“அதை வச்சுக்க எங்களுக்கு பெர்மிஷன் கிடையாது.” என்றவளின் பார்வை தமையனை தொட்டுவந்தது.
“பெர்மிஷன் கிடையாதா?” என்றவனுக்கு காவேரியின் பார்வையில் அனுமதி யார் மறுத்திருக்க கூடும் என்பது புரிந்துபோனது.
“ஏன்டா டேய், இவங்க எல்லாம் உன்னோட அடிமைகளா? விட்டா அவங்க மூச்சுவிடுறதுக்கு கூட உன் பெர்மிஷன் கேக்கணும்னு சொல்லுவப் போலயே. சரியான அரைக்கிறுக்கன்.” எரிச்சலாகச் சொன்னவன், தன் கையிலிருந்த போனை காவேரியிடம் நீட்டி, “இப்போதைக்கு இதை வச்சிக்கோ, நாளைக்கு ஷோரூமுக்கு போய் புதுசு வாங்கிக்கலாம்.” என்றான்.
“ஐயையோ… எனக்கு வேண்டாம்.” பதறினாள்.
“காலேஜ் போற பிள்ளை. உனக்கு தான் இது ரொம்ப முக்கியம். வச்சிக்கோ.”
“அப்போ உங்களுக்கு.” கையில் வாங்கியபடியே கேட்டாள்.
“எங்கிட்ட இன்னொரு போன் இருக்குது. அதை யூஸ் பண்ணிக்கிறேன்” என்றவன், விடைபெற்று கொண்டு கிளம்பினான்.
“ஹாங், அப்புறம்…” வாசலை சமீபித்திருந்த குமரன், ஏதோ ஞாபகம் வந்தது போல திரும்பி அருணாச்சலத்தை பார்த்தான்.
“ஆரம்பத்துல, இதை உன் வீடுன்னு சொன்னதா எனக்கு ஞாபகம். இந்த வீட்டுக்கு எதிர்ல புதுசா ஒரு வீடு இருக்கு பாரு, அதை என் வீடுன்னு நான் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சொல்லலாம். ஏன்னா, அதோட கல்லு, மண்ணு, செங்கல், சிமெண்ட் ஒவ்வொன்னுலயும் என்னோட உழைப்பு இருக்குது. இப்போ நான் சொல்லாமலேயே இந்த வீடு யாரோட வீடுன்னு உனக்கு புரிஞ்சிருக்குமே…” போகிற போக்கில் எதிராளியை சீண்டிவிட்டு குமரன் செல்ல, அங்கேயிருந்த டீப்பாயை எடுத்து தரையில் ஓங்கி எறிந்திருந்தான் அருண். அவனுடைய கோவத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அதன் கால் உடைந்து போனது.
“அருண்…” மகனை அதட்ட நினைத்தாலும் வார்த்தைகள் ஒத்துழைக்க மறுத்தது சுலோச்சனாவுக்கு. பயமா என்று கேட்டால், பயம் தான். மகனின் மனநிலையை நினைத்து பயமாக இருந்தது அந்த தாய்க்கு.
“அவனைக் கண்டதும் என்மேல இருந்த பயம் எல்லாம் போயிடிச்சு இல்ல. வந்து வச்சிக்கிறேன் கச்சேரியை” என்றவன் பைக்கை கிளப்பிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.
அருண் பைக்கை கொண்டு வந்து நிறுத்திய இடம், தென்காசியில் உள்ள ஒரு தனியார் பார். வழக்கமாக வரும் இடம்தான். முன்பெல்லாம் எப்போதாவது. இப்போதோ அடிக்கடி.
உள்ளே வந்து அமர, பணியாளர் வந்து நின்றார். அவன் எப்போதும் உபயோகப்படுத்தும் பிராண்ட் பெயரைச் சொல்லி, கொண்டுவர அனுமதி கேட்க, தலையை அசைத்து சம்மதித்தான்.
காலையில் குமரனைப் பார்த்த நேரத்திலிருந்தே தலை வெடித்துவிடும் போலத் தான் இருந்தது அருணுக்கு. அதுவும் அவ்வளவு பெரிய வீட்டுக்கு சொந்தக்காரனாக அவனை அறிய நேர்ந்த நேரத்திலிருந்தே பொறாமையால் பொசுங்கிக் கொண்டிருந்தது அவனது மனது.
