Advertisement

அவன் மார்பில் சாய்ந்தவள் உடல் அழுகையில் குலுங்க… “ஏய்! என்னடா…என்ன ஆச்சு… யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா…பிறந்த நாள் அதுவுமா உன்னை சந்தோஷமா வச்சுருக்கணும்னு நான் பார்த்துப் பார்த்து எல்லாத்தையும் செய்துட்டு இருக்கேன்…நீ என்னடான்னா…” 

அவன் சொல்லச் சொல்ல அவள் அழுது கொண்டே இருப்பதைக் கண்டவன் அவள் தோள்களைப் பற்றி ஒரு உலுக்கு உலுக்கி “ஏய்! இப்போ உன் அழுகையை நிறுத்தப் போறியா இல்லையாடி” எனவும் படக்கென்று நிமிர்ந்தாள்.

அவன் ‘டி’ என்று அழைத்த அதிர்ச்சியில் கண்ணீர் சட்டென்று நின்று விட அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

அவள் கண்களுக்குள் பார்த்தவன்… “என்னம்மா… எதுக்கு இந்த அழுகை?”என மென்மையாகக் கேட்க…மீண்டும் அழுகையில் முகம் கசங்கி உதடுகள் பிதுங்க… “அங்கே…அங்கே ஒரு குழந்தை…”எனத் தடுமாறினாள்.

“குழந்தை…குழந்தைக்கு என்ன?”

“ஒரு குழந்தை… ஏழு எட்டு வயசு இருக்கும்…அந்தக் குழந்தைய…அந்தப் பச்சை மண்ணைப் போய் ரேப் பண்ணி இருக்காங்க ஆ…விஜய்…அதுவும் மூணு பேர்…”

சொல்லி முடிக்கும் முன்பே மீண்டும் கண்களில் அருவி பெருக்கெடுக்க அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

சில நிமிடங்கள் கழித்து அவள் தலையை வருடியபடி, “வது! இந்த உலகத்துல நல்லவங்களுக்கு சரிசமமாக் கெட்டவங்களும் இருக்காங்கடா…என்ன செய்ய…”

“என்னதான் கெட்டவன்னாலும் இப்பிடியா…பால் மணம் மாறாத குழந்தை…அதைப் பார்த்து இப்படி ஒரு எண்ணம் தோணுதுன்னா அவனை எல்லாம் நிக்க வச்சு சுட வேணாம்”

“செய்யலாம்தான்…சௌதி அரேபியா மாதிரி நாடுகள்ல அப்பிடித்தான் தண்டனை குடுக்கிறாங்க…ஆனா நம்ம நாட்டுல சட்டங்கள் அத்தனை கடுமையா இல்ல… அதுவும் இல்லாம நம்ம கை மீறின விஷயங்களுக்கு நாம என்ன செய்ய முடியும் சொல்லு?” என்றவன் அவள் அழுகை மட்டுப்பட்டிருப்பதைக் கண்டு,  “சரி! இப்போ கிளம்பலாமா… நேரம் ஆச்சு…பிறந்தநாள் அன்னிக்கு நிஜமாவே பர்த்டே பேபி மாதிரி ஒரே அழுகாச்சியாப் போச்சு” என அவன் கண்சிமிட்ட அவளும் கண்ணீருடனே புன்னகைத்தாள்.

அவள் கண்களைக் கைக்குட்டை கொண்டு துடைத்து விட்டவன் அவள் தோளில் கை போட்டுத் தன்னுடன் அணைத்தவாறு கூட்டிச் சென்றான்.

“நான் உன்னை ரொம்ப தைரியசாலின்னு நினைச்சா இப்படி இருக்கியே”

“என்ன தைரியசாலியா இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்கள் கேட்டாக் கல்லு மாதிரியா இருக்க முடியும்?”

“அதாவது என்னை மாதிரி…”

“நான் அப்பிடிச் சொல்லல” தயங்கியவாறு உரைத்தாள்.

“எனக்கும் மனசு கஷ்டமாதான் இருக்கும்…ஆனா உன்னை மாதிரி ஓன்னு அழ மாட்டேன்…அப்புறம் இந்த மாதிரி நடக்காம இருக்க என்னால என்ன முடியும்னு யோசிச்சு அதைப் பண்ணுவேன்”

அவன் சொல்வதில் உள்ள நியாயம் புரியவும் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “நீங்க சொல்றது சரிதான். அழுகிறனால ஒண்ணும் ஆகப் போறது இல்ல” எனவும் “தட்ஸ் மை கேர்ள்” என்றவாறு அவளை உள்ளே அழைத்துச் சென்றான். 

