Advertisement

அத்தியாயம் 9

அன்று ப்ரியம்வதாவின் தந்தை ரவிச்சந்திரன் அவளைத் தொலைபேசியில் அழைத்தார்.

“சொல்லுங்கப்பா”

“மாப்பிள்ளை எப்போம்மா ஃப்ரீயா இருப்பாரு?”

“எதுக்குப்பா கேட்கிறீங்க?”

“இல்லடா! நம்ம மல்லிகா இல்ல!அவளுக்குக் கல்யாணம் வச்சுருக்காங்க”

“யாரு! சோமு சித்தப்பா பொண்ணு மல்லிக்காவுக்கா?”

“ஆமாடா! அவளுக்குத்தான்”

“அவ இப்போதானேப்பா காலேஜ் முடிச்சா…நம்ம தீக்ஷியை விட ரெண்டு வயசுதானே பெரியவ”

“ஆமாடா!வயசு குறைச்சல்தான்…ஆனா சோமுக்கு உடம்பு சரி இல்ல இல்லையா…அதுனால பொண்ணு கல்யாணத்தை சீக்கிரமே நடத்திடணும்னு பார்க்குறான். மாப்பிள்ளைக்குப் பத்திரிக்கை வைக்கணுமாம். நானும் கூட வர்றதுதானே முறை.அதுதான் மாப்பிள்ளை ஊருலதான் இருக்கிறாரா… இல்ல வெளியூர் ஏதாவது போய் இருக்கிறாரான்னு உங்கிட்டக் கேட்கலாம்னு கூப்பிட்டேன்.”

“ஊருக்கெல்லாம் போகலப்பா… இங்கேதான் இருக்காங்க. எப்பிடியும் சாயந்திரம் ஏழு மணிக்கு மேல வீட்டிலதான் இருப்பாங்க. நீங்க சித்தப்பாவை அழைச்சுட்டு இன்னிக்கே வந்துடுங்க.”

“சரிம்மா அப்பிடியே செய்றேன்…நீ நல்லா இருக்கேல்லடா?”

“நல்லா இருக்கேன்பா” அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்தே சொன்னாள்.

அவள் சொன்னது போலவே மாலை ஏழு மணிக்கு சரியாக வந்து விட்டனர் ரவிச்சந்திரனும் அவரது தம்பி சோமசுந்தரமும்.

விஜய் வீட்டுக்கு வர ஏழரை ஆகி விட்டது.வந்ததும் “வாங்க மாமா” என்றவன் சோமசுந்தரத்தையும் பார்த்து “வாங்க மாமா” எனவும் அவருக்கு வாயெல்லாம் பல்லாகி விட்டது.

“கல்யாணத்துல பார்த்தது…ஆனாலும் ஞாபகம் வைச்சுருக்கீங்களே மாப்பிள்ளை!!“ என்று பாராட்டி விட ஏற்கனவே மனைவி அலைபேசியில் தகவல்  கூறியிருந்ததை மறைத்து விட்டு “ஏதும் முக்கியமான விஷயமா?” என எதுவும் அறியாதவன் போல் கேட்டு விட்டு எதிரில் நின்றிருந்த மனைவியைப் பார்த்து யாரும் அறியாமல் கண்சிமிட்டி ‘எப்படி?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.

அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் புடைவை மறைவில் ‘சூப்பர்’ என்று அபிநயித்தாள்.

இதை எல்லாம் பாராதவர் போல் பார்த்துக் கொண்டிருந்த கண்ணபிரான் கனைத்துக் கொண்டதில் இருவரின் கவனமும் அவரிடம் திரும்பியது. 

“உங்க சின்ன மாமா பொண்ணுக்குக் கல்யாணமாம் விஜி…அதுக்குப் பத்திரிக்கை வைக்கத்தான் வந்துருக்காங்க”

“ஓ! ரொம்ப சந்தோஷம்! என்னிக்குக் கல்யாணம்?”

“வர்ற 25 ஆம் தேதி மாப்பிள்ளை…நீங்க எல்லாரும் வந்து கல்யாணத்தை சிறப்பா நடத்தித் தரணும்…” என எழுந்து பழத்தட்டில் வைத்து அழைப்பிதழை மிக பவ்யமாக நீட்டினார்.

