Advertisement

அத்தியாயம் – 10

நல்ல உறக்கத்தில் இருந்த அஷ்டலட்சுமி சட்டென்று ஏதோ சத்தம் கேட்கவும் கண் விழித்தார். சுவரில் இருந்த கடிகாரத்தில் சின்ன முள் பனிரெண்டை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்க கண்ணைத் தேய்த்துக் கொண்டு பார்த்தார்.

அறையின் ஓரமாய் இருந்த மேஜையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, மூக்குக் கண்ணாடியுடன் அதன் முன்னில் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணன், குனிந்து கையிலிருந்து கீழே விழுந்த பேனாவை எடுத்தார்.

“என்னங்க… மணி பன்னெண்டாச்சு, இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க…?” கேட்டபடி எழுந்து அமர்ந்தவர் அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையிட்டுக் கொண்டார்.

“அது… சும்மா ஒரு கணக்கு போட்டுப் பார்த்தேன்…”

“அப்படி என்ன…? இந்த நட்டநடு ராத்திரியில முக்கியமான கணக்கு பார்த்துட்டு இருக்கீங்க…”

“நம்ம சக்தி கல்யாண விஷயமாதான் லட்சுமி… கல்யாண செலவுக்கு மொத்தமா எவ்ளோ ஆகும்னு பார்த்தேன்…”

“இங்க பாருங்க, கடனெல்லாம் வாங்காம நம்ம கைக்கு அடக்கமா என்ன செய்ய முடியுமோ, அதை செய்ங்க…”

“நீ சொல்லறது சரிதான், ஆனா மண்டபம், துணி, நகை, சீருன்னு எப்படியும் அஞ்சு லட்சமாச்சும் வேணுமே…” கணவன் சொன்னதும் அமைதியாய் யோசித்த அஷ்டலட்சுமி, பிறகு கேட்டார்.

“சீட்டு பணம் எவ்ளோ கிடைக்கும்…?”

“ரெண்டு லட்சம்… பாக்கி பணத்துக்கு என்ன செய்யறது…?”

“இருங்க, மண்டபம் எல்லாம் பார்க்காம சிம்பிளா கல்யாணத்தை நடத்துற வழியைப் பாருங்க… நெருங்கின  சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டுக்கலாம்… கோவில்ல வச்சு கல்யாணம், ஹோட்டல்ல சாப்பாடு… பத்து பவன் நகை போடலாம்… தேவிகாவோட தாலிக்கொடி ரெண்டு பொண்ணுகளுக்கும் கொடுக்கணும்னு வச்சிருக்கா… அது பத்து பவன் தேறும்… இப்போதைக்கு பெரியவளுக்கு அதை எடுத்துட்டு சின்னவளுக்கு அப்புறம் செய்துக்கலாம்… மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின், கட்டில் பீரோ வாங்கிக் கொடுத்துடலாம்… நமக்கு இவ்ளோ தான் செய்ய முடியும்னு அந்தப் பையனுக்கும் தெரியாதா என்ன…? வேற சீர் எதுவும் கேட்காம அவன் அம்மா வாயை அடைக்க வேண்டியது அவன் சாமர்த்தியம்…” அடுக்கிக் கொண்டே போன மனைவியை ஆச்சர்யமாய் பார்த்தார் கோபால கிருஷ்ணன்.

“லட்சுமி… என்ன ஆச்சு உனக்கு, சட்டுன்னு இப்படி ஒரு மாற்றம் உன்கிட்ட…” மனைவியிடம் கேட்டே விட்டார்.

சட்டென்று முகம் மாறிய லட்சுமி சோகமாய் சிரித்தார்.

