Advertisement

இளஞ்சிவப்பு வண்ண முழுக்கை சட்டையும் கருப்பு வண்ணப் பேன்டும் சட்டையின் முதல் பொத்தான் திறந்திருக்க சில  இன்சுகள் கீழே தளர்த்தி விடப்பட்டிருந்த டையும் அவனது சுட்டு விரலில் பற்றிக் கொண்டு அலட்சியமாய்த் தோளின் மீது போட்டிருந்த கோட்டும் காலையில் இருந்த தோற்றத்தை விட அவன் கம்பீரத்தைப் பல மடங்காக்கிக் காட்டப் பார்த்தது பார்த்தபடி கண் இமைக்காமல் நின்றாள்.

அவளது சிரித்த முகம் கண்டவனும் அவளையே பார்த்த வண்ணம் அருகே வந்தான்.

“வீடு திரும்பயிலே வாசல் திறக்கையிலே மஞ்ச முகம் சிரிச்சா அது போதும்…”

எங்கோ தெருவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் வரி ஞாபகத்துக்கு வந்தது.

உண்மைதானே…மனையறத்தில் மனிதனின் தேடல் மனையாளின் மலர்ந்த முகத்தில்தானே முழுமை அடைகிறது.

மனைவி தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை உணர்ந்தவன் என்னவென்று புருவம் உயர்த்தி வினவ முகம் சிவந்து விட ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள். 

அன்று இரவு தங்கள் அறைக்கு வந்தவள் குளித்து முடித்து இரவு உடை அணிந்து கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். 

நான்கு பேர் படுத்து உருளலாம் போலப் பெரிய படுக்கை… எதிரே ஐம்பத்தி ஐந்து இன்ச் எல்ஈடி(LED) தொலைக்காட்சி..

ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவள் பாடல்கள் இருக்கும் அலைவரிசையைத் தேடினாள். 

அவள் அன்னை வீட்டில் இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம்  ஏதாவது மனதிற்கு இனிமையான பாடல்கள் கேட்பது வழக்கம். 

புதுப் பாடல்களில் இனிமையை விடத் துள்ளலே அதிகம் என்பதால் இரவு நேரத்திற்கு அவளது தேர்வு இளையராஜாவின் இன்னிசை அல்லது கருப்பு வெள்ளை காலத் தேனிசைப் பாடல்கள்.

அதைப் போல் தேடியவள் ஒரு பாடலை ஓட விட்டு அமைதியாகப் படுக்கையில் சாய்ந்தாள். 

கணவன் அந்தப்புறம் கையில் ஒரு பத்திரிக்கையுடன் முதுகு காட்டி அமர்ந்து இருந்தான். 

“உங்களுக்கு ஒன்றும் தொந்தரவா இல்லையே!” 

எதற்கும் இருக்கட்டும் எனக் கேட்டு வைத்தாள். அப்படியாவது பேசுவான் என அவள் நினைக்க “இல்லை” என பதில் மட்டும் வந்தது.

‘பேசிட்டாலும்’ என மனதில் நொடித்துக் கொண்டவள் தோளைக் குலுக்கி விட்டுத் திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். 

அப்போது வந்த ஒரு பாடல் சிச்சுவேக்ஷன் சாங் என்று சொல்வார்களே அது போல் அவர்களது… குறிப்பாக அவள் நிலையை எடுத்துக் காட்டுவது போல் அமைந்திருந்தது.

“குத்துவிளக்கெரிய…கூடமெங்கும் பூ மணக்க…

மெத்தை விரித்திருக்க… மெல்லியலாள் காத்திருக்க…

வாராதிருப்பானோ… வண்ண மலர்க் கண்ணன் அவன் 

சேராதிருப்பானோ…சித்திரப்பூம்பாவை தன்னை 

மெல்லத் திரும்பி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவன் இந்தப்புறம் திரும்பவுமில்லை… பாடலைக் கவனித்ததாகவும் தெரியவில்லை. பாடல் தொடர்ந்தது…

பக்கத்தில் பழமிருக்க… 

பாலோடு தேன் இருக்க…

உண்ணாமல் தனிமையிலே 

உட்கார்ந்த மன்னன் அவன்…”

ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது. 

அந்தப் பெருமூச்சின் ஒலியில் அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

இதுதானே அவன் எதிர்பார்த்தது…வெளியில் சொல்ல முடியாமல் அவள் மனதிற்குள் புழுங்க வேண்டும் என்பதுதானே அவன் எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தது நிறைவேறும்போது சிரிப்பது இயற்கைதானே!

அவள் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை அணைத்து விட்டுத் திரும்பிப் படுத்து உறங்கிப் போனாள். 

