Advertisement

 அத்தியாயம் – 2

“ரிஷி… மணி பதினொன்னு முடிஞ்சுது, போதும் வாடா… வீட்டுக்குக் கிளம்பலாம்…”

அழகான விளக்குகள் அங்கங்கே ஒளிர்ந்து இருட்டை விரட்டிக் கொண்டிருக்க குடிமகன்களின் தாகம் தீர்க்க இரவு நேரத்திலும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மூன்று ஸ்டார் பாரின் மேஜை ஒன்றின் முன்பு அருகருகே அமர்ந்திருந்தனர் ரிஷியும், நண்பன் சூர்யாவும்.

ரிஷி குழறலாய் புலம்பிக் கொண்டே கண்ணாடிக் குடுவையில் மிதந்த பொன்னிற திராவகத்தை எடுத்து குடித்துவிட்டு வைத்தான்.

“துரோகி, அவனுக்கு நான் என்னெல்லாம் பண்ணிருக்கேன்… என்னைப் பார்த்து இப்படி சொல்ல எப்படி மனசு வந்துச்சு… பணத்துக்காக தான் என்னோட பழகி இருக்கானா…?”

“டேய், அவன் ஏதோ லூசுத்தனமா சொல்லிட்டான், அதுக்காக அதையே நினைச்சு புலம்பிட்டு இருக்காத…” சூர்யா சமாதானம் சொல்ல ரிஷி கோபத்துடன் முறைத்தான்.

“என்னடா, நீ அந்த அர்ஜூனுக்கு சப்போர்ட்டா… அதெப்படி அவன் என்னை நொண்டிக்காலன்னு சொல்லலாம்… ஆசையா அவன் புது பைக்கை ஓட்ட எடுத்ததுக்கு என்ன பேச்சுப் பேசிட்டான்… நொண்டிக் காலை வச்சிட்டு பிரேக் போட முடியாது, புதுவண்டியைக் கீழ போட்டுடுவன்னு என்னைப் பார்த்து சொல்ல எப்படி மனசு வந்துச்சு, அதான் அடிச்சுட்டேன்… அதுக்கு என்னைத் தள்ளி விட்டுட்டான், ராஸ்க்கல்ல்…” பல்லைக் கடித்தவன் மீண்டும் அந்த திராவகத்தை தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான்.

“ரிஷி, போதும் டா, அவன் ஏதோ சொல்லிட்டான்னு நீ எதுக்கு இப்படி குடிக்கிற…” சூர்யா தேற்ற முயன்றான்.

“முடியலடா சூர்யா… அவனுக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட தான ஓடி வருவான்… பத்தாயிரம் வேணும் மச்சி, இருபதாயிரம் பீஸ் கட்ட வேணும்னு கேக்கும்போது எல்லாம் நண்பனா உரிமையா கேக்கறான்னு தான நினைச்சு சந்தோஷமா செய்தேன்… இப்ப அவன் வேலைக்குப் போயி புதுசா பைக் வாங்கினதும் என் நட்பு பெருசாத் தெரியலை, என் நொண்டிக்கால் தான பெருசாத் தெரியுது… அப்ப இந்தப் பணத்துக்காக தான் இவ்ளோ நாள் என்னோட பிரண்ட்ஷிப் வச்சிருந்தானா…?” வேதனையுடன் சொன்னவன் மீண்டும் அந்த அமிலத்தைக் குடிக்க சூர்யா கவலையுடன் பார்த்தான்.

“டேய் ரிஷி, வீட்டுக்குக் கிளம்பலாம்டா, உன்னை விட்டுட்டு தான் நான் கிளம்பனும்… இப்படிக் குடிச்சா எப்படிடா…?” சூர்யா வேதனையுடன் சொல்ல அவனை அன்போடு அணைத்துக் கொண்டான்.

