Advertisement

 அத்தியாயம் – 3

“அம்மா… கீரை கொண்டு வந்திருக்கேன்…”

வாசலில் வழக்கமாய் வீட்டுக்குக் கீரை கொண்டு வரும் பெண்மணி குரல் கொடுக்க, ஹாலில் அமர்ந்து காபியுடன் தினசரியைப் பருகிக் கொண்டிருந்த அஷ்டலட்சுமி உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தாள்.

“சக்தி, கீரை வந்திருக்கு பாரு…” எனவும் கையின் ஈரத்தை முந்தானையில் துடைத்தபடியே வந்தாள் சக்தி பிரியா.

“இதோ வாங்கறேன், அத்தை…” சொன்னவள் வாசலுக்கு செல்ல கையில் ஏதோ பைலுடன் அறைக்குள் இருந்து வந்த பாரதியைக் கண்டதும் கேள்வியாய் ஏறிட்டார் அத்தை.

“கைல என்ன பைலு, எங்காச்சும் வேலை காலின்னு போர்டு  பார்த்திட்டு கிளம்பிட்டியா என்ன…?”

“வேலை காலின்னு பார்க்கலை அத்தை, காலைல காளியா உங்களைத் தான் பார்க்கறேன்…” என்றவளை கோபத்துடன் அடிக்க எழுந்திருக்க அவள் சொன்னதைக் கேட்டு சிரிப்புடன் வந்தார் பாரதியின் மாமா கோபால கிருஷ்ணன்.

“ஹாஹா, சரியா சொன்னடா பாருக்குட்டி… உன் அத்தை எப்பவும் காளி அவதாரம் தான் எடுக்கிறா, அவளுக்கு அதான் பிடிச்சிருக்கும் போலருக்கு…” என்ற கணவனை ருத்ர தேவியாய் முறைத்தார் அஷ்டலட்சுமி.

“என்ன..? வேலிக்கு ஓணான் சாட்சிங்கற போல அவளுக்கு நீங்க சப்போர்ட்டா, கொஞ்சமாச்சும் அத்தைன்னு மரியாதை கொடுக்கிறாளா… நான் என்ன கேட்டாலும் எகத்தாளமாவே பதில் சொல்ல வேண்டியது… நீங்க அதுக்கு சப்போர்ட் பண்ணி சிரிக்கறீங்க, எல்லாம் என் தலை எழுத்து…” சிடுசிடுவென்று பொரிந்து தள்ளிய மனைவியைக் கிண்டலாய் பார்த்துவிட்டு பாரதியை நோக்கியவர்,

“அவ கிடக்கறா, நீ என்னடா பாரும்மா… காலைலயே பைலும், கையுமா…?” என்றார் மருமகளிடம்.

“அது ஒண்ணுமில்லை மாமா, சென்னைல உள்ள என் பிரண்டு ஒருத்திக்கு மேரேஜ் வருதில்லையா, அவ இன்னும் கொஞ்ச நாள்ல ஆபீஸ்ல இருந்து ரிலீவ் ஆகப் போறதால அந்த சீட்டுக்கு என்னை ரெகமன்ட் பண்ணறதா சொன்னா, அதான் என் டாக்குமெண்ட்ஸ் மெயில் பண்ணலாம்னு எடுத்தேன்…” என்றாள் பாரதி.

“ஹூக்கும், நீ ஒரு ராசி கெட்டவ… இந்தா பிடிச்சுக்கன்னு வேலையைத் தட்டுல வச்சு நீட்டினாலும் அதை வேற ஒருத்தி தட்டிப் பறிச்சிட்டுப் போயிடுவா, அதுக்கு இவ்ளோ சீனு…” சொன்ன அத்தையை கோபத்துடன் பாரதி பார்க்க கீரைக் கட்டுடன் உள்ளே வந்த சக்தியின் முகத்தில் வேதனை தெரிந்தது.

