Advertisement

 அத்தியாயம் – 1

 

வெற்று வெள்ளைக்

காகிதம் நான்… அதில்

உன்னை வரைந்து

வண்ணமாக்கிய

வண்ணத்தூரிகை நீ…

“பாரதி, என்ன இருந்தாலும் நீ கவிதாவை எல்லார் முன்னாடியும் அப்படி அடிச்சது தப்புதான்…” தோழியைக் கடிந்து கொண்டே காலியாய் இருந்த மேஜையின் முன்னிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் வான்மதி. மதியம் முடிந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரமாதலால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்த பாரதியின் முகத்தில் இன்னும் கோபத்தின் சிவப்பு மிச்சமிருந்தது. கண்களும், உதடும் லேசாய் சிவந்து கிடந்தன.

“என்ன, நான் செய்ததுல என்ன தப்புன்னு சொல்லற… பாவம்..! காலுக்கு முடியாத பொண்ணு நடக்கும்போது தவறி விழப் போகவும், ஒரு பாலன்சுக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த கவிதாவைப் பிடிச்சிருக்கா… அதுல அவ கைல உள்ள மொபைல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சு, அதுக்குப் போயி அந்த சின்னப் பொண்ணை அப்படி அறையலாமா…?” இப்போதும் கோபமாய் வெளிவந்தது பாரதியின் வார்த்தைகள். ஆவேசமாய் பேசியதில் லேசாய் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

“நீ சொல்லுறது சரிதான், கவிதா செய்தது சரின்னு நான் சொல்ல வரலை, மொபைல் உடைஞ்சு போன கோபத்துல ஆத்திரப்பட்டு அந்த ஊனமான பொண்ணை அடிச்சுட்டா… அதுக்காக நம்ம பிரண்டுன்னு கூடப் பார்க்காம கவிதாவை நீ எல்லார் முன்னாடியும் அறையலாமா…?” இப்போதும் வான்மதி கவிதாவுக்கு சப்போர்ட் செய்து பேச மேலும் கோபம் ஏறியது பாரதிக்கு.

“ஏய், என்ன சும்மா ஊனம், ஊனம்னு பேசிட்டு இருக்க, நிஜத்துல ஊனம் அந்த சின்னப் பொண்ணுக்கு இல்ல… கை, கால் எல்லாம் சரியா இருக்கிற சிலருக்கு தான் மனசு ஊனமா இருக்கு… உடம்புல இருக்கிற ஊனம் தப்பில்லை, மனசு ஊனமாப் போறது தான் தப்பு… அவங்களும் மனுஷங்கதான்னு நினைக்காம கிண்டல் பண்ணுறது, ஏளனமாப் பார்த்து சிரிக்கிறது, மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிறது இதெல்லாம் தான் மிகப் பெரிய ஊனம்…” படபடவென்று பொரிந்தவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியாமல் வான்மதி திகைத்து நின்றாள்.

கோபத்தை அடக்க முடியாமல் பாரதி கை விரல்களை திறந்து மூடிக் கொண்டிருக்க வான்மதி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

சட்டென்று அருகே நிழலாடவும் நிமிர்ந்த பாரதி, “ரெண்டு காபி…” என சொல்லப் போனவள் அங்கே யாரோ ஒருவன் தலை கலைந்து, விலை உயர்ந்த கசங்கிய சட்டையோடு நிற்கவும், என்னவென்பது போல் பார்த்தாள்.

அளவான உயரமும், அழகான முகமுமாய் நின்றவனின் கண்கள் மதுவருந்தியதால் சிவந்திருந்தது.

“ஹலோ, எக்ஸ்யூஸ் மீ…” என்றவன் வாயிலிருந்து குழறலான வார்த்தைகளோடு வெளிப்பட்ட மதுவின் வாடை இருவரையும் முகம் சுளிக்கச் செய்ய அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சியடைய செய்தது.

