Advertisement

மாளிகை போன்றிருந்த அந்த வீட்டை அவள் இன்னும் முழுமையாகச் சுற்றிப் பார்த்து முடித்திருக்கவில்லை. மாடியின் வலது பகுதியில் அவர்களது அறை இருந்தது. அவர்களது அறையைத் தாண்டி மூன்று அறைகள் இருந்தன. 

முதல் இரண்டு அறைகளைத் திறந்து பார்த்தவள் அவை விருந்தினருக்கான படுக்கை அறைகளாக இருப்பதைக் கண்டு மூன்றாம் அறையைத் திறந்து பார்க்காமல் அதுவும் அப்படித்தான் இருக்கும் என நினைத்திருந்தாள்.

அந்த மூன்றவது அறைக்குள்தான் கண்ணபிரான் அவளை அழைத்துச் சென்றார்.

அறைக்குள் நுழைந்தவள் அப்படியே ஒரு கணம் அசந்து நின்று விட்டாள். அது ஒரு நூலகம்…அறை முழுவதும் இடையில் செல்லக் கூடிய வழிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தரைக்கும் விதானத்துக்கும் இடையில் பெரிய பெரிய அலமாரிகள்.அவை நிறைய புத்தகங்கள்… நிறைய தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள், அரசியல் ஆன்மீகம், கதைகள், கட்டுரைகள், சுயவரலாறுகள், என எல்லா துறை புத்தகங்களும் இருந்தன.

சுவர்களில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தன. குளிர் சாதன வசதியும் செய்யப்பட்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் வரிசையாக அலமாரிகள் அணி வகுத்திருக்க நடுவில் மட்டும் மேஜை போடப்பட்டு அமர்ந்து படிக்க நாற்காலிகள், கொஞ்சம் சாய்ந்த வாக்கில் படிக்க சாய்விருக்கை மற்றும் திவான் என சகல வசதிகளும் அங்கிருந்தன.

ஆச்சர்யத்துடன் ஒவ்வொன்றாய்ப் பார்த்து அவற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தவளிடம், “பிடிச்சிருக்காம்மா?” என்று  கேட்டார் கண்ணபிரான்.

“பிடிக்கிறதா… எனக்கு சொல்ல வார்த்தைகளே வரல மாமா. எனக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ப்ரான்ச் லைப்ரரில போய் புக்ஸ் எடுத்துட்டு வந்து படிப்பேன்.ஆனா அந்த லைப்ரரி மாதிரி ஒரு ஐம்பது லைப்ரரில இருக்கிற புக்ஸ் இங்கே இருக்கு…இவ்வளவும் நீங்க படிச்சதா மாமா?” என ஆச்சர்யத்துடன் கேட்டவளைப் பார்த்து சிரித்தவர், 

“ஏம்மா விஜய்யைப் பார்த்தா புக் படிக்கிறவன் மாதிரித் தெரியலையா? அதுசரி கல்யாணம் ஆனதுல இருந்து அவன் படிச்சு எங்கே பார்த்திருக்கப் போறே நீ?” என்று கூறவும் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வெட்கம் போலத் தலை குனிந்து கொண்டாள்.

அன்று முதல் காலை நேரங்களில் கண்ணபிரானுடன் கழித்தவள் மதிய நேரங்களில் ஏதாவது புத்தகத்துடன் அமர்ந்து கொண்டாள்.

வார இறுதிகள் பெரும்பாலும் கணவன் வீட்டில் இருப்பான்.

சனிக்கிழமை மாலைகளில் திருமணத்திற்கு முந்தைய தன் வழக்கத்தை மாற்றாமல் ஏதாவது ஒரு விருந்து, நட்சத்திர இரவுக் கொண்டாட்டம், திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா என ஏதாவது ஒன்றிற்குச் சென்று விடுவான்…கணவன் மனைவியாகக் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு அவளையும் அழைத்துப் போவான்.

அந்த வார இறுதியில் கணவன் வந்து சனிக்கிழமை ஏதோ விருந்து இருப்பதாகவும் அதற்குத் தயாராகும் படியும் கூறிச் சென்றான். 