“லட்சுமி, என்ன இது…? சின்னப் புள்ளையை காலங்கார்த்தால இப்படிப் பேசிட்டு, அவ மனசு எவ்வளவு வேதனைப்படும்…” மனைவியை சாடியவர், “நீங்க உள்ள போங்கடா…” என்றார் சக்தியிடம். முறைத்துக் கொண்டு நின்ற பாரதியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் சக்தி.

“லட்சுமி, உன் வாயில இருக்கிறது என்ன நாக்கா, தேள் கொடுக்கா…? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படிப் பேச உனக்கு எப்படி மனசு வருது…”

“என்ன, நான் மனசாட்சி இல்லாமப் பேசிட்டேன்… இப்படிதான் தினமும் சர்டிபிகேட்டைத் தூக்கிட்டு உங்க தங்கச்சி மக கிளம்பிடறா… இது வரைக்கும் ஒரு சின்ன வேலையாச்சும் கிடைச்சுதா, பெருசாப் பேச வந்துட்டாரு…”

“வேண்டாம் லட்சுமி, இப்படி நாக்குல நரம்பில்லாமப் பேசாத… இதுக்கு முன்னாடி அவளுக்கு மும்பைல ஒரு வேலை கிடைச்சுப் போறேன்னு நின்னப்ப நீ என்ன சொன்ன, வெளியூரு, அவ்ளோ தூரத்துக்கு எல்லாம் வேலைக்கு அனுப்ப முடியாதுன்னு தடுத்த… இப்போ இப்படிப் பேசற…”

“ஆமா, அந்த வேலைக்கு முன்பணமா ரெண்டு லட்சம் பணம் கட்ட சொன்னாங்களே, அதுக்கு எங்க போறது…? நீங்க பொசுக்குன்னு பணத்தைத் தூக்கிக் கொடுத்திருவீங்க, யாரு வீட்டுக் காசு போகுது…” என்ற அஷ்டலட்சுமி முகத்தைத் தாடையில் இடித்துத் திருப்பிக் கொண்டாள்.

“ச்சே… கொஞ்சம் கூட நன்றி இல்லாமப் பேசாத, என் தங்கச்சி வீட்டுக்காரர் நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கார்… இப்போ நாம சொந்தமா ஒரு கடை வச்சு ஓரளவுக்கு செட்டில் ஆகக் காரணம் யாரு…? அதுல அவரு கொடுத்த பணமும் இருக்குன்னு மறந்துடாத…”

“ஹூக்கும், இதையே இன்னும் எத்தன காலத்துக்கு தான் சொல்லிட்டு இருக்கப் போறீங்க… அவங்க அப்பா கொடுத்த காசை தான் மூணு பேரும் இத்தனை வருஷமா உக்கார்ந்து சாப்பிட்டு கரைச்சுட்டாங்களே…”

“லட்சுமி, உன் மனசு என்ன பாறாங்கல்லா… நீ இப்படி இருக்கப் போயி தான் இது வரைக்கும் நமக்குன்னு ஒரு புழு, பூச்சி கூட வாரிசாப் பொறக்காமப் போயிருச்சு… அப்பவும் புத்தி வந்து அந்தப் புள்ளைங்களை நேசிக்கத் தெரியாம இப்படி கொட்டிகிட்டே இருக்கியே, நீ எல்லாம் எப்ப தான் திருந்தப் போறியோ…” என வார்த்தையை விட அஷ்டலட்சுமியின் முகம் சட்டென்று இருண்டு போக இதழ்கள் அடுத்த வார்த்தை பேசாமல் மூடிக் கொண்டன.

மனைவி வாயடைத்துப் போய் கண் கலங்க நிற்பதைக் கண்டதும் அடுத்து எதுவும் பேசாமல் வெறுப்புடன் உள்ளே சென்று விட்டார் கோபால். அன்னையின் அறைக்குள் இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதி, தாயின் கண்ணீரைத் துடைத்து, “நீங்க அழாதிங்க மா… அதான் கொடுக்கு முளைச்ச பொண்டாட்டிக்கு நம்ம கோபாலு சரியாக் கொடுத்தாரே…” என்று சிரிக்க, கவலையுடன் மகளைப் பார்த்தார்.

