Advertisement

அத்தியாயம் 8

திருமணமாகி ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் ப்ரியம்வதாவின் பிறந்த நாள் வந்தது. 

மறுநாள் பிறந்த நாள் என்ற நிலையில் அவளிடம் அது குறித்து எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் கதைகளில்… திரைப்படங்களில் வருவது போல் இரவு பன்னிரண்டு மணிக்கு எழுப்பி வாழ்த்துச் சொல்ல வேண்டும் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு நடுஇரவில் வாழ்த்துச் சொல்வது தனக்குப் பிடிக்காது என்பதையும் அவனிடம் தெரியப்படுத்தியே இருந்தாள்.

அவர்கள் தேனிலவுக்குச் சென்ற போது நிகழ்ந்த சம்பவம் அவளுக்கு ஞாபகம் வந்தது. 

டால் ஏரியில் படகு வீட்டில் தங்கியிருந்த போது நடுஇரவு பன்னிரண்டு மணிக்கு அவர்களுக்கு அடுத்திருந்த படகு வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது.

என்னவெனத் தம்பதிகள் எழுந்து வந்து பார்த்த போதுதான் அது ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் எனத் தெரிய வந்தது.தங்கள் பங்கிற்கு வாழ்த்துக்கள் கூறிய பிறகு உள்ளே வந்து படுத்த போது ப்ரியம்வதா தன் மனதில் நினைத்திருந்ததைக் கூறினாள்.

”வெள்ளைக்காரன் அவன் வசதிக்காக… நேரம்…நாள் கணக்குப் போடுறதுக்கு ஈசியா இருக்கட்டும்னு பன்னிரண்டு மணிக்கு நாள் பிறக்கிறதாச் சொன்னான். அதுக்காக நட்டநடு ராத்திரியிலே கொண்டாடிட்டு அப்புறம் தூங்கப் போனா அது எப்பிடி சரி ஆகும்? நியாயப்படிக் காலைல ஐந்தரை இல்ல ஆறுக்குதானே நாள் பிறக்குது… அப்போதானே அது நாள்..இது ராத்திரி இல்ல… என்ன கலாச்சாரமோ…என்ன பழக்கமோ” எனப் புலம்பியவள்…கண்களில் பளபளப்புடன் அவளைப் பார்த்திருந்த கணவனைப் புரியாமல் பார்த்து விட்டுப் படுத்து விட்டாள்.

இப்போது அதை நினைத்துப் பார்த்தவளுக்கு அவன் நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல மாட்டான் என உறுதியாகத் தெரிந்தாலும்… ‘நாளை எங்காவது வெளியே போகலாமா…உன் ஃப்ரென்ட்ஸ் யாரையாவது வீட்டுக்குக் கூப்பிடுறியா…இல்ல உங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாமா’ என அவள் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்துப் பேசுவான் என எதிர்பார்த்திருந்தாள். 

அதுவும் அன்று ஞாயிற்றுக் கிழமையாக வேறு அமைந்து விட்டதில் இயல்பாகவே அவன் வீட்டில் இருக்கக் கூடிய நாள் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்த்து விட்டவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவள்  அன்னையின் வீட்டில் ஆடம்பரமாகக் கொண்டாடாவிட்டாலும் அப்போதைய பண வசதிக்கேற்ப புதிய உடை இருக்கும்.காலையில் கோவிலுக்குச் சென்று அவள் பெயரில் அர்ச்சனை செய்து வருவார்கள்.மதியம் அவளுக்குப் பிடித்ததாக ஏதாவது சமைத்து வைத்திருப்பார் மீனலோசினி. மாலை அருகில் இருக்கும் பார்க்குக்கோ அல்லது பீச்சுக்கோ அனைவரும் சென்று வருவார்கள்.

ஆனால் எதுவுமே இல்லாமல் பிற வழக்கமான நாட்களைப் போல் அந்த நாளும் இருக்கப் போகிறது என நினைத்தவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

மனதைத் தேற்றிக் கொண்டு குளித்து முடித்து இதுவரை கட்டாமல் வைத்திருந்த ஒரு புடைவையை உடுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தாள். 