சனிக்கிழமை மாலை விருந்துக்கான வெள்ளை  நிற உடையுடன் தயாராகி வெளியே வந்தவன் மாடிப் படிகளின் அருகே தனக்கெனக் காத்திருந்த மனைவியைக் கண்டு “இன்னும் தயாராகவில்லை?” எனக் கேட்க “நான்…”எனத் தன்னைக் குனிந்து பார்த்தவள் “இது போதாது?” என அவனை எதிர்க்கேள்வி கேட்டாள்.

அவள் அணிந்திருந்த உடை சாதாரண விருந்துக்கு என்றால் சரியாக இருக்கும். இது அரசியல் பெரும்புள்ளி ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரை மட்டும் கௌரவப்படுத்துவதற்காகக் கொடுக்கும் விருந்து. நாம் அணிந்து செல்லும் உடை நம்மை மட்டும் கௌரவப்படுத்தாமல் அழைத்தவரையும் கௌரவிப்பதாக இருக்க வேண்டும்.

அவன் முன்பே அவளிடம் சொல்லி அவளைத் தயார்ப்படுத்தி இருக்காததை நினைத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்று உடை அலமாரியைத் திறந்தான்.

ஆகாய நீல நிற ஷிஃபான் புடைவையில் சாடின் பார்டர் வைத்த ஒரு புடைவையைத் தேர்வு செய்தவன் நீலக் கற்கள் பதிக்கப் பெற்ற நகைகளையும் எடுத்துக் கொடுத்து “பத்தே நிமிடங்கள்! கீழே வந்து விட வேண்டும்” எனக் கூறியவன் அவள் தலையை வழக்கம் போல் பின்னலிட்டிருப்பதைப் பார்த்து… “இப்படி வேண்டாம்…முடியை பின்னாமல் விட்டு நன்றாக ப்ரஷ் செய்து கீழே இந்த க்ளிப்பைப் போடு” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.

 அவன் கூறியது போல் உடை மாற்றிப் பத்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் வெளியே வந்தவளைக் கண்களாலேயே பாராட்டி விட்டு அழைத்துச் சென்றான்.

அதன் பின் இந்த மாதிரிப் விருந்துகளுக்குத் தயாராவதற்கெனப்  ப்ரத்யேகமாக அவளுக்கென  ஒரு ப்ரபல ஆடை வடிவமைப்பாளரையும் நியமித்தான். 

நகரின் பிரபலமான டிசைனர் அந்தப் பெண்…பெரிய பொட்டிக் வைத்திருந்தாள்…

இந்த மாதிரி விருந்துகளுக்குச்  செல்வதில் ப்ரியம்வதாவுக்கு அத்தனை இஷ்டம் இல்லாவிட்டாலும் கூடக் கணவனை மதித்து அழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவனுடன் செல்லத்தான் வேண்டி இருந்தது.

விஜய்யுடன் வியாபாரத் தொடர்பு உள்ளவர்களின் மனைவியரையும் விருந்தின் போது அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

ஆனால் இயல்பாக அவர்களுடன் ப்ரியம்வதாவால் ஒன்ற முடியவில்லை. அவளது மிடில் க்ளாஸ் வளர்ப்பு முறையா… அல்லது அவர்களுடன் ஒத்துப் பேச முடியாத எண்ண அலைவரிசையா எது என்று அவளால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் இந்த விருந்துகள் அவளுக்குத் தலைவலியைக் கொடுத்தன என்பதுதான் உண்மை.

விஜய் நியமித்திருந்த பெண்ணும் அவளுக்குத் தொல்லையாகவே இருந்தாள்.

நடிகைகள் நிறைய பேர் அந்தப் பெண்ணின் வாடிக்கையாளர்கள்…அதில் ஒரு நடிகை அந்தப் பெண்ணுக்கு நெருக்கமான தோழி என்பதும் அவள் விஜய்க்குப் பலமுறை வலை வீசித் தோற்றவள் என்பதும் ப்ரியம்வதாவுக்குத் தெரியாது. 

அந்தப் பெண் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்வா என்ற பொறாமையிலும் தன் தோழிக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருந்தால் தானும் அதனால் வளம் அடைந்திருக்கலாம் என்ற வயிற்றெரிச்சலிலும் அடிக்கடி ப்ரியம்வதாவை மட்டம் தட்டிப் பேசுவாள்.