கீரையை அடுக்களையில் வைத்துவிட்ட வந்த சக்தி தங்கையின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு, “பாரு… அத்தை பேசினதைக் கேட்டு நீ ஒண்ணும் பீல் பண்ணாதடி…” என்று சொல்ல புன்னகைத்தாள் பாரதி.

“நான் எதுக்குக்கா பீல் பண்ணனும்… நாம என்ன, இங்க சும்மாவா உக்கார்ந்து சாப்பிடறோம்… மாடு மாதிரி நீ வீட்டு வேலை எல்லாம் செய்யற… வெளிய வேலைக்குப் போனாக் கூட நல்ல சம்பளம் கிடைக்கும், அம்மாவைப் பார்த்துக்க வேண்டி நீ இங்கயே இருக்க… மாமா சொன்னதைக் கேட்டல்ல, கடைல நம்ம அப்பா பணமும் இருக்கு, நீங்க எதையும் நினைச்சு மனசை வருத்திக்காதிங்க… நம்ம அத்தை தானே சொல்லுது, என்னவோ சொல்லிட்டுப் போகட்டும்…” என்றவள் தனது வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்கும் சேர்த்து சமாதானம் சொன்னாள்.

சர்டிபிகேட்டை மொபைலில் ஸ்கேன் செய்து தோழிக்கு மெயில் செய்யத் தொடங்கியவள் மனம் தந்தையோடு இருந்த அழகான நாட்களை அசை போடத் தொடங்கியது.

தேவிகா, திலீபன் இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். திலீபன் அரசுப் பேருந்தில் டிரைவராய் இருந்தான். தூரத்து சொந்தமான திலீபனை தேவிகா விரும்புவது தெரிந்ததும் மறுக்காமல் இருவருக்கும் நல்லபடியாய் கல்யாணம் முடித்துக் கொடுத்தார் கோபால கிருஷ்ணன். அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல் தேவிகாவும், திலீபனும் லட்சியத் தம்பதியராய் அழகாய் இல்லறம் நடத்த, அவர்களின் காதலுக்கு அடையாளமாய் சக்திப் பிரியாவும், பாரதிப் பிரியாவும் பிறந்தனர்.

பர்னிச்சர் கடை வைத்திருந்த கோபாலுக்கு அதில் நஷ்டம் வந்தபோது ஹோம் அப்ளயன்ஸ் கடை வைத்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று மாப்பிள்ளையிடம் சொல்ல, தனது கையிருப்பையும் தங்கையின் கல்யாணத்திற்கு கோபால் கொடுத்த நகையையும் கொடுத்து உதவி செய்தவன் திலீபன். அப்போதெல்லாம் அஷ்டலட்சுமி திலீபன் என்றால் அண்ணா, அண்ணா என்று உயிராக உடன் பிறவா தங்கை போல் தான் இருந்தாள்.

அழகாய் வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் ஒரு நாள் திலீபன் சென்ற அரசுப் பேருந்து எதிரில் வந்த கண்டெய்னரில் மோதி பெரும் விபத்து ஏற்பட இருந்த நிலையில், பயணிகளைக் காப்பாற்றுவதற்காய் பேருந்தை வளைத்து ஒரு மரத்தில் மோதியதில் திலீபனின் மண்டை பலமாய் அதில் மோத உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மண்டைக்குள் துளைத்த கண்ணாடித் துண்டு ஒன்று மூளையைப் பதம் பார்த்திருக்க, நினைவிழந்து உணர்விழந்து மரமாகக் கிடந்தவன் ஒரு வாரப் போராட்டத்திற்குப் பிறகு எதுவும் உணராமலே மூச்சையும் நிறுத்திக் கொண்டான்.

