Advertisement

அத்தியாயம் 6

தன் மனக்குழப்பங்களைப்  பற்றி யோசிக்கவும் முடியாமல் யோசனையை நிறுத்தவும் வழியறியாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் அறையின் கதவு திறக்கவும் தன் கணவனின் குரலும் கேட்கவும் ஆவலே உருவாக எழுந்து நின்றாள்.

உள்ளே நுழைந்து அவள் முகத்தைக் கண்டவனுக்கு என்ன தோன்றியதோ “மெலிசா! ஃபைவ் மினிட்ஸ்” என்று விட்டு உள்ளே வந்தான். 

கையிலிருந்த ப்ரீஃப்கேசை மேஜையில் வைத்தவன் அவள் அருகில் வந்து ஒரு கையை நீட்டினான். அவள் புரியாமல் அவன் கை மேல் கையை வைக்க அவளைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டான். 

காதுகளுக்குள் மெல்ல “மிஸ்ட் யூ ஆல்ரெடி” என்றவன் அவள் விலக முயற்சிக்கவும் “ம்ஹூம்… அப்படியே இரு” என்றான். 

அவளுக்குக் கைகளை உயர்த்தி அவனை அணைக்கவும் தயக்கமாக இருந்தது. விலக முயன்றாலோ அவன் பிடி உடும்புப் பிடியாக இருந்தது. இந்த அணைப்பு அவளுக்கானதா… அல்லது காலையில் அணைத்தானே அது போல் மற்றவர்கள் பார்வைக்கானதா எனப் புரியாமல் அந்த அணைப்பை ஏற்க அவள் மனம் முரண்டியது.

நிமிடங்கள் கடந்திருக்க “மே ஐ கமின் பாஸ்?ஆர் யூ டீசென்ட்?” எனக் கேட்டு கொண்டே மெலிசா கதவைத் திறக்கவும் அவளை விடுவித்து சற்று தள்ளி நிறுத்தினான்.

உள்ளே வந்த மெலிசாவைப் பார்த்துப் புன்னகைத்தவன், அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

மெலிசா கொண்டு வந்த கோப்புக்களை மேலோட்டமாகப் படித்துப் பார்த்து விட்டுக் கையெழுத்திட்டவன்,

“நாங்க லன்சுக்குக் கிளம்பறோம் மெலிசா…ஒரு மணி நேரத்துல திரும்பிடுவேன்…நீங்க மத்த விஷயங்களைத் தயார் பண்ணுங்க” என்று விட்டு அவள் தோளை அணைத்தபடியே கிளம்பினான்.

காரில் அமர்ந்து அதைக் கிளப்பி அமைதியாக ஓட்டி வந்தவனிடம், 

“உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல”

‘என்னாலயே முடியல’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு அப்பிடி என்ன செய்தேன் நான்?”

“காலைல நம்ம உங்க ரூம்குள்ள போனப்போ…” என ஆரம்பித்தவள் அதை எப்படி வார்த்தைகளில் விளக்குவது எனத் தெரியாமல் சரி அப்புறம் நேர்ந்ததையாவது சொல்லலாம் என நினைத்து, “அப்புறம் இப்போ கொஞ்சம் முன்னால” என ஆரம்பித்து மீண்டும் வார்த்தை வராமல் தவிக்க, அவளது தவிப்பை சுவாரசியமாகப் பார்த்தவன்,

“இப்போ எல்லாரும் சேர்ந்து போய் மதிய உணவு சாப்பிடுவாங்க…” என்றான் மொட்டையாக…

‘எப்பப் பாரு புரியாத மாதிரியே பேசி விஷயத்தை சொல்வானா’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் “அதுக்கு  என்ன இப்போ?” என்றாள்.

“அங்கே இன்னிக்கு ஹாட் டாபிக் நம்மதான்” என்றதும் அவள் விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்.

“ஆமா! மெலிசாவும் அவங்க கூட சேர்ந்துதான் சாப்பிடுவாங்க.மெலிசா புறணி எல்லாம் பேச மாட்டாங்கன்னாலும் பாஸ் அவங்க வைஃப் மேல பிரியமா இருக்கிறார்ன்னு சொல்றது தப்புன்னு கண்டிப்பா யோசிக்க மாட்டாங்க” எனவும் அவளுக்குக் கோபம் வந்தது.

“நாம நமக்காகத்தான் வாழணும். இப்பிடி அடுத்தவர் பார்க்குறதுக்காக வாழ்ந்தோம்னா சீக்கிரமே வாழ்க்கை சலிச்சிடும்”

“நான் எனக்காக வாழணும்னுதான் நினைச்சேன்.ஆனா சில நேரங்கள்ல விதி நமக்குப் பிடிக்காத காரியங்களையும் நம்மை செய்ய வச்சுடுது”

“பிடிக்காத காரியங்களை ஏன் செய்யணும்?”