“நீ என் நண்பன் டா… என் தளபதி, மம்முட்டிக்கு ரஜினி போல எனக்கு நீ உயிர் நண்பன் டா…”

“ஹூக்கும், இந்த டயலாகுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, எவனாச்சும் ஒரு வார்த்தை சொல்லுறதுக்குள்ள உனக்குள்ள இப்படி சுருண்டு போகாதேன்னு எத்தனை முறை சொல்லிருக்கேன், குடிச்சுக் குடிச்சு உன்னை எதுக்குடா அழிச்சுக்கற…”

“ப்ச், என்னத் தடுக்காத டா… எத்தனை பணம் இருந்து என்ன…? இந்த நொண்டிக் காலோட நடக்கும்போது ஒவ்வொருத்தரும் பாக்குற பார்வைல என் மனசு பொசுங்கிப் போயிடுது… எல்லாத்தையும் சகிச்சுக்கிற அளவுக்கு நான் அவ்ளோ நல்லவன் எல்லாம் இல்லை… குடிகாரன், குடிச்சு குடிச்சு செத்துப் போறேன் விடு…”

“ரிஷி, ஏன் இப்படிப் பேசற… குடிக்கிறது சுபாவம் இல்லை, அது ஒரு பழக்கம் அவ்ளோ தான்… அது மட்டும் இல்லேன்னா உன்னைப் போல தங்கமான குணம் உள்ளவனைப் பார்க்கிறது ரொம்ப கஷ்டம்…”

“டேய், சும்மா என்னை டாப் ஆக்காத… நான் ஒரு நொண்டி, எல்லாரும் ஏளனமாப் பார்க்கிற அளவுக்கு தான் என் தோற்றம் இருக்கு… என் வாழ்க்கை இப்படியே போகட்டும்…”

“அப்படி சொல்லாதடா, உன் நல்ல மனசுக்கு கடவுள் நிச்சயம் உனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார்… ஊனம் உடம்புல இருந்தா தப்பில்லை, மனசுல வரக் கூடாது… நீ இப்போ எல்லாம் மனசளவுல ரொம்ப முடங்கிப் போயிட்ட… அதுதான் எனக்கு கவலையாருக்கு…”

“சரி சரி, உபதேசம் கேக்குற மூடுல நான் இல்லை, பேச்சைக் குறை… பாட்டில் தீர்ந்திடுச்சு, இன்னொரு விஸ்கி சொல்லு…”

“டேய் டைம் என்ன ஆச்சு தெரியுமா, பன்னெண்டு ஆகப் போகுது… போதும் டா, உன் அண்ணி உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” சூர்யா சொல்லவும் சட்டென்று நிதானத்துக்கு வந்தான் ரிஷி.

“ம்ம்… ஆமால்ல, பாவம் அண்ணியை வெயிட் பண்ண விடக் கூடாது, ஓகே நாம கிளம்பலாம்… இந்தா, பில் செட்டில் பண்ணிடு…” சொன்னவன் அவனது பர்ஸை எடுத்து சூர்யாவிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன் பில்லை செட்டில் செய்ய இருவரும் கிளம்பினர்.

தள்ளாடியபடி வந்த ரிஷியை சூர்யா தாங்கப் போக, “ஹூம்… நோ நோ, ஐ ஆம் ஸ்டடி…” என்றவன் காலை சாய்த்துக் கொண்டு தடுமாறி சமாளித்து நடந்தான். இருவரும் கார் பார்க்கிங்குக்கு வர, சூர்யா ரிஷியின் சிவப்பு நிற போலோவை எடுத்து வந்தான்.

ரிஷி அமர்ந்ததும் காரை எடுத்தவன், “உன்னை வீட்டுல விட்டுட்டு காரை எடுத்துட்டுப் போறேன்… என்னோட பைக்கை நாளைக்கு வந்து எடுத்துக்கறேன்…” எனவும் தலை ஆட்டியவன் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

ரிஷியின் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்த அடுத்த நிமிடமே கதவைத் திறந்தாள் அண்ணி கங்கா.