சிறு நம்பிக்கையுடன் உயிரைப் பிடித்தபடி கைகளில் பத்தும், பதினாலு வயதிலுமாய் இரு பெண் குழந்தைகளுடன் கண்ணீரோடு டாக்டரின் பதிலுக்கு காத்திருந்த தேவிகா, திலீபன் சிகிச்சை பலனின்றி இறந்தது அறிந்ததும் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படியே விழுந்தவர் தான்… பிறகு எழுந்திருக்கவே இல்லை.

அதிர்ச்சியில் கை, கால், பேச்சு வராமல் மூளையின் ஒரு பாகம் செயலிழந்து போனதில் முடங்கிப் போனார் தேவிகா. தந்தையின் இழப்பையும், தாயின் வீழ்ச்சியையும் கண்டு கதி கலங்கி நின்ற பெண்களை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கதறிய கோபால் அன்று முதல் அவர்களைத் தன் பொறுப்பில் பார்த்துக் கொண்டார்.

திலீபனின் சிகிச்சைக்கு நிறைய கடன் வாங்கியதால் அவர்கள் இருந்த வீட்டை விற்று பணத்தைக் கொடுக்கும் சூழ்நிலை வர மாமாவின் வீட்டுக்கே அழைத்து வரப்பட்டனர்.

அதுவரை பட்டாம் பூச்சியாய் சிறகடித்துக் கொண்டிருந்த அப்பிஞ்சுகளின் தோள் அன்று முதல் பாரத்தை சுமக்கத் தொடங்கின. ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சக்தி ஸ்கூலுக்கு செல்லும் முன் தாய்க்கு வேண்டியதை எல்லாம் செய்த பின்னரே பள்ளிக்குக் கிளம்புவாள்.

பாரதி ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுபெண் என்பதால் அவளையும் ஒரு அன்னை போல் கவனித்துக் கொள்வாள் சக்தி. அவளின் சிறு தோள்கள் பெரும் சுமையை சுமக்கத் தொடங்கினாலும் தாய்க்கும், தமக்கைக்குமாய் பொறுத்துக் கொண்டு எதையும் வெளிக்காட்டாமல் அவர்களின் தேவையை கவனித்துக் கொண்டாள்.

தங்களின் நிலையை எண்ணி, பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி தேவிகா கண்ணீர் வடிக்கையில் சக்தி தான் ஆறுதல் சொல்லித் தேற்றுவாள்.

“அம்மா… அழாதீங்க, நான் நல்லாப் படிச்சு பெரியவளானதும், உன்னையும் அக்காவையும் நல்லாப் பார்த்துப்பேன்…” என்று சின்னக் கண்களில் நம்பிக்கை மின்ன பாரதி சொல்லுகையில் அவர்கள் பூரித்து தான் போயினர்.

முதலில் பெரிதாய் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள் அஷ்டலட்சுமி. அவளுக்குமே திலீபனின் எதிர்பாராத இழப்பும், தேவிகாவின் நிலையும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது என்பது தான் உண்மை. பிறகு இரு பிள்ளைகளுக்குமான படிப்பு செலவு, தேவிகாவின் மருத்துவ செலவு, மளிகை செலவு என்று கூடுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் மெல்ல எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினாள். கணவனின் வார்த்தைக்கு பயந்து சில காலம் அமைதியாய் இருந்தாலும் அவர் இல்லாத நேரத்தில் அஷ்டலட்சுமியின் வார்த்தைகள் தேவிகாவையும், பிள்ளைகளையும் பதம் பார்க்கவே செய்தது. பெரியவள் சக்தி அமைதியாய் கடந்து விட்டாலும் சின்னவள் பாரதி அவ்வப்போது அத்தைக்கு பதில் சொல்லி விடுவாள்.