“கண்டிப்பா வந்துடறோம்” என்னும் போதே காஃபி வந்திருக்க “நீங்க காஃபி சாப்பிட்டீங்களா?” என வீட்டாளாக உபசரித்து அவர்களின் “ஆயிற்று” என்ற பதிலை வாங்கிக் கொண்ட பின் அவன் காஃபியை அருந்த ஆரம்பித்தான்.

“அது மட்டும் இல்லைங்க மாப்பிள்ளை…நம்ம ப்ரியா பொண்ணுக்கு மல்லிகான்னா ரொம்ப இஷ்டம்…மல்லிகாக்கும் ப்ரியான்னா உசிருதான்.அதுனால ப்ரியாவை ஒரு வாரம் முன்னாடி அனுப்பி வச்சீங்கன்னா நல்லா இருக்கும்.”

“ஒரு வாரமா?”

ரவிச்சந்திரன் சங்கடத்தில் நெளிந்தார். அவர்களுக்கும் திருமணம் சமீபத்தில்தானே ஆகி இருந்தது. ஒரு வாரம் மனைவியைப் பிரிந்து இருப்பதென்றால்…என யோசித்துக் கொண்டிருக்கும் போதே…

“ஒரு வாரமெல்லாம் ரியாவை விட்டு என்னால இருக்க முடியாது மாமா…வேணும்னா ரெண்டு நாள் முன்னால வரச் சொல்றேன்” என்று கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ஏதோ அதுதான் உலக இயல்பு என்பது போல் சொல்லி விட்டு “என்ன ரியா? நீ என்ன சொல்றே?” என்றவனை ‘பே’ என்று பார்த்தாள் அவள்.

‘அவர் என்னமோ ஒரு வாரம் என்கிறார்… இவன் என்னமோ மனைவியைப் பிரிய முடியாது என்கிறான்…என்னடா நடக்குது இங்கே’ என மனதுக்குள் குமைந்தவள் வேறு வழி இன்றி “ரெண்டு நாள் முன்னால கண்டிப்பா வந்துடறேன் சித்தப்பா”  என்றாள்.

“சரிம்மா! மாப்பிள்ளை இந்த அளவு உன் மேல பிரியமா இருக்கிறதைப் பார்த்து எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்மா…கண்டிப்பா நீங்களும் கல்யாணத்துக்கு வந்துடணும் மாப்பிள்ளை…நீங்களும்தான் சம்பந்தி” என்று விட்டு விடைபெற்றார்.

பத்தொன்பதாம் தேதி நித்திலாவின் திருமணத்துக்கு தம்பதி சமேதராகச் சென்று வந்தனர். 

நித்திலாவின் கணவனாக வரப் போகும் தினகரன் அலுவலகத்தில் விஜய்க்குப் பத்திரிக்கை வைத்து அழைத்திருந்ததால் அவனும் இயல்பாக வந்து கலந்து கொண்டிருந்தான். 

மல்லிகாவின் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பு வரை அதைப் பற்றி எதுவுமே பேசாமல் அவன் இருந்தது கண்டு அன்று காலை அவனிடம் சென்று நின்றாள்.

என்ன என்பது போல் பார்த்தான். இப்போது இந்தப் பார்வைகள் அவளுக்குப் பழகி விட்டன. 

ஒரு பார்வைக்கு ‘என்ன’ என்று அர்த்தம் இன்னொரு பார்வைக்கு ‘ஏன்’ என்று அர்த்தம்… ஒரு பார்வைக்கு  ‘வேண்டும்’ என்று அர்த்தம் இன்னொரு பார்வைக்கு ‘வேண்டாம்’ என்று அர்த்தம்…

இப்படியே சென்றால் அவன் விழியின் மொழிகளுக்கு ஒரு விளக்கவுரைப் புத்தகமே எழுதி விடுவாள்.

அறைக்கு வெளியே நன்றாக இருப்பவன் அறைக்குள் வந்தால் மௌனச் சாமியாராகி, அவள் ஏதாவது கேட்டாலும் பெரும்பாலும் பார்வையிலோ அல்லது ஒற்றை வார்த்தையிலோ பதிலளித்துச் சென்று விடுவான்.