மாடிப்படிகளின் ஆரம்பத்திலேயே அந்த வேறுபாடு அவளுக்குப் புலப்பட்டு விட்டது. 

அவர்களது வீட்டின் அந்த மிகப் பெரிய கூடம் முழுவதும் வர்ணத் தோரணங்களாலும்… சரிகைத் துணிகளாலும்… வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஆங்காங்கே… ‘ஹாப்பி பர்த்டே ப்ரியா’ என்ற வார்த்தைகளைத் தாங்கி நின்ற பொன்னிறக் காகிதங்கள் படபடத்துக் கொண்டிருந்தன.

என்னவென்று புரியாத இதம் மனதினுள் பரவ கீழே இறங்கியவளின் பார்வையில் பட்டான் அவள் கணவன்.

மாடிப்படிகளின் இறுதியில் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு அவள் முகமாற்றங்களை அளவெடுத்துக் கொண்டிருந்தவன் அவள் பார்வை அவன் முகத்தில் படிந்ததும் பளிச்செனச் சிரித்தான்.

இதைப் போல் அவன் சிரிப்பது அரிது என்பதால் அவள் கண்கள் என்னும் கேமராக்கள் அந்தக் காட்சியை அவசரமாகப் படம் பிடித்துக் கொண்டன.

அவன் சிரிப்பின் எதிரொலியாக அவளையும் அறியாமல் அவள் முகத்திலும் அழகான புன்னகை அரும்பியது.

மனைவியின் மந்தகாசப் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தவனுக்கு அவளை அள்ளி அணைக்கக் கைகள் பரபரத்தாலும் அடக்கிக் கொண்டவன் அவள் அருகே வந்தவுடன் தன் வலது கையை நீட்டி அவள் வெண்பஞ்சுக் கையின் வெண்டை விரல்களைப் பற்றிக் குலுக்கி “ஹாப்பி பர்த்டே ரியா” என்றான்.

ஒருவரில் ஒருவர் மூழ்கித் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்களை “ஹாப்பி பர்த்டே ப்ரியா” எனக் கோரசாக ஒலித்த குரல் நனவுலகிற்கு மீட்டு வந்தது.

இப்படியா தன்னை மறந்து கணவன் முகத்தைப் பார்த்திருப்போம் என நினைத்து முகம் சிவந்தவள் குரல் வந்த திசை நோக்கித் திரும்பினாள்.

பெற்றோர், தங்கைகள், கண்ணபிரான் மற்றும் வீட்டு வேலையாட்கள் அனைவரும் அங்கு குழுமியிருக்க நடுநாயகமாக மேஜையிடப்பட்டு அதன் மீது பெரிய சாக்லேட் கேக் வீற்றிருந்தது.

“நீங்கல்லாம் எப்போ வந்தீங்க?”

“க்க்கும்… இப்போவாவது கேக்கணும்னு தோணுச்சே!”

“இல்ல மது! நீங்க வரீங்கன்னு இவங்க எங்கிட்டச் சொல்லவே இல்ல” என்று கணவனின் புறம் பார்வையை செலுத்தவும்…

“உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லல” என்றான் அவன்.

“ஆமா அக்கா! அத்தான் நேத்தைக்கே காலைல கார் அனுப்புறேன்…வந்துடுங்கன்னு சொல்லிட்டாங்க… நாங்களும் காலை அஞ்சு மணிக்கே ரெடி ஆகிட்டோம். இங்கே வந்து உனக்காகத்தான் வெயிட்டிங்…நீ வந்ததும் எங்க பக்கம் பார்ப்பே பார்ப்பேன்னு ஆவலோடு காத்திருந்தா அத்தான் முகத்தைத் தவிர உனக்கு ஒண்ணுமே தெரியல இந்த உலகத்துல” எனப் பெருமூச்செறிந்தவாறு நீட்டி முழக்கி மது கூறி முடிக்கவும் ப்ரியம்வதா அவள் கேலியிலிருந்து தப்பிப்பதற்காக அன்னையிடம் சென்றாள்.