அத்தையின் புலம்பலோடு, அன்னையை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருந்ததால், மாமா கோபால் படிக்க சொல்லி வற்புறுத்தியும் மறுத்து, சக்திபிரியா பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டாள். அது வரை சமையலை மட்டும் செய்து கொண்டிருந்த அஷ்டலட்சுமி வீட்டு வேலை மொத்தத்தையும் சக்தியின் தலையில் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

மூத்தவளை விட படிப்பில் சுட்டியாக இருந்த சின்னவள் பாரதி பனிரெண்டாவது முடிந்து கல்லூரிக்கு செல்ல விரும்ப மனைவியின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல் அவளை பிஎஸ்சி படிக்க வைத்தார் கோபால். அதில்லாமல் அவளாகவே சில மெடிக்கல் சம்மந்தமான அரசாங்கம் நடத்தும் பரீட்சை எல்லாம் எழுதித் தேர்வாகி இருந்தாள். TNPSC தேர்வுகளும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் ஏனோ சரியான வேலை தான் இன்னும் அமையாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

“பாரு…” அக்காவின் குரலில் நிமிர்ந்தவள், “என்னக்கா…?” எனவும், “கொஞ்சம் மளிகைக் கடைக்குப் போயிட்டு வந்துடறியா…? அத்தை நேத்து ஈவனிங்கே கடைக்குப் போகும்போது என்ன வேணும்னு கேட்டாங்க, பொட்டுக்கடல தீர்ந்ததை நான் கவனிக்கல… இப்போ தேங்கா சட்னிக்கு அது இல்லேன்னு சொன்னாத் திட்டுவாங்க, கொஞ்சம் போயிட்டு வாடி செல்லம்…” எனக் கெஞ்ச புன்னகைத்தாள் பாரதி.

“அக்கா, நீ போன்னு சொன்னா நான் போகப் போறேன்… அதுக்கு எதுக்கு இவ்ளோ விளக்கம் எல்லாம் சொல்லிட்டு…” என்றவள் எழுந்து கொள்ள அவள் கன்னத்தைக் கிள்ளி எடுத்து உதட்டில் வைத்த சக்தி, “என் செல்லம்…” என்று கையில் இருந்த பணத்தைக் கொடுக்க வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் பாரதி.

சோபாவில் அமர்ந்திருந்த அஷ்டலட்சுமி இவள் கிளம்புவதைப் பார்த்து, “எங்கடி கிளம்பிட்ட…?” என்றார்.

“ஒரு போஸ்டல் கவர் வாங்கணும், கடைக்குப் போறேன் அத்தை…” என்றவளிடம், “அப்படியே கொஞ்சம் பெனாயில் வாங்கிட்டு வா… உன் அம்மா படுத்திருக்க ரூம்ல மூத்திர நாத்தம் தாங்க முடியலை, வந்து நல்லாக் கழுவி விடு…” என்று அதிகாரமாய் சொல்ல பொங்கி வந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு,

“அதெல்லாம் அக்கா காலைலயே கழுவி விட்டுட்டா… நீங்க இன்னும் குளிக்கலை இல்ல, அந்த நாத்தம்தான் அடிக்குது போலருக்கு…” என்று சற்று சன்னக் குரலில் சொல்லி விட்டுச் செல்ல அவர் காதில் அரைகுறையாய் விழவே,

“ஏய், என்னடி முனங்கற…” என்றார் ஆத்திரத்துடன்.

“வந்து சொல்லறேன் அத்தை…” என சொல்லிவிட்டு வெளியே நடந்தாள் பாரதி.

எதிரில் ஒரு பெண் காலை இழுத்துக் கொண்டு விந்தியபடி நடந்துவர அவளைப் பார்த்தபடி கடந்த பாரதியின் காதுக்குள் சட்டென்று, “எக்ஸ்கியூஸ்மி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா…” எனக் கேட்டு சிரித்தான் ரிஷி.

திகைத்து ஒரு நொடி நின்றவள், “ச்சே, இதென்ன…? அவன் சொன்னது மனசுல இருந்து போகவே மாட்டேங்குதே…” என தன்னைத் தானே கடிந்து கொள்ள ரிஷியின் அழகான முகம் கண்களுக்குள் வந்து மனதுக்குள் ஒரு கலவரத்தைக் கொடுக்க புரியாத ஒருவித புது அவஸ்தையுடன் கடையைத் தாண்டி நடந்தவள் சட்டென்று சுதாரித்து திரும்ப வந்தாள்.

