Advertisement

அத்தியாயம் 7

வாழ்க்கை ஒரு வழமைக்கு வந்திருந்தது. 

விஜய் காலை எட்டு மணிக்குத் தங்கள் அலுவலகத் தலைமையகத்திற்குச் செல்பவன் மாலை ஏழு மணி அளவில்தான் வீடு திரும்புவான்.மதிய உணவு வியாபார நிமித்தமாக என்று யாருடனாவது முடிந்து விடும். எப்போதாவது அதிசயமாக வீட்டிற்கு உணவிற்கு வருவான்.வாரத்தின் ஐந்து வேலை நாட்களும் இதுதான் வழக்கம் என்றாகிப் போனது. 

கணவன் சொன்னது போலவே வங்கிக்குச் சென்று தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்திருந்தாள் ப்ரியம்வதா. தான் முன்பு இருந்த நிலை போல் தேவை உள்ள யாருக்கேனும் அந்த வேலை கிடைக்கட்டும் என நினைத்துச் செய்திருந்தாள்.

அவனிடம் சொன்ன அன்றே அன்னை வீட்டிற்கும் சென்று வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு அவன் சொன்னது போலவே மாலை அவன் வருவதற்குள் வீடு திரும்பி இருந்தாள்.

வீட்டு நிர்வாகத்தை இயல்பாகத் தன் பொறுப்பில் எடுத்து விட்டிருந்தாள். கண்ணபிரானும் அவளிடம் மொத்தமாக எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அக்கடா என் அமர்ந்து விட்டார்.

தொலைபேசிக் கட்டணம், மின்கட்டணம் இன்னும் அன்றாட செலவுகளை எல்லாம் குறித்து வைத்து அவனிடம் பணம் பெற்றுக் கொள்பவள் அவன் அவள் செலவுக்கெனக் கொடுத்த பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூடத் தொடவில்லை. 

அதைக் கவனித்தவனும் காரணம் தெரிந்தே இருந்ததாலும், தவறு தன் பக்கம் என்பதாலும் அவளிடம் எப்படி, என்னவெனக் கேட்பதெனத் தயங்கிப் பின் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான். 

அன்று காலை பதினோரு மணி அளவில் உடன் வேலை பார்த்த நித்திலா அவளைப் பார்க்க வந்திருந்தாள்.

ப்ரியம்வதாவின் திருமண சமயத்தில் அவளது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டதில் அவளால் திருமணத்திற்கு வர இயலவில்லை.

தோழியை ஆவலாக வரவேற்றாள்.

“வா வா நித்தி! எப்பிடி இருக்கே?”

தோழியைத் தலை முதல் கால் வரை பார்த்தவள் அருகில் வந்து அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

“ஏய் நித்தி! என்ன இது?” எனவும் அவளை விட்டு விலகி நிமிர்ந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“ப்ரியா! நீ எப்பிடி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அப்படி இருக்கே…இதைப் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” எனவும் அவளுக்குத் தோழியின் மனம் புரிந்தது.

ஆரம்பத்தில் அவள் வங்கியில் பணிக்கு சேர்ந்த புதிதில் அறிமுகமானவள் நித்திலா…

ஏற்கனவே அங்கே இரண்டு வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அனுபவத்தில் ப்ரியம்வதாவுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி அவளுக்கு உதவி செய்தவள். அவளும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்றாலும் உயர் மத்தியதர வர்க்கம். எதற்கும் ஏங்கித் தவிக்கும் நிலை இல்லாமல் ஓரளவு வசதி படைத்தவள்.

வேலையில் சேர்ந்த புதிதில் மாதக் கடைசி நேரங்களில் வெறும் தயிர் சோறும் ஊறுகாயும் கொண்டு வரும் தோழியைப் பார்த்து மனதுக்குள் வருந்தினாலும் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள். ஏனென்றால் ப்ரியம்வதாவின் தன்மான உணர்வு பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.

பண உதவியோ பொருள் உதவியோ எதையும் அவள் ஏற்க மாட்டாள் என்பது மட்டுமல்லாமல் தான் கஷ்டப்படுவதை பிறர் அறிவதைக் கூட அவள் விரும்ப மாட்டாள்  என்பதும் நித்திலாவுக்குத் தெரியும். 

நாட்கள் செல்லச் செல்ல ப்ரியம்வதாவின் குடும்ப நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியதை அருகிலிருந்து பார்த்து அகமகிழ்ந்தவள் அவள்.

கஷ்டப்படும் நிலையிலும் ஒரு அரசியின் கம்பீரத்துடன் நிமிர்ந்த நடையுடனும் தெளிவான கொள்கைகளுடனும் அமரிக்கையான அழகுடனும் வளைய வந்த தன் தோழி ஒரு அரசியைப் போலவே வாழ்வாள் என எண்ணியிருந்த நித்திலாவுக்குத் தன் எண்ணம் பலித்து விட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியுடனே ப்ரியம்வதா கொண்டு வந்து கொடுத்த பழச்சாற்றை வாங்கிக் கொண்டவள்,

“வர்ற பத்தொன்பதாம் தேதி கல்யாணம் வச்சுருக்காங்க ப்ரியா…நான் வராம இருந்தேன்னு நீ கல்யாணத்துக்கு வராம இருந்துடாதே…முக்கியமா உன்னவரக் கூட்டிட்டு வரணும்… இந்த ஏழை வீட்டுக் கல்யாணத்துக்கெல்லாம் அவர் வருவாரான்னு தெரியல” என்று கூறிக் கண் சிமிட்டிய தோழியின் தோளில் ஒன்று போட்டாள் ப்ரியம்வதா.