“சாரி அண்ணி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” உள்ளே நுழைந்த ரிஷியிடமிருந்து வீசிய மதுவின் நொடியில் முகத்தை சுளித்தவள், “எதுக்கு தான் இதை இப்படி உள்ள ஏத்திக்கறியோ…? உன் அண்ணாவுக்குத் தெரியாம உன்னை எவ்ளோ நாள் தான் காப்பாத்துறது, கொஞ்சம் கம்மியாத்தான் குடியேன்…” என்றவள் சூர்யா நிற்பதைக் கண்டதும்,

“சூர்யா, இவனை அப்படியே ரூமுல விட்டுட்டுப் போயிடேன், தள்ளாடி எங்காச்சும் விழுந்து வைக்கப் போறான், சத்தம் கேட்டா இவன் அண்ணன் எழுந்து வந்திருவார்…”

“சரி அண்ணி…” என்ற சூர்யா ரிஷியை அறைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வாசல் கதவைத் தாளிட்டு ரிஷியிடம் வந்த கங்காவிடம், “அண்ணி… ரொம்பப் பசிக்குது…” என்றான் ரிஷி.

“ஹூக்கும், இப்படி குடிச்சு வயித்தை நிறைக்கிறதுக்குப் பதிலா நல்லா சாப்பிட்டு நிறைக்கலாம்ல, நீ வந்ததும் கேப்பேன்னு தான் உன் ரூம்லயே சப்பாத்தியும் குருமாவும் கொண்டு வந்து வச்சுட்டேன்…” சொன்னவள் ஒரு பிளேட்டில் வைத்து நீட்ட நெகிழ்வுடன் வாங்கிக் கொண்டான் ரிஷி.

“நீ என் அண்ணி இல்லை அம்மா…” என்றவனின் கலைந்திருந்த தலையை மேலும் செல்லமாய் கலைத்து விட்ட கங்கா, “இப்படி சொல்லியே என் வாயை அடைச்சிடு… சரி, சாப்பிட்டுப் படு… உன் அண்ணா என்னைத் தேடப் போறார், நான் போறேன்…” என்றவள் அறைக்கதவை சாத்திவிட்டு மாடியிலிருந்த அவர்கள் அறைக்கு சென்றாள். மனம் நெகிழ பார்த்த ரிஷி, “என் அம்மா கூட இப்படி பார்த்துப்பாங்களா தெரியல, அண்ணி எங்க வாழ்க்கைல வந்த தேவதை…” என நினைத்தபடி சப்பாத்தியை சாப்பிடத் தொடங்கினான்.

************************

“கங்கா…”

அலுவலகம் செல்லத் தயாராய் புறப்பட்டு மாடிப்படிகளில் இறங்கி வந்த ஹரி மனைவியை அழைக்க, அடுக்களையில் இருந்து எட்டிப் பார்த்தாள் கங்கா.

ஹரி, நடிகர் சமுத்திரக்கனிக்கு டூப் கொடுக்கலாம் என்பது போல் நெடு நெடுவென்று உயரமாய் வளர்ந்திருந்தான். சுருள் முடியும், மாநிறமுமாய் கம்பீரமாய் இருந்தாலும் கண்களில் ஒரு கனிவு எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது.

அடுக்களையிலிருந்து வந்த கங்கா கையிலிருந்த ஹாட் பாக்ஸை உணவு மேஜையில் வைத்துவிட்டு ஏறிட்டாள். அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் பணத்தின் செழுமையும், பியூட்டி பார்லரின் உபயமும் அழகியாக்க முயன்றதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்க மாநிறத்துக்கும் சற்று அதிகப்படியான நிறத்துடன் அழகாகவே இருந்தாள்.

“கிளம்பிட்டிங்களா… வாங்க, சாப்பிடுங்க…”

“நான் கிளம்பறது இருக்கட்டும், நீ இன்னும் கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே… மார்னிங் லெவன் உனக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருந்தியே…”

“ஆமாங்க, இன்னைக்கு மாதவி லீவு, அதான் நானே சமையல்ல இறங்கிட்டேன்… நம்ம ரிஷிக்கு பிடிக்குமேன்னு பனியாரமும், புதினா சட்னியும் பண்ணேன்… உங்களுக்குப் பிடிச்ச ஆனியன் ஊத்தாப்பமும் ரெடி…” சொல்லிக் கொண்டே தட்டை வைத்துப் பரிமாற ஹரி புன்னகைத்தான்.

