Advertisement

அந்தப் பாடலின் வரிகள் கூட… ஒரு தடவைதான் கேட்டான்…ஆனால் கேட்டதும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது அந்தப் பாடல்.

திருமணமான ஒரு பெண்…கணவன் அவள் அருகில் வரத் தயங்குகிறான்… கணவனை அழைக்க வேண்டும்… ஆனால் கண்ணியத்தையும் விடக் கூடாது…

பக்கத்தில் பழமிருக்க 

பாலோடு தேன் இருக்க 

உண்ணாமல் தனிமையிலே 

உட்கார்ந்த மன்னன் அவன்

அடடா என்ன அருமை…இதை விட அழகாக யாராலாவது அந்தச் சூழ்நிலையை சொல்லி விட முடியுமா என்ன?

யோசித்துக் கொண்டே தேடிப் பிடித்து அவள் போடும் சேனலைப் போட்டான்.

அப்போது ஆரம்பித்ததும் ஒரு காதல் பாடல்தான்…பெண் பாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாடலின் வரிகள்  ரசிக்கும்படி அமைந்திருந்தன.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல”

ஆம் அவள் இல்லாமல் அவன் அவனாக இல்லைதான்… வந்த கொஞ்சம் நாட்களிலேயே  அவனை அப்படி மாற்றி விட்டாள்.

மனைவியைப் பற்றி நினைக்க நினைக்க அவன் தாபம் அதிகமாகியது. இப்போது இந்த நிமிடம் அவள் தன் கையணைப்புக்குள் வேண்டுமென்றும் எலும்புகள் நொறுங்கும் வண்ணம் அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவன் மனமும் உடலும் பரபரத்தது. 

இது உடல் சார்ந்த உணர்வு இல்லை…இப்போது அவள் அருகில் இருந்தாலும் கணவனாக அவன் நடந்து கொள்ள மாட்டான். அவன் மனதில் இருக்கும் குழப்பங்கள் முற்றாகத் தீரும் வரை அவளாக வந்து அவனிடம் எல்லாவற்றையும் சொல்லும் வரை அவன் சொன்ன சொல்லை மீறப் போவது இல்லை. 

ஆனால் மனைவியின் அண்மை வேண்டும்… அவளைப் பார்வையாலாவது பருக வேண்டும் என அவன் மனம் துடித்தது. 

கடிகாரத்தில் நேரம் பார்த்தான். 

இரவு பத்து…தூங்கி இருப்பாளா…இல்லை, கல்யாண வீடு இல்லையா சந்தடி நிறைந்துதானிருக்கும்…என நினைத்தவன் அவளைக் கைபேசியில் அழைத்தான்.

கல்யாண வீட்டில்…மதுமிதா, தீக்ஷிதா இன்னும் திருமணமாகாத கூட்டம் ஒரு பக்கம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புதிதாகத் திருமணமாகி இருந்த ப்ரியம்வதாவை சீனியர் திருமதிகள் கேலி செய்து கொண்டிருந்தனர். 

பேச்சு கொஞ்சம் எல்லை மீற அவள் மனம் கணவனின் அண்மையை நாடியது. 

இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்…அவளும் இல்லை…ஏதாவது படித்துக் கொண்டிருந்து விட்டு உறங்கப் போயிருப்பான்.கைபேசியில் அழைக்கலாமா… சாப்பிட்டீர்களா எனக் கேட்கக் கூப்பிட்டேன்  என சாக்கு சொல்லிக் கொள்ளலாம். 

கண்ணபிரானிடம் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தாள்… ‘அவர் சாப்பாடு பார்த்துக் கொள்ளுங்கள் மாமா’ என்று… 

ஆனால் கணவனிடம் பேசுவதற்குக் காரணம் சொல்ல வேண்டுமே…கைபேசியை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தவளைக் கவனித்து விட்ட அவளது அத்தை பெண் மயூரி மற்றவர்களிடம் கண்ணைக் காட்ட அனைவரும் அவளைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அதே நேரம் விஜய்யிடம் இருந்து அழைப்பு வர ‘ஓ’ எனப் பெருங்குரலெடுத்து அனைவரும் கத்த நாணமும் மகிழ்ச்சியுமாய்க் கைபேசியை எடுத்துக் கொண்டு தனியே நகர்ந்தாள்.