அவளை அணைத்துக் கொண்ட மீனலோசினி,

“நல்லா இருக்கியாடா?”

“நல்லா இருக்கேம்மா… நீங்க எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம்டா…கொஞ்சம் மெலிவாத் தெரியிறியே…விசேஷம் ஏதாவது…” என அவள் காதோடு அன்னை இழுக்க…இப்போது அன்னையிடம் மாட்டிக் கொண்டோமே என நினைத்தவள் மீண்டும் முகம் சிவந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா” என அவளுக்குப் பதில் கூறவும்…

“வந்து கேக் வெட்டு ரியா!” என அழைத்து அவளைக் காப்பாற்றினான் விஜய்.

பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடிக் கேக் வெட்டி முதல் துண்டை கணவனுக்கே ஊட்டினாள்…அவள் கண்களையே பார்த்துக் கொண்டு அதை வாங்கிக் கொண்டவனும் அவளுக்கு ஊட்ட அனைவரும் மன நிறைவுடன் பார்த்திருந்தனர்.

பெற்றோரின் காலிலும் கண்ணபிரானின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவளுக்கு அனைவரும் தங்கள் தங்கள் பரிசுகளைக் கொடுத்தனர்.

விலை உயர்ந்த அலைபேசியைக் கணவன் பரிசளிக்க… ரவிச்சந்திரனும் மீனலோசினியும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்த அழகிய லேவண்டர் நிறப் புடைவையைப் பரிசளித்தனர்.

மதுமிதா ஒரு கைப்பையைப் பரிசளித்தாள். 

தீக்ஷிதா அவளே செய்த லேவண்டர் நிறத் த்ரெட்வர்க்  நகை செட்டைப் பரிசளித்தாள். 

கண்ணபிரான் அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன புத்தகங்கள் ஒரு செட்டைப் பரிசாகக் கொடுத்தார்.

மிகப் ப்ரமாதமாக விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான் விஜய்.

அனைத்தும் அவளுக்குப் பிடித்த உணவு வகைகள்… அவளுக்கு இதெல்லாம் பிடிக்கும் என எப்படித் தெரியும் என்ற கேள்வியைக் கண்களில் தேக்கி அவனைப் பார்க்க அவன் குறும்பாகக் கண்சிமிட்டினான். 

காலை உணவு முடிந்ததும் கூடத்தில் வந்து அமர்ந்தவன் எதிரே வந்தமர்ந்தாள் மது. 

“அத்தான்! இன்னிக்கு என்ன ப்ளான்?”

“வருண் இப்போ வந்துடுவான் மது…அவன்கிட்டதான் ஏற்பாடெல்லாம் பண்ணச் சொல்லி இருந்தேன்…அவன் வந்தாத் தெரிஞ்சுடும்” என விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருண் உள்ளே நுழைந்தான்.

எப்போதும் போல் தொள தொள என அணிந்திருந்த உடையில் ஒரே ஒரு சிறிய மாற்றம்… ஃபார்மல் சட்டைக்கு பதிலாக டீஷர்ட் அணிந்திருந்தான்… அதுவும் இரண்டு ஆள் நுழையும் வண்ணம் பெரியதாகவே இருந்தது.

“குட்மார்னிங்க் பாஸ்!” என்றவன், “மேடம் எங்கே?” எனவும் “ரியா!” என்றழைத்தான் விஜய்.

உண்ணும் மேஜையின் அருகிலேயே அமர்ந்து அன்னையுடன் உரையாடிக் கொண்டிருந்தவள் எழுந்து வெளியே வந்தாள்.

“வாங்க வருண்… எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மேம்.பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றவாறு கையில் வைத்திருந்த பூங்கொத்தைக் கொடுத்தான்.

“தேங்க் யூ வருண்.உட்காருங்க… கேக் கொண்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.

