Advertisement

ஹாலில் காலை நீட்டி அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் வான்மதியின் அன்னை கௌசல்யா.

இவர்களைக் கண்டதும் புன்னகைத்து, “வாங்கடி, டைம் ஆச்சே, உங்களைக் காணமேன்னு பார்த்தேன்…” என்றார்.

“ம்ம்… கிளம்ப கொஞ்சம் லேட்டாகிருச்சு, அப்பா எங்கே மா…” என்றாள் வான்மதி.

“கடைக்குப் போயி பழம் வாங்கிட்டு வரேன்னு போனார், இப்ப வந்திருவார்… நீ உக்காரு பாரதி, ரெண்டு பேரும் காபி குடிக்கறீங்களா…?”

“ம்ம்… உங்க காபி வேண்டாம்னு சொல்ல யாருக்காச்சும் மனசு வருமாம்மா, அதுக்குதான் வந்தேன்…” என்றவள் சோபாவில் அமர கௌசல்யா புன்னகையுடன் எழுந்தார்.

“உன் அக்கா சக்தி கொஞ்சம் முன்னாடி தான் நீ போன் பண்ணியான்னு இங்க வந்து கேட்டுட்டுப் போனா… உன் அத்தை கச்சேரியை ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறேன்…”

“ம்ம்… பாவம் அக்கா, அந்த அரக்கியை ச்சே, அத்தையை எப்படி சமாளிக்கிறாளோ…”

“ஹாஹா, அதெல்லாம் சக்தி சமாளிச்சுப்பா… நீங்க இண்டர்வியூ எப்படிப் பண்ணீங்க…?” அடுக்களையில் இருந்தே அவர் கேட்க,

“எங்கேம்மா, வழக்கம் போல ஊத்திகிச்சு… மேனேஜ்மென்ட் முன்னமே ஆளுங்களை செலக்ட் பண்ணி வச்சுட்டு தான் இண்டர்வியூ ஆபர் பண்ணுறாங்க… இந்த வேலையும் கோவிந்தா தான்…” என்றாள் சலிப்புடன்.

“சரி, உங்களுக்குன்னு எழுதினது வேற யாருக்கும் கிடைக்கப் போறதில்லை, கவலைப்படாத… இந்தா, காபியைக் குடி…” சூடான பில்டர் காபியில் ஆவி பறக்க டம்ளரை நீட்டினார்.

அதை நுகர்ந்தவள், “வாவ்… என்ன ஒரு ஸ்மெல், உங்க காபிக்கு நான் அடிமை மா…” என்றாள், கண்ணை மூடி நாசிக்குள் காபியின் மணத்தை உள்ளிழுத்துக் கொண்டு.

அதற்குள் உடை மாற்றி வந்த வான்மதி, “ஏண்டி, உன் வீட்டுலயும் பில்டர் காபி போடலாம்ல… அதென்ன, உலகத்துல கிடைக்காத அவ்ளோ பெரிய அதிசயமா…” கேட்டுக் கொண்டே அன்னை நீட்டிய காபியை வாங்கிக் கொண்டு தோழியின் அருகே அமர்ந்தாள்.

“ஹூக்கும்… அத்தை எங்களுக்கு காபிங்கற பேருல கழனித் தண்ணியைக் கொடுக்கிறதே பெருசு… இதுல பில்டர் காபிக்கு எங்கே போக…” சொல்லிக் கொண்ட டம்ப்ளரில் இருந்த இறுதிச் சொட்டு காபி வரை உறிஞ்சியவள் அடுக்களைக்கு சென்று கழுவி வைத்துவிட்டு வந்தாள்.

“கௌசி அம்மாவோட காபியைக் குடிச்சதும் எட்டிப் பார்த்த தலைவலி கூட ஓடிப் போயிருச்சு, தேங்க்ஸ்மா…” என்றவள்,

“சரிடி, நான் கிளம்பட்டுமா…?” என்றாள் தோழியிடம்.

“இரு பாரதி… சப்பாத்தி சாப்பிட்டுப் போகலாம்…” கௌசல்யா சொல்ல வேகமாய் தலையாட்டி மறுத்தாள்.

“அச்சோ, அதெல்லாம் வேணாம் மா, ஆல்ரெடி என்னைக் காணோம்னு அக்கா திட்டு வாங்கிட்டு இருப்பா… காபிக்கு மட்டும் தான் நான் அடிமை, சப்பாத்தி எல்லாம் என்னை அசைக்க முடியாது…” சிரிப்புடன் சொன்னவளை நோக்கிப் புன்னகைத்தவர், “சரிம்மா… கிளம்பு, டைம் ஆச்சு…” என்றார்.

