Advertisement

வாராயோ காதல் கொள்ள – 1

“வரன் ஏதாவது வருதா? ரொம்ப நாளா தேடுறீங்க தானே?” 

மூன்று வருடங்களாய் எந்த உறவினர் வீட்டு விழாக்களுக்குச் சென்றாலும் செவியில் விழும் அதே ஸ்வரம் இன்றும் தவறாது என் செவியில் வந்து விழுந்தது. எப்போதும் போல் ஒரு பெருமூச்சு எழுந்து மடிந்தது என்னுள். ஸ்வரம் அபஸ்வரமாய் மாறிடுமோ என்ற அச்சம் என் வீட்டினரை தொற்றிக்கொண்டாலும் எனக்கோ அபஸ்வரமாகி அஸ்தமனமாகிவிட்டது என்றோ!

“எதுவுமே நமக்கு ஒத்து வரமாட்டிங்குது. உங்களுக்கு தெரிஞ்ச வரன் ஏதாவது இருந்தா சொல்லுங்க.” தேய்ந்த வார்த்தைகளாய் இருந்தாலும் மீண்டும் புதிது போலவே ஒலித்தது என் அம்மாவின் பதில். 

ம்கூம் என் அம்மாவையும் மாற்ற முடியாது கேள்வி கேட்பவர்களையும் முடக்க முடியாது என்று எண்ணத்தான் முடிந்தது. வேறு என்ன செய்திட முடியும்? காலம் காலமாய் ஊறிப் போயிருக்கும் கட்டமைப்பை வீர வசனம் பேசி மாற்றிட முடியும் என்று எண்ணிய முட்டாள் பேதையாய் மண்ணை கவ்வியிருக்கிறேன் பலமுறை.

“இந்த காலத்து பொண்ணுங்க எதிர்பார்ப்புக்கு எல்லாம் செவ்வாய் கிரகத்திலிருந்து தான் மாப்பிள்ளையை புடிச்சிட்டு வரணும். ஒருசில குடும்பத்துல பொண்ணுங்க கூட அனுசரிச்சு போவாங்க போல, ஆனா இந்த பொண்ண பெத்தவங்க ஆடுற ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா. கல்யாணம் பண்றதே குதிரை கொம்பா இருக்கு. நான் உங்களை சொல்லல… பொதுவா சொல்றேன்.” என்று மழுப்பலாய் சிரித்தார் அப்பெண். 

அப்பெண் எனக்கு அத்தை முறையாம். சற்று முன்னர் வரை இப்படி ஒரு அத்தை எனக்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்திருக்க, தெரிந்த  நொடி இது அவ்வளவு முக்கியத்துவமாய் இருந்திருக்காது, அந்த அத்தையும் தன் மகனுக்கு வரன் பார்க்கிறார் என்ற கொசுறு எனக்குத் தெரியாமல் இருந்திருந்தால்… 

அவர் மகனையும் என்னையும் கோர்த்து விட என் அம்மா திட்டம் வகுக்க அந்த அத்தையோ பசப்பினார். மற்றொரு பூமர் ஆண்ட்டி!

பெண்! அடக்கமாய் இருக்க வேண்டும்! அடங்கவும் வேண்டும்! 

எதிர்பார்பற்ற அன்பு கிட்டாவிடினும் பிரதிபலன் பாராது குடும்பத்தின் மீது அன்பு செலுத்திட வேண்டும்!

அடித்தாலும் அடியேன் பணிய வேண்டும்!

ஆசைக்கோட்டைகள் கட்டி அது இடிந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல் புன்னகை பூசிக்கொண்டு பூலோகம் சுற்றிட வேண்டும்!

பெற்றவர்களைப் பார்க்க புகுந்த வீட்டினரிடம் இசைவுப் படிவம் பெற்றிட வேண்டும்!

நோவு வந்து கேட்பாரின்றி கிடந்தாலும் பிள்ளைகளையே முதன்மையாய் நிறுத்திட வேண்டும்!

இப்படி நீண்டு கொண்டே செல்லும் இந்த ‘வேண்டும்’ எல்லாம் ஏன் பெண்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினால் அதிகப்பிரசங்கி என்ற பெயரே பதிலாய் கிடைக்கிறது. 

இதே எதிர்பார்ப்புகளை ஒரு பெண் தனக்கு வரப்போகும் துணையிடம் எதிர்பார்த்தால் செவ்வாய் கிரகத்திலிருந்து தான் ஆண்களை கொண்டு வரவேண்டுமாம்! அடுத்து என்ன விண்வெளிக்கு போக வேண்டும் என்று சொல்வார்களோ?