மறுநாள் காலை அவன் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். முந்தைய நாள் போல் அவன் அருகே சென்றவள்… “வந்து…” என்றாள்  

அவன் திரும்பிப் பார்க்க  “அம்மா வீட்டுக்கு எப்போ போறது?”

“போறதுன்னா கார் எடுத்துட்டுப் போய்ட்டு வா”

“நான் மட்டுமா…கல்யாணம் ஆன பின்னால முதல் முதலாப் போறது கணவனும் மனைவியும் சேர்ந்து போகணும்னு சொல்வா…”அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கை உயர அவள் பேசுவதை நிறுத்தினாள்.

“அந்த சம்பிரதாயத்துக்காகத்தான் மறுவீடுன்னு ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வந்தாச்சுல்ல…இனிமே போகணும்னா நீ தனியாப் போய்க்கோ என்னால வேலை எல்லாம் விட்டுட்டு வர முடியாது…நேற்று ஆஃபிஸ்ல பார்த்தேயில்ல…எத்தனை வேலைகள் நான் கவனிக்க வேண்டியிருக்கு… ஊர் சுத்திட்டெல்லாம் இருக்க முடியாது.உனக்கு அம்மா அப்பா ஞாபகம் வந்தா என்னை ஏன் இழுத்தடிக்கிறே?”

அவள் முகம் அவன் பேசிய பேச்சில் சிவந்து விட்டது. 

‘எனக்கு வேலை இருக்கு நீ மட்டும் போன்னு சொல்றதுக்கு எத்தனை அனாவசிய வார்த்தைகள்’ என நினைத்துக் கொண்டவள்,

“அம்மா அப்பாவைப் பார்க்கணும்னெல்லாம் இல்ல… காஷ்மீர்ல வாங்கின பொருட்களைக் கொடுத்திட்டு வந்துறலாம்னுதான் நான் போகணும்னு நினைத்தேன்…சரி நான் போய்ட்டு வந்துடறேன்” சின்னக் குரலில் சொல்லி முடித்துத் திரும்பிப் போனவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது அவனுக்கு…

கதவருகில் சென்றவளை “நில்லு!!” என்ற அவன் குரல் தடுத்து நிறுத்தியது…

திரும்பினால் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டு கொள்வான் என நினைத்துத் திரும்பாமல் அப்படியே நின்றாள்.

அவன் தன் பீரோவைத் திறக்கும் சத்தம் கேட்டுக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு திரும்பினாள்.

உள்ளிருந்து ஒரு பணக்கட்டை எடுத்து டீப்பாய் மீது தூக்கிப் போட்டவன் “போகும் போது ஸ்வீட், காரம்லாம் வாங்கிட்டுப் போ” 

அந்தக் கட்டைப் பார்த்தவளுக்கு… இரண்டு ஆண்டுகள் வங்கியில் வேலை பார்த்த அனுபவத்துக்கு… கையில் எடுக்காமல், எண்ணிப் பார்க்காமலே அது பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டு என்று புரிந்தது.

அருகில் சென்று அந்தக் கட்டை எடுத்தவள் அதில் இருந்து இரண்டு நோட்டுக்களை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு “ஸ்வீட் காரம் வாங்க இது போதும்” என வெளியேறப் போனாள்

“வேற உன் செலவுக்கு வச்சுக்கோ!”

அவள் கதவருகில் நின்று அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்…

அந்தப் பார்வையில் அதில் தெரிந்த பாவங்களில் அவன் திகைத்துப் போனான்.

‘மனைவிக்கு அன்றாடச் செலவுக்குப் பணம் தர நினைப்பவன் செய்யும் செயலா இது?’

‘உன்னை உயர்வாக நினைத்தேனே!’

‘நீ தூக்கிப் போடும் பணத்தைப் பொறுக்கிக் கொள்ளும் சுயமரியாதை இல்லாதவள் என்றா நீ என்னை நினைத்தாய்?’

‘இந்த ஆயிரம் ரூபாய் கூட உன் மாமனார் வீட்டில் உன் கௌரவத்தைக் காப்பாற்றத்தான்’

இப்படி எத்தனையோ பதில்களைப் பார்வையில் சொன்னவள் கடைசியில் வாயைத் திறந்து “தேவைப்பட்டாக் கேட்குறேன்” என்று விட்டு வெளியேறினாள்.