“என்ன பாரதி, கடையைத் தாண்டிட்டு ஏதோ யோசனைல போயிட்டுத் திரும்ப வர்ற…?” கடைக்கார கோமதி கேட்க, “இல்லக்கா, வான்மதி வீட்டுக்குப் போயிட்டு திரும்பும்போது வாங்கலாம்னு நினைச்சேன், சரி, லேட்டாகிரும்னு திரும்ப வந்துட்டேன்…” சமாளித்தவளின் மனசாட்சி, “ப்பா, என்னமா சமாளிக்கிற…” என கேலி செய்தது.

கடையில் வேண்டியதை வாங்கிப் பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்ப வீட்டுக்கு நடந்தவளின் கையிலிருந்த செல்பேசி செல்லமாய் சிணுங்கியது.

டிஸ்பிளேவில் தெரிந்த கல்பனாவின் எண்ணைக் கண்டதும் புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“என்னமா, கல்யாணப் பொண்ணே… மெயில் பார்திட்டியா…?”

“ம்ம்… பார்த்துட்டேன் பாரு, அப்படியே உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல தான் கூப்பிட்டேன்…”

“என்ன விஷயம் கல்பனா…?”

“எங்க வீட்டுல நிச்சயம் முடிஞ்சதுமே வேலைக்குப் போக வேண்டாம், நின்னுருன்னு சொல்லுறாங்க… நான் உன்கிட்ட கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாடி நிக்கறதா தானே சொல்லி இருந்தேன்… நீ என் நிச்சயத்துக்கு சென்னை வந்தா அப்படியே என் ஆபீஸ்ல சொல்லி சேர்த்து விட்டுடலாம்னு பார்த்தேன்…” என்றாள் கல்பனா.

“உன் நிச்சயத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானடி இருக்கு…”

“ஆமாண்டி, நாம சீக்கிரம் சொல்லலேன்னா அவங்க வேற யாரையாச்சும் வேலைக்கு எடுத்திருவாங்க, அடுத்த மாசம் நீ என் கல்யாணத்துக்கு வர்ற வரைக்கும் அவங்க வெயிட் பண்ணுவாங்களான்னு தெரியாது… நீ நாளைக்கே கிளம்பி சென்னை வா… நாளான்னிக்கு காலைல நிச்சயம் முடிஞ்சதும் மதியம் என் ஆபீஸுக்குப் போயி ரிஸைன் லெட்டர் கொடுத்துட்டு அப்படியே உன் பயோடேட்டாவைக் கொடுத்து பேசிட்டு வந்துடலாம்…” கல்பனா சொல்லுவதைக் கேட்ட பாரதி யோசித்தாள்.

“ம்ம்… சரிடி, நான் வீட்டுல மாமாகிட்ட கேட்டுட்டு உனக்கு கால் பண்ணறேன்…”

“சரி பாரு, நாளைக்கு நைட்டு தனியா வர பயமா இருந்தா துணைக்கு நம்ம வானுவையும் அழைச்சுக்க… அவளும் என் நிச்சயத்துக்கு வந்தா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்…”

“சரி கல்ப்ஸ்… நான் அவகிட்டயும் பேசிட்டு சொல்லறேன்…” எனவும் கல்பனா அழைப்பைத் துண்டிக்க, “சென்னை போகணும்னு சொன்னா அத்தை வேற குதிக்குமே, மாமாகிட்ட சொல்லி எப்படியாச்சும் சம்மதம் வாங்கணும்…” யோசனையுடன் வீட்டுக்கு நடந்தாள் பாரதி.

இரவென்றால் நிலவுண்டு…

இருளுக்குள் நிலவுண்டா…

பகலென்றால் கதிருண்டு

பதருக்குள் சதிருண்டா…

விடியல் தேடும் வெளிச்சமாய்

சில விட்டில்கள் காத்திருக்க

வந்திடுமோ வெண்ணிலா…

Advertisement