“சொல்லுங்க!”

அழைத்து விட்டானே ஒழிய அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அன்று காலையில்தான் கொண்டு விட்டிருக்கிறான்… நன்றாக இருக்கிறாயா எனக் கேட்டால் அபத்தமாக இருக்கும்…என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டால் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என அவள் பதில் கூறினால் அசிங்கமாகப் போய் விடும்… எனப் பலவாறு யோசித்தவன் சட்டெனக் காரணம் கண்டுபிடித்து “மல்லிகாவுக்குப் பரிசு வாங்கிட்டேன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். உன்கிட்ட வாட்ஸ் ஆப் இருக்கா?” என்று கேட்டான்.

நாற்பத்தி ஐந்தாயிரம் செலவழித்து அவன் வாங்கிக் கொடுத்த அலைபேசியில் வாட்ஸ்ஆப் வசதி இருப்பது இவனுக்குத் தெரியாதாமா…வாங்கிக் கொடுத்து இத்தனை நாட்கள் கழித்துக் கேட்கிறான் என மனதுக்குள் நொடித்துக் கொண்டவள் “ம்ம்ம் இருக்கு” என்றாள்.

“அந்த கிஃப்ட் ஃபோட்டோஸ் அனுப்புறேன்… பார்த்துக்கோ… ஏன்னா கடையிலேயே கிஃப்ட் ராப் பண்ணச் சொல்லிட்டேன்.நீ அதைப் பார்க்க முடியாதேன்னுதான் அதுக்கு முன்னாலயே ஃபோட்டோ எடுத்து வச்சுட்டேன்” எனவும் கெட்டிக்காரன்தான் என மனதுக்குள் பாராட்டிக் கொண்டாலும் “ம்ம்ம்” என்பது தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.ஆழ்ந்த அவன் குரல் செவிகளில் மோதும் இன்பம் ஒன்றே   போதும் எனத் தோன்றியது.

“வச்சுடட்டுமா?” என அவன் கேட்கவும்தான் சுரணை வந்தவள் போல் “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்…ஆச்சு…நீ?”

“ம்ம்ம்…சாப்பிட்டேன்”

“சரி வைக்கிறேன்”

“ம்ம்ம்”

அவன் வைக்கவும் இன்னும் கொஞ்ச நேரம் பேசினால்தான் என்ன… அவன் குரலையாவது கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமே எனத் தோன்றவும் வாடிய முகத்துடன் வந்தவளை மீண்டும் சூழ்ந்து கொண்டனர் இளையவர்கள்.

“இன்னிக்குக் கல்யாணப் பெண் மல்லிகா…அவளை விட்டுட்டு எல்லாரும் என்னையே ஓட்டிட்டு இருக்கீங்க…இருங்க உங்களை” என அவள் அடிப்பதற்குப் பொருள் தேடுவது போல் பாவனை செய்யவும் அனைவரும் சிதறி ஓடினர்.

சிரித்துக் கொண்டே வந்து படுத்தவள் தன் கைபேசியை எடுத்தாள்.

ஆம்… அவள் பிறந்தநாளுக்காக வாங்கிக் கொடுத்த கைபேசிதான் அது.

பணத்தைத் தூக்கிப் போட்டு அவன் செய்த ப்ரச்சனைக்குப் பிறகு ஒரு நாள் அலுவலகம் விட்டு சீக்கிரமே திரும்பியவன் அவளை வெளியே வருமாறு அழைத்தான். அவளும் உடனே உடை மாற்றிக் கிளம்பினாள்.

“எங்க போறோம்?

“உனக்கு மொபைல் வாங்க”

அவள் உடல் இறுகியது.

அவளிடம் மாற்றத்தை உணர்ந்தவன் “என்ன ஆச்சு?” எனவும்

“வேண்டாம் வீட்டுக்குப் போகலாம்…வண்டியைத் திருப்புங்க”

“ஏன்? உன் மொபைல் ரொம்பப் பழசா இருக்கு”

“பரவாயில்ல எனக்கு அதுவே போதும்”

“ரியா! பிடிவாதம் பிடிக்காதே”

“இதுக்குப் பேர் பிடிவாதம் இல்ல…” என்றவள் “நீங்க கட்டாயப்படுத்தி வாங்கிக் கொடுத்தாலும் நான் பயன்படுத்த மாட்டேன்” எனவும் வேறு வழி இன்றி வண்டியைத் திருப்பினான்.