இப்போதும் அவன் பார்வையில் கேட்ட என்ன விஷயம் என்ற கேள்விக்கு பதிலாக “இன்னிக்கு 23 ஆகிடுச்சு மல்லிகா கல்யாணம் 25 அன்னிக்கு” என்றாள்.

“ம்ம்ம் தெரியும்” என்று விட்டுச் சென்று விட்டான்.

‘போ என்கிறானா போகாதே என்கிறானா’ என அவள் மண்டையை உடைத்துக் கொள்ள இரவு உணவு வேளையின் போது “நாளைக்குக் காலைல நான் ஆஃபிஸ் கிளம்பும் போது தயாராகி வந்தேன்னா உங்க சித்தப்பா வீட்டுல விட்டுடறேன்” என்றான்.

மறுநாள் காலை அவனுடனே காலை உணவையும் முடித்துத் தயாரானாள். அவளது சித்தப்பா வீட்டுக்கு வழி கேட்டுக் காரை ஓட்ட ஆரம்பித்தவன் “என்ன பரிசு கொடுக்கலாம்னு நினைச்சுருக்கே?”

“ஹான்!” என்றவள் உண்மையிலேயே அதைப் பற்றி நினைக்கவேயில்லை. இப்போது என்ன செய்வது எதுவும் வாங்கவில்லையே என அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே அவள் கண் முன் சொடக்கிட்டவன் “என்ன ஆச்சு” எனவும் வெட்கி, “இல்ல நான் அதை மறந்தே போய்ட்டேன்” என்றாள்.

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன் “சரி பதில் சொல்லு” என்றான்.

“எனக்குத் தெரியலயே” என்றாள் பரிதாபமாக…நிஜமாகவே அவளால் முடிவு  செய்ய முடியவில்லை. பணமாகச் செய்யலாமா…இல்லை பரிசுப் பொருளாகச் செய்யலாமா…அப்பா வீட்டில் இருந்தவரை வேறு நிலை…இப்போது அவள் செய்வது ஒவ்வொன்றும் கணவனின் கௌரவத்தோடு சம்பந்தப்பட்டது… நித்திலா திருமணத்துக்கு அவனுக்கும் அழைப்பு இருந்ததால் அவனே பரிசைத் தேர்ந்தெடுத்து விட்டான்.அவளுக்கும் அது பிடித்திருந்ததால் கேள்வியே எழாமல் போய் விட்டது. இது உறவாக வேறு போய் விட்டதால் என்ன செய்யலாம் எனச் சட்டென்று முடிவு செய்ய முடியாமல் திணறினாள்.

“உனக்கு மல்லிகாவை ரொம்பப் பிடிக்குமா…இல்ல ஃபார்மாலிட்டிக்குதான் கல்யாணத்துக்குப் போறியா…அதாவது கூப்பிட்டுட்டாங்களேன்னு…”

“இல்ல இல்ல, மல்லிகாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சித்தி கொஞ்சம் ஒட்டாமப் பழகுவாங்க…ஆனா மல்லிகா என் மேல ரொம்ப உயிரா இருப்பா…”

“சரி! அப்பிடின்னா நானே என்ன வாங்கலாம்னு முடிவு செய்துக்கிறேன்.ஆனா என்னால வர முடியாது. நாளை காலை பெரியப்பா வரும் போது குடுத்து விட்டுடறேன். நீ பார்த்துக் குடுத்துக்கோ.” எனவும் அவன் வர மாட்டான் என்பது மட்டுமே மனதில் பதிய எதையும் யோசிக்காமல் தலையாட்டினாள்.

ஒரு வாரம் முன்புதான் நித்திலா திருமணத்துக்குப் போய் வந்திருக்கக் கண்டிப்பாக வாருங்கள் என அழைக்கவும் தயக்கமாக இருந்தது. 

அம்மா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன போது கோபப்பட்டது போல் கோபப்பட்டு விட்டானானால் என்ன செய்வது எனப் பயமாக இருந்தது அவளுக்கு.