ஆனால் அவள் பார்வை சொல்லியது அவள் தேவைப்பட்டாலும் கேட்க மாட்டாள் என…

அவன் அவ்வாறு அவளை அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. காலையில் வந்து அம்மா வீட்டுக்குப் போக வேண்டும் எனவும் அதற்குள் அம்மாவைத் தேடி விட்டதா என சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது அவனுக்குள்…அவனும் இயல்பில் கோபம் கொள்ளக் கூடியவன்தான்.ஆனால் அதை எளிதில் பிறர் அறியாமல் மறைத்து விடுவான். ஆனால் மனைவியிடம் மட்டும் அந்த முயற்சி பல நேரங்களில் தோல்வியைத் தழுவியது. அத்துடன் அவன் மனதில் அவளைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்ராயமும் தலை தூக்க அதற்கு மேல் அவள் ஏதோ விளக்கம் சொல்லியும் கூடச் சட்டென்று யோசியாமல் செய்து விட்டான்.

மனைவியைக் காரணமற்று வருத்தி விட்டோமே என சங்கடமாக இருந்தது அவனுக்கு…

உடை மாற்றிக் கீழே சென்றவன் உணவுண்ண அமர அவனுக்குப் பரிமாற வந்தவள் அவன் முகம் பார்க்காமலே எடுத்து வைத்தாள்.

காலையில் சத்துமாவுக் கஞ்சி குடித்து விட்டுக் காலை உணவு சீக்கிரம் சாப்பிடப் பசிப்பதில்லை என்றும் இத்தனை நாட்கள் விஜய் தனியாகச் சாப்பிடுவானே என உடன் சாப்பிட்டதாகவும் இனிமேல் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிடுவதாகவும் பெரியப்பா முதல் நாள் இரவே சொல்லி இருந்ததால் அவன் அவரைத் தேடவில்லை.

உண்மையில் சின்னஞ்சிறுசுகள்…புதுமணத் தம்பதிகள்… கொஞ்சம் இயல்பாக இருக்கட்டும்…இடையில் கரடி போல் தான் எதற்கு என நினைத்தே கண்ணபிரான் அப்படிச் சொல்லி இருந்தார்.

அமைதியாக உண்டு முடித்தவன் கை கழுவும் இடத்துக்குச் சென்றதும் “ரியா!” என்று அழைத்தான். 

உணவு மேஜையை ஒதுக்கிக் கொண்டிருந்தவளுக்கு  இந்தச் செல்ல சுருக்கத்தில் இன்னும் எரிச்சல் வந்தது. ‘இந்த வேஷம் போடுறதுல  ஒன்னும் குறைச்சல் இல்ல’ என மனதுக்குள் பொருமிக் கொண்டே அவன் முன் வந்து நின்றாள்.

“கை துடைக்குற டவல் இல்ல”

அவன் முகம் பார்க்கப் பிடிக்காமல் தலை குனிந்திருந்தவள் ‘காலையில்தானே எடுத்து வைத்தோம் இல்லை என்கிறானே’ என நினைத்து நிமிர்ந்து துவாலை போடும் இடத்தைப்  பார்க்க நிஜமாகவே அங்கு இல்லை. 

மளமளவென அவன் அருகே சென்றவள் இயல்பாக அவனைச் சுற்றித் தேட ஆரம்பித்தாள்…  “இங்கேதானே வச்சேன்” என்ற முனுமுனுப்புடன்…

“எனக்கு நேரம் ஆகுது” என்றதைக் காதில் வாங்காமல் தான் எடுத்து வைத்தது அப்படி எங்கே போய் விடும் என்ற எண்ணத்தில்  அவனைச் சுற்றிச் சுற்றித் தேடிக் கொண்டிருந்தவள் அவன் முன் வந்த போது அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவள் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க அவள் கண்களுக்குள் பார்த்துக் கொண்டே அவள் செருகி இருந்த புடைவை முந்தானையை இழுத்துக் கைகளையும் வாயையும் துடைத்துக் கொண்டான்.

அவன் கை பட்டதில் கூசிச் சிலிர்த்தவள் தலை குனிய ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தியவன் அவள் கண்களுக்குள் பார்த்து “சாரி” என்றான். அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

புடைவையை விட்டு விட்டு அவள்  கையைப் பிடித்தவன் அவளுடன் இணைந்து நடந்து வாசல் வரை சென்றான்.

“நான் இன்னிக்கு ஆஃபிஸ் வரலே” சின்னக் குரலில் அவள் உரைக்கவும்,

“நானும் உன்னைக் கூப்பிடலே…உனக்கு எப்போ வரணும்னு தோணுதோ அப்போ வா…ஆனா தினமும் நான் கிளம்புறப்போ இங்கே வரை என் கூட வரணும்” என்று விட்டு அவள்புறம் திரும்பினான்.