“எங்கே உன் செல்லப் பிள்ளை ரிஷி…? இன்னும் அவனுக்கு விடியலையா…?”

“பாவம் சின்னப் பையன், லேட்டா தான் தூங்கினான்… நீங்க சாப்பிடுங்க…” சொன்னபடி காரசட்னியை வைத்தாள்.

“எதுக்கு லேட்… ஊரைச் சுத்திட்டு நைட்டு லேட்டா வர்றானா… இரு, இன்னைக்கு அவனை நான் ஒரு புடி புடிக்கறேன்…” சொன்னவன் எழப் போக தடுத்தாள் கங்கா.

“ப்ச்… விடுங்களேன், சின்னப் பையன்..! எதாச்சும் புதுப்படம் ரிலீஸ் ஆனதைப் பார்க்க நைட்ஷோ போயிருப்பான்… என்கிட்டே லேட்டாகும் அண்ணின்னு சொல்லிட்டு தான் போனான்… காலங்கார்த்தால குழந்தையை படக்குன்னு எதுவும் சொல்லிடாதீங்க… நீங்க சாப்பிடுங்க, நான் எழுப்பி விடறேன்…” என்றாள் கங்கா.

“ம்ம்… நீ குடுக்கற செல்லத்துல தான் அவன் குட்டிச்சுவராப் போறான், அவனை இப்படியே விடக் கூடாது…”

“ப்ச்… நாம ரெண்டு பேரும் நிக்க நேரமில்லாம எல்லா நிர்வாகத்தையும் பார்த்துக்கறோம்… சின்னப்பையன், அவனாச்சும் சுதந்திரமா எல்லாம் அனுபவிக்கட்டுமே…”

“கங்கா, என் அம்மா இருந்தாக் கூட அவனை இப்படித் தாங்குவாங்களா தெரியலை… ஆபீஸையும் நிர்வாகம் பண்ணிட்டு, வீட்டையும் எவ்ளோ பொறுப்பாப் பார்த்துக்கற… உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு மா…”

“இது என் குடும்பம், இதை நான் பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பா…” என்றாள் கங்கா புன்னகையுடன்.

“ஆனாலும் ரிஷிக்கு நீ ஓவரா செல்லம் கொடுக்கிற… அண்ணியா இல்லாம, ஒரு அம்மாவா அவனுக்கு வேண்டிய எல்லாத்தையும் குறை இல்லாம பார்த்துக்கிற… அது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, உன்னைக் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வரும்போது ரிஷிக்கு பதிமூணு வயசு… அப்பாவும், அம்மாவும் ஆக்சிடன்ட்ல இறந்து போனதைத் தாங்கிக்க முடியாம ரொம்ப நொறுங்கிப் போயிருந்தான்… அவனுக்கு அந்த குறை தெரியக் கூடாதுன்னு தான் நான் சீக்கிரம் உன்னைக் கல்யாணம் பண்ணினேன்… அவனை சொந்தப் பிள்ளையா பார்த்துகிட்டு அந்த நம்பிக்கையை இப்ப வரைக்கும் நீ காப்பாத்திட்டு வர்ற…”

“என்னங்க பேசறிங்க… ரிஷிதான் எப்பவுமே எனக்கு தலைப்பிள்ளை, அவனுக்கு அப்புறம் தான் என் வயித்துல பிறந்த ரோஷன், எனக்குப் பிள்ளை…” என்றவளைக் கனிவோடு நோக்கினான் ஹரி.

“அதான் எனக்குத் தெரியுமே கங்கா, நீ சொல்லனுமா என்ன…? சரி, ரோஷன் எப்ப ஹாஸ்டல்ல இருந்து வரான்னு கேட்டியா…?” பத்து வயது ரோஷன், ஊட்டி கான்வென்டில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான்.

