“என்ன தம்பி, வீட்டு வேலை எல்லாம் முழுசா முடிஞ்சி போச்சா, தட்டியை எல்லாம் கழட்டுறீங்க?” வேலை ஆட்களை மேற்பார்வை செய்தபடி தெருவில் நின்றிருந்த இன்ஜினியரிடம் கேட்டார் சுலோச்சனா. அடிக்கடி அந்த நபரை எதிர்வீட்டில் பார்த்திருந்ததில் ஒரு நட்புணர்வு தோன்றியிருக்க, தயக்கமின்றி கேட்டுவிட்டார்.

“ஆமா ம்மா, இன்னைக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்க, இன்னும் ரெண்டு நாள்ல வீடு கிரகப்பிரவேசம்.” சிரித்தபடியே தகவல் சொன்ன அந்த நபர், 

“வீடு பால் காய்ச்சுற அன்னைக்கு உங்க பசுவையும் கன்னுவையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போக வாங்கிக்கலாம்னு நினைச்சு வேற ஏற்பாடு எதுவும் செய்யல, இரண்டையும் கொஞ்ச நேரத்துக்கு தருவீங்கல்ல ம்மா?” மறுப்பாக பதில் வராது என்ற நம்பிக்கையில் கேட்டார்.

“ஹாங்… தரலாம், ஒன்னும் பிரச்சினை இல்ல.” தடுமாறியபடியே சம்மதம் சொன்ன சுலோச்சனாவுக்கு மகனை நினைத்து பயம் தான். ஏற்கனவே மாடு வளர்ப்பதையே கௌரவக் குறைச்சலாக நினைத்து சத்தம் போட்டுக் கொண்டிருப்பவன், ஆட்கள் கூடியிருக்கும்போது தன்வீட்டிலிருந்து பசுவையும் அதன் கன்றையும் அவிழ்த்து சென்றால் என்ன சொல்வானோ என்ற பயம். 

‘பரவாயில்லை, தொழுவாசல் வழியே அவிழ்த்து கொடுத்துவிடலாம், மகன் என்ன எந்நேரமும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேவா இருப்பான்?’ இந்த தைரியத்தில தலையை சம்மதமாக ஆட்டிவிட்டவரின் பார்வை அவசரமாக தன் வீட்டின் மீது விழ, அங்கே நின்றுகொண்டு இவர்களையே வைத்தகண் வாங்காமல் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அவருடைய மகன் அருணாச்சலம் என்ற அருண். 

மகனின் பார்வையில் சட்டென்று உடலில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ள, அங்கிருந்து உடனடியாக நகர்ந்தார் சுலோச்சனா. 

அதுவரையிலும் அன்னையிடமிருந்த இலகுதன்மை மாறவும், பிள்ளைகளின் பார்வையும் தங்கள் வீட்டைத்தொட்டு அங்கே நின்றிருந்த தங்களுடைய அண்ணனைக் கண்டுகொண்டன. 

“நீங்க பெத்த பிள்ளை தானே ம்மா, எதுக்காக அவனுக்கு இப்பிடி பயப்படுறீங்க, அதுனாலத் தான் உங்க தலையில அவன் மிளகா அரைக்கிறான். போதாத குறைக்கு எங்க தலையும் உருட்டுறான். இப்பிடி தேவையில்லாம அவனைப் பார்த்து பயப்படுறதை நிறுத்துங்க ம்மா.” எப்போதும் போல அதிருப்தியாக முணுமுணுத்தாள் இளையவள் காவேரி. 

அதெல்லாம் அந்த தாயின் காதுகளில் விழுந்தால் தானே. அவசர அவசரமாக அவர் வீட்டுக்குள் நுழைய, “எதுக்கு தேவையில்லாம தெருவுல நின்னு கண்டவனுங்க கூட எல்லாம் பேசிட்டு நிக்குறீங்க?” அதட்டலாக கேட்டான் அவருடைய மகன். 

“இல்ல அருண், அந்த தட்டியை எல்லாம் எடுத்தாங்க இல்ல, அதான் வேலை முடிஞ்சிடிச்சான்னு கேட்டேன்.” மெல்லிய குரலில் சுலோச்சனா விளக்கம் கொடுக்க, 

“எவன் வீடு வேலை முடிஞ்சா என்ன, முடியாட்டா உங்களுக்கு என்ன? முடியலைன்னா நீங்க போய் முடிச்சு குடுக்கப் போறீங்களா என்ன? இதுல இவளுக இரண்டு பேரையும் தெருவுல நிக்கவச்சிகிட்டு, அவங்களுக்கு தான் மூளை இல்ல, உங்களுக்கு எங்கபோச்சு, பேசாம வீட்டுக்கு வர்றதை விட்டுட்டு தெருவுல நின்னு வேடிக்கை பாத்துட்டு நிக்குறீங்க.” தாயிடம் ஆரம்பித்து தங்கைகளை அதட்டுவதில் முடித்தான் அருணாச்சலம். 

