Advertisement

அத்தியாயம் – 11

காலையில் சீக்கிரமே கிளம்பி ஹாஸ்டலுக்கு அருகே இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஆபீஸுக்கு கிளம்பினாள் பாரதி. ‘அன்னை குரூப் ஆப் கம்பெனீஸ்’ கட்டிடத்தின் முன் இறங்கியவள் மனம் பிரமிப்புடன் அந்தப் பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தது.

தானும் இந்தப் பெரிய அலுவலகத்தில் ஒரு ஸ்டாப் என்ற எண்ணமே பெருமையாய் இருந்தது. புன்னகையுடன் உள்ளே நுழைந்தவள் ரிசப்ஷனில் இருந்த மஞ்சுவுக்கு குட்மார்னிங் சொல்லி, அவள் புன்னகையையும், குட்மார்னிங்கையும் பதிலாய்ப் பெற்றுக் கொண்டு வேலையில் ஜாயின் பண்ண வந்திருப்பதாகக் கூற வாழ்த்தினாள்.

“எம்டி மேடம் இன்னும் ஆபீஸ் வரலை… ஆனா, எம் டி சார் வந்துட்டார், அவர்கிட்ட சொல்லவா…?” மஞ்சு கேட்க பட்டென்று மலர்ந்தவள், “சொல்லுங்க..!” என்றாள்.

மஞ்சு இன்டர்காமில் சொன்னதும் உடனே அழைப்பு வந்தது.

கங்காவின் அறைக்கு நேர் எதிரே சற்றுத் தள்ளி இருந்தது ஹரியின் அறை. பாரதி ஹரியின் அறை வாசலை நெருங்க, கதவைத் திறந்து ஹரியே வெளியே வந்தான்.

“ஹலோ பாரதி… வாங்க, நேரமே ஆபீஸ் வந்துட்டிங்களே… பங்க்சுவாலிட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும்… உக்காருங்க…!”

“குட்மார்னிங் அண்ட் தேங்க் யூ சார்…”

“இட்ஸ் ஓகே, கங்கா தினமும் கெமிக்கல் பாக்டரிக்கு போயிட்டு தான் இங்கே வருவா, நம்ம ஆபீஸ் எல்லாம் பார்த்திங்களா… வேலை என்னன்னு சொன்னாங்களா, உங்களுக்குப் பிடிச்சிருக்கா…?” ஹரி இயல்பாய் பேச அவள் புன்னகையுடனே பதில் கூறினாள்.

“பிடிச்சிருக்கு சார்… நினைச்சே பார்க்காம எனக்கு உங்க கம்பெனில நல்ல ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிங்க… டெபனட்லி, ஐ வில் டூ மை பெஸ்ட் சார்…”

“குட், கிடைச்ச வாய்ப்பை உபயோகப்படுத்தி முழுமையா உங்க திறமையைக் காட்டுங்க, அதுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்…”

“ஷ்யூர் சார்…”

“ஓகே, ஆல் த பெஸ்ட் பாரதி… நீங்க உங்க செக்ஷனுக்குப் போங்க, அங்கே உங்களுக்கான காபின் ரெடியா இருக்கு… மிஸ்டர் கெளதம் உங்களுக்கான வொர்க் என்னன்னு சொல்லுவார், அதை பாலோ பண்ணிக்கங்க…”

“தேங்க் யூ வெரி மச் சார்…” சொன்னவள் புன்னகையுடன் எழுந்து வெளியே நடந்தாள்.

மார்கெட்டிங் செக்ஷனில் கெளதமைக் காண அவனது அறைக்குள் நுழைந்தாள் பாரதி. முப்பது வயதில் பளிச்சென்ற தோற்றத்தில் இருந்தவன் இவளைக் கண்டதும் கண்களில் மலர்ச்சியைக் காட்டி சிநேகமாய் சிரித்தான்.

“வாங்க மிஸ் பாரதி, ஹரி சார் சொன்னார்… ரெண்டு நாள் நீங்க எனக்கு வொர்க்ல அசிஸ்ட் பண்ணுங்க… என்ன வேலைன்னு உங்களுக்கு ஐடியா கிடைச்சிடும்… அப்புறம் தனியா வொர்க் பண்ணிக்கலாம்…”

“ஓகே… சார்…”

“வாங்க ஸ்டாப்ஸ்க்கு உங்களை அறிமுகப் படுத்தறேன்…” சொன்னவன் வெளியே வந்து அனைவரையும் அழைத்து பாரதியை அறிமுகப்படுத்தினான்.

