடுங்க…” என்றவன் அவள் கையிலிருந்த மொபைலைப் பறிக்கப் போக, அடுத்தடுத்த மேஜையில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்க அப்பையனிடம் அமைதியான குரலில் சீறினாள் பாரதி.

“டேய், எல்லாரும் பாக்குறாங்க… நீ செய்துட்டு இருந்த வேலையை மட்டும் சொன்னா அப்புறம் ஒழுங்கா வெளிய போக மாட்ட, தள்ளிப் போடா…” என்றாள் கோபத்துடன்.

அப்பையனின் முகத்தில் இப்போது திகில் தெரிய, “அ… அக்கா, ப்ளீஸ் மொபைலைக் கொடுங்க…” தணிந்து போனான்.

அதற்குள் வான்மதியும், கல்பனாவும் பதட்டத்துடன், “என்ன பாரு… இந்தப் பையன் என்ன பண்ணான், எதுக்கு கோபப்படற…” என்றனர் கலக்கத்துடன்.

“டேய் அருண், என்னடா நடக்குது… இவங்க யாரு…? எதுக்கு உன் மொபைலைப் புடுங்குறாங்க…” என்ற நண்பனிடம் பதில் சொல்ல முடியாமல் குனிந்து நின்றான் அருண். அப்பெண்கள் இருவரும் அச்சத்துடன் எழுந்து நின்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க பாரதி சற்று அமைதியானாள்.

“பயப்படாதீங்க, நீங்கல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்ஸா…?”

“ஆ…ஆமாக்கா…” என்றாள் ஒரு பெண் தயக்கத்துடன்.

“ம்ம்… நீ இந்தப் பையனைக் காதலிக்கிறியா…?”

சற்றுத் தயங்கினாலும் அப்பெண் ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

“இங்க பாருங்க, காதல் தப்புன்னு நான் சொல்லலை… ஆனா அதுக்குக் கண்ணில்லைன்னு சொல்லுற வார்த்தையை உண்மை ஆக்கிடாதீங்க… இருக்கிற இடமும், சூழ்நிலையும், கூட உள்ளவங்களும் எப்படின்னு பார்த்து நடந்துக்கணும்…” என்றவள், அருணின் மொபைலில் அந்த வீடியோவை எடுத்துக் காட்ட அதைக் கண்டவர்கள் அதிர்ந்தனர்.

“நண்பன், காதலிக்கிற பொண்ணோட நெருக்கமா இருக்கிறதை வீடியோ எடுக்கிறவன் நிச்சயம் நல்ல எண்ணத்தோட பண்ணி இருக்க மாட்டான்… இதை வச்சு நாளைக்கு பிளாக்மெயில் பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்… இந்த மாதிரி நட்பைக் கூட வச்சிட்டு ஆணி கூடப் புடுங்க முடியாது… நீங்க என்னடான்னா, உங்க காதலுக்கு சாட்சியா இவனைத் துணைக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க…” சொன்னபடி அதை டெலீட் செய்து மொபைலை அவன் கையில் திணித்தாள்.

“வாங்க, இனி அவங்க பார்த்துப்பாங்க…” என்ற பாரதி தோழியரை அழைத்துக் கொண்டு தங்கள் மேசைக்கு செல்ல, இருவரும் திகைப்புடனே பின்தொடர்ந்தனர்.

“டேய் அருண், என்னடா பண்ணிருக்க…?” அப்பையன் கோபத்துடன் நண்பனிடம் கேட்க,

“ரதீஷ்… சாரிடா, சும்மா ஒரு ஜாலிக்கு நம்ம பசங்ககிட்ட இந்த வீடியோ காட்டலாமேன்னு எடுத்தேன், வேற ஒண்ணும் நினைச்சு செய்யலை…” அவன் சமாதானம் செய்ய முயல அப்பெண்ணின் முகத்தில் கூச்சமும் கோபமும் தெரிந்தது.

“ச்சே… உங்களை நம்பித்தானே கூட வந்தோம்… உன் பிரண்டோட லவ்வர் உனக்கு தங்கச்சி மாதிரிதானே, இதை வீடியோ எடுத்தா, உன் பிரண்ட்ஸ்க்கு காட்டுவ… உன் தங்கச்சிய இப்படி வீடியோ எடுத்துக் காட்டுவியா…” அப்பெண்ணின் தோழி அவனிடம் கோபமாய் கேட்டுவிட்டு,

“வாடி போகலாம்… இனி காதல், கத்தரிக்கான்னு சொல்லிட்டு வா, அப்புறம் இருக்கு உனக்கு…” என்று தோழியிடம் சொல்ல, “ஹேய் ரமா… ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைக் கேளு… பிரியா, நீயாச்சும் புரிஞ்சுக்க…” என்று காதலியின் கையைப் பற்ற கோபமாய் முறைத்தவள் அவன் கையை உதறிவிட்டு தோழியுடன் நடக்க இருவரும் பாரதியிடம் நின்று நன்றி சொல்லிவிட்டு கிளம்பினர்.

