அம்மாவின் முடிவில் முகம் கறுத்துப் போனது அருணாச்சலத்துக்கு.

“அப்போ வீடு ஏலத்துல போயிடும், பரவாயில்லையா உங்களுக்கு?” மிரட்டினான்.

“பரவாயில்ல அருண், ஆம்பிள்ளை பிள்ளையை வளர்க்கத் தெரியாம வளர்த்ததுக்கு கிடைச்ச தண்டனையா அதை ஏத்துக்குறேன். இனியும் நீ சொல்லுறதைக் கேட்டு மத்த இரண்டு பிள்ளைகள் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்க நான் விரும்பல.” துணிந்தவனுக்கு தூக்கு மேடையுமே பஞ்சு மெத்தையாம். மகன் என்னும் மாயையிலிருந்து வெளியே வந்திருந்த சுலோச்சனாவும் துணிச்சலாகவே மகனின் மிரட்டலை எதிர்கொண்டார்.

“எல்லோரும் இருக்குற தைரியத்துல பேசுறீங்க இல்ல? அவங்க எல்லாரும் கிளம்பி போயிடுவாங்க, நான் தான் எப்பவும் உங்களுக்கு.” எப்போதும் போல உணர்வுப்பூர்வமாக மிரட்டத் தொடங்கினான் அருண்.

“நீ மட்டும் தான் எனக்கா? ம்ஹும்… அந்த எண்ணத்தை நான் குழி தோண்டி புதைச்சு, சிலப்பல நிமிஷங்கள் ஆச்சு. என் கை மட்டும் தான் எனக்கு உதவின்னு எனக்கு புரியவச்சிட்ட. அதுக்கு நன்றி உனக்கு.” சுலோச்சனாவின் உதடுகளில் கசந்த புன்னகை.

தாயிடம் இருந்து இப்படியொரு பரிணாமத்தை எதிர்பார்க்கவில்லை அருண். வீடு ஏலத்திற்கு போய்விடும் என்று சொன்னால் பயந்துபோய் எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார். சின்னவள் காவேரி தான் எப்போதும் போல குதிப்பாள். அவளையும் அம்மாவே சமாதானப்படுத்தி விடுவார் என்று நினைத்திருந்தால், எல்லாம் தலைகீழாக நடக்கிறது.

“எம்பேச்சை கேட்கலைன்னா இந்த வீட்டுல யாரும் இருக்கக்கூடாது. இருக்க விடமாட்டான் இந்த அருண்.” அடுத்தகட்ட மிரட்டலில் இறங்கினான்.

“அத்தை சொன்ன மாதிரி நாங்க கையெழுத்து போட்டு தந்ததால இந்த வீட்டு மேல எங்களுக்கு உரிமை இல்லைன்னு ஆகிடாது. நீ இங்க இருக்குற வரைக்கும் எங்களுக்கும் இங்க இருக்க உரிமை உண்டு.” அழுத்தம் திருத்தமாக சொன்னார் சுலோச்சனா.

“சபாஷ், இந்த நிமிர்வை தான் உங்கிட்ட எதிர்பார்த்தேன். கடைசிவரை இதை கைவிட்டுடாத சுலோ.” என்ற வாசுகி,

“இப்போ சொல்லு, வீட்டை திருப்பி எடுக்க என்ன செய்யப்போற?” மறுபடியும் அருணிடம் கேட்டார்.

“நல்லா இருந்தவங்களை எனக்கெதிரா தூண்டிவிட்டுட்டு நக்கல் அடிக்கிறீங்களா?” தன்னுடைய திட்டம் தவிடு பொடியாகிப்போனதில் வாசுகி மீது எக்கச்சக்க கோபம் அருணுக்கு.

“நான் நக்கலுக்கோ, விளையாட்டுக்கோ இந்த கேள்வியைக் கேக்கலை, உண்மையாவே கேக்குறேன் பதில் சொல்லு.”

