Advertisement

வாராயோ காதல் கொள்ள – 2

மெஹபூபா மே தேறி மெஹபூபா

என்று ஒலித்தது என் மேசைக்கு அருகில். கழுத்தை மட்டும் நீட்டி பக்கத்து கேபினை பார்க்க அங்கிருந்த என் தோழியின் மொபைலில் தான் bae என்று ஒளிர்ந்தது.

இன்னும் பத்து நாளில் திருமணம். இன்று அனைவருக்கும் பத்திரிகை வைக்கவென சென்றிருக்கிறாள் அவள். என்னைத் தான் முதலில் துணைக்கு கூப்பிட்டாள். நானோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடுத்து “உனக்குத்தானே” “உனக்கு எப்போ?” என்று என்னை நோக்கி வீசப்படும் கேள்விகளுக்கு போலியாய் சிரிக்க வேண்டி வருமே என்று தவிர்த்தேன். 

எனக்கெல்லாம் இந்த யுகத்தில் ஒருவனைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. என்ன செய்ய! எந்தப் பையனைப் பார்த்தாலும் நான் தேடும் அந்த “X – factor” தோன்றவில்லையே. 

என் கிரகம், எனக்கு க்ரஷ் கூட இல்லை. அட என் தோழிகள் அங்கலாய்ப்பது போல் சம பாலினத்தின் மீது கூட ஈர்ப்பு வந்ததில்லை. எனக்குத்தான் ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்கவில்லையோ என்று கூட சில முறை தோன்றியிருக்கிறது. 

இப்போதெல்லாம் மனம் நிர்மலம் தான். சிலதை கடந்துவிட்டேன். இன்னும் பலதை கடக்க வேண்டியுள்ளது!

பல நேரம் ‘தனிமை அது இனிமை’ என்று பிதற்றினாலும் எனக்கும் காதலிக்க ஆசை. 

காதலிக்கப்பட வேண்டும் என்ற இச்சையெல்லாம் இருக்கிறது. ஆவலும் இருக்கிறது. ஆள் தான் சிக்கவில்லை. ம்ம்… கொஞ்சம் சோகம், கொஞ்சம் சுகம் தான் என் வாழ்க்கையும்.

“ஓரளவு பழகுன எல்லாருக்கும் கொடுத்துட்டேன். அந்த புது ப்ராஜெக்ட் லீடுக்கு பத்திரிகை கொடுக்கனுமா பா?” அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற என் தோழி தன் மொபைலை பார்த்துக்கொண்டே கேள்வியை என் மீது வீச, நான் பதில் கூறும் முன் மூழ்கிவிட்டாள் போனில்.

ம்க்கும் இனி நான் சொல்வது எதுவும் அவள் செவியில் விழப்போவது இல்லை.

“ஹே சொல்லுப்பா புது லீடுக்கு கொடுக்கணுமா என்ன? அவர் நம்ம ஆபிசில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகுது. அவர் கூட ஒர்க் பண்ற மாதிரி வருமா?” போனிலிருந்து கண்ணை பிரித்து மீண்டும் அதே கேள்வியை எழுப்பினாள் அவள்.

“எனக்கு தெரிஞ்சது எல்லாம் நம்ம டீம் அவர் டீம் கூட கோ-ஆர்டினேட் ஆகுற மாதிரி இருக்கும். அவ்வளவு தான்! இதுக்கு மேல முடிவு எடுக்க வேண்டியது நீதான்.” என்ற என்னை முறைத்தாள் அவள்.

“உன்னையெல்லாம் வச்சி மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்டி… யார் பெத்த புள்ள வந்து மாட்ட போகுதோ…” என்ற அவளது புலம்பலில் சிரிப்புத்தான் வந்தது எனக்கு.

அவள் சொல்வதும் சரிதான். யாரு பெத்த புள்ள வந்து என்கிட்ட சிக்கப்போகுதோ…  

“ஒரு பத்திரிகை தானே போயிட்டு போது அவருக்கும் கொடுத்திருவோம். இதுக்காவது துணைக்கு வருவியா நீ?” என்று அவள் எள்ளல் பேச, புன்சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தேன் அந்தப் புது வரவைக் காண… 

ஆனால் அந்த புதுவரவோ எங்களுடன் ஏற்கனவே பலநாட்கள் பழகியது போல் பேசினான்.

