Advertisement

“ஓ…”

“உங்களைக் கூட கேட்டாங்க, ஏதோ மீட்டிங் இருக்கிறதால நாளைக்கு பேசிக்கிறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க…” பேசிக்கொண்டே இருவரும் காபினுக்குத் திரும்ப பாரதியின் கையிலிருந்த செல்பேசி சிணுங்கியது.

வீட்டு லான்ட்லைன் எண்ணைக் கண்டவள் மலர்ந்தாள்.

“வீட்டுல இருந்து கால், பேசிட்டு வந்துடறேன்…” சொன்னவள் சற்று ஓரமாய் பால்கனி போன்ற இடத்துக்கு சென்று பேசத் தொடங்கினாள். சில நொடிகள் அவளையே பார்த்து நின்ற கெளதம் தனது அறைக்கு சென்றான்.

லான்ட்லைனில் அழைத்திருந்த அக்கா சக்தியிடம் எல்லா விவரங்களையும் சொன்னவள் கெளதம் பற்றியும் சொல்ல மறக்கவில்லை. அம்மா, அத்தை, மாமா எல்லாரையும் விசாரித்து அவர்களிடமும் சொல்லுமாறு கூறி வைத்தாள். மனம் சந்தோஷமாய் இருக்க வான்மதியை அழைத்து அவளிடம் சிறிது நேரம் பேசினாள்.

“வானு, நீ நினைச்ச போல அந்த மேடம் அவ்ளோ ஒண்ணும் முரட்டுப் பீஸ் இல்ல போலடி… கொஞ்சம் பணத்திமிரு, மத்தபடி பிரச்சனை இல்லேன்னு தான் தோணுது…”

“ம்ம்… எதுக்கும் நீ அவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்க… அப்புறம், அவன் மறுபடி கால் பண்ணானா..?”

அன்றைய பிஸியில் ‘அவனை’ மறந்திருந்த பாரதியின் மனதில் கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்தான் ரிஷி.

“இ..இல்ல, பண்ணல…”

“ஹூம்… கால் பண்ணா நல்லாத் திட்டி விட்டிடு, மறுபடி அவன் உன் வழியில் வரவே கூடாது…”

“ம்ம்… சரி, சரி… நான் பார்த்துக்கறேன்… நீயும் சீக்கிரமே இங்கே வந்துட்டா எனக்கு சந்தோஷமாருக்கும்…”

“வந்துடறேன்டி, ரதீஷ் அண்ணா எனக்கு வேலைக்கு விசாரிச்சுட்டு நாளைக்கு சொல்லறேன்னு சொல்லி இருக்காங்க…” என்றாள் வான்மதி.

“அப்புறம் வானு, இங்க ஆபீஸ்ல ஒரு புது காரக்டர்கூட  பிரண்டாகிருக்கேன், பேரு கெளதம்…” என்ற பாரதி அவனைப் பற்றி சொல்லி முடிக்க, “ஹூம்… பேரும், ஊரும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு… இனிக்க இனிக்கப் பேசறதால யாரையும் நல்லவங்கன்னு முழுசா நம்பிடாத…”

“ஹாஹா, இப்படி சந்தேகத்தோடவே எல்லாரோடவும் பழகிட்டு இருந்தா நமக்குன்னு நாலு பேரை சம்பாதிக்கவே முடியாது… யாரையும் நம்ப வேண்டாம், பட் நாம உண்மையா பழகினாப் போதும்…”

“ஹூம்… உன் வியாக்யானம் எல்லாம் எனக்கும் தெரியும்… புது ஊரு, புது மனுஷங்க… பார்த்து ஜாக்கிரதையாப் பழகு…” அவள் சொல்லும்போதே ஏதோ புதிய எண்ணிலிருந்து கால் வர, “சரிடி வானு, ஏதோ கால் வருது… வச்சிடறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

“இது என்ன புது நம்பர்…?” யோசனையுடன் அந்த எண்ணை எடுக்க அது ஏர்டெல் கஸ்டமர் சர்வீஸ் நம்பர்.

“இது வேற, ஏதோ முக்கியமான கால்னு நினைச்சு எடுத்தா ரீசார்ஜ் பண்ண சொல்லிட்டு… சிம் வாங்கினவளுக்கு ரீசார்ஜ் பண்ணத் தெரியாதா…? இம்சைங்க…!” மனதுக்குள் அர்ச்சித்தபடி தனது சீட்டுக்கு வந்து அமர்ந்தாள். மேஜை மீதிருந்த இண்டர்காம் சிணுங்க எடுக்கவும் கெளதம் அறைக்கு வருமாறு அழைத்தான். சென்றவளிடம் ஒரு கொட்டேஷன் தயார் செய்யுமாறு கூறி அதற்கான பார்மட் சிஸ்டத்தில் இருப்பதாகக் கூறி வேண்டிய விவரங்களைக் கொடுத்து அனுப்பினான்.