“உடம்புல இருக்கிற ஊனம் பெருசில்லை, மனசுலதான் ஊனம் இருக்கக் கூடாதுன்னு பேசினியே, ஐ லைக் இட்… நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா…” முதன்முதலாய் காணும் யாரோ ஒருவன் சட்டென்று அப்படிக் கேட்கவும் பாரதி திகைத்துப் போய் அதிர்ச்சியுடன் நிற்க, அதற்குள் வேறு ஒருவன் வேகமாய் அவர்களிடம் வந்தான்.

“டேய் ரிஷி, நான் வரதுக்குள்ள இங்க என்ன பண்ணிட்டிருக்க… ச..சாரி மேடம், என் பிரண்டுதான்… கொஞ்சம் டிரிங்க்ஸ் பண்ணிருக்கான், அவன் பேசினதை தப்பா எடுத்துக்காதிங்க…” சொல்லிக் கொண்டே அவனை இழுத்துக் கொண்டு நகர கையை உதறினான் ரிஷி.

“விடுடா, என்னால யார் தயவும் இல்லாம நடக்க முடியும்…” என்றவன் ஒரு காலை கொஞ்சம் சாய்த்து விந்திக் கொண்டே நடந்தான். பார்க்க அழகனாய் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தவனின் ஒரு கால் மட்டும் சிறிது வளர்ச்சி குறைந்து போயிருந்தது.

“பெருசா ஊனம்னு லெக்சர் கொடுக்க வந்துட்டா, வாய் கிழிய எல்லாராலும்தான் இப்படிப் பேச முடியும்… ஆனா தன் வாழ்க்கைன்னு வரும்போதுதான் இந்த ஊனம் எல்லாம் பெருசா தெரியும், இதெல்லாம் ஊரை ஏமாத்தப் போடுற வேஷம்…” குழறலாய் சொல்லியபடி நண்பனின் தோளில் கையிட்டுக் கொண்டே தள்ளாடியபடி வெளியே நடந்தவனை கண்ணை எடுக்காமல் பார்த்திருந்தாள் பாரதிப்பிரியா. பார்க்க அழகாய் கம்பீரமாய் இருந்தவன் நடக்கும்போது ஒரு காலை இழுத்து நடக்கவும் தான் அவன் பேசியதன் காரணம் அவளுக்குப் புரிய திகைப்புடன் பார்த்து நின்றாள்.

நடப்பதை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வான்மதி தான் முதலில் அந்த நிகழ்விலிருந்து மீண்டாள்.

“பாரதி… என்னடி நடக்குது இங்கே, யாருடி அவன்…? உனக்கு அவனைத் தெரியுமா….?” படபடவென்று கேட்ட தோழியிடம் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தவள், “இல்லை..” என்பது போல் தலையாட்டினாள்.

“முன்னப் பின்னத் தெரியாத ஒரு பொண்ணுகிட்ட அவன் வந்து கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேக்கறான்… நீ என்னடான்னா கோபப்படாம, பதில் சொல்லாம திகைச்சுப் போயி நிக்கற… நீ ஏன் அமைதியா இருக்க…?”

“தெரியலை மதி… ஆனா அவர் அப்படி என்கிட்ட பேசினதை விட காலை விந்தி விந்தி நடந்து போகறதைப் பார்க்க தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாருக்கு…” என்றவளை அதிசயமாய் பார்த்தாள் வான்மதி.

“என்னடி சொல்லற, ஊனம் இருக்கவங்களைப் பார்த்து கிண்டல் பண்ணக் கூடாதுன்னு சொன்னா, சட்டுன்னு அவன் வந்து கல்யாணம் பண்ணிக்க கேப்பானா…? என்னமோ போ, இங்க வந்ததுல இருந்து ஒண்ணுமே சரியில்லை…” சொன்னவள் எழுந்து கொள்ள பாரதி முறைத்தாள்.

“என்ன எழுந்துட்ட, காபி வேண்டாமா…?”

“ப்ச்… குடிக்கிற மூடே போயிருச்சு, வா… கிளம்பலாம்…” எனவும் மறுக்காமல் பாரதியும் கிளம்ப இருவரும் வெளியே வந்தனர். பாரதியின் மனதில் ரிஷி சொன்ன வார்த்தைகளும் அவன் காலை விந்தி நடந்து போனதும் மட்டுமே நிறைந்து இருக்க அமைதியாய் நடந்தாள்.