அனைவரும் வாழ்த்துக் கூற புன்னகையுடன் தலையாட்டி ஏற்றுக் கொண்டாள் பாரதி.

“உங்களுக்கு எந்த சப்போர்ட் வேணும்னாலும் இவங்ககிட்ட கேக்கலாம்… ப்ரீயா இருக்கும்போது அவங்ககிட்ட பேசி பரிச்சயம் ஆயிக்குங்க… வாங்க, இன்னைக்கு என்ன வொர்க்னு சொல்லறேன்…” என்றவன் அறைக்கு செல்ல அவளும் பின்தொடர்ந்தாள்.

“இந்த பைல்ல கொட்டேஷன்ஸ், நம்ம புராடக்ட்ஸ் பத்தின விஷயம் எல்லாம் இருக்கு, கம்ப்யூட்டர்லயும் இருக்கு… பார்த்து ஸ்டடி பண்ணிக்கங்க, அப்புறம் நான் சொல்லுற போல கொட்டேஷன் ரெடி பண்ணிக் கொடுங்க… உங்க காபினுக்குப் போங்க, வாழ்த்துகள்…” சொன்னவன் இரண்டு பைலை அவளிடம் நீட்ட வாங்கிக் கொண்டு வந்தாள். சின்ன சின்ன காபினாய் கண்ணாடித் தடுப்பால் பிரிக்கப்பட்டு கம்ப்யூட்டர், டேபிள், நாற்காலியுடன் ஆபீஸ் அழகாய் இருந்தது. இனியும் அலுவலக நேரம் தொடங்க சிறிது  நேரமிருந்ததால் எல்லாரும் சீட்டுக்கு வந்திருக்கவில்லை.

அவளுக்கான குட்டி காபினில் நுழைந்தவள் கையிலிருந்த பாகை மேஜையின் சைடில் வைத்துவிட்டு, பைலை மேஜையில் வைத்தவள், கம்ப்யூட்டரைத் தொட்டு கும்பிட்டுக் கொண்டாள். ஒரு நொடியில் மனதுக்குள் கடவுளும், அன்னையும், அக்கா, மாமா, அத்தை எல்லாரும் வந்து போக மனமார வேண்டிக் கொண்டு அதை ஆன் செய்தாள்.  பைலைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியவள் அதிலுள்ள விஷயத்தை மூளைக்குள் கடத்தும் வேலையில் மொத்தமாய் மூழ்கிப் போனாள். மதிய உணவுக்காய் அறையிலிருந்து வெளியே வந்த கெளதம் பாரதி அப்போதும் காபினுள் குனிந்த தலையுடன் இருப்பதைக் கண்டான்.

“மிஸ் பாரதி…” அவன் குரலில் உலுக்கிப் போட்டது போல் திடுக்கிட்டு நிமிர்ந்தவளைக் கண்டு புன்னகைத்தான்.

“என்னங்க, லஞ்ச் சாப்பிடற எண்ணம் எதுவுமில்லையா…” விட்டா இந்த பேப்பர்ஸை கரைச்சுக் குடிச்சு பசியை ஆத்திக்குவிங்க போலருக்கு… போயி சாப்பிடுங்க…”

“ம்ம்…” என்றவள் சுற்றிலும் கண்ணைச் சுழற்ற எல்லாக் காபினும் காலியாய் இருந்தது.

“லஞ்ச் கொண்டு வந்துட்டிங்களா, இல்ல கான்டீனா…?”

“கொண்டு வரலை, கான்டீன்தான்…”

“ஓ… வாங்க, நானும் கான்டீன்தான் போறேன்…” சொன்னவன் முன்னில் நடக்க பைலை மூடி வைத்து மொபைலை எடுத்துக் கொண்டு தயக்கத்துடன் பின்தொடர்ந்தாள்.

“இங்க காலைலயே கான்டீன்ல புட் ஆர்டர் பண்ணா தான் மதியம் ரெடி பண்ணி வச்சிருப்பாங்க, நீங்க ஆர்டர் சொன்னிங்களா…?”