“இவ்வளவு நாளா உங்க கண்ணுக்கும் நான் அரக்கியா தான் தெரிஞ்சிருக்கேன் இல்ல… நான் நல்லவ கிடையாதுதான், அதுக்காக கெட்டவ இல்லை… கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் எல்லாம் இப்படி அவங்களுக்காக செலவாகுதேன்னு அங்கலாப்பு படறவ தான்… அதுக்காக உங்க தங்கச்சி குடும்பத்தை அம்போன்னு விடற அளவுக்கு மனசாட்சி இல்லாதவ கிடையாது… நான் அவங்களை, அதட்டுவேன், அதிகாரம் பண்ணுவேன்… அதெல்லாம் கூட நம்ம பொறுப்புல இருக்கிற பொண்ணுங்களை நல்லபடியா பார்த்துக்கணும்னு அக்கறைல தான்… எனக்குன்னு உங்களைத் தவிர யாரிருக்கா…? அன்னைக்கு நீங்க சொன்ன போல என் மனசு சரியில்லாதனால தான் நமக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாமப் போச்சோ என்னவோ, அப்புறம் யாருக்காக வாழணும்…” சொல்லும்போது அவர் கண்களில் நீர்ப்படலம்.

“லட்சுமி…”

“பரவால்ல, இத்தனை வருஷமா இல்லாம அன்னைக்கு நீங்க சுருக்குன்னு சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை யோசிக்க வச்சுது… கடவுள் நமக்குன்னு கையில கொடுத்த குழந்தைகளை கஷ்டப்படுத்திட்டு, அவங்களை நம்ம குழந்தைகளா நேசிக்கத் தெரியாததால தான், கடவுள் எனக்குன்னு குழந்தைகளைக் கொடுக்கல போலன்னு…”

“லட்சுமி, அன்னைக்கு கோபத்துல அப்படி சொல்லிட்டேன்… அது உன்னை இவ்ளோ தூரம் வருத்தப் படுத்தும்னு நினைக்கல மா…” வருத்தத்தோடு சொன்னார் கோபால்.

“எனக்கு எப்பவும் மத்தவங்களை அதிகாரம் பண்ணியே பழகிருச்சு… உங்க தங்கச்சி பொண்ணுங்க கிட்டயும் அப்படிதான் நடந்துப்பேன்… எப்பவும் எல்லாரும் என்னை கவனிக்கனும்னு ஒரு எண்ணம், அதை மாத்திக்க முடியாது… நம்மளை நம்பி இருக்கற பிள்ளைங்களை எப்படியாச்சும் கல்யாணம் பண்ணி அனுப்பத்தான வேணும்…”

“ம்ம்… நீ இப்படிப் புரிதலோட பேசறது எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு லட்சுமி…”

“அதுக்காக நான் அவங்களை அதட்டவோ, மிரட்டவோ செய்யாம இருக்க மாட்டேன்… அது என் சுபாவம், நீங்க  அதுக்கு ஒண்ணும் சொல்லக் கூடாது…”

“இல்லமா, நீ நீயாவே இரு… இவ்ளோ தூரம் அவங்களுக்காக நீ யோசிக்கிறதே எனக்கு பெரிய சந்தோசம்…”

“நமக்கு உங்க தங்கச்சியும், திலீபன் அண்ணாவும் எவ்வளவோ பண்ணிருக்காங்க… அதுக்கு நாமளும் இவ்ளோ தூரம் அவங்களைப் பார்த்துகிட்டோம்… ரெண்டு பேருக்கும் கல்யாணத்தையும் முடிச்சிட்டா நம்ம பொறுப்பு முடிஞ்சது… அப்புறம் நாம சம்பாதிக்கிறதை நமக்குன்னு கொஞ்சம் சேமிச்சு வைக்கணும், நமக்கும் வயசாகுது… ஓய்வு வேணும், மருத்துவத் தேவைகள் இருக்கும்ல…”

“ம்ம்… சரிம்மா, நீ சொல்லறது புரியுது…”

“நான் பாரதியை எப்பவும் கரிச்சுக் கொட்டறேன்னு நினைச்சுட்டு இருக்கீங்க… அது அப்படி இல்லை, அவ ரொம்ப தைரியமான பொண்ணு… மனசுக்கு சரின்னு தோணுறதை யோசிக்காமப் பண்ணுறவ… அதுக்காக, எல்லா விஷயத்துலயும் அப்படியே எடுத்தேன், கவிழ்த்தேன்னு பொண்ணுங்க இருக்கக் கூடாது… அதுக்குதான் அப்பப்ப அவளைத் தட்டி வைக்கிறேன், இதே சக்தியை நான் எதுவும் சொல்லறதில்லையே…” என நிறுத்தினார்.

“ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான்…”

“நீங்களும் சக்தியும் என் பேச்சுக்கு எதுவும் மறுத்து சொல்ல மாட்டிங்க, பாரதி மட்டும் தான் எல்லாத்துக்கும் ஏட்டிக்குப் போட்டியா பதில் சொல்லுவா… அதுக்காக அவளை நான் எப்படியோ போன்னு விட முடியுமா…? அவளுக்கு வேலை கிடைக்காது, ராசி இல்லைன்னு சொல்லுறதெல்லாம் அவ சோர்ந்து போயி உக்காராம அடுத்தடுத்து யோசிச்சு ஓடிட்டே இருக்கணும்னு தான்…”

“ஓ.. இதுல இப்படி ஒண்ணு இருக்கா…?” என்பது போல் கோபால் மனைவியை நோக்க, “அவளுக்கு வேலை கிடைச்சா அந்தப் பணத்தை நமக்கா செலவு பண்ணப் போறோம்… அவ கல்யாணத்துக்கு சீட்டுப் போட்டு எடுத்து வச்சுக்கங்க, அவளுக்கும் ரெண்டு மூணு வருஷத்துல கல்யாணத்துக்குப் பார்க்கணும்ல…”

“ம்ம்… நீ எப்பவும் முள்ளு போல அவளைக் குத்திட்டு இருக்கியேன்னு நான் தப்பா நினைச்சுட்டேன் லட்சுமி… நீ பலாப்பழம் மேல இருக்கிற முள்ளுன்னு இப்பதான் புரியுது…”

“போங்க கிண்டல் பண்ணிட்டு…” என்ற மனைவியிடம், “மனசு ரொம்ப நிறைவாருக்கு…” என்றார் கோபால கிருஷ்ணன்.

“சரி, டைம் ஆச்சு… தூங்கலாம்…” சொன்னவர் படுக்கையில் சாய, கோபால கிருஷ்ணனும் கட்டிலுக்கு வந்தார்.

அடுத்த நாள் காலையில் பாரதி சத்யனுக்கு அழைத்து வேலை கிடைத்ததையும், கல்யாணத்தைப் பற்றி வீட்டில் பேசியதையும் சொல்லி சக்தியிடம் போனைக் கொடுத்தாள்.

“அக்கா, இந்தா… அத்தான் லைன்ல இருக்கார் பேசு…”

சந்தோஷத்துடன் சக்தி போனை வாங்கிக் கொள்ள அவர்களுக்குத் தனிமை கொடுத்து அறைக்கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாள் பாரதி.

வெகு நாட்களுக்குப் பிறகு பேசுவதால் சக்திப்ரியா வார்த்தை வராமல் மௌனமாய் போனை காதில் வைத்து நின்றாள்.

“ப்ரியா…” சத்யனின் குரலைக் கேட்டதும் அவள் கண்கள் சந்தோஷத்தில் பனித்தது.

“அ…அத்தான்…”

“எப்படிம்மா இருக்க… நான் போன் பண்ணலன்னு கோபமா…?”

“ப்ச்… இல்ல…”

“இல்லன்னு சொன்னாலும் கண்டிப்பா கோபம் இருக்கும்னு எனக்குத் தெரியும்… என்ன பண்ணறது..? நான் போன் பேசிட்டு வைக்கும்போது, உங்களை எப்பப் பார்ப்பேன், அடுத்து எப்ப பேசுவேன்னு கேட்டு நீ கண் கலங்கற… அந்தப் பிரிவை என்னால தாங்கிக்க முடியல…”

“ம்ம்…”

“அதான், நம்ம கல்யாணத்தைப் பத்தி பெரியவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்னு அமைதியா இருந்தேன்…”

“ம்ம்… நீங்க எப்படி இருக்கீங்க…?”