“ஓஹ் கங்கிராட்ஸ்!!! இந்த ஆபீஸ் வந்ததும் ஒரு மாதிரி ப்ளண்டா போகுதேன்னு நினைச்சிட்டு இருந்தேன். பட் கிரேட்! அ வெட்டிங் ஆன் தி வே…”

என் தோழி போலவே என் புருவமும் தன்னால் உயர்ந்தது அவனது பேச்சில். பெரிய அப்பாடக்கரா இருப்பான் போல…

“கண்டிப்பா மேரேஜுக்கு வந்துறேன்.  லெட்ஸ் ராக் தி ப்ளோர் இன் பங்க்ஷன்ஸ்.” என்றான் அதிக உரிமை எடுத்துக்கொண்டு.

“ஹலோ ஹலோ. இது சவுத் இந்தியன் வெட்டிங். டூ பீ க்ளியர், தமிழ் கல்யாணம். இதுல சங்கீத், ஹால்தி, மெஹந்தின்னு எதுவும் இருக்காது. முதல் நாள் நைட் பரிசம், ரிசெப்ஷன் அண்ட் மார்னிங் மேரேஜ். அதோட முடிஞ்சுது.” என்றேன் நான் கண்டிப்புடன். 

“ஓகே கூல்!” என்று இரு கைகளையும் மேல் உயர்த்தி தலையை மெலிதாய் உருட்டினான் அவன்.

“மேரேஜ்க்கு கண்டிப்பா வரணும்.” என்று அவனை அழைத்த என் தோழி என்னை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

வரும் வழியில், “என்னாச்சு உனக்கு? இப்படி பட்டுனு பேசிட்ட. பழக்கமில்லாத ஆளுங்க கிட்ட நீ இப்படி பேச மாட்டியே?” என்று என்னை அவள் கேள்விக்கூண்டில் நிறுத்தவும் தான் தேவையின்றி என் பீபி ஏறி இறங்கியது உரைத்தது.

“அது என்னவோ அவன் பேசுனதை கேட்டதும் கொஞ்சம் கடுப்பாயிட்டேன். அவனும் அவன் பாடி லாங்குவேஜும்… அதிகப்பிரசங்கி.” என்று அவனை பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்தியதும் ஒரு ஆசுவாசம். அவனது அதிகப்படியான பேச்சு ஏனோ என்னை சீண்டி பொங்க வைத்துவிட்டது.

“ஆர் யூ சீரியஸ்? ஒருத்தவங்களை பார்த்ததும் ஜட்ஜ் பண்றது தப்புனு சொல்லுவ… இப்போ நீயே இப்படி சொல்ற.”

“ஜட்ஜ் பண்றது வேற வைப்ஸ் வேற… அவன் கொஞ்சம் கடுப்பேத்துறான். சரி விடு, வேலையை பாப்போம்.” அவனை பற்றிய பேச்சே பிடித்தமின்மை தர அதிலிருந்து விடுபட விழைந்தது மனம்.

ஆனால் விடுபட விடவில்லை அவன்.

“உங்களுக்கு அதிகமா கோவம் வருமோ?” என் அருகில் ஒலித்த குரலில் நொடிப்பொழுதில் தவித்துத் திரும்பினேன். அவன் தான்! 

என் தோழியின் வரவேற்பு நிகழ்ச்சியில் சற்று பின்னே போடப்பட்டிருந்த நாற்காலியில் நான் தனித்து அமர்ந்திருக்க என் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்தான் அவன். எப்போது வந்தானோ நான் கவனித்திருக்க வில்லை. ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா இருக்க விடுறாங்களா?… 

“இப்படித்தான் பயமுறுத்துற மாதிரி வந்து பேசுவீங்களா?” என்று அவனிடம் சீறினேன் அவனைக் கண்டதும் வந்த கடுப்பில்.

“கூல் மேடம்ஜி. எனக்கும் இந்த ஹை ஹலோன்னு ஸ்டார்ட் பண்ணி பேச ஆசைதான். பட் நீங்கதான் நான் இங்க வந்ததும் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போனீங்க. உங்ககிட்ட மென்மையா பேசுனா எனக்கு சாதாரணமான பேச்சுகள் கூட கிடைக்காதுன்னு அப்போவே தெரிஞ்சுபோச்சு. சோ வை பார்மாலிடீஸ்? என்னை அவாய்ட் பண்ண முடியாத மாதிரி செய்யனும்ல… அதுதான் இப்படி.” என்று வழமை போல் அவன் கரமும் வடிவும் ஏறி இறங்கியது.

“நான் அவாய்ட் பண்றேனு தெரியுதுல்ல அப்புறம் ஏன் என்கிட்ட வந்து பேசுறீங்க?” நானே கும்பலிலிருந்து தப்பித்து ஆசுவாசமாய் தனித்து அமர்ந்து வரவேற்பை பார்க்க, இவன் ஏன் குறுக்கே வருகிறான் என்ற எரிச்சல் தானாய் மூண்டது எனக்குள்.