“கடவுளே..! முதன் முறையா செய்யற வேலை… நல்லபடியா முடிக்கணும்…” வேண்டிக் கொண்டே கம்ப்யூட்டரில் அவன் சொன்ன கொட்டேஷன் போல்டரை ஓபன் செய்து ஆல்ரெடி இருந்த பார்மட்டில் கெளதம் கொடுத்த விவரங்களை வைத்து புதிய கொட்டேஷனைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

முடித்ததும் கெளதமை அழைத்து சொல்ல அவன் டீம் வீவரில் வந்து சில கரக்ஷன்களை செய்துவிட்டு, “சூப்பர்… பர்ஸ்ட் வொர்க்கே அசத்தலா ரெடி பண்ணிருக்கீங்க…” எனப் பாராட்ட சந்தோஷமாய் இருந்தது. வாழ்வின் அடுத்த படியில் நிற்பவளுக்கு அந்தப் பாராட்டு உற்சாகத்தைக் கொடுத்தது

அடுத்தடுத்து வேலைகளை கெளதம் சொல்ல ஆர்வத்துடன் செய்து முடித்தாள். மாலை ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து சிலரைத் தவிர மற்றவர்கள் கிளம்பத் தொடங்க முதல் நாளே பாரதியின் வேலை முடிய ஆறு மணி ஆனது.

கிளம்பியவளிடம் கெளதம் டிராப் பண்ணுவதாய் கூற மறுத்தவள், “எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும், பக்கத்துல தானே ஹாஸ்டல்… நான் போயிக்கறேன், நீங்க கிளம்புங்க…” எனவும் அவன் காரில் கிளம்பி விட்டான்.

உற்சாகத்துடன் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவள் மெல்ல நடக்க, வழியில் நாசியைத் துளைத்த காபியின் மணத்தில் நிமிர்ந்து பார்க்க சென்னை கபே என்ற போர்டைக் கண்டதும் காபிப் பிரியையான அவளின் நாக்கிலிருந்த சுவை அரும்புகள் கொஞ்சம் “காபி குடேன்…” எனக் கெஞ்ச தனியே செல்ல தயக்கமாய் இருந்தாலும் காபி மீதிருந்த காதலில் கடைக்குள் நுழைந்தாள்.

அங்கங்கே ஜோடியாய் காபி குடித்துக் கொண்டிருக்க, ஓரமாய் இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தாள். அருகே வந்த பையனிடம், “ஒரு காபி…” என்று சொல்ல, “எதுவும் சாப்பிடறிங்களா மேடம்…” என்றான் பையன்.

“காபி மட்டும் போதும்…” என்றதும் அவன் நகர வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவள், காபி வந்ததும் ரசித்துக் குடித்துக் கொண்டே குனிந்து மொபைலை நோண்டிக் கொண்டிருக்க எதிரே நிழலாடவும் நிமிர்ந்தாள். ரிஷி முன்னில் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“ஹே… நீங்களா…?” சொன்னவள் சட்டென்று எழப் போக, “ஏய்… கூல் பாரதி, மரியாதை மனசுல இருந்தாப் போதும்… என்னைப் பார்த்து எழுந்து நிக்கவெல்லாம் வேண்டாம்… எல்லாரும் பார்க்கறாங்க, உக்கார்…” என்றதும் கடுப்புடன், “ச்சே…” என அமர்ந்து கொண்டாள்.

“தம்பி, எனக்கொரு காபி…” அங்கிருந்தே ரிஷி குரல் கொடுக்க, “கொண்டு வரேன்ணே…” என்றான் அவன்.

ரிஷி குறுகுறுவென்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவஸ்தையாய் இருந்தாலும் அவனிடம் இன்று தெளிவாய் பேசி விட வேண்டும் என நினைத்தவள் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமான குரலில் பேசத் தொடங்கினாள்.

“ப்ச்… மிஸ்டர் ரிஷி, எதுக்கு இப்படி நான் போகற இடத்துக்கு எல்லாம் வந்து வம்பு பண்ணிட்டு இருக்கீங்க… இதெல்லாம் உங்களுக்கே சரின்னு படுதா…?”

