“ஐயையோ… அப்பிடி எதுவும் கேட்டு வச்சிடாத காவேரி, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.” புதிதாக பிரச்சினை எதையும் தங்கை இழுத்து வைத்து விடக்கூடாது என்று அவசரமாகச் சொன்னாள்.

“அப்போ நீ உண்மையாகவே குமரனை லவ் பண்ணலையா க்கா?” இளையவளின் குரல் இப்போது கோபத்தில் லேசாக உயர்ந்திருந்தது.

“பண்ணுனேன் தான். ஆனா அது தொடங்குன வேகத்துலயே முடிஞ்சும் போச்சு. இப்போ மறுபடியும் தொடங்கி பிரச்சினையை இழுத்து வைக்க வேண்டாம்.” கம்மிய குரலில் துளசி சொல்ல,

“அப்போ பிரச்சினை வந்துடுங்குற பயத்துல தான் குமரன் மேல இருக்குற லவ்வை மறைக்கிறியா நீ?” ஒருமாதிரி குரலில் கேட்டாள் காவேரி.

“உண்மையைச் சொல்லப்போனா, வீட்டுல உள்ளவங்க நிம்மதியைக் குலைக்கிற எதுவும் எனக்கு வேண்டாம் காவேரி.” சொல்லும் போதே துளசியின் மனது ரணமாகிப் போனது.

பத்தொன்பது வயதிலும் இதே பயத்தில் தான் பின்வாங்கினாள். இதோ இப்போது இந்த இருபத்து ஏழு வயதிலும் அதே பயம் தான். நினைத்தவளுக்கு, தான் எல்லாம் காதலிக்கவே துளியும் தகுதியில்லாதவள் என்று தான் எண்ணத் தோன்றியது. அவள் நினைத்ததையே காவேரி வார்த்தைகளாக்கி சொல்லிவிட்டாள்.

“சண்டையில சட்டை கிழியுறதும், காதல்ல பிரச்சினை வர்றதும் சகஜம் தானே க்கா. அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாத உன்னைப்போல ஆளெல்லாம் காதலிக்கவே கூடாது. நான் குமரனைப் பார்க்கும்போது எங்க வீட்டு கோழையை நினைச்சி உங்க வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. வேற யாராவது தைரியமான பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகிடுங்கன்னு சொல்லிடுறேன்.” கோபமாக சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் காவேரி.

தங்கையின் கோபத்தினாலா இல்லை அவள் வீசிச்சென்ற வார்த்தைகள் தந்த அழுத்தத்தினாலா தெரியவில்லை, துளசிக்கு வெடித்துக் கொண்டு வந்தது அழுகை.

மாடி ஹாலில் கிடந்த இருக்கையில் அமர்ந்து, உள்ளங்கைகளால் முகத்தை பொத்தியபடி அழுது தீர்த்தவளுக்கு, தன் நினைவுகளிலிருந்து குமரனை பிரித்தெடுப்பது அத்தனை எளிதல்ல என்பது இதோ இந்த சொற்ப நொடிகளில் புரிந்து போயிருந்தது.

குமரன் தன் வாழ்க்கையில் சுமுகமாக வரவேண்டும் என்பது எல்லாம் நடக்காத காரியம் என்பது இன்றைய அண்ணனின் செயலிலேயே புரிந்து போக அலமலந்து போனது பெண்ணின் மனது.

‘இந்த அண்ணனுக்கு குமரன் மீது ஏன் இத்தனை துவேஷம்? அன்பும் அணுசரனையும், பண்பும், பாசமும் உள்ள குமரனை ஏன் இவனுக்கு பிடிக்கவில்லை? அண்ணனுக்கு மட்டுமா? அப்பாவும் தானே எங்கள் காதல் தெரியவந்ததும் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.’

அதன்பிறகு நடந்த களேபரங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து பெண்ணவளை இப்போதும் மிரட்டியது.

‘நாங்கள் காதலைப் பரிமாறிக்கொண்ட வயது என்னவோ திருமணத்திற்கு ஏற்ற வயதில்லை தான். ஆனால் அப்பொழுதே திருமணம் செய்துவிட வேண்டும் என்று இருவரும் கச்சைக்கட்டிக் கொண்டு நிற்கவும் இல்லையே. இல்லையென்றால் படிப்பை விட்டுவிட்டு ஜோடியாக இருவரும் ஊர் சுற்றினோமா என்ன? அப்படியும் எதுவும் இல்லையே? சொல்லப்போனால், எங்கள் அன்பை பரிமாறிக்கொண்ட பிறகு அநாவசியமாக வேறு பேச்சுக்கள் கூட பேசியதில்லையே. எங்களில் சிறு தவறும் இல்லாத போதும் எங்களுடைய ஆசையை பரிசீலனைக்கூட செய்யாமல், எங்கள் காதலே இமாலயத் தவறு என்பது போல அண்ணனும் அப்பாவும் மல்லுக்கட்டிக்கொண்டு நின்றார்களே? அப்படியென்ன பெரிய அந்தஸ்து பேதம்?’