அந்த ரதீஷ் கோபத்துடன் நண்பனைப் பார்த்து, “துரோகி… தங்கச்சியா பார்க்க வேண்டியவளை தப்பாப் பார்த்து என் காதலையே முடிச்சுட்டியே…” என சொல்லிக் கொண்டே அவனை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவர்களை கவனித்துக் கொண்டிருந்த பாரதி, “ம்ம்… இந்தப் பையன் உண்மையா தான் இருந்திருப்பான் போல…” என சொல்லிக் கொண்டே பேரர் கொண்டு வந்து மேஜையில் வைத்த, வேகமாய் சூடான மூச்சை வெளியேற்றிக் கொண்டிருந்த காபிக் கோப்பையை எடுத்து இதழில் வைத்து உறிஞ்சினாள். மழைக்கு அந்த காபி தேவாமிர்தமாய் இல்லாவிட்டாலும் சுமார் மூஞ்சிக் குமாராய் சுகமாய் இறங்க ரசித்துக் குடித்தாள் அந்தக் காபிப் பிரியை.

“ஏய் பாரு… எவ்ளோ பெரிய சம்பவத்தை அசால்ட்டா பண்ணிட்டு இப்ப கண்ணை மூடி காபிய ரசிச்சு ருசிச்சு குடிச்சிட்டு இருக்க… உனக்கு எப்படி அந்தப் பையன் வீடியோ எடுக்கிறது தெரிஞ்சுது…” என்றாள் வான்மதி.

“வானு… இப்போதைய உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்பவே கம்மியாகிடுச்சு… பிஞ்சுக் குழந்தைல இருந்து பல்லுப் போன பாட்டி வரைக்கும் சுகம் கொடுக்கிற வெறும் போகப் பொருளா மட்டுமே பார்க்கிற ஆண்கள் கூடிட்டாங்க… எல்லாரையும் சொல்லலை, அதுலயும் எக்சப்ஷன் இருக்கு, தன் வீட்டுப் பொண்ணுங்களா நினைக்கிறவங்களும் இருக்காங்க, பொண்ணுங்க பாதுகாப்புக்கு போலீசையோ, மிலிட்டரியையோ செக்யூரிட்டியாப் போட முடியாது… நம்மளை நாமளே காத்துகிட்டாதான் உண்டு… நாம எங்க இருந்தாலும் நம்ம மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை உணர்வு எப்பவும் இருக்கணும், சுத்தியும் என்ன நடக்குதுன்னு ஒரு அலர்ட்னஸ் வேணும்… அப்பாவை இழந்து நாங்க மூணு பெண்களா தனியா நின்னப்ப இதைப் புரிஞ்சுகிட்டேன்…”

அவள் பேசுவதை பிரமிப்புடன் கேட்டிருந்தனர் இருவரும்.

“பாரு… உண்மைலேயே நீ ரொம்ப கிரேட் டி… நீ சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரி… வாழ்க்கை மேல நம்பிக்கையும், எது நடந்தாலும் ஏத்துக்கிற தைரியமும் உள்ள பெண் பத்து ஆணுக்கு சமம்னு என் பாட்டி சொல்லுவாங்க… உன்னைப் பார்க்கும்போது எனக்கு அது ரொம்ப சரின்னு தோணுது…” என்றாள் கல்பனா.

“பார்ரா… இந்த பாரதிக்கு முன்னாடியே உன் பாட்டி சொல்லிட்டாங்களா… அப்ப, சரியா தான் இருக்கும்…”

“ஹூம், ஆமாமா… நீ ஒரு மீசை இல்லாத பாரதிதான்… மழை கம்மியாகிடுச்சு, சீக்கிரம் காப்பிய குடிச்சிட்டு கிளம்பலாம்… லேட்டானா உன் அத்தையை வேற சமாளிக்கணும்…” என்றாள் வான்மதி.

மூவரும் காபியைக் குடித்துவிட்டு பில்லுக்குக் காத்திருக்க, “எக்ஸ்கியூஸ் மி பாரதி…” என்ற ஆண்குரல் ஒன்று கம்பீரமாய் பின்னிலிருந்து கேட்டது.

மூவரும் திரும்பிப் பார்க்க, கண்ணாடி போட்ட சமுத்திரக்கனி போல் ஒருவன் உயரமாய் நிற்க புரியாமல் பார்த்தனர்.

“என்னையா…?” என்றாள் பாரதி அவன் யாரென்று புரியாமல்.

“எஸ் பாரதி… நான் பக்கத்துக்கு டேபிள்ல தான் இருந்தேன்.. இவ்ளோ நேரமா இங்க நடந்தது, நீங்க பேசினது எல்லாம் கவனிச்சிட்டு தான் இருந்தேன்… அந்தப் பையன் வீடியோ எடுத்ததைப் பத்தி அதிகமாப் பேசி ஸீன் ஆக்காம, சுமுகமா அவங்களுக்குள்ளயே புரிஞ்சுக்க வச்சது… பொண்ணுங்களுக்கு இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு பத்தி எல்லாம் கேட்டேன்… உங்க தைரியமும், எல்லாத்தையும் கவனிக்கிற உன்னிப்பான குணமும் எனக்கு ரொம்பப் பிடிச்சது…” என்றவன் மலர்ந்த முகமாய் சொல்ல இடையிட்டாள் பாரதி.