அவனோ வீட்டுக்குள்ளேயே வந்து பெண் கேட்டதோடு, இவனை வெட்டிப்பயல் என்றுவிட்டு சென்றுவிட்டான்.
“ஆ…” நடந்தவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தலையை பிடித்துக் கொண்டு அருண் நாற்காலியில் சாய்ந்த நேரம், அவன் கேட்ட வஸ்துவும் வந்து சேர்ந்தது.
வாகனத்தில் வரும்போது எதிர் திசையிலிருந்து வந்து, முகத்தில் மோதிய குளிர்ந்த காற்றால் கூட தணிக்க முடியாத தன்னுடைய மனப்புழுக்கத்தை, அந்த தங்கநிற திரவத்தைக் கொண்டு தணிக்க முற்பட்டான். ஆனால் அதுவோ அவன் முயற்சிக்கு எதிர்பதமாக பொறாமைத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்தது.
‘அவனை ஏதாவது செய்ய வேண்டுமே? என்ன செய்ய… என்ன செய்ய…’ அதையே உருப்போட்டது அருணுடைய பொல்லாத மனது.
இப்போது என்றில்லை. கல்லூரி காலம் தொட்டே குமரனை மட்டம் தட்டுவதையே தன்னுடைய முழுநேர வேலையாக வைத்திருந்தான் அருண். காரணம், தனக்கு சமமாக தன்னுடைய வகுப்பிலேயே குமரன் இருந்தது தான்.
ஆமாம், முதல்நாள் தன்னுடைய வகுப்பில் குமரனைக் கண்ட அருணாச்சலத்திற்கு, அந்த வகுப்பில் அதற்குமேல் இருக்க பிடிக்கவேயில்லை.
அப்போதே பிரிவு மாறிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். தகப்பனிடம் சொன்னால் உன் இஷ்டம் என்றுவிட்டார். ஆனால் கெத்து காட்டும் பிரிவுகள் எதிலும் இடம் இல்லை என்று நிர்வாகம் கையை விரித்து விடவே வேறுவழியில்லாமல் அதே பிரிவில் தொடர்ந்தான்.
அடுத்த காரணம், குமரனுடைய கற்கும் திறன். அதனால் பேராசிரியர்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் அவனுக்கு கிடைத்த நட்பும், நற்பெயரும் அருணாச்சலத்தை வகைதொகை இல்லாமல் குமரன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள வைத்தது.
“என்ன பெரிய குமரன்? அவன் எங்க வீட்டு வேலைக்காரன் தான், தெரியுமா?” அலட்சியமாக வகுப்பு தோழர்களுக்கிடையேச் சொல்லி தன் ஆற்றாமையைக் குறைத்துக் கொள்வான்.
“அருண் உன்னை அவன் வீட்டு வேலைக்காரன்னு சொல்லுறான்டா.” பொறுத்துக்கொள்ள முடியாமல் குமரனின் நட்புகள் அவனிடம் சொன்னால்கூட, “உண்மையைத் தான் சொல்லுறான்.” புன்னகையோடு கடந்து விடுவான் குமரன்.
அருணின் நோக்கமே வேறு. வேலைக்காரன் என்ற வார்த்தையில் குமரன் தன் வகுப்பு மாணவர்களுக்கிடையே குன்றி, குறுகிப்போய் நிற்க வேண்டும். ஆனால் அவனுடைய பொல்லாத ஆசையை எப்போதுமே நிறைவேற விட்டதில்லை குமரன். குமரனின் அந்த நிமிர்வுகூட பலநேரங்களில் அருணை வெறியேற்றியிருக்கிறது.
அடுத்து, குமரனுக்கு இருந்த பெண் நட்பு. அவனுடைய வகுப்பு மட்டும் இல்லாமல் மற்ற வகுப்பு பெண்கள் கூட அவனிடம் தோழமையாக பழகி வந்தார்கள். விலை உயர்ந்த பைக், பிராண்டட் உடைகளில் கல்லூரிக்கு வரும் தனக்கு இல்லாத பெண்நட்பு, இந்த வெறும்பயலுக்கா என்ற வயிற்றெரிச்சல் அருணுக்கு. அவனாக வலியப்போய் பெண்களிடம் நட்புக்கரம் நீட்டினால்கூட அலட்சிய சுபாவம் கொண்ட அவனைத் தங்கள் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை.