“அதுதான் விதின்னு சொன்னேனே!”

“புரியல”

“நல்லா யோசிச்சுப் பாரு புரியும். இன்னிக்கு ஆஃபிஸ் பார்த்தியே. உன்னோட பேங்க் வேலை பத்தி இப்போ என்ன முடிவுக்கு வந்திருக்கே?“

ஆக அவள் கேட்ட கேள்விக்காகத்தான் அலுவலகத்திற்கு அழைத்து வந்தானா? கணவன் தன்னைப் பிரிய மனமில்லாமல் அழைத்து வந்தான் என நினைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனம். அவன் அருகில் இல்லையென்றால் தலையில் நறுக்கென்று கொட்டிக் கொண்டிருப்பாள்.

இத்தனை பெரிய நிறுவனத்தை உருவாக்கி அதை நிர்வாகம் செய்து இத்தனை பேருக்கு சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் தொழிலதிபரின் மனைவி ஒரு வங்கிக்கு மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றால்…இதை உணர்த்தத்தான் அவளை அழைத்து வந்திருக்கிறான்.

“நான் இந்த வாரத்தில் போய் ராஜினாமாக் கடிதம் குடுத்துட்டு வந்துடறேன்.”

“குட்” என்றவன் அந்த ஐந்து நட்சத்திர உணவகத்துக்குள் வண்டியைச் செலுத்தினான்.

அவளுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டு அவற்றை வரவழைத்தான். ப்ரியம்வதாவுக்கு ஒன்றும் ரசிக்கவில்லை. கணவனின் அருகாமையே முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது அவளுக்கு…பெயருக்கு அவள் உண்டு முடித்ததை கவனித்தாலும் எதுவும் சொல்லாமல்  அவளை வீட்டில் விட்டு விட்டு அவன் அலுவலகம் சென்று விட்டான்.

அறைக்குச் சென்ற பின் தனிமையில் அமர்ந்தாள்.

தனிமை…

அவர்கள் முதலிரவுக்குப் பிறகு முதல் முறையாக அவளுக்குக் கிடைத்த தனிமை அது…

கணவனும் அருகில் இல்லாத நிலையில் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் திருமணத்துக்குப் பின்னான நிகழ்வுகளை மனதில் அசை போட ஆரம்பித்தாள்.

தான் தெரியாமல் செய்து விட்ட தவறை, பெருந்தன்மையாக மன்னித்து விட்டது போலவும் காதலில் உருகுபவன் போலவும் அவன் நடந்து கொண்ட முறை என்ன… இப்போது காட்டும் பாராமுகம் என்ன?

முதலிரவுக்கு பின் அவன் சொன்ன விஷயங்கள் அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் முதலில் அவன் வார்த்தைகளில் அவள் நம்பிக்கை கொள்ளவில்லை. சும்மா விளையாடுகிறான் என நினைத்தவள் தொடர்ந்து வந்த தேனிலவில் அவன் விளையாடவில்லை உண்மையைத்தான் சொல்லி இருக்கிறான் என நன்றாகப் புரிந்து கொண்டாள்.

அப்படியானால் அவன் காதல் கொண்டு அவளை மணக்கவில்லையா? திருமணத்துக்கு முன் அவனது செய்கைகளை யோசித்துப் பார்த்தவளுக்குக் குழப்பமே மிஞ்சியது. 

திருமணத்துக்கு முன் அவனுடனான சந்திப்பை மனதினுள் கொண்டு வந்து அசை போட்டவளுக்கு எந்தக் கணத்திலும் அவன் அவளைக் காதலிக்கிறேன் என்று சொன்னதாக நினைவுக்கு வரவில்லை… ‘திருமணம் செய்து கொள்கிறாயா’ எனக் கேட்டவன் அவன்தான்… ஆனால் காதல்…

கண்களை மூடி அவன் திருமணத்துக்குக் கேட்ட தோற்றத்தை மனதினுள் கொண்டு வந்து யோசித்தவள் படக்கெனக் கண்களைத் திறந்தாள்.

இல்லை… காதல் கண்டிப்பாக இருந்தது அவன் கண்களில்… அதை உணர்ந்ததனால்தான் அவளும் அவனுக்கு சம்மதம் சொன்னாள். ஆனால் இப்போதானால் தப்புக்குப் பழி வாங்குகிறேன் என்கிறானே…

அவள் தப்பு செய்தாள்தான்… ஆனால் அதற்கு மன்னிப்புக் கேட்டு விட்டாள்தானே! அதன் பிறகும் அதை பிடித்து கொண்டே தொங்கினால் அவள் என்னதான் செய்வது…

கணவனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனத்தில் ஓட்டிப் பார்த்தாள். 