என்று மாறுமோ இவையெல்லாம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதியை மதிக்கும் மனிதம் இருந்தாலும் என்னை மதித்து என் உணர்வுகளுக்கு மொழி கொடுத்து சமத்துவம் பேசும் ஆண்மகனை எங்கே சென்று தேடுவார் என் அம்மா! கொஞ்சம் அல்ல மிகவும் கடினம் தான். ஆனால் அதற்காக எல்லாம் என் அம்மாவும் அப்பாவும் என் விருப்பிலோ, என் எதிர்பார்ப்பிலோ சமரசம் செய்திடவில்லை. என்னை எனக்காக விரும்பும் ஒருவனை சல்லடையில் இட்டு தேடிக்கொண்டிருக்கிறார். கிடைத்தது என்னவோ பூஜ்யம் தான் இதுவரை. 

“உங்க மகனுக்கும் வரன் பாக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன்.” என்று என் அம்மா மீண்டும் துவங்கப்பார்க்க, நான் பார்த்த பார்வையில் கப்சிப் என்று அப்பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

“சரிங்கண்ணி. நீங்க ஏதாவது வரன் இருந்தா சொல்லுங்க, நானும் ஏதாவது இருந்தா உங்களுக்கு சொல்றேன்.” 

புதிதாய் அறிமுகமான அந்த அத்தையோ கடனுக்கு தலையை உருட்டிவிட்டு அங்கிருந்து நடைக்கட்ட, நான் என் அம்மாவை டின் கட்ட தயாரானேன்.

“உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? அந்த பூமர் ஆன்டி கிட்ட போய் இப்படி பேசிட்டு இருக்க. எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு நான் கேட்டேனா?”

“நீ கேக்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்து தானே எங்களுக்கு பழக்கம். அதேமாதிரி தான் இதுவும். நீ கேக்குற வரைக்கும் நாங்க காத்துட்டா இருக்க முடியும்?”

“ஓ… இவ்வளவு நாள் எனக்கு மாப்பிள்ளை வாங்கத்தான் அலையுறீங்கன்னு தெரியாம போச்சே…” என்று வியந்து நான் பேச, என் அன்னையின் லோ பீபி கூட ஹை பீபிக்கு செல்வதை என்னால் உணர முடிந்தது.

“ஏய் என்னடி இப்படி பேசுற… உன்னை கட்டிக்க போறவன் என்ன கடையில் கிடைக்குற பிஸ்கோத்தா?”

“கடையில இல்லை மண்டபத்துல கிடைக்குறதுமா…” என்ற என் பதிலில் அம்மாவின் பேச்சு முற்றிலும் நின்றுபோனது அந்த வாரம் முழுவதும்.

வார விடுமுறை ஒரு வரம்! 

அதுவும் மழை வரும் அறிகுறிகள் தென்பட, கையில் காபி கோப்பையுடன் வாசலில் அமர்ந்து மண்வாசனையை நாசியில் நுகர… அப்பப்பா! சுகம் சுகமே!

ஆனால் அம்மாவுக்கோ? அன்றுதான் மூச்சு விடமுடியாத அளவு வேலை முட்டும். 

விடுப்பு கூட எடுக்காது எங்களையே பூலோகம் என்று சுழலும் என் அம்மாவின் நிலை எனக்கு வேண்டாம் என்றே தர்க்கம் செய்து தனியாய் இருக்க விரும்பினேன். முடிந்ததா? இல்லை. 

தனிமை கொடுமையாம்! என் அம்மாவின் வாதம்.

தனிமை இனிமை என்று எவ்வளவோ சொல்லியும் அதை ஏற்க மறுப்பவர்களிடம் நான் என்ன சொல்ல? அவர்கள் கூட்டி வரும் வரன்களை மறுத்துக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான்.

படித்து வேலைக்குச் சென்று லட்சங்களை சம்பாரித்தாலும் என் பருப்பு இந்த விஷயத்தில் மட்டும் வேகவில்லை.

“என்னம்மா வீடே அமைதியா இருக்கு? உன் அம்மா அமைதியா இருக்கா?”

எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் என்னிடம் கேட்கும் அப்பாவுக்கு ஈடுகொடுத்து நானும், “நானே உங்களை கேட்கணும்னு இருந்தேன். அம்மாகூட சண்டை எதுவும் போட்டீங்களா என்ன?”

“இதுதான வேணாங்குறது…” என்று ஜெர்க்காகினார் அவர். 

“இங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனா தெரியாத மாதிரியே கேக்குறது? என்னை சமாதானம் பண்ண சொல்லி அம்மா அனுப்புனாங்களா இல்லை அம்மாவை சமாதானம் செய்ய என்னை அனுப்ப போறீங்களா? எதுக்கு அடி போடுறீங்க அப்பா?”

“ம்கூம்… உன்கிட்டையும் பேச முடியாது உன் அம்மாகிட்டேயும் பேசி ஜெயிக்க முடியாது. பட் உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. உனக்கு பிடிச்சமாதிரி நீ எதிர்பார்க்குற மாதிரி ஆளை அரரேஞ்ச் மேரேஜ்ல தேடுறது ரொம்பவே சிரமம். இருந்தாலும் நானும் அம்மாவும் உன்னை கட்டாயப்படுத்தாம உனக்கேத்த மாதிரிதான் தேடுறோம். இருந்தும் நீ ஏன் அம்மாவை கோச்சிக்குற?”