“நீ எல்லாம் தாத்தா காலத்துல பிறந்திருக்க வேண்டிய ஆளு ண்ணா. தவறிப்போய் இப்போ பிறத்துட்ட, அதுவும் எங்க உயிரை வாங்குறதுக்குன்னே எங்களுக்கு அண்ணனா வந்து பிறந்துட்ட.” இயல்பான துடுக்குத்தனம் தலைதூக்க சொல்லிவிட்டாள் காவேரி.

அவ்வளவு தான்… “சின்னகழுதை, என்னையே எதுத்து பேசுற அளவுக்கு உனக்கு கொழுப்பு கூடி போச்சா?” நச்சென்று தங்கையின் தலையில் அருண் கொட்டிவிட, வலியில் முகத்தை சுருக்கியவளின் கண்கள் இரண்டும் சடுதியில் குளமாகிப் போனது.  

“என்னை அடிக்க இவன் யாரு ம்மா? யாரு இந்த அதிகாரத்தை அவனுக்கு கொடுத்தது?” எப்போதும் போல மௌனமாகச் செல்லாமல், திகைத்துப்போய் நின்றிருந்த தாயிடம் திமிறிக்கொண்டு நின்றாள் இளையவள். 

“அடிங்… பேசாம வாயை மூடிட்டு போகணும், இல்லைன்னா கன்னம் பழுத்துடும்.” கண்கள் இரண்டும் சட்டென்று கோபத்தில் சிவந்துவிட மறுபடியும் கைகளை ஓங்கிகொண்டு வந்தான் அருண்.

“அருண், தப்பு ப்பா. தங்கச்சியை அடிக்கக் கூடாது.” பலகீனமான குரலில் அதட்டியபடி, மகனின் கையைப் பிடித்து சுலோச்சனா தடுத்தார்.

“அடிக்கக்கூடாதா? அப்பிடி பொத்தி பொத்தி வளர்த்த உங்க மூத்த பொண்ணு செய்து வச்ச அசிங்கம் எல்லாம் மறந்து போச்சா உங்களுக்கு? பொட்டப்பிள்ளைங்களை கண்டிச்சி வளக்க துப்பில்ல, வந்துட்டாங்க எனக்கு புத்தி சொல்ல.” மூத்த தங்கையை பார்வையால் வெட்டிக் கூறு போட்டபடியே தாயிடம் எகிறினான் அருண். 

‘இன்னும் எத்தனைக் காலங்களுக்கு தான் இதையே சொல்லிக் கொண்டிருப்பான்?’ மனம் சோர்ந்து போக, அதற்கு மேலும் அங்கே நிற்க விரும்பாதவளாக மாடியில் இருக்கும் தங்களுடைய அறைக்கு தங்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள் துளசி. 

மகனின் அலட்சியத்தில் முகம் சுருங்கிப்போக, சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் சுலோச்சனா. 

“அங்கபோய் அப்பிடியே தூங்கிடாதீங்க, சீக்கிரம் ஒரு டீயை போட்டு எடுத்துட்டு வாங்க.” ஏதோ வேலையாளுக்கு கட்டளை இட்டது போல அதட்டலான குரலில் தாயிடம் அருணாச்சலம் சொல்ல, தன்னுடைய விதியை நொந்தபடியே டீ போட ஆரம்பித்தார் சுலோச்சனா. 

 ஆமாம்… அடிப்படையே தவறாக இருக்கும் போது விதியை நொந்துகொள்வதை தவிர, வேறு என்ன செய்துவிட முடியும் அந்த பெண்மணியால்?

“ம்ஹூம்…தெருவுல நின்னு பேசினா இவனோட கௌரவம் போயிடுமாம், பெரிய கௌரவம்… இன்னும் கொஞ்ச நாள்ல இவனே நம்ம எல்லாரையும் தெருவுல நிறுத்தப் போறானே, அப்போ எங்க போகுமாம் இவனோட கௌரவம்?” தங்களுடைய அறைக்குள் வந்தபிறகும் கோபம் குறையாமல் தமக்கையிடம் வெடித்துக் கொண்டிருந்தாள் காவேரி. 