வேண்டுமேன்றே பொருந்தாத முறைகளில் உடைகளைச் சொல்வாள்.இப்படி அவளுக்கும் ப்ரியம்வதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

இயல்பாகவே நல்ல ரசனை உள்ள ப்ரியம்வதாவுக்கு அவள் சொல்லும் முறைகளில் உடுத்தத் துளியும் பிடிக்கவில்லை… அவளது ரசனை தனி விதமாக எளிமையான அழகோடு அனைவரையும் கவர்வதாக இருக்கும்.

அவளும் ஒன்றும் பட்டிக்காடு இல்லையே.தொலைக்காட்சி பார்க்கிறாள்… அப்போதைய  நாகரிகம் என்னவென்று தெரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். 

ஆனால் அந்த டிம்பிள் அவளை ஏதோ கிராமத்தில் இருந்து வந்து விட்ட மாதிரியும் நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத மாதிரியும் பேசும் போது அவளுக்குக் கோபம் வரும். இருந்தாலும் அதட்டிப் பேசினால் புதுப் பணக்காரி அலட்டுகிறாள் என நினைப்பார்கள் என நினைத்துத் தன்மையாகவே தன் கருத்தைச் சொல்வாள்.

 ஆனால் அந்த டிம்பிளோ வாடிக்கையாளர்களிடம் பேசிப் பழகிய திறமையுடன் தன பேச்சை மரியாதைக் குறைவாகத் தெரியாதபடிக்கு வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலவே பேசுவதால் ப்ரியம்வதாவுக்கும் சட்டென்று ஒரு முடிவெடுக்க முடியாமல் தயக்கமாக இருந்தது. சின்னப் பிள்ளை போல் இதைக் கணவனிடம் கொண்டு செல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அந்த சந்தர்ப்பம் விரைவில் வாய்த்தது. 

ஒரு முறை ஆழ்ந்த சிவப்பு நிற சாட்டின் சில்க் புடைவைக்குத் தங்கத்தில் அணிகலன்கள் அணியலாம் என ப்ரியம்வதா கூறிய யோசனைக்கு அந்த டிம்பிள் பார்த்த ஏளப் பார்வைக்கே கோபத்தின் உச்சிக்கு சென்றிருந்தாள் அவள்… அதற்கு மேலாக,

“என்ன மேடம் உங்க டேஸ்ட் இவ்வளவு சீப்பா இருக்கு… இப்போல்லாம் தங்கம் போடுறது ஃபாஷனே இல்ல…ஆன்டிக் ஜ்வெல்ஸ்…டைமண்ட் இல்ல பிளாட்டினம் இப்பிடித்தான் போடணும்…அதை விட்டுட்டுத் தங்கத்துல போடணும்னு நீங்க சொல்றதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது” எனக் கண்களில் எள்ளல் தெறிக்க அவள் பேசியதை கேட்கவும் முகம் இறுக…  “மைண்ட் யுவர் வர்ட்ஸ்” என அவள் பதிலளிக்கவும் அந்தப் பெண்ணிற்குத் தான் பேசியது அதிகப்படி எனத் தோன்ற சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.

 விஜய் சில நாட்கள் முன்பு ஏதோ நகைக் கடைத் திறப்பு விழாவுக்குச் சென்று விட்டு அவளுக்காக சில நகைகள் வாங்கி வந்திருந்தான். 

ஆறு மெல்லிய சங்கிலிகளை ஒரு சிறிய பதக்கத்தில் இணைத்து அந்தப் பதக்கம் வலது புறம் வருமாறு இருக்கும் அந்தச் சங்கிலி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் போலவே காதுகளுக்கு அதே மாடலை ஒரு சிறு முத்து வடிவத் தங்கக் கம்மலில் இணைத்தும் ப்ரேஸ்லெட்டும் அதே மாடலில் மிகவும் அழகாக இருந்தது.

பிடிவாதமாக அந்த செட்டை அணிந்து சென்று அனைவரின் பாராட்டையும் பெற்றதும் அல்லாமல் கணவனிடம் தனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஒத்து வரவில்லை என்பதைப் பதமாக எடுத்துக் கூறி அவள் சீட்டைக் கிழித்தும் அனுப்பி விட்டாள்… வேறு யாரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்ன கணவனிடம் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

ஆனால் இந்த மாதிரி விருந்துகளுக்குச் செல்வதே ஒரு நாளில் தன் வாழ்க்கையில் தீராத ப்ரச்சனையை ஏற்படுத்தப் போகிறது என்பதை அவள் அப்போது உணரவில்லை.

கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

தொடரும்

Advertisement