மற்றவர்களுக்காக வாழ்வது பிடிக்காது எனச் சொல்பவன் இப்படி நடந்து கொள்ளக் காரணம் என்ன?

புரியாத புதிரான அவனது நடவடிக்கைகளுக்கு விடைதான் என்ன?

எத்தனை யோசித்தும் அவளுக்கு எதுவும் புரியவில்லை. யோசித்தது…அலைச்சல் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. அப்படியே உறங்கி விட்டவள் மீண்டும் விழித்துப் பார்த்த போது வெளியே லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

அவசரம் அவசரமாக முகம் கழுவிப் பொட்டிட்டுக் கீழே இறங்கினாள்.

கண்ணபிரான் வரவேற்பறையில்அமர்ந்திருந்தார்.

சங்கடத்துடன் அவர் அருகே சென்றவள், “சாரி மாமா… கொஞ்சம் அலுப்பிலே தூங்கிட்டேன்”

“இதுக்கு எதுக்கும்மா சாரி…ஊருக்குப் போய்ட்டு வந்த கையோட இன்னிக்கு ஆஃபிஸ்க்கு வேற கூட்டிட்டுப் போய்ட்டான். அலுத்துக் களைச்சுப் போய் இருக்கும் உனக்கு. இன்னும் கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுத்துட்டு வந்திருக்கலாமே!”

“இல்ல மாமா, மணி ஆறாகப் போகுது…விளக்கேத்தணுமே… அதுதான்” என்றவள் பூஜை அறையில் நுழைந்து விளக்கேற்றினாள்.

கண்ணபிரான் மன நிறைவுடன் பார்த்தார்.

மகன் ஆசைப்பட்டான்…அதற்கு மேலும் என்னென்னவோ ப்ரச்சனைகள் நடந்து வீட்டுக்கு வந்த மருமகள் எப்படி இருப்பாளோ என்று அவர் மனதில் இருந்து கொண்டே இருந்த பயம் இப்போது குறைந்தாற்போல் இருந்தது.

அவர் எதிரில் வந்து நின்றவள் “காஃபி டிஃபன் சாப்பிட்டீங்களா மாமா?”

“ஆச்சும்மா… உனக்குக் காஃபி கொண்டு வரச் சொல்லி இருக்கேன். இப்பிடி உட்கார்”

அவருக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டினார்.

“ஆஃபிஸ் பார்த்தியா? உனக்குப் பிடிச்சிருந்துச்சா?”

“ம்ம்ம்… ரொம்பப் பிடிச்சிருந்துச்சு மாமா. எத்தனை பெருசு? இதுக்கு முன்னால ஒரு தடவை வந்துருக்கேன்னாலும் அப்போ இருந்த சூழ்நிலைல எதையும் கவனிச்சுப் பார்க்கல நான்”

அந்த சூழ்நிலை எது என்று தெரியும் ஆதலால் கண்ணபிரான் எதுவும் சொல்லவில்லை.

“ஆனா எப்பிடி மாமா? சாதாரணமா ஒரே தலைமுறைல இப்பிடி ஒரு விஷயம் உருவாக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு”

“எல்லாத்துக்கும் காரணம் விஜய்யோட உழைப்புதான்மா. முதல் போட மட்டும் அவங்க தாத்தா வீட்டை அடமானம் வச்சுப் பணம் புரட்டினான்.அதையும் ரெண்டே வருஷத்துல மீட்டுட்டான். ஏழு வருட உழைப்பு. முதல்ல சென்னைல ஒரே ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்தான் ஆரம்பிச்சான். அங்கேயே தங்கி, தூங்கி, சாப்பிட்டு அவன் ஒருத்தனா உழைச்சான். கொஞ்சம் கொஞ்சமா வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பிச்சாங்க. அப்புறம் அந்த ஸ்டோரை மளிகைக்கு மட்டும்னு வச்சுட்டுப் பக்கத்துலயே பழமுதிர்சோலைன்னு ஆரம்பிச்சுக் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஆரம்பிச்சான்…அப்புறம் இதே போல் சென்னைல வேற வேற இடங்கள்…கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு துறைலயும் நுழைஞ்சு இன்னிக்கு சென்னைல மட்டும் நம்ம கடைகள் முப்பது இடத்துல இருக்கு…வசந்தம் டைரி, வசந்தம் ஃப்ரெஷ் பேக்கர்ஸ், வசந்தம் ஃபர்னிச்சர்ஸ், வசந்தம் டெக்ஸ்டைல்ஸ், வசந்தம் எலெக்ட்ரானிக்ஸ்… இப்பிடி எல்லா துறைலயும் நுழைஞ்சாச்சு.” பெருமையாகச் சொன்னவரைப் பார்த்து அவளுக்கும் பெருமையாக இருந்தது.