“அப்பிடி எல்லாம் எதுவும் நடக்க அண்ணன் விடமாட்டான் டி, பயப்படாத.” தங்கையை சமாதானப்படுத்தும் விதமாக துளசி சொன்னாலும், அண்ணன் என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் உள்ளூர அவளுக்குமே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

“ஹா, இன்னுமா இவனை நீ நம்புற? இதுக்கு மேலயும் அண்ணன், நொண்ணன்னு இவனை நம்பின, காலம் முழுசும் கல்யாணமே ஆகாம ஔவையாரா இந்த வீட்டுலயே நீ இருக்க வேண்டியது தான். பேசாம அருள் குமரனை எப்பிடியாவது கண்டுபிடிச்சி அவரை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டே போயிடு.” முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு காவேரி பேசிக்கொண்டே செல்ல, திகைத்துப் போய் தங்கையைப் பார்த்தாள் துளசி. 

“இல்லைன்னா, உன் படிப்புக்கு தகுந்த வேலைப் பார்த்துட்டு இந்த வீட்டை விட்டு இறங்கிப் போயிடு. இந்த வீட்டுலயே இருந்தா என்னைக்குமே உனக்கு விடிவுகாலம் இல்ல. இதே நான் மட்டும் நீயா இருந்திருந்தா, போடா நீயும் உன்னோட கௌரவமும்னு சொல்லிட்டு அம்மாவையும் உன்னையும் கூட்டிட்டு இந்த வீட்டைவிட்டு எப்பவோ இறங்கி போயிருப்பேன். இப்பிடி இஞ்சினியரிங் படிப்பு கையில இருக்கும் போது மாடு மேச்சிட்டு வீட்டுலயே அடைஞ்சி கிடக்க மாட்டேன்.” இளங்கன்று பயமறியாது என்பதை தன்னுடைய வார்த்தைகளில் நிரூபித்து விட்டு, தலையோடு போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கொண்டாள் காவேரி.

‘அந்த களேபரம் நடக்கும் போது தங்கை ஏழு இல்லை எட்டாவது படித்துக் கொண்டிருந்திருப்பாளா? நடந்தவற்றை விளங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதோடு இன்னமும் எதையும் மறக்காமல் வைத்திருக்கிறாளே!’ அதிர்ச்சி விலகாமல் தங்கையையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் துளசி. 

‘ஹ்ம்ம்… அருள் குமரனை கண்டுபிடித்து கல்யாணம் செய்துகொள் என்று எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டாள்! முதலில் அவனை எங்கேயென்று தேடுவது. இங்கிருந்து அவன் கிளம்பி சென்றிருந்த ஆறேழு மாதங்களில் அவனுடைய தாத்தா இறந்து போக, அந்த நேரத்தில் ஊருக்கு வந்திருந்தானாம். அதுவும் பிறர் சொல்லத்தான் கேள்வி. அதன்பிறகு இதுவரையிலும் அவன் இந்த ஊர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லையே. இதே ஊரில் இருக்கும் அவனுடைய பெரியப்பா குடும்பத்திற்கு கூட அவன் இருக்கும் இடம் தெரியுமோ இல்லையோ. இதுவரையிலும் அரசல்புரசலாக கூட அவன் இருக்குமிடம் காதில் வந்து விழுந்ததே இல்லை. இதில் அவனைக் கண்டுபிடித்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமாம்.’ விரக்தி சிரிப்பில் துளசியின் இதழ்கள் விரிய, தங்கைக்கு அருகே படுக்கையில் படுத்துக் கொண்டாள். மனமோ அருள் குமரனிடமே போய் நின்றது.

‘ஒருவேளை அப்படிப்போய் நான் நின்றால், என்னைக் கல்யாணம் செய்துகொள்ள இப்போது சம்மதிப்பானா குமரன்?’ இந்த கேள்வி மனதில் எழ,

‘அதற்கு இன்னமும் அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் அம்மணி. அவன் அழைத்தபோது அவனோடு செல்ல மறுத்த உன்னை நினைத்தே தேவுடு காக்க உங்கள் காதல் என்ன தெய்வீக காதலா? முதலில் அது காதலா?’ என்று மறுகேள்வி கேட்டது அவளது மனது. 

அவளுக்குமே இந்த கேள்வி மனதில் நீண்டநெடு நாட்களாக எழும்பியிருக்கிறது. ‘பக்குவமே இல்லாத பத்தொன்பது வயதில் வந்த உணர்வுக்குப் பெயர் காதலா? தன்னில் வந்த அந்த உணர்வுக்காக எந்த மெனக்கெடலும், போராட்டமும் இன்றி தேமே என்று நான் உட்கார்ந்திருக்கும் போது, எப்படி அது காதலாகும்?” 

எப்போதும் போல இப்போதும் இந்த கேள்விகள் துளசியின் மனதில் எழும்ப, சத்தியமாக பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு. ஆனால் அந்த உணர்வு இரண்டு பேருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டதே. பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு, உற்றார் உறவினர்களை விட்டு எங்கேயோ கண்காணாத இடத்தில் குமரன். இவளோ சொந்த வீட்டிலேயே சிறகுகள் உடைக்கப்பட்டு வீட்டுச் சிறையில். 