அவளை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வான்மதி உள்ளே செல்ல அதே தெருவின் இறுதியில் இருந்த வீட்டை நோக்கி வேகமாய் எட்டெடுத்து வைத்தாள் பாரதி.

முன்னிலேயே தங்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த சக்திபிரியா, அவளைக் கண்டதும் நிம்மதியுடன் மலர்ந்தாள்.

“பாரதி… உன்னைக் காணோம்னு தவிச்சிட்டிருந்தேன்…”

“ஏன்க்கா, அத்தை ரொம்ப சத்தம் போடுதா…?”

“ப்ச்… அதுக்காக இல்லடி, இருட்டிடுச்சு… இன்னும் உன்னைக் காணலேன்னா மனசு தவிக்காதா…? அத்தையை சமாளிச்சாலும் அடிக்கடி நீ வந்துட்டியான்னு கேக்கற அம்மாவை என்னால சமாளிக்க முடியலை…”

“ம்ம்… எனக்கு வேலை கிடைச்சதும் முதல்ல உனக்கு ஒரு மொபைல் வாங்கிக் கொடுக்கணும்…”

“எனக்கு எதுக்குடி..? மொபைல் எல்லாம்… வர்றதுக்கு லேட் ஆனா லான்ட்லைன்க்கு ஒரு போன் பண்ணி சொல்ல வேண்டியது தான…”

“போன் பண்ணா அத்தை தான் எடுக்கும்… எடுத்து ஆயிரத்தெட்டு குத்தம் சொல்லிட்டு போனை உன்கிட்ட கொடுக்காது, அதுக்கு எதுக்கு போன் பண்ணனும்…” சொன்னவளின் பார்வை வீட்டுக்குள் அத்தையைத் தேடியது.

பேச்சு சத்தம் கேட்டு ரூமிலிருந்து வெளியே வந்த அத்தை அஷ்டலட்சுமியின் முகம் பாரதியைக் கண்டதும் அஷ்டகோணலாய் மாறியது.

“வாடி, வயசுப்புள்ளயா லட்சணமா நேரம் காலத்தோட வீட்டுக்கு வரியா… விடியக்காலை இன்டர்வியூன்னு சென்னைக்கு கிளம்பிப் போனவ, இருட்டின பிறகு வீட்டுக்கு வர்ற… பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க…?” குரலை உயர்த்த அமைதியாய் பார்த்தாள் பாரதி.

“அத்த… இப்ப நான் லேட்டா வந்தது உங்களுக்குப் பிரச்சனையா…? இல்ல பார்க்கிறவங்க நினைக்கறது பிரச்சனையா…? யாரு நினைக்கிறாங்கன்னு சொல்லுங்க, நான் வேணும்னா விளக்கம் கொடுத்துட்டு வரேன்…” என்றதும் அஷ்டலட்சுமி கடுப்புடன் அவளைப் பார்க்க சக்தி தங்கையின் கையில் சுரண்டி, “சும்மா இருடி…” கெஞ்சினாள்.

“என்னடி வாய் நீளுது… இன்னும் வேலைக்கே போகல, அதுக்குள்ள இவ்ளோ பேசத் தொடங்கிட்ட… இதுக்கு தான் உன்னை இண்டர்வியூக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லறேன்… எங்க..? அந்த மனுஷன் கேட்டாத் தானே… தங்கச்சி பொண்ணுங்கன்னு தலை மேல தூக்கி வச்சுட்டு ஆட வேண்டியது… இத்தன நாள் சோறு போட்ட நன்றி கொஞ்சமாச்சும் இருக்கா, எப்படித் திருப்பிக் கேள்வி கேக்குது பாரு…” உதட்டை சுளித்து சொன்னவர்,

“இன்னைக்கு வரட்டும் அந்த மனுஷன்… சக்தி, நீ எதுக்கு இங்க வேடிக்கை பார்த்துட்டு நிக்கற, போயி நைட்டுக்கு டிபன் செய்யற வேலையைப் பாரு… என்னமோ, உன் தங்கச்சி ஒலிம்பிக்கில ஜெயிச்சு தங்க மெடல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவ போல வாசல்ல வரவேற்க நின்னுட்டு இருக்க…” அவளையும் விரட்ட,

“இதோ போறேன் அத்தை…” என்றவள் அடுக்களைக்கு நகர, அவளுடனே செல்ல முயன்ற பாரதியை நிறுத்தினார்.