“பின்ன எங்க போனாலும் என் பொண்ணுக்கு வரன் தேடுறேன்னு விளம்பரம் பண்ணி காண்டேத்துனா என்ன செய்வாங்கலாம்? அதுவும் அந்த பூமர் ஆண்டி நாம எதிர்பார்க்குறதே தப்புங்குற மாதிரி பேசுறாங்க. செவ்வாய் கிரகத்துக்கு போகனுமாம்!” என்ற என் எண்ணத்தில் அந்த அத்தையின் முகத்தில் தெரிந்த ஏளனமும் மொழியில் இருந்த கிண்டலும் இன்னுமே நினைவில் ஒட்டிக்கொண்டு மனம் சமனாக மறுக்கிறது.

“நாலு பேர்கிட்ட சொல்லி வச்சா தான் தெரியும். யார்கிட்டயும் சொல்லாம இருந்தா எப்படி உனக்கு பொருத்தமானவரை கண்டுபிடிக்கிறது?”

“அதுதான் வேண்டாம்னு சொல்றேன். நமக்கு ஒன்னு கிடைக்கணும்னு இருந்தா அது எங்கிருந்தாலும் கண்டிப்பா கிடைக்கும். எனக்கு ஒருத்தரை புடிச்சி அவரோடவே வாழனும்னு எப்போ தோணுதோ அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன். அது வரைக்கும் லெட் மீ பீ மைசெல்ஃப்.” இதற்கு மேல் சோப்பும் பேஸ்டும் போட்டு விலக்க முடியாது என்ற முடிவிற்கு நான் வந்திருக்க, அப்பா காற்புள்ளி இட்டார். 

“அதில்லமா…”

விடுவேனா நான்!

“நான் ஒன்னும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே அப்பா. ஒருத்தரை பார்த்ததும் இவங்களோட நம்மளோட வாழ்க்கையை வாழணும்னு தோணும். அப்போ பண்ணிக்கிறேன். என் வாழ்க்கையோட முக்கியமான முடிவை எடுக்குற சுதந்திரம் எனக்கு இருக்குன்னு நம்புறேன்.” 

“உன்னோட வாழ்க்கையை உனக்கு பிடிச்ச மாதிரி அமைச்சுக்குற உரிமையும் சுதந்திரமும் நாங்க உனக்கு கொடுத்திருக்கோம். ஆனா  அம்மாவுக்கும் எனக்கும் இருக்கிற பயம் உன் வயசு தான். ஒரு அளவுக்கு மேல நாம எதிர்பார்க்குற மாதிரி வரன் வரலாம் வராமலும் போகலாம். மோஸ்டலி வராம போக வாய்ப்பு அதிகம் இருக்கு. அப்போ வத்தலோ தொத்தலோ கிடைச்சா போதும்னு ஒத்துகிற மாதிரி ஆகிடும்.”

“அப்படி வத்தலையோ தொத்தலையோ ஒத்துக்கணும்னு என்ன கட்டாயம் இருக்கு? ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்னு சொல்லி தப்பிக்க விரும்பல. ஆனா நான் வாழுற எல்லா நிமிஷங்களும் நிஜம். அந்த நிஜத்துல நான் சந்தோஷமா இருக்கேன். எப்போவும் இருப்பேன். என்னைக்குமே நான் எடுத்த முடிவுகளை நினைச்சி வருத்தப்பட மாட்டேன். புரிஞ்சிக்கோங்க அப்பா.” என்று நான் மூச்சை பிடித்துக்கொண்டு பேசி முடித்த நொடி என் அம்மா வந்தார். நான் பேசியதை கேட்டிருப்பார் போல…

“விடுங்க எப்போதும் அவள் விருப்பப்படிதானே எல்லாமே செஞ்சிருக்கோம். இதுவும் அப்படியே  இருந்துட்டு போகுது. ஆனா அதுக்காக எல்லாம் என்னோட தேடலை நான் நிறுத்த மாட்டேன்.”

எனக்கு இருக்கும் வைராக்கியம் எங்கிருந்து வந்தது என்று அடிக்கடி இப்படித்தான் போட்டு உடைத்து விடுகிறார் அம்மா.

“தேடுங்க தேடுங்க… கல்யாண மண்டபத்துல மட்டும் தேடாம கொஞ்சம் வெளி இடத்திலையும் தேடுங்க…” என்று ஏளனம் செய்தாலும் மனதில் ஒரு நிம்மதி. என் உரிமையை நிலைநாட்ட அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கொண்டதில் வந்து அமர்ந்தது அமைதி. அந்த அமைதியை இன்னும் அழகாக்கும் விதமாய் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் என்னை தொட்டுச் சென்றது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல், உடன்வரும் வரிகள்.

 

உனை நீ ரசித்தால் 
முழுதாய் வசித்தால் 
இதம்தான் இந்த தனிமையே!
தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுமே 
அது உனக்கான காலம் வந்தால் 
உனைச் சேருமே! 

 

  

Advertisement