“என்ன பாரதி, நீ இன்னும் அவன் சொன்னதையே நினைச்சுட்டு இருக்கியா…?”

“இருந்தாலும் அவருக்கு ரொம்ப தைரியம்ல… இத்தனை பேரு முன்னாடி தெரியாத ஒரு பொண்ணுகிட்ட இப்படிக் கேட்க எவ்ளோ துணிச்சல் இருக்கணும்…” என்றவளை விநோதமாய் பார்த்த வான்மதி,

“ஆஹா, உனக்கு என்னமோ ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்… அவன் தண்ணி போட்டுட்டு குருட்டு தைரியத்துல வந்து அப்படிக் கேட்கவும் எனக்கு எவ்ளோ பதட்டம் ஆகிருச்சு தெரியுமா…? எல்லாரும் நம்மளையே வேற பார்த்தாங்க… இண்டர்வியூக்கு வந்த இடத்துல நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம், நாம கிளம்புவோம்…”

சொன்னவள் சற்றுத் தள்ளி நின்ற ஆட்டோவுக்கு கை காட்ட அது அருகே வந்து நிற்கவும் பாரதியின் கையைப் பிடித்து ஆட்டோவில் ஏற அமர்ந்தனர்.

இருவரும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். இளையராஜாவை ஒலிக்க விட்டு இருக்கையை விட்டுக் காணாமல் போயிருந்த பஸ் டிரைவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாய் 4.30 காட்டியபோது இருக்கைக்கு வர பேருந்து புறப்பட்டது.

“நீதானே என் பொன் வசந்தம்…

புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்…”

SPB யின் குரல் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்க பாட்டை ரசிக்கத் தொடங்கிய பாரதியின் கையில் சுரண்டினாள் வான்மதி.

“கவிதா இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பான்னு நினைக்கறேன், நீ அவளுக்கு ஒரு போன் பண்ணி சாரி சொல்லேன், பாரதி…” வான்மதி சொல்ல தோழியை முறைத்தாள்.

“நான் எதுக்கு சொல்லணும், தப்புப் பண்ணது அவ… வேணும்னா அவ கால் பண்ணட்டும்…” சொல்லிவிட்டு கண்ணை மூடி பாட்டை ரசிக்கத் தொடங்கிய தோழியை ஒரு இயலாமையுடன் பார்த்துவிட்டு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் வான்மதி.

பாரதிப் பிரியாவின் மனம் பாட்டை உள்வாங்க மெல்லிய கை விரல்கள் கம்பியில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தை பேருந்து எட்டிப் பிடிக்கத் தொடங்க வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது.

“மதி, எழுந்திரு… பஸ் ஸ்டாண்ட் வந்திருச்சு…” தனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த தோழியை எழுப்பிய பாரதி பாகை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானாள். தலையை ஒதுக்கிக் கொண்டு வான்மதியும் எழுந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினர்.

அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி இருபது நிமிடப் பயணத்தில் அவர்களின் வீடு இருந்த தெருவுக்குள் வண்டி நுழைந்தது. ஒரு காம்பவுண்டு வீட்டு முன்பு ஆட்டோ நிற்க இருவரும் இறங்க வான்மதி பணத்தைக் கொடுத்தாள்.

“பாரதி, உள்ள வாடி… ஒரு காபி குடிச்சிட்டுப் போகலாம்…” வான்மதி அழைக்க கைகடிகாரத்தைப் பார்த்தவள்,

“ம்ம்… சரி, லேசா தலை வலிக்குது, இனி வீட்டுல காபி கிடைக்காது… அம்மாவோட ஸ்பெஷல் காபியைக் குடிச்சிட்டே போறேன்… அப்பதான் தெம்பா திட்டு வாங்க முடியும்…” சொன்னபடி அவளுடன் நடந்தாள்.

Advertisement