“இ..இல்ல, எனக்குத் தெரியாது…”

“ஓ… இட்ஸ் ஓகே… எனக்கு சப்பாத்தியும், தயிர் சாதமும் சொல்லி இருந்தேன்… ஷேர் பண்ணிக்கலாம் வாங்க…”

“இல்ல, பரவால்ல… உங்களுக்காக சொன்னது, நீங்க சாப்பிடுங்க… நான் மேனேஜ் பண்ணிக்கறேன்…”

“ஒரு நாள் கொஞ்சம் கம்மியா சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாது… உங்களுக்கு கஷ்டமா இருந்தா நாளைக்கு நீங்க ஆர்டர் பண்ணதை நான் ஷேர் பண்ணிக்கறேன், அப்ப ஈக்வலா போயிடும் தானே…” சிரிப்புடன் சொன்னவனிடம் அதற்கு மேல் மறுக்காமல் உடன் நடந்தாள்.

ஒரு சப்பாத்தி மட்டும் போதும் என்றவளிடம் சம்மதிக்காமல் கொஞ்சம் தயிர் சாதத்தையும் கொடுத்த பிறகே விட்டான். சீக்கிரமே அவனது பழக்கத்தில் ஒரு தோழமையை உணர முடிந்தது பாரதிக்கு. பொதுவாய் அவளைப் பற்றியும் அவளது குடும்பம் பற்றியும் விசாரித்துக் கொண்டான்.

“லஞ்சுக்கு தேங்க்ஸ் சார்…”

“ஹேய், இதுல என்ன இருக்கு, உங்களுக்கு இன்னும் இங்கே உள்ள நடைமுறை தெரியாதுல்ல… அதுவும் இல்லாம உங்களைப் பார்த்ததுமே பிரண்டாக்கிக்கோ கெளதம்னு என் மைன்ட் வாய்ஸ் சொல்லுச்சு…”

“என்னது, மைன்ட் வாய்ஸ் சொல்லுச்சா…?” திகைப்புடன் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தான்.

“ஆமா, எனக்கு பொதுவாவே பாரதியைப் பிடிக்கும்… நீங்க வேற அழகான பாரதியா இருக்கீங்க… எம்டி ரெகமண்டேஷன் எல்லாம் வச்சிருக்கிங்க, ஒரு சப்போர்ட்டுக்கு உங்க பிரண்ட்ஷிப் இருக்கிறது நல்லது தானே…” கண் சிமிட்டி புருவத்தைத் தூக்கிக் கேட்டவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

“ஆஹா, அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லை சார்…”

“பாரதி, எதுக்கு இந்த சார், மோர் எல்லாம்… டியூட்டி டைம்ல மட்டும் தான் நான் உங்களுக்கு சீனியர், மத்த நேரத்துல நல்ல பிரண்ட்ஸா இருப்போமே… எனக்கும் ஒரு அழகான கேர்ள் பிரண்டு இருக்கான்னு சொல்லுறது பெருமை தானே…”

“ஹாஹா… நீங்க ரொம்ப வேடிக்கையாப் பேசறீங்க சார், எப்பவுமே இப்படிதான் பேசுவிங்களா…?”

“அது நாம பேசற ஆளைப் பொறுத்துதானே பேச்சு வரும், என்னை கெளதம்னே கூப்பிடுங்களேன் ப்ளீஸ்…”

“ம்ம்… ஓகே கெளதம்…” என்றவள் சாப்பிட்டு எழுந்தாள்.

“உங்களைப் பத்தி எதுவும் சொல்லலையே…”

“என்னைப் பத்தி சொல்லிக்க பெருசா எதுவுமில்லை… இப்போதைக்கு சிங்கிள், வீட்டுல அன்பான அம்மா… நாளையைப் பத்தி பெரிய எதிர்பார்ப்பில்லாம லைப் ஸ்மூத்தா சந்தோஷமா மூவ் ஆகிட்டு இருக்கு…”

“ம்ம்… இங்க ஜாயின் பண்ணி எத்தன வருஷம் ஆச்சு…?”

“நாலு வருஷம் ஆச்சு… இப்ப மார்கெட்டிங் அசிஸ்டன்ட் மானேஜர், மானேஜர் பிரமோஷன்க்கு வெயிட்டிங்… நம்ம மானேஜர் டூ டேஸ் லீவ்… சோ, நான்தான் இன்சார்ஜ்…”

“ம்ம்… நம்ம எம்டி மேடம் இன்னைக்கு ஆபீஸ் வரலியா…? அவங்களைப் பார்க்கலியே…”

“வந்தாங்க, நீங்க தான் பைல்ல மூழ்கி இருந்திங்களே, கவனிச்சிருக்க மாட்டீங்க… எம் டி சார் மெயின் பிராஞ்ச் மட்டும் தான் பார்த்துக்கறார், மேடம் தான் எல்லா யூனிட்டுக்கும் டெய்லி போயி பார்த்துப்பாங்க…”

Advertisement