இந்த ரீதியில் யோசித்தவளுக்கு பணத்தையும் குடும்ப பின்னணியையும் கொண்டு குமரனின் அந்தஸ்தை கணக்கிட்ட அப்பா மற்றும் அண்ணனின் மனநிலையில் அளவில்லாத அதிருப்தியே. பணம் வாழ்க்கைக்கு அவசியம் தான். அதேநேரத்தில் குணம் இல்லாத பணம் மனிதனிடம் இருந்து எதற்கு?

குடும்ப பின்னணி, அது மனிதர்களாக உருவாக்கி கொள்வது தானே. பொதிகாச்சலம் என்ற மனிதருக்கு வாரிசாக இல்லாவிட்டால் அந்த அந்தஸ்து தான் இவர்கள் வாழ்க்கையில் கிடைத்து இருக்குமா?

 ‘இவ்வளவு ஏன்? கடுவன்பூனைகளான அப்பாவையும் அண்ணனையும் விட குணத்தால் அந்தஸ்தில் உயர்ந்தவர் தானே என்னுடைய குமரன்!’ பளிச்சென்று மனதில் தோன்றியே விட்டது துளசிக்கு.

 எப்போதும் கோபமுகமும் அலட்சியமும் காட்டும் அப்பாவையும் அண்ணனையும் பார்த்தே பழகியிருந்த துளசிக்கு, ஆண்களில் பரிவும் பாசமும் நிறைந்த இன்னொரு வகையினரும் உண்டு என்று அறிமுகம் செய்திருந்தது குமரன் தானே. ஆமாம், குமரனுடைய அனுசரணையான, அன்பான குணத்தில் தான் அவன் பக்கமாக சாய்ந்திருந்தது துளசியின் இளம் மனது.

துளசியின் அம்மா சுலோச்சனா சொல்லியது போல காவேரியின் சிறுவயது விளையாட்டு தோழன் தான் குமரன். காரணம், குமரனின் தாத்தா மாணிக்கம் அவர்களுடைய வீட்டில் வேலை பார்த்தது தான்.

வேலை என்றால் அவர்களுடைய நிலங்களை மேற்பார்வை செய்வது. பெரியவர் பொதிகாச்சலம் காலத்து ஆள் தான் மாணிக்கம். பொதிகாச்சலத்தின் நிலபுலன்கள் எங்கெங்கே உண்டு என்பது எல்லாம் மாணிகத்துக்கு அத்துப்படி. அதனாலேயே தகப்பனின் மறைவுக்குப் பிறகும் மாணிக்கத்தை தன்னுடனே வைத்திருந்தார் வேதாச்சலம்.

மாணிக்கத்தின் வேலைக்காக சம்பளம் என்ற பெயரில் ஏதாவது கொடுப்பார் வேதாச்சலம். அதைக் கொடுக்காவிட்டாலும் கூட மாணிக்கம் அவரை விட்டுவிட்டு போவதாக இல்லை. அத்தனை விசுவாசம் தன்னுடைய முதலாளி குடும்பத்தின் மீது அவருக்கு. முதலாளியின் மறைவுக்கு பிறகு அவருடைய மகனின் பழக்கவழக்கங்கள் ஒன்றும் சரியாக இல்லாததால், தானும் அவரைவிட்டு சென்றுவிட்டால் சரிவராது என்பதாலேயே வேதாச்சலத்தின் முசுட்டு குணத்தையும் பொருட்படுத்தாமல் அவருடனேயே இருந்தார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் இளையமகனின் பிள்ளைதான் அருள்குமரன். பத்து வயதிலேயே தாயையும் தகப்பனையும் இழந்திருந்த அருள்குமரனின் பொறுப்பு அவர் வசமாகிப்போனது.