அதுவும் தீபா, அருணை தன்னருகே நெருங்கக்கூட விடவில்லை. குமரனின் நட்புவட்டத்தில் உள்ள பெண் தான் தீபா. மிகவும் அழகானவள். கல்லூரியில் உள்ள காதல் ரோமியோக்கள் எல்லோரும் அவள் பின்னால் தான் சுற்றினார்கள். அவளோ யாரையும் கண்டுகொள்வதில்லை.
அந்த தீபாவை தன்னை சுற்ற வைத்து, கல்லூரியில் கெத்து காட்டிவிட வேண்டும் என்று பேராவல் அருணுக்கு. என்னவெல்லாமோ செய்து பார்த்தான். தீபாவின் கடைக்கண் பார்வை மட்டும் அருண் மீது விழவேயில்லை. தன்னை காதலித்தே ஆகவேண்டும் என்று ஒருமுறை எல்லைமீறி அவளைக் கட்டாயப்படுத்த, பயந்துபோன தீபா கல்லூரிக்கு வரவில்லை.
விஷயம் குமரனின் காதுகளுக்கும் வந்தது. இத்தனை நாட்களாக அருணாச்சலத்தின் நடவடிக்கைகளை இடதுகையால் ஒதுக்கி நடைபோட்டவனுக்கு, இந்த விஷயத்தில் அப்படி இருக்க முடியவில்லை.
நண்பர்கள் சூழ கல்லூரி வளாகத்தில் இருந்த அருணாச்சலத்திடம் வந்து நின்றான் குமரன்.
“அருண் உங்கிட்ட பேசணும்.”
“என்னடா?” அலட்சியமாக வந்தது பதில்.
“தீபாகிட்ட நீ நடந்துக்குற விதம் தப்பு. அவளுக்கு விருப்பம் இல்லைன்னா நீ அவளை கட்டாயப்படுத்த கூடாது. ஒதுங்கிடணும்.” தன்மையாகவே குமரன் சொல்ல,
“நீ ஏன் டா அதை வந்து சொல்லுற? ஓ… நான் ஒதுங்கிட்டா நீ அவளை செட்டப்…” கோணலாக சிரித்தபடி அருண் பேச, அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்னரே ஆத்திரத்தில் பளாரென்று கன்னத்தில் அறைந்திருந்தான் குமரன்.
தன்வீட்டு வேலைக்காரன் என்று அலட்சியமாக சொல்லியிருந்த குமரன் நண்பர்களுக்கு மத்தியில் வைத்து அறைந்து விட அவமானமாகிப் போனது அருணுக்கு.
“வேலைக்கார நா*யே எம்மேலயே கைவைப்பியா நீ?” தீராத வெறியோடு குமரன் மீது அருண் பாய, இருவரும் தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டார்கள். கடைசியில் கல்லூரி ஒழுங்கு கமிட்டியிடம் தான் போய் நின்றது விஷயம்.
அதேவிஷயம் வீடுவரை வந்து, “என்ன நடந்திருந்தாலும் என் மகன் மேல உன் பேரன் கை வச்சது தப்பு மாணிக்கம்” என்று வேதாச்சலத்தால் பஞ்சாயத்து வைக்கப்பட்டிருந்தது.
கடைசியில் பேரன் சார்பில் மாணிக்கம் தான் மன்னிப்பு கேட்டிருந்தார்.
“சின்னவர் கிட்டயிருந்து ஒதுங்கியே இரு ராசா.” மாணிக்கம் பேரனுக்கு இப்படித்தான் அறிவுரை சொல்லியிருந்தார்.