‘எங்களுக்கு எதுக்குப்பா ஊர் சுத்தல் நீங்க போய்ட்டு வாங்க’ எனப் பெரியவர்கள் நேராக வீட்டுக்குக் கிளம்பி விட இளையவர்கள் மட்டும் தீம் பார்க்குக்குக் கிளம்பினர்.

அங்கே உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே தீக்ஷிதா அவளது கல்லூரித் தோழிகள் சிலரைப் பார்த்து விட, “அக்கா ப்ளீஸ்! என் ஃப்ரெண்ட்ஸ் வந்துருக்காங்க… நான் அவங்க கூட ஜாய்ன் பண்ணிக்கிறேனே…நீங்க முடிக்கும் போது எனக்குக் கால் பண்ணுங்க…நான் வந்துடறேன்” எனவும் ப்ரியம்வதா விஜய்யைப் பார்த்தாள்.

அவன் கண்களாலேயே சம்மதம் கூற, “சரி தீக்ஷிம்மா…ஆனா கவனமா இருக்கணும்…அப்பா அம்மா எங்களை நம்பிதான் உன்னை அனுப்பி இருக்காங்க…ஏதாவது ப்ரச்சனைன்னா அத்தானைத்தான் கேட்பாங்க…அதை மனசுல வச்சு நடந்துக்கோ” எனப் புத்திமதி சொல்லி அனுப்பி விட்டுச் சுற்றக் கிளம்பினார்கள்.

கணவன் மனைவிக்கு இடையில் கரடியாக நுழைய வேண்டாம் என நினைத்து மதுமிதா பின்தங்க வேறு வழி இல்லாமல் அவளுடன் இணைந்து நடந்தான் வருண். ஆனால் பார்ப்பவர்கள் தவறாக நினைக்காத வண்ணம் கண்ணியமான இடைவெளி விட்டே சென்றான்.

கணவனின் அண்மையில் மதுவைக் கொஞ்ச நேரம் மறந்து விட்ட ப்ரியம்வதா திடீரென்று நினைவு வந்தவள் போல் பின் திரும்பிப் பார்க்க மதுவும் வருணும் இணைந்து நடந்து வருவது தெரியக் கணவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

அவளது பார்வையிலேயே அவள் கேட்க நினைத்ததைப் புரிந்து கொண்ட விஜய் ”வருண் ரொம்ப நல்லவன் ரியா! நீ கவலைப்படத் தேவை இல்ல…என் தங்கையா இருந்தாலும் நான் தைரியமா வருண் கூட அனுப்புவேன்” எனக் கூறவும் இந்தக் கவலை அகன்று திருமணத்துக்கு முன் அழைத்த வது என்ற செல்லப் பெயர் மீண்டும் ரியாவாகி விட்டதே எனத் தோன்றினாலும் அதையும் புறம் தள்ளி விட்டுக்  கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 பின் இப்படி சந்தர்ப்பங்கள் அவளுக்கு அரிதுதானே… இப்போது அவன் மற்றவருக்காக நடிப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு. இதுதான் வாழ்க்கை… இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்…காலம் மாறும்… கணவன் மனமும் மாறும்…தான் காலையில் மனமுருகிக் கடவுளிடம் வைத்த வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது. 

இராட்டினத்தைப் பார்த்ததும் மது போக வேண்டும் என அடம்பிடித்தாள். ப்ரியம்வதா தான் வரவில்லை எனக் கூற, ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான் விஜய்.

“ஏன் வேணாம்னு சொல்றே ரியா!!”

“ம்ஹூம்…நான் மாட்டேன்…எனக்கு வயிறு ஏதோ செய்யும்.”