“க்கும்…” கனைத்துக் கொண்ட மதுவை வித்யாசமாகப் பார்த்த வருண் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“வருண்! இது மது…ப்ரியாவோட தங்கை” முறையான அறிமுகம் இல்லாததால் பேசத் தயங்குகிறானோ என நினைத்து விஜய் அறிமுகப்படுத்த… “தெரியும்! கல்யாணத்துல பார்த்தேனே” என்று பதிலுரைத்தான்.

அத்தனை நேரம் அறிமுகம் இல்லாத பெண்ணுடன் பேசத் தயங்கித்தான் அவன் பேசவில்லை என நினைத்த மதுவுக்கு அவன் தெரிந்து கொண்டே பேசாமல் இருந்தது இனம் தெரியாத கோபத்தை வரவழைத்தது.

“அத்தான் என்ன ப்ளானுன்னு சொல்றேன்னு சொன்னீங்களே!” என அவள் நினைவுறுத்த… அதற்குள் கேக்கும் வந்திருக்க… அதை அவன் உண்டு முடிக்கட்டும் என்பது போல் கண்ணைக் காட்டினான் விஜய்.

“ம்ப்ச்…இந்த தீக்ஷி எங்கே போனா?” என்றவாறு பொறுமையிழந்த குரலில் உரைத்துக் கொண்டே மது எழ…

“அவள் லைப்ரரியைப் பார்க்கப் பெரியப்பாவோட போயிருக்கா”

மது தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

“என்னாச்சு மது?”

எப்போதும் நிதானமாக இருக்கும் மது கொஞ்சம் அலைபாய்தலுடன் இருப்பது கண்டு விஜய் அக்கறையாகக் கேட்டான்.

“சும்மாவே ஆடுற பேய் கொட்டைக் கண்டா சும்மாவா இருக்கும்னு ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க” எனவும் தன்னைத்தான் பேய் என்கிறாளோ என்பது போல் வருண் படக்கெனத் தலை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது. 

‘ஆமா தொள தொளன்னு இவன் போட்டு இருக்கிற வெள்ளைச் சட்டைக்கும் இவன் கலர்க்கும்  இருட்டில கொண்டு நிக்க வைச்சாப் பேய் மாதிரிதான் இருப்பான்’ என மனதுள் எண்ணிக் கொண்டவள்… விஜய்யும் அவள் யாரைச் சொல்கிறாள் என்பது போல்  கேள்வியாகப் பார்க்கவும்…

“இந்த தீக்ஷிகிட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்தாலே அதுல மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிச்சுருவா…அவகிட்டப் போய் லைப்ரரியா! தேவுடா! இன்னிக்கு வெளிய கிளம்பின மாதிரிதான்.”

அதற்குள் வருண் உண்டு முடித்திருந்தான். அவன் கைகழுவி வந்து அமரவும்…

“இன்னிக்கு என்ன ப்ளான்னு கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டு இருக்கா  மது…சீக்கிரம் இன்னிக்கு ஷெட்யூல் என்னன்னு சொல்லு வருண்”

“பாஸ்! முதல்ல கோவிலுக்குப் போறோம்.வரசித்தி விநாயகர் கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு செய்துட்டேன்”

ப்ரியம்வதாவின் இஷ்ட தெய்வம் விநாயகர் என்பது தெரிந்தே விநாயகர் கோவிலில் பூஜை ஏற்பாடு செய்யும்படி விஜய் கூறி இருந்தான்.

வருண் தொடர்ந்தான்.

“அப்புறம் காப்பகத்துக்குப் போய் ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் வினியோகிச்சுட்டு அங்கேயே அவங்க கூட லன்ச் முடிச்சுட்டு அப்புறம் ஏதாவது தீம் பார்க்குக்குப் போய்ட்டுத் திரும்ப வர்றதுதான் ப்ளான்” என்று முடித்தான்.

அன்னை பரிசளித்த புடைவையை அணிந்து அழகு தேவதையாக வந்தவள் கோவிலுக்குச் செல்வதால் கணவனும் வேட்டி சட்டை அணிந்து வருவான் என எதிர்பார்த்திருக்க அவனோ தேனிலவுக்குச் சென்ற போது வந்தது போல் ஜெர்க்கினும் கூலர்சுமாக ஏதோ பிக்னிக் செல்வதைப் போல் வந்து சேர்ந்தான்.