மாணிக்கத்தின் மனைவி இருக்கும் வரைக்கும் சிறுவனின் பராமரிப்பில் அவருக்கு எந்த கஷ்டமும் இல்லை. மனைவியின் மறைவுக்குப் பிறகு சற்றே சிரமம் ஏற்பட்டது. அவருடைய மூத்தமகனின் மனைவி அருள்குமரனின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, தானே முன்னின்று பேரனை வளர்த்து வந்தார்.

சூட்டிகையான குமரனும் தாத்தனின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு அதிக சிரமங்கள் கொடுப்பதில்லை. தாத்தா பெரிய வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவரோடே வருவான். சிறிய, ஓட்டு வீட்டில் வளர்ந்து வரும் அந்த சிறுவனுக்கு அந்த பெரிய வீடு எப்போதுமே பிரம்மிப்பானதாகத் தான் இருக்கும்.

அடிப்படையிலேயே இரக்ககுணம் கொண்ட சுலோச்சனா, குமரன் வரும்போதெல்லாம் அவனுடைய வயிற்றை நிரப்பிவிடத் தவறுவதே இல்லை. தன் மகன் வயதே உடைய சிறுவன் பெற்றோரின்றி வளர்வது இயல்பாகவே அவன் மீது ஒரு பரிவை அவரிடம் உண்டாக்கியிருந்தது.

குமரனும் தன் வயிற்றை நிரப்பும் சுலோச்சனாவிற்கு சிறுசிறு வேலைகளை செய்து கொடுக்க தவறுவதே இல்லை. சுலோச்சனாவின் மறுப்பு எல்லாம் அவனிடம் எடுபடவே செய்யாது.

அவருக்கும் சின்னச்சின்ன உதவிகளை செய்து கொடுக்க ஆள் இல்லாத காரணத்தால் குமரனின் உதவிகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நாளடைவில் குமரன் இல்லாவிட்டால் அவருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது என்ற சூழ்நிலை தான்.

சுலோச்சனா வீட்டு வேலைகளைச் செய்யும் போது சிறுமியாக இருக்கும் காவேரியை கவனித்துக் கொள்வது, அவளோடு விளையாடுவது, சுலோச்சனா கறந்து தரும் பாலை பண்ணையில் கொண்டு ஊற்றுவது, மாத முடிவில் பால் கணக்கு முடித்து பணத்தை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பது. தட்டுப்படும் பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்வது என்று பெரிதும் சுலோச்சனாவிற்கு உதவிகரமாக இருந்தான் குமரன். இத்தனையோடு படிப்பிலும் படுசுட்டி தான்.

 துளசியும் அவனோடு நட்போடு தான் பழகி வந்தாள். ஆனால் அருணாச்சலத்திற்கு அவனைப் பிடிப்பதில்லை. அவனைக் கண்டாலே தாயிடம் சிடுசிடு என்று எரிந்து விழுவான். நேரடியாக குமரனிடமே அவன் கோபமுகத்தை காட்டிய நாட்களும் உண்டு. வேதாச்சலமோ மனைவிக்கு எடுபிடி வேலைகள் செய்து கொடுப்பவன் என்ற ரீதியிலேயே அவனை வைத்திருந்தார். மாணிக்கத்தின் பேரன் என்பதால் பெரிய அளவில் அவன்மீது ஒதுக்கம் எதுவும் கிடையாது. என்றாலும் அவனுக்கு ரொம்பவும் வீட்டில் இடம் கொடுக்காதே என்று மனைவியிடம் அவ்வப்போது சொல்லவும் தவறுவதில்லை.

இவை எல்லாவற்றையும் தாண்டி சுலோச்சனாவின் உண்மையான அன்பு அருள்குமரனை கட்டிப்போட்டிருந்தது. எனவே எப்போதும் போல சுலோச்சனாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொடுத்துக்கொண்டு தான் இருந்தான்.

ஆள் வளர வளர அவனுடைய உதவியின் தன்மையும் மாறுபட ஆரம்பித்திருந்தது. வீட்டில் ஒரு மின்சாரப்பொருள் பழுதாகிவிட்டதா, கூப்பிடு குமரனை. ப்ளம்பிங் வேலையா? அதற்கும் குமரன். சுருங்கச் சொன்னால், குமரனுக்குத் தெரியாத வேலையே கிடையாது என்றும் சொல்லலாம், குமரன் அந்த வீட்டில் செய்து கொடுக்காத வேலையே கிடையாது என்றும் சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் தான், மாணிக்கத்திற்கும் வேதாச்சலத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் மாணிக்கத்தின் வருகை பெரிய வீட்டில் இல்லாமல் போயிற்று. வேறொன்றுமில்லை, தன்னுடைய பகட்டு மற்றும் வீண் செலவுகளுக்காக மனைவிக்குத் தெரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக வேதாச்சலம் பரம்பரைச் சொத்துக்களை விற்க, அடமானம் வைக்க என்று தொடங்க, ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் விஷயத்தை சுலோச்சனாவின் காதுகளுக்கு கொண்டு சென்றுவிட்டார் மாணிக்கம்.