“அவளை சுவாரசியமாகப் பார்த்தவன், “உனக்கு ஸ்ப்லிட் பெர்சனாலிடி டிசார்டர் இருக்கும் போலவே…காஷ்மீர் போனப்பவும் இப்பிடித்தான் பயப்பட்டே…உன் தைரியத்தைப் பார்த்து உன்னை ஜான்சிராணி, ஜோன் ஆஃப் ஆர்க் ரேஞ்ச்ல கற்பனை பண்ணி வச்சுருக்கேன்…நீ என்னடான்னா இந்த தம்மாத்துண்டு ஜயன்ட் வீலுக்கு வர மாட்டேன்ற” எனவும் மது விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஐயோ அத்தான்! உங்களுக்கு ப்ரியா பத்தி ஒன்னுமே தெரியல. பார்க்கத்தான் தைரியம் எல்லாம்…யாராவது தப்பு செய்தா முதல் ஆளாப் போய் அவங்களைக் கண்டிச்சுருவா… மத்தபடி சரியான பயங்கொள்ளி… இவ டென்த் படிக்கிறப்போன்னு நினைக்கிறேன்… ஏதோ பேய்ப் படம் பார்த்துட்டு நைட் எல்லாம் ஒரே காய்ச்சல்…பயந்து பயந்து கத்த வேற செய்ஞ்சா…தீக்ஷி கூட அந்த அளவுக்குப் பயப்படல” எனவும் அவனுக்கு இப்போது ப்ரியம்வதா பயந்தால் எப்படி இருக்கும் எனப் பார்க்கும் ஆர்வமே வந்து விட்டது.

“வருண்! நீ போய்  நாலு பேருக்கும் டிக்கட் எடுத்துட்டு வா!”

“ஓகே பாஸ்” என அவன் செல்ல மதுவும் அவனோடு சென்றாள்.

ப்ரியம்வதா தவிப்புடன் கைகளைப் பிசைந்தவாறு நின்றிருக்க அவளைத் தோளோடு அணைத்தவன் “என்ன பயம்…நான்தான் கூடவே இருக்கேன்ல…அப்புறம் என்ன… ஒரு தரம் போய்ப் பார்த்தேன்னா பயம் போய்டும். யு வில் லைக் இட்” என்று அவளைத் தேற்றினான்.

இராட்டினத்தில் ஏறி அமர்ந்த உடனே அவளுக்கு என்னவோ செய்ய  ஆரம்பித்து விட்டது. அவர்கள் இருந்த கூடையை நகற்றி அடுத்தடுத்த கூடைகளில் ஆட்களை நிரப்ப அவர்கள் இருந்த கூடை மெல்ல மெல்ல மேலே ஏறவும் தன்னை மீறித் தன் வலது கையால் கணவனின் கைகளைப் பற்றிக் கொண்டான். 

அவள் கைகள் மெல்ல மெல்ல அவன் கைகளை இறுக்கவும் வலது கையை மாத்திரம் அவளிடம் கொடுத்து விட்டு இடது கையால் அவள் தோளைச் சுற்றிக் கொண்டான். 

மது சுவாரசியமாகச் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தாள். வருண் குனிந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட ஆரம்பிக்க அந்த உணர்வைத் தாங்க முடியாத ப்ரியம்வதா கணவனை நன்றாக நெருங்கி அமர்ந்தாள். அவனும் அவள் தோளில் இருந்து கையை எடுத்து அவளது இடைபற்றித் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். 

வெற்றிடையில் அவன் கைகள் பதிந்தாலும் அவள் அதை உணரும் நிலையில் இல்லை. வயிற்றில் இருந்து எதுவோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு வரக் கணவனின் மார்பில் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.இராட்டினம் சுற்றச் சுற்ற இன்னும் இன்னும் கணவனின் மார்பிலேயே புதைந்தாள்.

ஒரு வழியாக வேகம் குறைய ஆரம்பிக்கவும்…தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் உச்சந்தலையில் முத்தமிட வேண்டும் போல் தோன்றிய ஆவலை அடக்கியவன் மெல்லிய குரலில், “வது! கண்ணைத் திற! ஸ்லோ பண்ணிட்டாங்க” எனவும் கண்களைத் திறந்தவள் தான் இருக்கும் நிலை புரியவும் சட்டென்று நிமிர்ந்து மதுவைப் பார்த்தாள்.

