Advertisement

வாராயோ காதல் கொள்ள – 4

அந்த காபி டேட் ஒன்றோடு முடியவில்லை. இதோ இன்னொன்றில் வந்து நிறுத்தியிருக்கிறது. அலுவலுக்கு வெளியே அலுவல் இல்லாத நாளில்… 
‘என்னை வேறு கோணத்தில் பாருங்களேன்’ என்று அவன் சொன்னதுதான் தாமதம் சம்மதமாய் ஆட இருந்த தலையை தடுத்து நிறுத்தி இருந்தாலும் அது என்னவோ ஆடித்தான் விட்டது அவனுக்கு வசதியாய்.
சில நேரம் என் மனம் எதை வேண்டுகிறது என்று புரிவதில்லை. அவனை விட்டு விலகிட வேண்டும் என்ற என் முடிவுக்கு மாறாய் அவனை நெருங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அவனைப் பற்றிய சிந்தனைகளும் பல விதமாய் பல ரகமாய் என்னை படுத்தி வைக்கிறது. நான் தேடும் ‘X-factor’ இதுவா என்று என்னை நானே கேட்டுக் கொண்டாலும் அதுவும் இல்லை என்றது மனம். 
“மேம் ஆர்டர்?” என்று எண்ணங்களை கலைக்க வந்தவரிடம் லேட்டர் என்று முடித்துக் கொண்டு அமைதியாகிவிட்டேன்.
இன்னும் வரவில்லை அவன். ஆறு மணிக்கு சந்திக்கலாம் என்று விட்டு இன்னும் வராமல் இருக்கிறான் என்ற கடுப்புடன் கைக்கடிகாரத்தை பார்த்தால் அதுவோ 6.01 என்று காட்டியது. 
ஒரு நொடி… ஒரு நொடி தாமதத்தை கூட பொறுக்கவில்லையா மனம்? 
இல்லை நான் முந்திக் கொண்டு வந்து அமர்ந்திருக்கிறேனா? 
ச்சை… சரியான இம்சை. இம்சையாய் இருக்கிறதே இவ்வுணர்வுகள் யாவும்… இந்த இம்சையிலிருந்து நான் தப்பிக்க வழி ஏதும் இல்லையா என்ன?  
இம்சையின் உருவாய் என் வாழ்க்கையில் அவன் நிரந்தரமாகிடுவானோ? என்ற ஐயத்தில் நான் இருக்க இப்பொழுது பார்த்துதான் இப்படியான பாட்டு கடையில் ஓட வேண்டுமா?
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
தாளத்திற்கு ஏற்ப நானும் அதனுடன் மெட்டிசைக்க, மின்னலென அவன் உருவம் தாக்கி செயல் இழந்தேன்.
அடக்கடவுளே இப்பொழுது எல்லாம் ஏன் பாடல்கள் கேட்கும் போது அவன் நினைவே வந்து தொலைக்கிறது? பாடல் வரிகளை அவனுடன் ஒப்பிட வைக்கிறது?
எப்பொழுது மறந்தாய் புதிதாய் அவனைப் பற்றி நினைக்க என்ற ஏளனம் வேறு அகத்தினில்.
“சாரி டு டிஸ்டர்ப் யூ… பட் நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. உங்க எதிர்ல தான் அஞ்சு நிமிஷமா உக்காந்து இருக்கேன்.” என்று அட்டென்டன்ஸ் போட்டவனை திகைப்புடன் நோக்கி எச்சில் கூட்டி விழுங்கினேன்.
பார்வை கைக்கடிகாரத்திற்குச் செல்ல 6.06 என்று காட்டியது.
“ஷார்ப் சிக்ஸ் இங்க வந்துட்டேன். பைக் பார்க் பண்ணிட்டு வர லேட் ஆகிட்டு.” என்று அவன் சொன்ன செய்திக்கு தலையாட்டிவிட்டு மேலே என்ன பேசுவது என்று தெரியாது விரல்களை கோர்த்து பிரித்தேன்.
“ஆர்டர் பண்ணிட்டீங்களா?” என்றதற்கு மறுப்பாய் ஒரு அசைப்பு மட்டுமே என்னிடம்.
“என்ன சாப்புடுறீங்க?”
“பரவாயில்லையே என்னோட விருப்பத்தையும் கேக்குறீங்க. நீங்களே ஏதாவது ஆர்டர் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.” அடுத்து என்ன பேச என்று யோசிக்கும் முன் வார்த்தைகள் என் நாவிலிருந்து தானாய் உதிர்ந்து விட்டது.
“என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நம்மோட முதல் சந்திப்புல ஏதோ ஒரு ஆர்வத்துல என்ஜாய் பண்ணலாம்னு சொல்லிட்டேன். இப்போ எல்லா மேரேஜ்லேயும் டான்ஸ் கச்சேரி சாதாரணம் ஆகிடுச்சே. சொல்லப்போனால் ஹால்தி, மெஹந்தி, சங்கீத் பங்ஷன்ஸ் இப்ப எல்லா இடத்திலும் இருக்கு. அவ்வளவு ஏன் மற்ற நாட்டு மக்களுக்கு கூட இண்டியன் வெட்டிங்னாலே இந்த சடங்குகள் தான் நினைவுக்கு வரும்.” என்று அவன் விளக்கம் கொடுக்க என் அதிருப்தியை தவறாது பதிவேற்றினேன்.