“நல்லாருக்கேன் மா…  இனி இன்னும் நல்லாருப்பேன்…”

“ஏன்…?”

“அதான் வீட்டுல நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசத் தொடங்கிட்டாங்களே, சீக்கிரமே நீ என்கிட்ட வந்திடுவியே…”

“ம்ம்… இருந்தாலும் எனக்கு அம்மாவை இப்படி விட்டுட்டு கல்யாணம் பண்ணி சென்னை வரதுக்கு கொஞ்சம் தயக்கமாவே இருக்கு அத்தான்…”

“என்ன பண்ணலாம் சொல்லு, என் அம்மாவுக்கு உன் அம்மாவை நிரந்தரமா வீட்டுல வச்சுக்க விருப்பமில்லை…”

“அத்தான், பாரதிக்கு சென்னைல வேலை கிடைச்சிருச்சுல்ல, அவ ஒரு யோசனை சொன்னா…” என்ற சக்தி பாரதி சொன்ன விஷயத்தை சொல்ல, “அட, இது சரியா வரும் போலருக்கே, கண்டிப்பா யோசிப்போம்…” என்றான் சத்யன்.

“ம்ம்… அப்புறம், அத்தை கல்யாணத்துக்கு நிறைய சீர், நகை எல்லாம் எதிர்பார்ப்பாங்க… எங்க மாமாவால அவ்ளோ எல்லாம் செய்ய முடியாதுன்னு உங்களுக்கே தெரியும்…”

“ப்ரியா… இதெல்லாம் நான் யோசிக்காம இல்லை… நீ சீர்வரிசையோட வரலேன்னாலும் நம்ம கல்யாணம் நடக்கும், ஆனா, என் அம்மா உன்னை தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க… அதான் நான் ஒரு யோசனை பண்ணி வச்சிருக்கேன்…”

“என்ன யோசனை, அத்தான்…?”

“என்னோட பிஎப் அமவுண்டுல இருந்து ரெண்டு லட்சம் லோன் போட்டு எடுத்துத் தரேன்… அதையும் சேர்த்து உன் மாமாகிட்ட நல்லபடியா சீர் செய்ய சொல்லிடலாம்…”

“அச்சோ, அது தப்பில்லையா அத்தான்… அத்தைக்குத் தெரிஞ்சா தப்பா நினைக்க மாட்டாங்களா…?”

“இது தப்புன்னா, சீர்வரிசை கேக்கறதும் தப்பு தானே ப்ரியா… எல்லாமே நமக்கு தானே வரப்போகுது, ஒரு நல்ல விஷயத்துக்காக அம்மாகிட்ட சொல்லாம இதை செய்யறது தப்பில்லன்னு நான் நினைக்கிறேன்…”

“ஹூம்… நீங்க சொல்லறது சரின்னு தான் தோணுது… ஆனாலும் இதைப்பத்தி மாமாகிட்ட பேசிக்கங்க, அவர் இதுக்கு சம்மதிப்பாரா தெரியலை…” என்றாள் சக்திப்ரியா.

“ஹூம்… சீக்கிரமே அம்மாவை அழைச்சிட்டு உன்னைப் பார்க்க வரேன், எல்லாம் நல்லபடியா பேசி முடிச்சுடலாம்…”

“சரி அத்தான், வச்சிடட்டுமா…?”

“ப்ச்… இவ்ளோ நாள் தான் பட்டும் படாம பேசிட்டு ஓடிருவ… இப்பதான் நமக்கு கல்யாணப் பேச்சை எடுத்துட்டாங்களே, இனியும் எட்டி நின்னு பேசுவியா…?”

அவன் கேள்வியில் நாணியவள், “வேற என்ன பண்ணனுமாம்…” என்றாள் வெட்கத்துடன்.