பின் சென்னையில் மிகப் பெரிய ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளரை மணக்கப் போகிறவள் ஏழை எனக் கூறினால்…

“என் கல்யாணத்துக்கே காரணமாயிருந்த உன் கல்யாணத்துக்கு நான் வராம… கண்டிப்பா அவரையும் கூட்டிட்டு வர முயற்சி பண்றேன்”

“முயற்சின்னு எல்லாம் சொல்லி நழுவப் பார்க்காதே… கண்டிப்பா அவரையும் கூட்டிட்டுதான் வரணும். அவர் இருக்கிற நேரம் வரலாம்னு பார்த்தால் நிச்சயம் முடிஞ்ச பின்னால விளக்கு வச்சு வெளிய போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க…சனி ஞாயிறுலயும் ஏகப்பட்ட ப்ளான்ஸ்”

“நீ சிரமப்படுத்திக்காதே நித்தி…நான் கண்டிப்பா அவரக் கூட்டிட்டு வரேன். போதுமா?”

நித்திலா விடைபெற்றாள்.

மதிய உணவிற்காகத் தன் அறையை விட்டு வெளியே வந்த கண்ணபிரானிடம் பத்திரிக்கையைக் கொடுத்து,

“என் ஃப்ரெண்ட் மாமா…பத்தொன்பதாம் தேதி கல்யாணமாம்… பத்திரிக்கை வச்சுட்டுப் போனா.”

பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தவர் மாப்பிள்ளையின் பெயர் தினகரன் என்பதையும் அவர்கள் தொழில் விவரத்தையும் அறிந்து கொண்டு “அடடே! இவங்களாம்மா… நம்ம கூட பிஸினஸ் டீல் பண்றவங்கதான்… இவங்க தயாரிப்புல பெட் ஸ்ப்ரெட், டவல் எல்லாம் நம்ம சூப்பர் மார்கெட்ல டிஸ்ப்ளே  வச்சுருப்போம்” என்றார்.

“ஓ…நான் உங்களை அவ இருந்தப்போவே கூப்பிடலாம்னு நினைச்சேன் மாமா…நீங்க ஓய்வு எடுத்துட்டு இருக்கிறப்போ தொல்லை பண்ண வேணாமேன்னுதான் விட்டுட்டேன்…”

ஓய்வு எடுக்கிறாரோ இல்லையோ கண்ணபிரான் மிகுந்த இங்கிதம் தெரிந்தவர். அவசியமான நேரம் தவிர மற்ற நேரங்களில் ‘நானும் இருக்கிறேன் பார்’ என வந்து அமர மாட்டார். கணவன் மனைவி தனியாக சந்தோஷமாகப் பேசிச் சிரித்து இருக்கட்டும் என இருப்பவர் விஜய் இல்லாத நேரங்களில் மருமகளைத் தனியாகத் தவிக்க விடாமல் அவளுடன் அளவளாவிக் கொண்டு இருப்பார்.

ப்ரியம்வதாவுக்கும் அவரிடம் பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயமே.

அப்படிப் பேசிக் கொண்டிருந்த ஒரு நேரத்தில் அவள் சட்டென்று, “நீங்க ஏன் மாமா கல்யாணம் பண்ணிக்கல?” என்று கேட்டு விட்டாள். 

கேட்ட பிறகுதான்… ‘கொஞ்சம் அளவுக்கு மீறி மூக்கை நுழைத்து விட்டோமோ? அவரளவிற்கு நமக்கு இங்கிதமாக நடந்து கொள்ளத் தெரியவில்லையோ’ என நினைத்துக் கைகளைப் பிசைந்தவள்…  “மாமா… நான்… வந்து… சாரி… தப்பா எடுத்துக்காதீங்க…தெரியாமக் கேட்டுட்டேன்” என அவள் திக்கித் திணறித் தடுமாறவும் அவர் உரக்கச் சிரித்தார்.

“ப்ரியாம்மா! எதுக்கு இத்தனை பதற்றம்? நீ தப்பா எதுவும் கேட்கல…உன்னை என் மருமகளா இல்லாம என் மகளாதான் நான் பார்க்குறேன். சொல்லப் போனா விஜய் கூட இதுவரை இந்தக் கேள்வியைக் கேட்டது இல்ல…இந்தக் கேள்வில என் மேல உனக்கு இருக்கிற அக்கறையைதான் நான் பார்க்குறேன்” என்று சொல்லவும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அவர் தொடர்ந்தார்…

“என்ன சொல்றது… எங்க அம்மா நான் பத்து வயசா இருக்கு போதே விஷக் காய்ச்சலால இறந்துட்டாங்க. நான்தான் மூத்தவன்கிறனால எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்னு எங்க அப்பா ஆசைப்பட்டார்.ஆனா…” என்றவர் சில நிமிடங்கள் எதுவும் சொல்லாமல் மேலே பார்த்துக் கொண்டிருந்தார்.