“அதுதான் எனக்கு பிடிக்கலை. என்ஜாய் பண்றோம்ங்குற பேர்ல நம்மோட கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருக்கோம். சில வருஷம் முன்னாடி வரைக்கும் எந்தவொரு நடுத்தர குடும்பத்திலும் மெஹந்தி சங்கீத்னு தனியா வச்சது இல்லை. பட் இப்போ அப்படியில்லை.”
“என்ஜாய்மென்ட் தப்புனு சொல்றீங்களா?” என்று ஏவினான் அவன்.
“அது அப்படியில்லை… நம்ம பக்க திருமணங்களிலும் கொண்டாட்டங்கள் இருக்கு. அதையெல்லாம் மறந்துட்டு வேற மோகத்துல நம்மோட அடையாளத்தை தொலைக்கிறது தப்புதானே?”
“புதிய மாற்றங்களை வரவேற்கிறது தப்பில்லையே.”
“தடயம் இல்லாமல் பழசை அழிச்சிட்டு புதுசா வர்றதுக்கு பேரு மாற்றம் இல்லை. பழமையின் தனித்துவம் மாறாமல் புதுசை புகுத்துறது தான் மாற்றம், அப்கிரடேஷன்.” என்றேன் நான் அழுத்தமாய்.
“உங்களை மாதிரி என்னால யோசிக்க முடியாது. என்னை பொறுத்தவரை கொண்டாட்டங்கள் நம்ம வாழ்க்கையை அழகாக்குது. வசந்தமாக்குது. மனசை சந்தோசமா வச்சிக்குது. அது போதும் எனக்கு.”
“உங்களை மாதிரி ஆளுங்களால தான் நம்மளோட அடையாளத்தை கொஞ்ச கொஞ்சமா இழந்துட்டு இருக்கோம்.” மெலிதாய் இருந்த கோபம் சற்று ஆவேசமாய் என்னிடமிருந்து வெளிப்பட்டுவிட அவனின் வீசிய எதிர் கேள்வி சம்மந்தமில்லாமல் இருந்தது.
“நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க வாழ்க்கையோட குறிக்கோள் என்ன?”
“வாட்? இதென்ன இன்டெர்வியூவா?” என்று விழித்தேன் நான்.
“சொல்ல விருப்பம் இல்லைனா பிரச்சனை இல்லை. பட் நான் சொல்றேன். என்னோட குறிக்கோள் இருக்கிற இந்த வாழ்க்கையை முழுசா அனுபவிச்சி வாழனும். நமக்கு கிடைச்சது நிறைய பேருக்கு கிடைக்காம இருக்கும், ஆனா நம்ம மனசுக்கு அது புரியாது. இருக்கிறதை விட்டு இல்லாததை நினைச்சி ஏங்கி, இருக்கிறதை விட்டுரும். அதை செய்யக்கூடாதுனு நினைக்குறேன்.”
“இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?”  
“என்னை பத்தி நீங்க புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். நம்மோட முதல் சந்திப்பு முட்டல் சந்திப்பாகிடுச்சு. முட்டலுக்கு முற்றும் போடலாம்னு கன்னத்துக்கு முட்டு குடுத்து பேசிட்டு இருக்கேன்.” என்று அவன் சூழ்நிலையை இலகுவாக்க நானும் இலகுவாய் சாய்ந்து அமர்ந்தேன்.
“சார் ஆர்டர்..” 
எப்போதுடா இவர்கள் பேசி முடிப்பார்கள் எப்போது கேப்{gap} கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருந்திருப்பார் போல ஆர்டர் எடுக்க மீண்டும் வந்துவிட்டார் அதே ஆள்.
“ஒன் பன்னீர் சாண்ட்விச் வித் எக்ஸ்ட்ரா சீஸ் அண்ட் ஒன் பிளாக் கரண்ட் மொஜிட்டோ.” என்றேன் நான் மெனு கார்டை பார்த்துவிட்டு.
“ஒன் கேப்புச்சினோ.” என்றான் அவன் சிரிப்புடன்.
எங்கள் ஆர்டரை ஏற்றுவிட்டு அந்த நபர் நகர்ந்துவிட நான் அவன் சிரிப்பிற்கான காரணம் வேண்டினேன்.
“இவ்வளவு நேரம் கலாச்சார காவலாளி மாதிரி பேசிட்டு நீங்க ஆர்டர் பண்ற மேலை நாட்டு உணவுகளின் முரண்பாடு என்னவோ?” என்று அவன் குறுநகையுடன் குறும்பாய் கேட்க, நான் வார்த்தைகளை தேடினேன் சூழ்நிலையை சமாளிக்க… 
“நீங்க பேசுன பேச்சுக்கு தேன்மிட்டாயும் பொரி உருண்டையும் தான் ஆர்டர் பண்ணி இருக்கணும் நாட் சம் சாண்ட்விச் வித் எக்ஸ்ட்ரா சீஸ்.” என்றான் அழுத்தமாய்.