“நீங்க யாரும் எனக்கு சப்போர்ட் செய்யாட்டாலும், நான் எப்பிடியாவது என் வீட்டை எடுத்தே தீருவேன். அப்போ இந்த அருண் யாருன்னு உங்களுக்கு தெரியும்.” அந்த பெரிய வீட்டில் வசிப்பதை ஆகச்சிறந்த பெருமையாக நினைத்து இறுமாந்திருப்பவன் அருணாச்சலம். வீடு கைவிட்டு போய்விடும் என்பதை கற்பனையில் கூட அவனால் நினைத்துப் பார்க்க முடியாது. எனவே கிட்டத்தட்ட சபதம் செய்தது போலவே பேசினான்.

“ரொம்ப சந்தோஷம். ஆனா, எந்த வகையில், யார் மூலமா அது நடந்தாலும் உனக்கு அது நஷ்டத்தை தான் தரும்.” உறுதியாக சொன்ன வாசுகி,

“ஆனா உனக்கு சேதாரம் இல்லாம, இந்த வீட்டை என்னால திருப்பி எடுத்து தரமுடியும். அதுக்கு நான் சொல்லுறதுக்கு நீ கட்டுப்படணும்.” புதிர் போட்டார்.

‘என்னால் முடியும்’ என்ற வாசுகியின் வார்த்தையில் சட்டென்று பல்ப் எரிந்தது அருணாச்சலத்தின் முகத்தில். அவர் செய்து தந்துவிட்டால், வேறு யாரிடமும் தன்நிலையை விட்டு இறங்கிச் சென்று பணத்திற்காக கெஞ்சிக்கொண்டு நிற்க வேண்டாமே.

“சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?” தாமதிக்காமல் கேட்டான்.

வீட்டை மீட்டுத்தரமுடியாது என்று வாசுகி ஏற்கனவே சொல்லியிருந்தாலும், அவருக்கு அப்படியே விட்டுவிடும் எண்ணம் எல்லாம் கிடையாது. அதுவும் தான் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது பிறந்த வீடு கைவிட்டு போவதை அவர் எப்படி விரும்புவார்? எப்படியாவது கணவரை சரிகட்டி வீட்டை மீட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் தான் அவருக்கு. ஆனால் அதை தம்பி மகனிடம் சொல்லிவிட்டால், ஏற்கனவே அலட்சியத்தோடே குடிகொண்டிருப்பவனுக்கு பயம்விட்டுப் போகும். எனவேதான் அவன் கேட்கும் போது மறுத்தது. இப்போதோ அந்த வீட்டை வைத்து அவனை தன் வழிக்குகொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேச ஆரம்பித்தார்.

“வேற ஒன்னும் இல்ல, வீட்டை பேங்க்ல இருந்து மீட்டதும், அதை எம்பேருக்கு பத்திரம் முடிச்சு தந்துடணும்…”

“என்ன, காமெடி பண்ணுறீங்களா?” வாசுகி பேச்சை முடிக்கும் முன்னரே இடையிட்டவனின் குரல் அவரை அதட்டியது.

“இதுல காமெடி எங்கயிருந்து வந்தது? அவ்வளவு பெரியத் தொகையை உனக்கு சும்மா தூக்கித்தர்ற அளவுக்கு நான் ஒன்னும் வள்ளல் இல்ல.” பதிலுக்கு கேலி பேசிய வாசுகி,

“ஆனா, நீ என்னோட பணத்தை திருப்பித் தரும்போது கண்டிப்பா வீட்டை நானும் உனக்கு திருப்பித் தந்துடுவேன். நான் தர்ற பணத்துக்கு ஒத்தபைசா வட்டி கூட வேண்டாம்.” என்றார் தெளிவாக.

“ஹஹ… வீட்டை எங்கிட்ட வித்துட்டு போயிடுன்னு நேரடியா சொல்லாம, நல்லாவே எங்காதுல பூ சுத்துறீங்க. இதை நானும் நம்பணும், இல்ல.” ஏளனமாக சிரித்தான் அருண்.

“உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லைன்னா ஒருபத்திரத்துல விஷயத்தை எழுதி கையெழுத்து போட்டுத்தரேன். ஒருவேளை நான் இந்த உலகத்துல இல்லாமப் போனாக்கூட, என் வாரிசுங்க கண்டிப்பா உன்னோட சொத்தை உங்கிட்ட திருப்பி தந்துடுவாங்க.” அவனுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக தன் வாரிசுவரை இழுத்து பேசினார் வாசுகி.