“சில கொடுக்கல், வாங்கல் எல்லாம் இருக்கு… அதை நேர்ல வந்து சொல்லறேன், அப்ப மறுக்க மாட்ட தானே…”

“ஹூம்… முதல்ல வாங்க, அப்புறம் வாங்கலாம்…” சொன்னவள் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள். அன்று மாலை கோபால கிருஷ்ணன் திலகாவுக்கு போன் செய்து பேச அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையே நேரில் வந்து பேசுவதாகக் கூறினார்.

சொன்னதுபோல் ஞாயிறு காலை 11 மணிக்கெல்லாம் அன்னையுடன் வந்துவிட்டான் சத்யன். கறுப்பாய் களையாய் இருந்தான். இரு வீட்டாரும் கலந்து பேசும் முன் சத்யன், சக்தியின் மாமாவிடம் தனிமையில் சந்தித்து ரெண்டு லட்சம் தான் தருவதாகக் கூற, முதலில் கோபால் மறுத்தாலும் அவன் சொன்னது சரியென்பதால் ஒத்துக் கொண்டார்.

திலகா எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பதினைந்து பவுன் நகை, மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், கோவிலில் சிம்பிளாய் கல்யாணம், பக்கத்து ஹோட்டலில் சாப்பாடு என்று தீர்மானித்துக் கொண்டனர். நிச்சயம் இவர்கள் இரு குடும்பம் மட்டும் சிம்பிளாய் நல்லநாள் பார்த்து வைத்துக் கொள்ளவும் தீர்மானித்தனர்.

“என் மகனுக்கு பெரிய இடத்துல இருந்து நிறைய சீர்வரிசையோட நல்ல சம்மந்தம் வந்துச்சு… ப்ச்… அண்ணன் இல்லன்னாலும் அவருக்கு கொடுத்த வாக்கைப் காப்பாத்தணும்னு நினைச்சு தான் கொஞ்சம் நகை, நட்டு குறைஞ்சாலும் அவர் பொண்ணையே மருமகளாக்க நினைச்சு நானும், என் புள்ளையும் காத்திருந்தோம்…”

திலகா பெருந்தன்மையாய் சக்தியை மகனுக்கு பேசி முடித்தது போல் அண்ணி தேவிகாவிடம் பெருமையடித்துக் கொள்ள நெஞ்சத்தில் கை வைத்து, “ரொம்ப சந்தோஷம் திலகா…” என்றார் கையை அன்போடு பற்றிக்கொண்டு. கல்யாணம் முடிவானதில் எல்லாருக்கும் சந்தோஷம்.

அடுத்தநாள் ஒண்ணாம் தேதி என்பதால் பாரதியும் அவர்களுடனே சென்னை கிளம்ப நினைத்திருந்தாள். மதிய உணவு முடிந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க வான்மதியிடம் சொல்லிவிட்டு வரச் சென்றாள் பாரதி.

“பாரு… வாடி, உன் அத்தான் வீட்டுல இருந்து வந்தாங்களா, அக்காவுக்கு பேசி முடிச்சுட்டாங்களா…?”

“ம்ம்… ஆமா வானு, எல்லாம் பேசியாச்சு, சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல கிளம்ப பிளான், உன்கிட்ட சொல்லிட்டுப் போக தான் வந்தேன்… அம்மா, அப்பா எங்கே…””

“மாடில இருக்காங்க, நீ உக்காரு… கல்பனா உனக்காக ஒரு ஹாஸ்டல்ல பார்த்து பேசி வச்சிருக்கேன்னு சொன்னாளே, நீ எப்ப போயி பார்க்கப் போற…?”

“நான் இவங்களோட சென்னை போயிட்டு இன்னைக்கே ஹாஸ்டலுக்குப் போயிடலாம்னு நினைக்கிறேன் வானு…”

“ம்ம்… அதும் நல்லதுதான், நாளைக்கு அங்கிருந்து ஆபீஸ் போகவும் வசதியா இருக்கும்…”

“ஆமா… உனக்கும் அந்த ஆபீஸ்ல வேலை கிடைச்சா நல்லாருக்கும், வேகன்சி இருந்தா சொல்லறேன் வந்திடு…”

“ஐயோ சாமி, அந்த ராட்சஸி இருக்கிற ஆபீசுக்கா… எனக்கு வேலையே வேண்டாம்… ஆளை விடு, அப்புறம் நீயும் கொஞ்சம் கவனமா இருந்துக்க, அந்த கங்காவை என்னால முழுசா நம்ப முடியல…” என்றாள் வான்மதி.