“ஆரம்பத்துல நான் உதவிக்கு வர்றேன்னு சொன்னப்பக் கூட மறுத்துட்டான். எனக்கு எங்க ஊர்ல திண்ணை, முத்தம், கொல்லைப்புறம்னு வாராசாரியாப் புழங்கிப் பழக்கம். அதுனால என்னை வர விடல.மூணு வருஷம் முன்னால இந்த வீட்டை வாங்கினப்புறம்தான் நான் இங்கே வந்தேன். என்னையும் கடைகளுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய்த் தொழில் சொல்லிக் குடுத்துருக்கான்.ஒவ்வொரு மாநிலத்துல தொழில் ஆரம்பிக்கும் போதும் அங்கே போய் மூணு மாசம் தங்கிடுவான். அங்கே ஆரம்பிச்சு அங்கே இருக்கிறவங்களையே நல்லாப் பழக்கினதுக்கப்புறம் ஒரு டீமை இங்கே கூட்டிட்டு வந்துடுவான். அவங்க இங்கே இருந்தே அந்த ஊர் விஷயங்களை நிர்வாகம் பண்ணி விஜய்க்கு ரிப்போர்ட் குடுத்துருவாங்க”

“அது எதுக்கு மாமா? நானே கேட்கணும்னு நினைச்சேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரிவுன்னு கணக்கு வழக்குல இருந்து நிர்வாகம் வரை பிரிக்கிறதுக்கு இது எல்லாத்தையும் ஒரே பிரிவுக்குக் கீழ கொண்டு வந்தால் தொழிலாளிகளோட எண்ணிக்கையைக் குறைக்கலாமே”

“குறைக்கலாம்மா… ஆனால் ஒவ்வொரு மாநிலத்துல இருந்து வந்தவனுக்கு அங்கே உள்ள மொழி, ப்ரச்சனைகள், பொருட்களோட தரம், என்னென்ன எந்தெந்த சீசன்ல கிடைக்கும், அங்கே உள்ள லோக்கல் ரௌடிங்க, போலீஸ் எல்லாத்தைப் பத்தியும் நல்லாத் தெரியும்…இதை எல்லாம் ப்ரச்சனை இல்லாம சமாளிக்கவும் மேலும் அவங்க ஊரை விட்டுட்டு இங்கே வந்து இருக்கிறதுக்காகவும் அவங்களுக்குத் தனியா அலவன்ஸும் கொடுக்கிறோம். இப்போதானே வந்துருக்கே…போகப் போக எல்லாம் புரிஞ்சுப்பே.”

வீட்டில் இருப்பவர் என நினைத்தவர் இத்தனை விஷயங்கள் தெரிஞ்சு வச்சுருக்காரே என அவள் ஆச்சர்யமாகப் பார்ப்பது கண்டு “என்னம்மா வீட்டுலதானே இருக்கான்…இவனுக்கு இவ்வளவு விஷயம் தெரியுதேன்னு யோசிக்கிறியா?” என அவள் மனதைப் படித்துக் கேட்கவும்,

“ஆமாம் மாமா நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே!”

“விஜய் அப்பப்போத் தொழிலதிபர்கள் மாநாடு, மீட்டிங்க்னு வெளியூர்… சில நேரங்கள்ல வெளிநாடு கூடப் போக வேண்டி இருக்கும்மா. அந்த மாதிரி சமயங்கள்ல நான்தான் நிர்வாகம். அந்தக் காலத்து எம்.ஏம்மா நான்… நல்லா இங்க்லிஷ் பேசுவேன்” என அவர் கூறவும் அவளுக்கு சிரிப்பு வந்தது. கலகலவென நகைத்தாள்.

“காட்டான் மாதிரி இருக்கிறாரு…இவராவது இங்க்லிஷ் பேசுறதாவதுன்னு நீ நினைக்கிறே போல… நான் பேசிக் காட்டுறேன் பாரு”

“மாமா! நான் நம்பலைன்னு யார் சொன்னது? நீங்க சொன்ன தோரணைல சிரிப்பு வந்துருச்சு அவ்வளவுதான்” என மீண்டும் கலகலவென நகைத்தவள் வெளியே அரவம் கேட்கவும் எட்டிப் பார்த்தாள். 

“அவங்கதான் மாமா… வந்துட்டாங்க” என்று எழுந்து போனாள்.

Advertisement