அதன் பிறகு வந்தநாட்களில் குமரன் ஒதுங்கினாலும் அருணாச்சலம் அவனை ஒதுங்கவிடவில்லை. ஒரு கட்டத்தில் குமரனும் துணிந்துவிட, முட்டலும் மோதலுமாகத்தான் அவர்களுடைய கல்லூரி நாட்கள் கடந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் தான் துளசியும் அதே கல்லூரியில் சேர்ந்திருந்தாள்…
கல்லூரி நினைவுகளில் ஆழ்ந்திருந்த அருணாச்சலத்தின் கை, குமரன் அடித்திருந்த இடது கன்னத்தை தடவியது. தங்கையின் காதலை பகடையாக வைத்து குமரனை பழிதீர்த்திருந்தாலும் சமாதானமடைய மறுத்து திமிறியது அவன் மனது.
‘அவனை ஊரை விட்டு அனுப்பி வச்சதுக்கு பதில் உலகத்தை விட்டே அனுப்பியிருக்கணும். ராஸ்கல் எவ்வளவு தைரியமா என் சட்டையில கை வைக்கிறான்?’
எண்ணம் தந்த வெறியில் ஒரே மூச்சில் கையிலிருந்த உற்சாகபானத்தை குடித்து முடித்திருந்தான். இதோடு இரண்டு முழுபாட்டில்கள் முடித்தாயிற்று. போதாமல் அடுத்தும் ஆர்டர் செய்தான்.
“சார் போதும், உங்க லிமிட்டை தாண்டிட்டீங்க.” தயங்கித் தயங்கி சொன்னார் பேரர்.
“என் லிமிட் என்னன்னு எனக்கு தெரியும் டா, நீ கொண்டு வா.” குழறலாக வந்தது பதில். கண்கள் சிவக்க நின்ற அருணாச்சலத்தைப் பார்த்து அந்த பேரருக்கே பரிதாபமாக இருந்தது.
புதிய பாட்டிலை திறந்து வாயில் சரித்த நேரம் அவனுடைய போன் அழைத்தது. அழைப்பை ஏற்கவில்லை. தாமதிக்காமல் மறுபடியும் அது அழைத்தது. “இது வேற” அலுத்தபடியே கையிலெடுத்தவன், “ஹலோ” என்றபடி காதுக்கு கொடுத்தான்.
“அருண், நான் அம்மா பேசுறேன் ப்பா, நீ எங்க இருக்குற?” பதறியபடி வந்தது கேள்வி. ஆமாம் … இரவு வழக்கமான நேரத்தை தாண்டியும் அருண் வீடுபோய் சேர்ந்திருக்கவில்லை.
“நான் எங்க இருந்தா உங்களுக்கு என்ன?” குழறலாகச் சொன்னவன், ஏதோ ஞாபகத்தில் போனின் திரையைப் பார்த்தான். அவன் பார்வைக்கு கலங்கலாகத் தெரிந்த எண் அவர்களுடைய வீட்டு லேண்ட்லைன் நம்பரில்லை. சுயநினைவை பாதி இழந்திருந்த அந்த நேரத்திலும் கோபம் சுர்ரென்று ஏறியது.
“அந்த வீணாப்போன பயலோட போன்ல இருந்து பேசுறீங்களா?” அதட்டினான்.
“குடிச்சிருக்கியா அருண்?” இயலாமையில் கம்மிப்போய் வந்தது சுலோச்சனாவின் குரல். மகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது சமீபத்தில் அவருக்கு தெரிய வந்திருந்தது. ஒரு தாயாக மகனை கண்டித்தார். ஆனால் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் தான்.
“என்ன பாசம் இருக்குற மாதிரி நடிக்கிற? உன் பொட்டப்பிள்ளை நல்லா சொகுசா வாழணுங்குறதுக்காக என்னோட மானம் மரியாதையை எல்லாம் காத்துல பறக்க விட்டவ தானே நீ?” உள்ளே போயிருந்த வஸ்து மரியாதையா, கிலோ என்ன விலை என்று கேட்டது.
“அருண்…”
“எனக்கு உங்கூட பேச விருப்பமில்லை.” என்று அழைப்பை துண்டித்துக் கொண்டான் அருணாச்சலம். அதன் பிறகு சுலோச்சனா விடுத்த அழைப்புகள் எதையும் அவருடைய மகன் ஏற்கவேயில்லை…