“ம்ம்… கண்ணுக்குத் தெரியாத பேயை வேணும்னா பயப்படலாம், இவங்க கண்ணுக்குத் தெரியற மனுஷிதானே… பார்த்துக்கலாம்…” என சிரித்தாள் பாரதி.

“ஹூம், பாரு அவங்க விஷயத்துல அசால்ட்டா மட்டும் இருக்காதே…” என்றவள், “இப்படி வா…” என்று தோழியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“அந்த ரிஷி அப்புறம் உனக்கு கால் பண்ணானா…?” குரலைத் தாழ்த்திக் கொண்டு மெல்ல கேட்டாள் வான்மதி.

“ம்ம்… பண்ணான், நான் எடுக்கல…” சொன்ன பாரதி தயக்கமாய் குனிந்து கொண்டாள்.

“ஓ… மறுபடி பண்ணானா, அந்த ரிஷிக்கு என்னமோ தன்னை அந்நியன் ரெமோன்னு நினைப்பு போல… பாக்குற இடத்துல எல்லாம் உன்கிட்ட லவ் யூ, லவ் யூன்னு சொல்லிட்டுத் திரிஞ்சவன் போன் பண்ணியும் சொல்லுறான்… ரொம்ப தான் துணிச்சல்…! இவன்லாம் எப்படித்தான் கல்பனா உட்பிக்கு பிரண்டா இருக்கானோ… நீ பண்ணதும் சரிதான், இனி அவன் கால் பண்ணா எடுக்காத, அவாய்டு பண்ணிடு…”

“ம்ம்… சரிடி…”

“தனியா வேற இருக்கப் போற… அவனை எங்காச்சும் பார்த்தாலும் பேச இடம் கொடுக்காம கண்டுக்காம போயிடு, ஏதாச்சும் பிரச்சனை பண்ணினா ரதீஷ் அண்ணாகிட்ட சொல்லி கண்டிக்க சொல்லு… ”

“சரி… நீ கவலைப்படாத, நான் பார்த்துக்கறேன்…”

“பாரு… தனியா இருக்க பயமில்ல தானே…” தோழியின் கனிவான குரலில் மனம் கலங்க அவளது கையைப் பற்றிக் கொண்டவள், “நீயும் என்னோட இருந்தா இன்னும் தைரியமா இருப்பேன் வானு…” என்றாள் கண்கள் கலங்க.

அவள் கையில் தட்டிக் கொடுத்த வான்மதி, “கவலைப்படாத பாரு, ரதீஷ் அண்ணாகிட்ட சொல்லி சீக்கிரமே எனக்கும் அங்க ஒரு வேலையை ரெடி பண்ணி தரேன்னு கல்பனா சொல்லிருக்கா… அப்புறம், நானும் உன்கிட்ட வந்துடுவேன்…” என்றாள் சமாதானத்துடன். அதற்குள் வான்மதியின் அன்னை கௌசல்யாவும், தந்தையும் வர அவர்களிடம் ஆசி வாங்கி, விடை பெற்று வீட்டுக்கு வந்தவள் அங்கேயும் அன்னை, அக்கா, மாமா, அத்தையிடம் விடை பெற்று சத்யன், திலகாவுடன் அவர்கள் வந்த காரில் சென்னை கிளம்பினாள்.

உறக்கத்தின் நடுவே

உன் பேர் சொல்லும்

பொல்லாத நோய் ஒன்று

உள்ளூர நான் கொண்டேன்…

சட்டென விழுந்த மழையாய்

நீ காதல் சொன்ன நொடியில்

மனம் கரைந்தே போகிறதே…

Advertisement