பின் தொண்டையைச் செருமிக் கொண்டு, “இதுவரை இந்த விஷயம் என்னைத் தவிர யாருக்கும் தெரியாது ப்ரியா… விஜய்கிட்ட கூட நான் பகிர்ந்துகிட்டது இல்ல. நான் ஒரு பொண்ணைக் காதலிச்சேன்”

ப்ரியம்வதா வியப்புடன் விழிகளை விரித்தாள்.

“ஆமாம்மா! என்னடா சாமியார் வேஷத்துல இருக்கிற மாமனாருக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கான்னு பார்க்குறியா? ஆமா… ஒரு பொண்ணைக் காதலிச்சேன்… காதலிச்சேன்னா அவ கூட ஊர் சுத்தி…அப்பிடி எல்லாம் இல்ல… வெறும் பார்வைப் பரிமாற்றம்தான்…அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது அவ பார்வையிலேயே தெரிஞ்சுது… ஆனா எங்க ஊர்ல ஒரு சமயம் விடாது பத்து நாள் பெய்ஞ்ச மழைல சுவர் இடிஞ்சு விழுந்து தூக்கத்துலயே அவ இறந்து போய்ட்டா…அதுக்கப்புறம் எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவங்க வயசுக்குத் தகுந்த விதமா தாயா, சகோதரியா, மகளாதான் நினைக்க முடிஞ்சதே தவிர வேற மாதிரி உணர்வுகள் தோன்றவே இல்ல. அவ நினைவுகளை மறப்பதற்கு ஆன்மீகத்தை நாடினேன்… மறந்தும் போய்ட்டேன்”

கலங்கியிருந்த அவர் கண்களைக் காண அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. 

“சாரி மாமா! நீங்க மறந்து இருந்ததை நான் ஞாபகப்படுத்திட்டேன்”

“அதுனால பரவாயில்லம்மா. நானும் என் காதலை இதுவரை யார்கிட்டயுமே சொன்னது இல்லைன்னு சில நேரங்கள்ல நினைச்சுருக்கேன்…உங்கிட்டதான் சொல்லணும்னு இருந்துருக்கு போல” எனச் சிரித்தவரிடம் இனம் புரியாத பாசம் பிறந்தது அவளுக்கு.

மனைவி இறந்து காரியம் முடிவதற்குள் அடுத்த பெண் தேடும் மனிதர்கள் மத்தியில் காதலித்த பெண்ணை நினைத்து இத்தனை வருடங்களாக தவ வாழ்க்கை வாழும் அவரைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது அவளுக்கு. 

“ப்ரியாம்மா! விஜய்க்கு இந்த விஷயம் தெரிய வேணாம்… அவன் என் மேல அக்கறை எடுத்துக்கலையோன்னு வருத்தப்படுவான்.”

“சரி மாமா நான் சொல்லல.”

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ப்ரியம்வதா வீட்டிலிருக்கும் பெரும்பாலான நேரங்கள் அவருடனே கழிக்க ஆரம்பித்தாள்.

மற்றொரு நாள், “மாமா! விஜய்யோட பேரன்ட்ஸ் பத்தி சொல்லுங்களேன்…விஜய்கிட்டயே கேட்கலாம்னு நினைச்சேன்…” என்றவள் அவர் முகம் போன போக்கைப் பார்த்து விட்டுப் பேச்சைப் பாதியில் நிறுத்தி விட்டாள்.

“அந்தத் தப்பை மட்டும் ஒரு நாளும் பண்ணிடாதே ப்ரியாம்மா…அவனுக்குப் பிடிக்காது”

“பெத்தவங்களைப் பிடிக்காதா?”

“அது…அப்பிடி இல்லம்மா…” எனத் தயங்கியவர்… “அவங்களைப் பத்திப் பேசுறது அவனுக்குப் பிடிக்காது என்று விட்டு ஒரு பெருமூச்சுடன், “சின்ன வயசுல விஜய் ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கானம்மா…அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நீதான் அவனை சந்தோஷமாப் பார்த்துக்கணும்”

‘எங்கே சந்தோஷமாய்ப் பார்த்துக்கிறது…அவன்தான் அருகிலேயே நெருங்க விட மாட்டேன் என்கிறானே’ என மனதில் நினைத்தாலும் அவர் சொன்ன மரியாதைக்காக மையமாகத் தலையை ஆட்டி வைத்தாள்.

மதிய நேரத்தில் அவர் ஓய்வெடுக்கும் சமயங்களில் போரடித்துப் போய் அமர்ந்திருப்பவளை ஒரு நாள் மாலை பார்த்து விட்டு அந்த வீட்டில் அவள் இதுவரை சென்றிராத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

Advertisement