அவளை எப்படி சமாதானப் படுத்துவது என அவனுக்குத் தெரியவில்லை. அவன் நடந்து கொண்ட முறைக்கு அப்பொழுதே மன்னிப்புக் கேட்டு விட்டான். அவளும்தான் மன்னிப்புக் கேட்டாள் நீ மன்னித்தாயா என்ற மனசாட்சியின் கேள்விக்கு அது வேறு இது வேறு என பதிலளித்தவன் வேறு திட்டமிட்டான்.

அதன்படி பிறந்த நாளன்று பரிசாகக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டு எல்லோர் முன்னிலையிலும் திறந்து பார்க்கவும் செய்து விட்டான்.

அவன் திட்டத்தை உணர்ந்து கொண்டவள் அதைப் பயன்படுத்துவது இல்லை என்ற முடிவோடு இருந்தாலும் அன்று முழுவதும் வாழ்த்து செய்திகளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தவளின் பழைய கைபேசியை மது, தீக்ஷி ஏன் அவள் பெற்றோரும் கேள்வியாக நோக்க அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது.

பணம் தேவை என அவனிடம் இதுவரை வாய் திறந்து கேட்டதில்லை அவள். அவன் கொடுத்ததையும் பயன்படுத்தவில்லை. ஆனால் புடைவை நகை போன்ற விஷயங்களை கணவனின் கௌரவம் காக்க என அணிந்து கொண்டாள்.அதைப் போல இந்தக் கைபேசியை பயன்படுத்துவதில் மட்டும் என்ன வந்து விடப் போகிறது என நினைத்துப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.

நடப்புக்குத் திரும்பியவள் வாட்ஸப்பை செயலியைத் திறந்து அவன் அனுப்பி இருந்த படங்களைப் பார்வையிட்டாள்.

கடுகளவே இருந்த சிறு சிறு முத்துக்களைக் கொத்தாகத் திரட்டி கனமான தங்க பட்டையில் சேர்த்து நெக்லஸும் அதே போல் த்ராட்சைக் கொத்துப் போல் கம்மல்களும் கைகளுக்கு ஸ்க்ரூ போடக் கூடிய வளையல்களும் என செட்டாக இருந்த அந்த நகைகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

‘ஸ்ப்லெண்டிட்’ என அவனுக்கு பதில் அனுப்பினாள்.

ரசிகன்தான் ஆனால் மனைவியை ரசிக்க மட்டும் மறுக்கிறான் என நினைத்துக் கொண்டே படுத்தவள் துள்ளி எழுந்து அமர்ந்தாள்.

கணவன் பேசும் போது பின்னணியில் ஏதோ பாட்டு ஒலித்தது போல் இருந்தது. மனதை ஒன்றுபடுத்தி யோசிக்கப் பாடல் வரிகள் வடிவம் பெற, 

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே

நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே

நீ தருவாயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் 

நீயும் நானும் வேறல்ல

அவளுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. அவன் சினிமா பார்க்க… சினிமாப் பாடல்கள் கேட்க மாட்டான் என்பதைத் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே அறிந்திருந்தாள். அப்படி இருக்கையில் இன்று தனியாகப் பாடல் கேட்கிறான் என்றால் அவளைத் தேடுகிறான் என்றுதானே அர்த்தம். இந்த நினைவுகளுடனும் மனதில் மகிழ்ச்சியுடனும் முகத்தில் புன்னகையுடனும் தூங்கிப் போனாள். 

கணவனின் மனமாற்றம் தந்த மகிழ்ச்சியுடன் அவள் நிம்மதியான உறக்கத்திற்குச் செல்ல விஜய்யோ அவளை நினைத்து உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். 

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா 
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் வரவில்லையா
உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியலையா
உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா
ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையை போலே அள்ளி அணைத்திடவா
அன்னையைப் போலே உன்னுடல் தன்னை வருடிக் கொடுத்திடவா
அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா

தொடரும்

Advertisement