“ரதி, கூல்மா… நீயும், நானும் சந்திக்கணும்னு காலம் முடிவு பண்ணினா என்னால என்ன பண்ண முடியும்…? நீ இங்கே இருப்பேன்னு எனக்கு தெரிஞ்சா வந்தேன்…”

“ஓ… தெரியாம தானே வந்திங்க, காபி குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தானே… எதுக்கு என் முன்னாடி உக்கார்ந்து இப்படி காணாததைக் கண்ட போல வெறிக்க, வெறிக்கப் பார்த்திட்டு இருக்கீங்க…”

“அழகை ஆராதிக்கணும் இல்லியா…? அதான் உன்னை ரசிக்கிறேன் ரதிம்மா…”

“ஆ… முதல்ல என்னை ரதின்னு கூப்பிடாதீங்க, எனக்கு செல்லப் பேரு வச்சுக் கூப்பிட நீங்க யாரு…?”

“ஹூம்… நானும் அதுக்கான உரிமையை எடுத்துக்கணும்னு தான் தேடித் தேடி வர்றேன், நீதான் விரட்டறியே…”

“ப்ச்… ரிஷி, என்னதான் உங்க பிராப்ளம்… கண்டதும் காதல்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, தயவு செய்து புரிஞ்சுக்கங்க… என்னைத் தொந்தரவு பண்ணாம என் வழியில் போக விடுங்க, நான் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு…”

“நானும் எப்பவும் உனக்குத் துணையா வரணும்னு தான் ஆசைப்படறேன் ரதி… உனக்கு என்னைப் பிடிக்கலன்னு மட்டும் பொய் சொல்லிடாத… உன் உதடுகள் சொல்லாத காதலை உன் கண்கள் எப்பவோ என்கிட்ட சொல்லிடுச்சு… என்னை ஏத்துக்க எது தடையா இருக்குன்னு சொல்லு…”

“எ..என்ன சொல்லறிங்க… கண்ணு, மூக்கெல்லாம் எப்பப் பேசத் தொடங்குச்சு, எனக்கு உங்களைப் பிடிக்கலை…?”

“என்னை ஏன் பிடிக்கலைன்னு கேக்கறேன்…” அவன் மீண்டும் அழுத்திக் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறியவள் அமைதியாய் இருக்க அவனே கேட்டான்.

“ஒருவேளை, எல்லாரையும் போல உனக்கும் என் கால் ஊனம் தான் பெருசாத் தெரியுதா… அதனால தான் என் காதலைப் பிடிக்கலியா…?” வலியோடு கேட்ட அவன் வார்த்தைகள் அவளுக்குள்ளும் வலியைக் கடத்தின.

“ரிஷி…! என்ன இது…? நான் அப்படி எல்லாம் நினைக்கிற பொண்ணு கிடையாது…”

“அதான் எனக்குத் தெரியுமே, உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல காரணமே அதானே…” அவன் சொல்ல திகைத்தாள்.

“ரதி… நான் ஒண்ணும் நீ நினைக்கிற போல கண்டதும் காதல்னு சொல்லி வரல, முன்னாடியே உனைப் பார்த்திருக்கேன்… பேசறதைக் கேட்டிருக்கேன், உன்னோட மனசைப் புரிஞ்சிருக்கேன்… நீ என் வாழ்க்கைல வந்தா எந்த தாழ்வு மனபான்மையும் இல்லாம ரொம்ப நல்லாருப்பேன்னு மனசு சொல்லுது… அதுக்கு எது தடையா இருக்குன்னு மட்டும் சொல்லு, நான் மாத்திக்கறேன்… அதுக்காக என்னைப் பிடிக்கலேன்னு பொதுவா சொல்லி மறுத்திடலாம்னு நினைக்காத…” தெளிவான அழுத்தமான குரலில் சொன்னவனை திகைப்புடன் பார்த்தாள் பாரதி.

“எனக்குப் புரியல, உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்..?” அவள் கேள்விக்குப் புன்னகைத்தவன் போன வருடம் டிசம்பரில் உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் அவளைக் கண்டதையும் பேசியதைக் கேட்டதையும், அவள் பேச்சை ஒரு இன்ஸ்பிரேஷனாய் எடுத்துக் கொண்டதையும் சொல்ல அவள் முகத்தில் ஆச்சர்யம் கூடியது.

“இப்ப என் காதல் கண்டதும் வந்தது இல்ல, புரிதலில் வந்ததுன்னு உனக்குப் புரியுதா ரதி…” என்றதும் பதில் சொல்லாமல் அவனை ஏறிட்டவளின் விழிகள் பளபளத்தது.

சொல்லாமல் செய்யும்

காதல் கனமானது

சொல்லச் சொன்னாலும்

சொல்வதுமில்லை மரமானது…

சொல்லும் சொல்லைத்

தேடித் தேடி யுகம் போனது…

இந்த சோகம் தானே

காதலிலே சுகமானது…

வாசனை வெளிச்சத்தைப் போல

அது சுதந்திரமானது அல்ல…

ஈரத்தை இருட்டினைப் போல

அது ஒளிந்திடும்… வெளிவரும் மெல்ல…

Advertisement