அவன் சொல்வதும் சரிதானே. பெரிய இவள் மாதிரி பேசியவை யாவும் ஒருதலை பட்சமாய் இருக்கிறதே. இதை இவ்வளவு நாள் நான் யோசித்தித்தது கூட இல்லை. 
வீர வசனங்கள் மட்டும் எதையும் காத்து விடாதே. செயல்படுத்தினால் தானே அழிவிலிருந்து எதையும் காக்க முடியும்.
கலாச்சார கொடியை சம்பிரதாயங்களில் மட்டும் கடைபிடித்தால் போதுமா? அது மட்டுமா கலாச்சாரம்? 
“கலாச்சாரத்தை ஒரு பெட்டிக்குள்ள ஒரு எல்லைக்குள்ள அடைக்க முடியாது. மொழி, இனம், இசை, நம்பிக்கை, வாழ்க்கை முறை, பழக்க வழக்கம்னு எண்ணில் அடங்காதது அது. அதை நாம பாதுகாக்க தேவையில்லை. அதுதான் நம்மை பாதுகாத்து இந்த வாழ்க்கையை நமக்கு கொடுத்திருக்கு.”
என்னைவிட கலாச்சார தெளிவு அவனுக்கு அதிகமிருக்கிறது. வாழ்க்கை பற்றிய தெளிவும் இருக்கிறது. அது என் தயக்கங்களை உடைக்க என் எண்ணங்களை அவனிடம் பகிர வசதியாய் போயிற்று.
“எங்க வீட்டிலேந்து ரெண்டு வீடு தள்ளி நின்னா கூட எங்க அம்மா பாக்குற சீரியல்களோட சத்தம் கேக்கும். அதுல இது மாதிரி கல்யாணத்த ஒரு மாசம் பாட்டு, மெஹந்தி, டான்ஸ் பங்ஷன்ஸ்னு வச்சி வளத்துறது. ஹிந்தி நாடகங்கள் பார்த்து அதுல இருக்கிற மாதிரியே விழாக்கள் கொண்டாடுறதுனு நம்ம பழக்கத்துக்கு சம்பந்தம் இல்லாத பலதை காமிக்குறாங்க. அதை பார்த்துட்டு சிலர் அதே மாதிரி இங்கேயும் கொண்டாட விருப்பப்படுறாங்க. இது நம்மோட பழக்கங்களை மறக்க அடிச்சிடுமோன்னு எனக்கு அடிக்கடி தோணும்.”
நான் என் சிந்தையில் இருப்பதை பகிர அதை அமைதியாய் கேட்டுக் கொண்டவன்,
“உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது. அதே நேரம் நானும் ஒன்னு சொல்ல விரும்புறேன்… நம்ம ரெண்டு பேரோட கருத்து ஒத்து போகணும்னு அவசியம் இல்லை. மற்றவர்களோட கருத்துக்களை மதிச்சாலே போதும். நான் இவ்வளவு பேசுனது கூட என் பக்க நியாயங்களும் உங்களுக்கு தெரியணும்னுதான்.”
அவன் பேச பேச இனித்தது. உள்ளத்தை விழிக்க வைத்தது. தெளிவுபெற தெரிவுற வைத்தது. நான் நினைச்ச மாதிரி இவன் ரோக் இல்லை. பொறுக்கியா இருந்திருந்தா எனக்கான டைம் கொடுத்திருக்க மாட்டான். என்னையே சுத்தி சுத்தி வந்து தொந்தரவு பண்ணி இருப்பான். 
இவன் என்னை மதிக்கிறான். என் எண்ணங்களை வரவேற்கிறான். தவறுகளை கேலி பொருளாக்காமல் நாசூக்காய் புரிய வைக்கிறான். 
கொஞ்சம் குறும்பும் நிறைய பேச்சும் நீள்கிறது. இந்த நிமிடம் இப்படியே உறையாதா… நீளாதா என்று நான் ஏங்குகையில் எங்களின் உணவு வந்தது. சாண்ட்விச்சை பார்த்து நான் தயங்கி முழிக்க,
“கொள்கைகளுக்காக நாக்கை காய போடாதீங்க. உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்க…புடிச்சதை சாப்புடுங்க. அது உங்க உரிமை.” என்று அவன் உரைக்க நெஞ்சினில் இன்பச்சாரல். 
இதுதான்… இதுதான் நீ தேடிய ‘X-factor’ என்று அடித்துச் சொல்லியது மனம். இதை ஏன் நான் முதலிலேயே கவனிக்காமல் அவனிடம் சண்டையிட்டேனோ என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள, அடியை தாங்கிக்கொண்டு தாளத்தை என் மூலையில் ஓடவிட்டது.
வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே… 

Advertisement