“ஒரு நிமிஷம் சார்… நாங்க பேசினதைக் கேட்டுட்டு என்னைப் பாராட்டுறிங்க, சந்தோஷம்..! அதுக்கு முன்னாடி நீங்க யார்னு கொஞ்சம் சொல்லிட்டாப் பரவால்ல…”

அவள் சொல்லவும் திகைப்புடன் புருவத்தை உயர்த்தியவன், “ஹோ எஸ், ஐ ஆம் சாரி… நான் ஹரி, அன்னை குரூப் ஆப் கம்பெனியோட மேனேஜிங் பார்ட்னர்…” சொன்னவன் தனது தங்க எழுத்துகள் மின்னும் வெள்ளை நிற விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டவும் திகைப்பது அவர்கள் முறையானது.

“ஓ… சாரி சார், நீங்க யாருன்னு தெரியாம கேட்டுட்டேன், தப்பா நினைச்சுக்காதிங்க…”

“இட்ஸ் ஓகே பாரதி… உங்க பேருக்கு ஏத்த போல துணிச்சலா இருக்கிறது ரொம்ப நல்லாருக்கு… பை த பை நான் ஒரு ஆபர் கொடுத்தா ஏத்துப்பீங்களா…?” எனவும் புரியாமல் தோழிகளைப் பார்த்தாள் பாரதி.

“எ..என்ன ஆபர், சார்…”

“எங்க ஆபீஸ்ல மார்கெட்டிங் செக்சன்ல சில போஸ்டிங் காலியா இருக்கு… உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க, உங்க குவாலிபிகேஷன்க்கு தகுந்த வேலைல ஜாயின் பண்ணிக்கலாம்…” ஹரி சொல்லவும் பட்டென்று தாமரையாய் மலர்ந்தாள் பாரதி.

“எ..என்ன சொல்லறிங்க, வேலையா…? நா..நான் பிஎஸ்ஸி பயோ டெக்னாலஜி, ஹாஸ்பிடல் மானேஜ்மென்ட் டிப்ளமோ கோர்ஸ் படிச்சிருக்கேன்…” என்றாள் வேகமாக.

“வாவ்… எங்களுக்கு சொந்தமா ஹாஸ்பிடல், கெமிக்கல் பாக்டரி கூட இருக்கு, நாளைக்கு காலைல கார்டுல இருக்கிற எங்க மெயின் பிராஞ்சுக்கு சர்டிபிகேட்ஸ் எடுத்துட்டு வாங்க, என் ஒயிப் இருப்பாங்க… கண்டிப்பா உங்களுக்குத் தகுதியான போஸ்டிங் ஆர்டர் கிடைக்கும்…”

அவன் சொல்லுவதை நம்ப முடியாமல் கேட்டு நின்றவளின் தோளில் வான்மதி கை வைக்க, “ரொ..ரொம்ப தேங்க்ஸ் சார், கண்டிப்பா காலைல வந்து பார்க்கிறேன்…” என்றாள் கை கூப்பி நன்றியுடன்.

“இட்ஸ் ஓகே மா… இந்தத் துறைல ரொம்ப போட்டி அதிகம்… உங்க அறிவும், துணிச்சலும் எங்க கம்பெனிக்கு யூஸ் ஆகறதுல எனக்கும் சந்தோஷம் தான், அப்ப நான் கிளம்பறேன்…” சொன்னவன் விடை பெற்றான்.

“வாவ்… சூப்பர்டி பாரு, உன் நல்ல மனசுக்கு கடவுள் உடனே கை மேல பலனைக் கொடுத்துட்டார் பார்த்தியா…” கல்பனா சந்தோஷமாய் சொல்ல வான்மதியும் புன்னகைத்தாள்.

“நான் அப்பவே சொன்னேன்ல, ஒரு நல்ல வேலை கிடைக்கறதுக்கு தான் அந்த சின்ன வேலை உனக்கு தட்டிப் போச்சுன்னு, அதே போல ஆச்சா…” என்றாள் சந்தோஷமாய்.

இரு தோழிகளையும் சந்தோஷமாய் அணைத்துக் கொண்டவளின் விழிகள் ஆனந்தத்தில் லேசாய் கலங்கின.

“ஹூம்… நான் நல்லாருக்கணும்னு மனசார நினைக்கிற நல்ல தோழிகள் எனக்குக் கிடைச்சிருக்காங்க, நிச்சயம் நல்லாருப்பேன்…” என்றாள் சிரிப்புடன்.

கையில் கிட்டாத

வாய்ப்புகளை எண்ணி

மனம் தளராமல்

புதிய வாய்ப்புகளை

உருவாக்கிக் கொள்வோம்…

இப்பூமி மிகவும் பெரிது…

நமக்கான வரங்களும்,

சாபங்களும் – இங்கேயே

கொட்டிக் கிடக்கிறது…

வாழ்க்கை வாழ்வதற்கே…

Advertisement