இத்தனைக்குப் பிறகும் பதில் சொல்லாமல் அருண் புருவத்தை சுருக்கி யோசித்தபடி தான் இருந்தான்..

“என்ன சொல்லுற? இந்த உலகத்துல வட்டி இல்லாம இவ்வளவு பெரிய தொகையை யாரும் சும்மா உனக்கு தரப்போறது கிடையாது. அதேநேரம், திரும்பவும் நீ வட்டிக்கு பணம் வாங்கினா உன்னை யாராலும் காப்பாத்தவும் முடியாது. அதுவே நான் பணம் தந்தா வீடு எப்பவுமே பாதுகாப்பா இருக்கும். நீ இருக்குற நிலத்துல விவசாயம் செய்தோ இல்லை வேற ஏதாவது வேலைப் பாத்தோ எங்கிட்ட வாங்கிய பணத்தை குடுக்கப் பாரு. இந்த உலகத்துல ஒன்னுமே இல்லாம ஜீரோலயிருந்து வாழ்க்கையைத் தொடங்கி பெரிய உயரத்தை அடைஞ்சவங்க எல்லாம் நிறைய பேரு இருக்காங்க. அதுக்கு காரணம் அவங்களோட, தன்னம்பிக்கையும், இடைவிடாத உழைப்பும் தான். நீயும் உன்னோட வறட்டு கௌரவம், பகட்டு, பந்தா எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு களத்துல இறங்கு. உழைப்பு என்னைக்குமே உன்னை கைவிடாது.” மருமகனிடம் எதைப்பற்றி பேசவேண்டும் என்று வாசுகி நினைத்தாரோ அதைப் பற்றி தெளிவாகவே பேசிவிட்டார்.

ஆனால் அவருடைய தம்பி மகனோ, அத்தை பேசிய எதற்கும் காது கொடுக்காமல், “நம்பிக்கைக்கு பத்திரம் எழுதிதரதுக்கு பதிலா, நீங்க ஏன் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து குடுக்கக்கூடாது? அப்பிடிச் செய்தீங்கன்னா உங்களை நான் நம்புறேன்.” மின்னாமல் முழங்காமல் வாசுகியின் தலையில் இடியை இறக்கினான்.

“ராஸ்கல், என்னடாச் சொன்ன? மாமன் மகனாகிப்போன, இல்லைன்னா கன்னம் பழுத்திருக்கும்.” கோபத்தில் பற்களைக் கடித்தபடி வேகமாக இருக்கையிலிருந்து எழும்பியிருந்தான் அரவிந்தன்.

“லூசுப்பயலே, மாமன் மகன் தான்டா கட்டிக்க கேக்க முடியும், நீ எதுக்கு தேவையில்லாம குதிக்கிற? உக்காரு.” அரவிந்தனை நக்கல் அடித்தவன், அதிர்ந்து போய் தன்னையே அமைதியாகப் பார்த்தபடி இருந்த அத்தையைப் பார்த்து,

“அம்மா சொத்து பொண்ணுக்குன்னு நீங்கதானே கொஞ்சம் முன்னாடி சொன்னீங்க. என் வீட்டை உங்க பெயருக்கு தாராளமா எழுதிக்கோங்க. ஆனா உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து குடுத்திடுங்க. அப்போ நீங்க சொல்லுற ஐடியாவுக்கு நான் சம்மதிக்கிறேன்.” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

வாசுகி, சபாபதி தம்பதியருக்கு அரவிந்தனுக்கு அடுத்ததாக மாதவி என்ற மகளும் உண்டு. சென்னையில், நாட்டுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் துணை மேலாளராக வேலை செய்கிறாள். அரவிந்தனும் கூட திருநெல்வேலியில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியதில் இளநிலைப் பொறியாளராக வேலைப் பார்க்கிறான்.