“ஏய் நில்லுடி, நீ எங்க ஓடற… இண்டர்வியூக்கு போனியே என்னாச்சு… உன்னைப் பார்த்ததுமே கம்பெனிக்காரன் அடிச்சு துரத்தி இருப்பானே…” தேளாய் வார்த்தைகளால் கொட்ட கடுப்புடன் நோக்கினாள் பாரதிப்பிரியா.

“அத்தை… நாங்க உங்களை என்ன பண்ணினோம், எதுக்கு எப்பவும் இப்படி எங்களை கரிச்சு கொட்டறீங்க… என் அக்கா இந்த வீட்டுல சம்பளம் இல்லாத வேலைக்காரியா எல்லா வேலையும் செய்துட்டு தானே இருக்கா… இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க, எப்படியாச்சும் எனக்கு ஒரு வேலையைத் தேடிட்டு நாங்க தனியா போயிடறோம்… அப்புறம் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது…”

“ஹூம்… போதும்டி, ரொம்பதான் பேசாத… இதையே தான் நீ படிச்சு முடிச்ச நாள் தொட்டு சொல்லிட்டு இருக்க.. உங்க மூணு பேரையும் இத்தன வருஷம் வீட்டுல வச்சு பார்த்துகிட்டதுக்கு எனக்கு கொடுமைக்காரி பட்டம் எல்லாம் கொடுக்காத… உன் மாமா நீங்க தனியா போக சம்மதிக்க மாட்டார்னு தானே ஆட்டம் போடற, ஏன் லேட்டானா நான் உன்னைக் கேள்வி கேட்கக் கூடாதா…?” என்றார்.

“அன்போட எத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க அத்தை, பதில் கிடைக்கும்… அடிமையா நினைச்சிடாதிங்க…” சொன்னவள் அன்னையைத் தேடி அறைக்கு செல்ல ஒரு கட்டிலில் கண்கள் கண்ணீரில் நிறைய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தார் தேவிகா.

ஒரு கையும், காலும் பக்கவாதத்தில் செயல்படாமல் போக வாயும் சற்று கோணிக் கொண்டு சரியாய் பேச முடியாமல் கிடந்தார். மகளைக் கண்டதும் ஒரு கையைத் தூக்க அன்போடு அதைப் பற்றிக் கொண்டாள் பாரதி.

“அம்மா… என்னைக் காணம்னு பயந்துட்டீங்களா…?” எனவும் ஆம் என்பது போல் தலையாட்டினார்.

“கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் மா, வான்மதி வீட்டுல காபி குடிச்சிட்டு வந்தேன்…”

“போன காரியம் என்னாயிற்று…?” சைகையில் கேட்க,

“வழக்கம் போல ஊத்திகிச்சு மா…” பாரதி சொல்லவும் ஆயாசத்துடன் கண்ணை மூடிக் கொண்டார்.

“கவலைப்படாதீங்க மா… சீக்கிரமே எனக்கு வேலை கிடைச்சதும் நம்ம பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்…” அவள் ஆறுதலாய் சொல்ல கண்ணைத் திறந்தவர்,

“அத்தை என்ன சொன்னாள்…” என்பது போல் கையை விரித்துக் கேட்க, அலட்சியமாய் தலையைக் குலுக்கினாள் பாரதி பிரியா.

“அவங்களுக்கு அஷ்டலட்சுமின்னு பேரு வச்சதுக்குப் பதிலா அடாவடி லட்சுமின்னு பேரு வச்சிருக்கணும் மா… ரொம்ப பேசறாங்க, நீங்க அதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க, நம்ம மாமாக்கு எவ்வளவோ செய்திருக்கோம், அவர் இப்ப நமக்கு செய்யறார்… அத்தை என்னமோ பேசட்டும், மாமா நமக்கு சப்போர்ட்டா இருக்காரே அது போதும்…” என்றாள்.

“அவ எதுவும் சொன்னாலும் பதில் பேசாதே…” என்று தேவிகா கூற,

“அதுக்காக என்னால யாருகிட்டயும் அடிமையா இருக்க முடியாது மா…” என்றவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

ஒடுக்கப்படுகின்ற

இடத்தில் அடங்காமல்

இருக்கும்போது

தன்மானம் தலைக்கனமாய்

திரிந்து விடுகிறது…

Advertisement