எதிரில் மதுவும் வருணும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து திருமணமாகாத இளையவர்கள் முன் இப்படி நடந்து கொண்டோமே என வெட்கம் மேலிட நகர்ந்து அமர்ந்தாள். கணவனின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அங்கேயே நேரம் அதிகம் ஆகி விட்டதால் உணவையும் வெளியிலேயே முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

“இன்னைக்கு இங்கேயே இருந்துட்டு நாளைக்குப் போகலாமே மது”

“இல்லக்கா! நாளை முக்கியமான வேலைகள் இருக்கு…இப்போ போய்ட்டோம்னா தூங்கி எழுந்து காலைல ஃப்ரெஷ்ஷா வேலை ஆரம்பிக்க முடியும். காலைலன்னாக் கஷ்டம்…” 

அவள் கணவனைப் பார்க்கவும், “வருண்! நீ இவங்களை விட்டுட்டுக் கார் எடுத்துட்டுப் போய்டு…காலைல கார்லயே ஆஃபிஸ் வந்துடு”

“யெஸ் பாஸ்”  

குளித்து விட்டு வந்தவளுக்கு சாமானியத்தில் உறக்கம் வரவில்லை.அன்று முழுவதும் கணவனின் அண்மையிலேயே இருந்தது அவள் மனதை மிகவும் பாதித்திருந்தது.

அன்றென்னவோ பாட்டுக் கேட்கவும் பிடிக்கவில்லை.

விஜய்யும் மடிக்கணினியை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான். 

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், அவன் மடிக்கணினியை வைத்து விட்டு விளக்கை அணைத்து விட்டு விடிவிளக்கைப் போட “க்கும்“ என்று கனைத்தாள்.

படுக்கையில் படுத்துக் கொண்டே என்ன என்பது போல் அவள்புறம் பார்த்தவனிடம், “வந்து…வந்து…இன்னிக்கு ஒரு நாள் மட்டும்…”அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையைத் தழைத்தவள் “ஒரு நாள் மட்டும் உங்க பக்கத்துல படுத்துக்கவா?” கேட்டே விட்டாள். 

பிறகுதான் ‘அவன் வேண்டாம் என மறுத்து விட்டால் என்ன செய்ய…இந்த அவமானத்துக்குச் சும்மா இருந்திருக்கலாமே’ என மனம் அடித்துக் கொள்ள நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் முகத்தில் கனிவைக் கண்டவளுக்கு அப்பாடா என்று இருந்தது…அதே பார்வையுடன் வா என்பது போல் தலையசைத்து அவன் கைகளை விரிக்கத் தாயைத் தேடும் கன்று போல் அவன் கைகளில் அடைக்கலமானாள்.

அவன் இடது கைவளைவில் அவன் நெஞ்சில் தலை சாய்த்தவாறு அடுத்த ஐந்து நிமிடங்களில் அவள் நிம்மதியாக உறங்கி விட…அவனுக்குத்தான் அன்று உறக்கம் தொலைந்தது.

முதல் முறையாகத் தான் தவறு செய்கிறோமோ என யோசிக்க ஆரம்பித்தான்.

தன் மனதில் என்ன இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு வரும் அவளது முதல் பிறந்தநாள் என்பதால் அவள் சிறிதும் மனச்சுணக்கம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதலிலேயே முடிவு செய்திருந்தவன் அதைப் போலவே அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டான். 

ஆனால் என்னதான் பிரியமாக நடந்து கொண்டாலும் அவள் மன ஏக்கம் அவனுக்குப் புரிந்தே இருந்தாலும் எல்லா  விதத்திலும் கணவனாக நடந்து கொள்ள அவன் மனம் இசையவில்லை. 

சில விஷயங்கள் தெளிவாகாமல் இயல்பான வாழ்க்கைக்குள் செல்ல அவனுக்கு மனமில்லை…

தானாகத் தெளியவும் இல்லாமல்…கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாமல் அவன் குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில்… 

தூர தேசத்தில் கப்பலில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அவன்…அவன் குழப்பத்துக்குக் காரணமானவன்…

“விஜய்! என்னை இப்படி ஊர் பேர் பாஷை எதுவும் தெரியாத இடத்துல கொண்டு வந்து விட்டுட்டேல்ல… இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…நான் உன்னைச் சும்மா விட மாட்டேன்…உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன்” என  அவன் சபதம் எடுத்துக் கொண்டிருந்தான்.

அணைத்து  நனைந்தது தலையணைதான் 
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான் 
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

தொடரும்

Advertisement