“எக்ஸாம் தொடங்கப் போகுது, லீவுல வர்றேன்னு சொல்லி இருக்காங்க…” சொல்லிக் கொண்டே கணவனின் தட்டில் இன்னொரு ஊத்தாப்பம் வைக்கப் போக, “போதும் மா… உன்னால மனசும், வயிறும் நிறைஞ்சிருக்கு… ஆடிட்டர் சீக்கிரமே ஆபீஸ் வரேன்னு சொல்லிருக்கார், நான் கிளம்பட்டுமா…?” சொன்னவன் எழுந்து கொண்டான்.

“ம்ம்… நீங்க கிளம்புங்க, நான் ரெடியாகி 11 மணிக்குள்ள ஆபீஸ் வந்துடறேன்…”

“ஓகே மா…” சொன்னவன் போர்டிகோவில் கம்பீரமாய் நின்ற பென்ஸில் ஏறி அலுவலகம் கிளம்பினான்.

ரிஷியின் அறைக்கு வந்த கங்கா படுக்கையில் குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தவனின் அருகே சென்று முதுகில் மெல்லத் தட்டி அழைத்தாள்.

“ரிஷி…! எழுந்து வா…”

“ஹூம், முடியலை அண்ணி… ஹேங் ஓவர் அதிகமா இருக்கு…” என்றவனின் முதுகில் செல்லமாய் அடித்தாள்.

“ராஸ்கல்… குடிக்கிறதே தப்பு, இதுல அளவில்லாம வேற குடிச்சிட்டு வர்ற… உன் அண்ணன்கிட்ட உன்னைக் காட்டிக் கொடுக்காம சமாளிக்கிறதே பெரிய வேலையா இருக்கு…”

“சாரி அண்ணி… நீ தான் என் அம்மா…” என்றதும் அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஹூம், இப்படியே ஐஸ் வச்சு என்னை கூல் பண்ணிடு… சரி, நான் ஆபீஸ் கிளம்பறேன்… உனக்குத் தேவையானதை டைனிங் டேபிள்ல வச்சிருக்கேன், குளிச்சு சாப்பிடு…”

“ம்ம்…” என்றான் வாய்க்குள் முனங்கலாக.

“நான் போனதும் மறுபடி தூங்கிடாத…”

“இல்ல அண்ணி…” என்றவன் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து எழுந்து அமர்ந்தான்.

“அண்ணி… எனக்கு கொஞ்சம் பணம் வேணும்னு சொல்லி இருந்தனே…”

“ம்ம்… எவ்வளவு ஹேங் ஓவர்லயும் இது மட்டும் உனக்கு மறக்காதே…” கிண்டலாய் சொன்னவள், “நீ கேட்ட அம்பதாயிரம் உன் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணறேன், இன்னிக்கே காலி பண்ணிடாதே… எல்லார்கிட்டயும் கறாரா இருந்தாலும் உன்னை மட்டும் என்னால எதுவும் சொல்ல முடியலை… பார்த்து செலவு பண்ணு, இந்த மாசம் மறுபடி என்கிட்ட வந்து நிக்காத, அப்புறம் உன் அண்ணனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது…”

“ஓகே, தேங்க் யூ அண்ணி…” என்றான் ரிஷி வாய் நிறையைப் புன்னகையுடன்.

அவனது தலை முடியை மீண்டும் செல்லமாய் கலைத்துவிட்டு கன்னத்தில் மெல்ல அடித்தவள் புன்னகையுடன் அவளது அறைக்கு சென்றாள்.

ஆயிரம் உறவுகள்

வந்தாலும்

அன்னை தான்

ஆகிடுமோ…?

எந்த பந்தம் என்றாலும்

தொப்புள் கொடி

பந்தத்தை

மிஞ்சிடுமோ…?

கருணையோடு கண்டிப்பும்

தவிப்போடு தண்டிப்பும்

அன்போடு அதட்டலும்

கொண்டவளே தாயாவாள்…

Advertisement