அவளை அங்கு வீட்டின் முன் இறக்கி விட்டவன், “கல்யாண வேலைல மும்முரமா இருப்பாங்க…நான் வந்தா என்னை கவனிக்கிறேன்னு அவங்க வேலை கெடும். அதுனால நீ போய்க்கோ” என்று விட்டுக் கிளம்பிச் சென்று விட்டான்.

இனி மறுநாள் மாலைதான் அவனைப் பார்க்க முடியும். திருமணத்துக்குப் பின்னான முதல் பிரிவு இருவர் மனதுள்ளும் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு பெருமூச்சுடன் சிறிய தந்தையின் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்தே தாமதமாகத்தான் கிளம்பினான் விஜய். திருமணத்திற்கு முன்பு வரை அதுதான் அவன் கிளம்பும் நேரம்.வேலை முடிந்து விட்டாலும் ஷட்டில் விளையாண்டு விட்டு மெதுவாகவே செல்வான்.

மனைவி வந்த பிறகே அவள் முகம் பார்க்க ஆசைப்பட்டு மற்றவர்களுக்காக எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு விரைவில் சென்று கொண்டிருந்தான்.

வழியில் நகைக் கடையில் வண்டியை நிறுத்தித் தங்கத்தில் முத்தைக் கோர்த்து செய்திருந்த ஒரு நகை செட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

இன்று மனைவி வீட்டில் இருக்க மாட்டாள் என்ற நினைவே அவனுக்கு அயர்ச்சியைத் தந்தது.

தினமும் அவன் காரை விட்டு இறங்கும் போதே வெளியே வந்து விடுவாள். அவளது மலர்ந்த முகமே அவனது களைப்பை விரட்டுவதாக இருக்கும்.

மனிதன் ஓயாமல் ஒழியாமல் பாடுபடுவது எதற்காக? தன்னைச் சேர்ந்தவர்களுக்காகத்தானே…முதலில் தாய்,தந்தை… பின் மனைவி மக்கள்…அதுவும் கடைசி வரை வரப் போவது மனைவி என்ற உறவு மட்டுமே.

வீட்டில் காத்திருந்த பெரியப்பா “வா விஜி நேரம் ஆகிடுச்சு போல… சரி, வா வந்து சாப்பிடு” என அழைத்தார்.

அவன் சாப்பிட்டு முடியும் வரை அருகிலேயே அமர்ந்து பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார். 

“நேரமாச்சு பெரியப்பா நீங்க போய்ப் படுங்க” என்ற போதும் கேட்கவில்லை. அவன் உண்டு முடித்துக் கிளம்பிய பிறகே சென்றார்.

தங்கள் அறைக்குள் நுழையவே பிடிக்கவில்லை அவனுக்கு. எப்போதும் இரவு உணவு முடிந்ததும் அவன் சிறிது நேரம் கூடத்திலேயே அமர்ந்து செய்தி அலைவரிசை ஏதாவது பார்ப்பான். அந்த நேரத்தில் அவள் உண்டு முடித்து மாடிக்குச் சென்று விடுவாள்.

அவன் மாடி அறையில் நுழையும் போது தொலைக்காட்சியியில் ஏதாவது பாடிக் கொண்டிருக்கும். இன்று அப்படி இல்லாததே வெறுமையாக இருந்தது அவனுக்கு.

ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

அவன் திரைப்படங்கள் பார்க்க மாட்டான். பாடல்களும் கேட்க மாட்டான். காரிலும் சரி…அலுவலகத்திலும் சரி…இன்ஸ்ட்ருமென்டல் ம்யுசிக் மட்டுமே கேட்பான். திரைப்படப் பாடல்களாக இருந்தாலும் இசையை மட்டுமே கேட்கும்…ரசிக்கும் பழக்கம் அவனுக்கு.

பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து என அவர்களது கவிதைகள் படிப்பான். ஆனால் அவற்றை இசைப் பாடல்களாகக் கேட்டதில்லை. 

ப்ரியம்வதா வந்த பிறகே அவள் போடும் பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருந்தான். 

அதுவும் முதல் நாள் கேட்ட “வாராதிருப்பானோ…” பாடல் அவன் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. 

Advertisement