அவள் பார்வையை உணர்ந்தவன் கண்சிமிட்டி விட்டுச் சென்று விட்டான்.

இளையவர்கள் அனைவரும் விஜய்யின் காரிலும் பெரியவர்கள் மற்றொரு காரிலும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தார்கள். 

மிக அருமையான பூஜை. தெய்வீக அனுபவமாக இருந்தது ப்ரியம்வதாவுக்கு…

பூஜை முடிந்ததும் விஜய்க்கு  ஸ்வாமியின் கழுத்தில் இருந்த மலர்மாலையை அணிவித்த பூசாரி “அதை ஆம்படையாள் கழுத்துல போடுங்கோ” எனவும் ப்ரியம்வதா வெட்கமும் பெருமையுமாக அதை ஏற்றுக் கொண்டாள்.

வெளியே வந்த போதுதான் கணவனின் கண்சிமிட்டலின் காரணம் அவளுக்குப் புரிந்தது. 

இப்போது மற்ற சாதாரண குடும்பங்களைப் போல் கடவுளை வணங்கி வந்திருந்தவர்கள்…இங்கே விஜய் வருவதாக முன்கூட்டியே தெரிந்திருந்தாலோ அல்லது அவனை யாராவது அடையாளம் கண்டு கொண்டிருந்தாலோ கண்டிப்பாக இத்தனை நிம்மதியாக அவர்களால் கும்பிட்டு வந்திருக்க முடியாது.

அடுத்து ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற பெண்கள், பிள்ளைகள் இல்லாததால் அனாதைகளான முதியவர்கள், பிள்ளைகள் இருந்தும் கவனிக்கவோ, கரிசனை கொள்ளவோ அவர்களுக்கு விருப்பம் இல்லாததால் அனாதைகளான முதியவர்கள் எனப் பல்வேறுபட்ட மக்கள் அந்த இல்லத்தில் இருந்தனர்.

அவர்களுக்கு இனிப்பும் புது உடையும் ப்ரியம்வதாவின் கையால் வழங்கினார்கள். அதற்கு மேல் பணமும் வழங்க முடிவு செய்து இருந்ததால் ப்ரியம்வதாவிடம்,

“நீயும் மத்தவங்களும் போய் இல்லத்துல இருக்கிறவங்ககிட்டப் பேசிட்டு இருங்க…நான் இங்கே கொஞ்சம் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு வந்துடறேன்” என விஜய் சொல்ல  விஜய்யும்  வருணும் தவிர மற்றவர்கள் நகர்ந்தார்கள்.

அரைமணி நேரம் கழித்து அவர்களும் உள்ளே செல்ல அங்கே மற்றவர்கள் எல்லோரும் இருக்க மனைவியைக் காணாது “மது! ரியா எங்கே?” எனக் கேட்டான்.

“இங்கேதானே இருந்தா…எங்கே போனான்னு தெரியலயே…”

“சரி! நீ இரு, நான் பார்த்துக்கிறேன்” என்றவன் வெளியே வந்தான்.

வாசலில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் அடையாளம் சொல்லிக் கேட்க “ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாலதான் அதோ இருக்கிற மரத்துப் பக்கம் போனாங்க” எனக் கொஞ்சம் தொலைவில் இருந்த ஒரு ஆலமரத்தைக் காட்டினார்.

“பேசிகிட்டு இருக்கச் சொன்னா அதை விட்டுட்டு எங்கே போனா இவ” எனத் தனக்குள் முனங்கிக் கொண்டே சென்றவன் அங்கே இடது தோளை மரத்தின் மீது சாய்த்துத் திரும்பி நின்றிருந்த மனைவியைக் கண்டதும், “ரியா! இங்கே என்ன…” அவன் முடிக்கும் முன்னே திரும்பியிருந்த ப்ரியம்வதாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நிற்பதைப் பார்த்தவன் கேள்வியை முடிக்காமல் “வது” என்று அழைத்தபடிப் பாய்ந்து அவள் அருகில் சென்று அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

Advertisement