“போய் அம்மா அப்பா தங்கைகளை எல்லாம் பார்த்துட்டு ஃப்ரீயா இருந்துட்டு சாயந்திரம் வா…நான் மதியம் வர மாட்டேன்…மாமாவையும் அத்தையையும் கேட்டதாச் சொல்லு…பெரியப்பாகிட்டச் சொல்லிட்டுப் போ” என்றவன் “சாயந்திரம் வந்துறலாம்ல, இல்ல ரெண்டு மூணு நாள் தங்கிட்டு வரணுமா?” எனவும் அப்போதுதான் அவன் கோபம் எதற்காக என அவளுக்குப் பிடிபட்டது.

அவள் வேகமாக இடம் வலமாகத் தலையசைத்தாள். “அப்பிடில்லாம் எதுவும் இல்ல…அது கூட உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் போகல…பொருள் எல்லாம் ட்ரைவர்கிட்டக் குடுத்து விட்டுடறேன்.” 

தலை குனிந்தபடிக் கூறியவளின் முகம் நிமிர்த்தியவன் “பிடிக்காமல்லாம் இல்ல…சாயந்திரம் நான் வர்றதுக்குள்ள வந்துரு” என்று அவள் கன்னத்தை மென்மையாகத் தட்டி விட்டு அவள் கைகளில் எதையோ திணித்து விட்டுக் கிளம்பக் குனிந்து பார்த்தவள் கைகளில் காலையில் அவள் துவாலை தாங்கியில் போட்ட லாவெண்டர் நிற துவாலை…

‘திருடன்… வேண்டுமென்றே எடுத்து ஒளித்து வைத்து விட்டு…’ என நினைத்து அவனை முறைக்க முயல அதற்குள் காருக்குள் ஏறி அமர்ந்திருந்தவன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி விட்டுக் கையை ஆட்டி விட்டுச் சென்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள் கார் கிளம்பியதும் அவன் நினைவில் முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் உள்ளே சென்றாள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கும் அவள் நினைவுதான்… ஆனால் அவன் மனம் தெளிவற்றுக் குழம்பிக் கிடந்தது.

விவரம் தெரிந்து தனியாகத் தொழில் செய்ய ஆரம்பித்த நாள்  முதற்கொண்டு மனம் நினைத்ததைச் செய்து பழக்கப்பட்டிருந்தவனுக்கு மனம் நினைப்பது ஒன்றாகவும் செய்யும் செயல் வேறாகவும் இருப்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக இருந்தது. 

அவன் நோக்கம் அவளைக் காயப்படுத்த வேண்டும்… மற்றவர்கள் முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூடத் தனிமையிலாவது அவள் அவமானப்பட வேண்டும் என்பது… ஆனால் அவள் கஷ்டப்பட்டாலோ அவமானப்பட்டாலோ அவனால் தாங்க முடியவில்லை…

அதுவும் காலை அவள் பார்த்த பார்வை அவன் கண்களிலேயே இருந்தது…

வெண்ணிலவைப் போல் வட்டமான அந்த விழிகளில் நிமிட நேரத்துக்குள் பௌர்ணமியும் அமாவாசையும் அதற்கிடையிலான பிறை நாட்களும் வரிசையாகக் காணக் கிடைத்தன.

நேசத்தையும், நேர்மையையும், கம்பீரத்தையும் ஏன் கோபத்தைக் கூடக் காட்டிய அந்த வெண்ணிலா விழிகளின் பார்வையைக் கயமையுடன் இணைத்துப் பார்க்க அவனால் முடியவில்லை. 

ஆனால் அவனுக்குக் கிடைத்த சாட்சிகள் எல்லாம் அவளுக்கு எதிராக இருந்தன.

அறைக்கு வெளியே மற்றவர்கள் பார்க்க மனைவி மீது பிரியம் இருப்பதாக நடிப்பதாகவும், அறைக்குள் அவள் மேல் அவனுக்கிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் நினைத்துக் கொண்டிருந்தவனுக்குப் புரியவில்லை… உண்மையில் அறைக்கு வெளியே இயல்பான முகத்துடனும் அறைக்குள்ளே வெறுப்பென்னும் முகமூடியை அவன் அணிந்து கொண்டிருப்பதும்.

மேலும் அறைக்குள் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன் அறைக்கு வெளியே மற்றவர்களுக்காக நடிப்பதாகக் கூறிக் கொண்டு தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் அறிந்தானில்லை.

தன் மன ஆசைகளை அலசி ஆராய்ந்து கூடவே மனைவியின் நடவடிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்ப்பானேயானால் அவனது நிறுவனத்தின் பெயரைப் போல் அவன் வாழ்க்கையிலும் வசந்தம் வீசும்…

ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் நேரம் கூடி வர வேண்டுமோ!

கண்ணுக்குள்ள மின்னும் மையி உள்ளுக்குள்ள  எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளிவேஷம்
திரை போட்டு செய்ஞ்ச மோசமே 
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா இந்த பொம்பளை மனசுதான்யா

Advertisement