அப்போதே பாதி சொத்துக்களுக்கு மேல் கரைந்திருந்தது. விஷயம் தெரிந்ததும் சுலோச்சனாவிற்கு அதிர்ச்சியே. கணவரிடம் கேட்டு, சண்டையிட்டு என்று வீட்டில் சலசலப்பு வர, வீட்டிற்குள் கலகம் ஏற்படுத்த பார்க்கிறாயா? இனிமேல் இங்கே வராதே என்று மாணிக்கத்தின் முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டார் வேதாச்சலம்.

எத்தனை விசுவாசமாக இருந்த பிறகும் ‘கலகக்காரன்’ என்ற பெயர் கிடைத்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் மாணிக்கமும் பெரிய வீட்டுக்கு செல்லுவதை நிறுத்திவிட்டார். அதேநேரம் பேரன் அங்கே செல்வதை தடுக்கவும் இல்லை.

இத்தனை வருட பழக்கத்தில் பெரிய வீட்டின் சூழ்நிலை குமரனுக்குமே புரிந்திருந்தது. படிப்பின் அடுத்தகட்ட படிகளுக்கு செல்லச்செல்ல அவனாலுமே முன்போல அடிக்கடி அங்கே செல்ல முடியவில்லை. என்றாலும் சுலோச்சனா ஏதாவது வேலை என்று யார் மூலமாவது அழைத்துவிட்டால் தவறாமல் சென்று செய்து கொடுத்துவிட்டு வருவான்.

அப்படி நேரங்களில் அவன் செய்த வேலைகளுக்காக சுலோச்சனா பணம் கொடுக்க முற்பட்டால், “என்ன காவேரி அம்மா, சம்பளம் தந்து என்னை பிரிச்சு பாக்கலாம்னு நினைக்கிறீங்களா? உங்க கையால சோறு குடுங்க, சாப்டுட்டு போறேன்” என்று உட்கார்ந்து விடுவான்.

ஆமாம், சுலோச்சனாவை ‘காவேரி அம்மா’ என்றுதான் அழைப்பான் குமரன். “ஏன், காவேரிக்கு மட்டும் தான் அம்மாவா? எங்களுக்கெல்லாம் அவங்க அம்மா இல்லையா?” வேண்டுமென்றே அவனிடம் வம்பு வளர்ப்பாள் துளசி. பதிலுக்கு ஒரு அழகான புன்னகை மட்டுமே அவனிடமிருந்து வரும்.

குமரன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேரும் காலமும் வந்தது. திருநெல்வேலியில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான் குமரன். அருணாச்சலமும் அதேக்கல்லூரியில் குமரனின் பிரிவிலேயே சேர்ந்திருந்தான்.

குமரன் கவுன்சிலிங் மூலம் சேர்ந்திருந்தான் என்றால் அருணாச்சலம் பணம் கட்டி மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்திருந்தான். அந்த கல்லூரி வாழ்க்கையில் தான் இருவரின் முட்டலும் மோதலும் அதிகமாகியிருந்தது.

அதே கல்லூரி வாழ்க்கை தான் அருள்குமரனுக்கும் துளசிக்குமிடையே பரஸ்பர நட்பையும் தாண்டி காதலையும் உண்டாக்கியிருந்தது.‌ ஆமாம், ஆண்கள் இருவரும் கடைசிவருட படிப்பில் இருக்கும் போது அதேக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்திருந்தாள் துளசி.

பழைய ஞாபகத்தில் மெல்லிய புன்னகை உதடுகளில் கீற்றாக விரிய அமர்ந்திருந்த துளசியின் காதுகளில், “காவேரி அம்மா” என்ற கம்பீரமான ஆண் குரல் வந்து விழுந்தது.

‘இது… இது… குமரனின் குரல் தானே? அப்படியானால் குமரன் வீட்டுக்கு வந்திருக்கிறானா?!’ நினைவே திக்கென்று இருக்க, இருக்கையிலிருந்து சரேலென்று எழும்பினாள் துளசி…