வாசுகியின் கணவரும் சொத்துபத்து என்று மிகுந்த பின்புலம் உள்ள மனிதர் தான். ஆனால் வறட்டு கௌரவத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருக்காமல், மண்ணில் இறங்கி உழைக்க தயங்காத நபர். அதனால் பரம்பரைச் சொத்துக்களோடு, புதிதாக சொத்துக்களும் பெருகி இருந்தது அவரிடம். போதாதற்கு பிள்ளைகள் வேறு படித்து நல்லபடியாக வேலைக்கு சென்று விட்டார்கள். அதுவும் அரசாங்க வேலை.

“ஐயோ பாவம், தம்பி மகன் கஷ்டப்படுறானே கைதூக்கி விடுவோம்னு நீங்க நினைச்சதுக்கு எப்படி பேசுறான்னு பாத்தீங்களா ம்மா? என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்குற அளவுக்கு இவங்கிட்ட என்ன தகுதி இருக்கு?” அருணை தங்கையின் ஜோடியாக யோசிக்க பிடிக்காமல் பொங்கினான் அரவிந்தன்.

“எப்பிடி, எப்பிடி ஐயோ பாவம்னு இந்த அருணை நினைச்சீங்களா? நான் பொதிகாச்சலத்தோட பேரன்டா. இன்னாரோட பேரன்னு மட்டும் சொன்னாப் போதும், இந்த ஊரே என் கால்ல வந்து விழும்.” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தம்பட்டம் அடித்தான் அருண் .

“இந்த ஊரே வந்து கால்ல விழுறது எல்லாம் சரி தான். அவங்கள்ல யாரையாவது உன் கடனை அடைக்கச் சொல்லு பாக்கலாம். அது முடியாதுல்ல,  அப்போ இந்த வாயிலயே வடை சுடுற வேலையை எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் கண்ணைத் திறந்து உன்னைச் சுற்றிப்பாரு. அப்போதான் புரியும் இந்த உலகம் எவ்வளவு வேகமா போயிட்டுயிருக்கு, நீ எவ்வளோ பின்தங்கியிருக்குறன்னு…” அரவிந்த் சொல்ல,

“இந்த உலகம் எப்பிடி வேணா சுத்தட்டும், எனக்கு அதைப்பத்தி கவலையில்லை. நீங்க சொல்லுங்க அத்தை, பொதிகாச்சலத்தோட பேரன்ங்குற அடையாளம் மட்டும் போதாதா உங்க வீட்டுக்கு மருமகனா வர்றதுக்கு.” அமைதியாக இருந்த வாசுகியை பேச்சுக்குள் இழுத்தான்.

“கண்டிப்பா போதாது அருண். என் பொண்ணை கட்டிக்க போறவன் அன்பானவா, அனுசரனையானவா, படிச்சவனா, உழைக்கத் தயங்காதவனா, குடும்பத்து மேல அக்கறையுள்ளவனா, முக்கியமா நல்ல நடத்தையுள்ளவனா இருக்கணும். இவ்வளவு ஏன்? நம்ம மாணிக்கத்தோட பேரன் குமரனைப் போல ஒரு பையனுக்கு சந்தோஷமா எம்பொண்ணை கல்யாணம் பண்ணி குடுப்பனேத் தவிர, உனக்கு தர மாட்டேன்.” பொட்டில் அடித்தாற் போல பதில் சொன்னார் வாசுகி.

“நல்லா மண்டையில உரைக்கிற மாதிரி சொல்லுங்க ம்மா.” என்றான் அரவிந்தன்.

“என்ன சொன்னீங்க? அந்த குமரன் என்னைவிட உங்க பொண்ணுக்கு பெஸ்ட் சாய்ஸ்ன்னு சொல்றீங்களா? அப்போ அந்த தடிப்பயலுக்கே உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுத்துட வேண்டியது தானே? நானும் விட்டது சனியன்னு நிம்மதியா இருப்பேன். “

“ஹாங்… அப்புறம் கண்டிப்பா உங்க திட்டத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன். அதனால வீட்டு விஷயத்தைப் பற்றி இனிமே எங்கிட்ட பேசவே பேசாதீங்க.” கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு எழும்பியவனின் வேகத்தில் உட்கார்ந்திருந்த நாற்காலி சற்றே பின்னால் நகர்ந்திருந்தது.