“நீங்க நினைக்கிற மாதிரியான ஆள் நான் இல்லைனு புரிய வைக்கத்தான்.” என்றான் அவன்.

“எக்ஸ்கியூஸ் மீ?” கேள்வி என்னிடத்தில்.

“முதல் சந்திப்பிலேயே என்னை தப்பா ஜட்ஜ் பண்ணி சுத்திட்டு இருக்கீங்க.” என்று வாதிட்டவனை விரட்டத் துடித்தது மனம்.

“சோ வாட்? நான் உங்களை எப்படி வேணும்னாலும் நினைப்பேன். அது என் இஷ்டம்.” என்று தோரணையாக நான் பேச, அவனது குரல் ஏனோ தணிந்து மெலிந்து ஒலித்தது. 

“ஷ். அது அப்படியில்லை. உங்க பார்வையில் என்னோட பிம்பம் தவறா பதிவாகிறதை நான் விரும்பல…”

“இல்லை எனக்குப் புரியல. என்னோட பார்வையில் நீங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? என்னோட எண்ணங்களை மாத்த முயற்சி பண்றீங்களா என்ன?”

“ஷார்ப் நீங்க.” என்று மழுப்புபவனை கண்டு என் நாளங்கள் சூடேறியது. 

விட்டால் அவனை அடித்து விடும் வேகம் என்னிடம். கை பரபரவென துடித்தது.

“சும்மா சுத்தி வளைச்சு பேசாதீங்க. சொல்லப்போனா உங்ககிட்ட பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.” என்றேன் நான் காரமாய்.

“பட் எனக்கு இருக்கே.” என்றவனை நான் கூர்மையாகப் பார்க்க, என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் போல், “பிகாஸ் நான் தேடுற ‘X-factor’ உங்ககிட்ட மட்டும் தான் இருக்கு.”

“வாட்?” அதிர்வில் வார்த்தை வந்ததா இல்லை காற்று வந்ததா என்று கூட உணர முடியவில்லை.

காட்சிப் பிழையா இல்லை காதில் பிழையா?

செவியை செப்பனிட வேண்டும் போல… தன்பாட்டுக்கு எதையோ கேட்டு மூளைக்கு அனுப்பி வைக்கிறது. அதுவும் தன் போக்கில் கட்டளைகள் இட்டு என்னை முடக்க,

“நீங்க கேட்டதிலும் பிழையில்லை. நான் சொன்னதிலும் பிழையில்லை. இதுவரைக்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கேன் பழகி இருக்கேன். பட் அந்த ஸ்பெஷல் X-factor உங்க கிட்ட தான் இருக்கு.” என்றான் பற்கள் மின்ன. 

நான் தேடுவதை அவன் என்னிடம் கண்டானா?

அப்படி கண்டான் எனில் அதற்கான அர்த்தமென்ன?

அவன் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்?

நான் இப்போது என்ன உணர்கிறேன்?

என்னதான் உணர வேண்டும்?

அவன் குறிப்பால் உணர்த்துவது மெய்யா பொய்யா?

என்போலவே X-factor என்று பிதற்றுகிறானே. எங்களின் எண்ணவோட்டங்கள் சம அலைவரிசையில் இருக்கிறதா என்ன?

வாய்ப்பில்லையே. இவனைப் பார்த்ததும் கடுப்பு தான் வந்தது எனக்கு. அவன் மூக்குடைவது போல் நான் பேசிய முதல் பேச்சிலேயே அவனும் கடுப்பாகி இருக்க வேண்டுமே? அப்படி நடவாமல் அவனுக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்ற வேண்டும்?

இதன் ஆதியும் அந்தமும் எங்கு தொடங்கி எங்கு முடியுமோ என்று நினைக்கவே படபடப்பு வந்தது.

அதிகப்பிரசங்கி என்று நினைத்து நான் இவனை ஒதுக்கி இருக்க, இப்போது இவன் சொல்லிய வார்த்தையை மறக்க முடியுமா? இல்லை முன்பு போல் இவனை ஒதுக்கத்தான் முடியுமா?

ஆனால் அதெப்படி பார்த்ததும் x factor வரும் என்று கேட்கத் துணிந்த மனமே என்னை குத்தியது. நான் தேடியதும் முதல் பார்வையில் தோன்றும் அதே x factor ஐ தானே! ஆனால் அவன் கண்ட அந்த ஃபாக்டர் எதுவோ என அவனைக் கேட்கவும் செய்தேன்.

“அதென்ன X-factor?”

“நான் கண்ண

தொறக்கையில் உன் முகம்

தொியனும் உசுருள்ள வரைக்குமே

உனக்கென்ன புடிக்கணும்”

Advertisement