குமரனுக்கும் தனக்குமிடையே வந்திருந்த ஈர்ப்புக்கு காதல் என்று பெயர் வைக்க துளசி இப்போது தயங்கினாலும், படிப்பு முடித்ததும் அத்தை மகன் அரவிந்தனோடு தனக்கு ஏற்பாடான திருமணத்தைக் அவன் கைகளில் கால்களில் விழுந்து நிறுத்தியிருந்தாள். அதன்பிறகு சரியான வரன் எதுவும் அவளுக்கு கூடிவரவில்லை. ஒருவேளை வரதட்சணை கொடுப்பதற்கு தாராளமாக பணம் அவர்களிடம் இருந்திருந்தால் எப்போதோ துளசி திருமதி ஆகியிருக்கலாம். 

ஆமாம்… தங்களைவிட உயர்வான குடும்பத்தில் தங்கையை மணம்முடித்து கொடுக்க பணம் இல்லாமலும், தங்களைவிட வசதிவாய்ப்பு, பாராம்பரியம் குறைவான வீட்டில் தங்கையை மணமுடித்து கொடுக்க அருணாச்சலத்துக்கு மனம் இல்லாமலும் போனதாலேயே இப்போது வரைக்கும் துளசி செல்வியாகவே இருக்கிறாள். 

மற்றபடி அருள் குமரனுக்காகவெல்லாம் துளசி காத்துக்கொண்டு இருக்கவில்லை. அப்படி இருப்பதற்கு அவளுடைய அண்ணனும் அனுமதிக்க மாட்டான். 

அதேநேரம் குமரனைத் தவிர வேறு யாரையும் தன்னருகே வாழ்க்கைத் துணையாக நிறுத்திப் பார்க்க இதுவரையிலும் துணியவில்லை அவளது மனது. இதோ, குமரனுக்கு திருமணம் ஆகியிருந்தால் என்ற அவளுடைய கற்பனையே அவளுக்கு உயிர் வலியைக் கொடுக்கிறதே! 

‘ஹ்ம்ம்… இதற்கு முடிவு என்பதே கிடையாதா?’ ஒரு பெருமூச்சோடு புரண்டு புரண்டு படுத்தவள் ஏதோ ஒரு பொழுதில் தூங்கியிருக்க, கார் கதவை ஓங்கி மூடும் சத்தத்தில் கண்விழித்தாள். 

‘யாராக இருக்கும்? வீட்டுக்கு வருவதாக அத்தை எதுவும் சொல்லவில்லையே?’ யோசனையோடு கண்ணைக் கசக்கியபடி தங்களுடைய அறையின் முன்பக்க ஜன்னல் அருகே வந்து நின்று, வெளியே பார்த்தாள். எதிர் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றிருந்த நான்கைந்து கார்களும் அதிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நபர்களும் துளசியின் கண்களில் விழுந்தார்கள். 

‘ஓ… இன்றுதானே வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வருவதாக இன்ஜினியர் சொன்னார்?’ இயல்பான ஆர்வம் தலைதூக்க எல்லோரையும் கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள் துளசி. 

ஆண்களும் பெண்களுமாக காரிலிருந்து இறங்கியவர்களில் பெரும்பான்மையோர் இளவயது உடையவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய நாகரீகத் தோற்றம், பார்த்துக்கொண்டு நின்றிருந்த துளசியின் கண்களையும் நிறைக்கத் தான் செய்தது. 

“ஹ்ம்ம்… நானும் வேலைக்கு சென்றிருந்தால் இப்படி இல்லையென்றாலும் ஓரளவுக்கேனும் நாகரீகமாக இருந்திருக்கலாம்.” மனம் தனக்கு மறுக்கப்பட்ட உரிமையில் ஏங்கிப் போய் நிற்க, பார்வையோ காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் மீது நிலைத்துப் போனது. 

‘இது… இது…’ கண்ணெதிரே கண்ட நிஜத்தை நம்ப முடியாமல் துளசியின் மனம் திகைத்துப்போக, கண்களை மூடித்திறந்து மறுபடியும் மறுபடியும் பார்த்தாள்.

“க்கா… இது நம்ம அருள் குமரன் தானே?” துளசியின் பின்னோடு வந்து நின்ற காவேரி, அக்காவின் தோள்களைச் சுற்றி கையைப் போட்டபடி உற்சாக மிகுதியில் சத்தமாக கேட்க, 

“ஆமாம்…” என்னும் விதமாக துளசியின் தலை மெதுவாக அசைந்தது…