Advertisement

அவன் மெலிஸாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“இன்னிக்கு ஷெட்டியூல் என்ன மெலிஸா?”

“10 ஓ கிளாக் ஃபாரின் டெலிகேட்ஸ் கூட மீட்டிங்”

“மீட்டிங் எங்கே?”

“இங்கேதான் பாஸ் அவங்க இங்கே வந்துடறேன்னு சொல்லி இருக்காங்க.”

“அப்புறம்?”

“12 மணிக்கு ஹெல்த் மினிஸ்டர் அப்பாய்ண்ட்மெண்ட் குடுத்துருக்காரு. நுங்கம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ்ல அவரை மீட் பண்றோம்” 

“நுங்கம்பாக்கமா… அப்போ இங்கே இருந்து நம்ம  அட்லீஸ்ட் 11க்கு கிளம்பணும்”

“யெஸ் பாஸ்… மீட்டிங் முடிஞ்சபுறம் லஞ்ச்… இன்னிக்கு பிசினஸ் லஞ்ச் எதுவும் இல்ல… சோ யுவர் சாய்ஸ்… ஆஃப்டர் நூன் 3  மணிக்குக் கம்பெனி மீட்டிங்…”

“எதைப் பத்தி?”

“ஜெய்பூர்ல நாம புதுசா ஆரம்பிச்சுருக்கிற ப்ரான்ச்ல ஆரம்பத்துல நல்லா இருந்த விற்பனை திடீர்னு தடாலடியாக் குறைஞ்சுருக்கு. அங்கே இருக்கிற ப்ரான்ச் மேனேஜர் கான்ஃபரென்ஸ் கால்ல வர்றாரு.பேசி முடிவெடுக்க… அப்புறம் 4.30கு நம்ம கம்பனி ரொட்டின் மீட்டிங்… எல்லாரும் ரிப்போர்ட் பண்ண வருவாங்க…” என்று முடித்தார்.

“ஓகே! இப்போ நீங்க என்ன பண்ணுங்க… ரியாவைக் கூட்டிட்டு போய் வருண்கிட்ட விட்டு எல்லா ஃப்ளோர்ஸும் சுத்திக் காட்டச் சொல்லுங்க…இல்ல… இல்ல… வருணை இங்கே வரச் சொல்லுங்க”

“ஓகே பாஸ்” என்று மெலிஸா அகல… என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவள் அருகே வந்தான். 

மெல்ல அவள் இடையில் கைவிட்டு அருகில் இழுத்தவன் அவள் திகைத்து நோக்கவும் “1 மணி வரை வேலை இருக்கு. நீ நிதானமா சுற்றிப் பார். பிறகு நாம் லஞ்சுக்குப் போகலாம்” என்று கூறி அவள் கன்னத்தில் லேசாக முத்தமிடவும் மெலிஸா மீண்டும் கதவைத் தட்டவும் சரியாக இருந்தது.

அவளைப் பிடித்திருந்த பிடியை விடாமல் “கமின்” என்றான். 

முகம் சிவந்தவள் கொஞ்சம் நெளிந்து விலகினாலும் அவர்கள் அணைப்பு மெலிஸாவின் பார்வையில் படாமல் தப்பவில்லை. விஷமச் சிரிப்புடன் ப்ரியம்வதாவைப் பார்த்து அவர் கண் சிமிட்ட அவள் முகம் இன்னும் ஆழ்ந்த குங்கும வண்ணம் கொண்டது.

மனைவியின் முகத்தை ரசனையுடன் பார்த்து விட்டுத் திரும்பியவன் பார்வையில் அமைதியாய் அடக்கமாய் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நின்றிருந்த வருண் தெரிந்தான்.

தொளதொளவென்ற இருவர் நுழைந்து கொள்ளும் அளவு பெரிய முழுக்கை சட்டை…கண்களில் சோடாபுட்டிக் கண்ணாடி, எண்ணை தேய்த்துப் படிய வாரிய தலை, சட்டைக்குப் பொருத்தமாக தொள தொள பேன்ட், காலில் சாண்டல்கள் என வித்யாசமான தோற்றத்தில் இருந்தான் வருண்.

அது அவன் உண்மையான தோற்றம் இல்லை என்பது விஜய்க்கும் வருணுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை…

விஜய்யைப் பார்த்து “குட் மார்னிங் பாஸ்” என வணக்கம் வைத்தவன் அழைக்கப்பட்ட காரணத்தை மெலிஸா சொல்லி இருந்ததால் ப்ரியம்வதாவைப் பார்த்து “வாங்க மேம்” என்று அழைத்தான்.

திருமணத்திலேயே அங்கும் இங்கும் ஓடி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கிட்டத்தட்ட இதே போன்ற உடையால் அவள் கவனத்தைக் கவர்ந்திருந்தான்…இந்தக் காலத்தில் இப்படி ஒரு உடையா என மனதில் நினைத்திருந்தவளுக்கு அவனை நன்றாகவே நினைவில் இருந்ததால் கணவனிடம் ஒரு தலையசைவுடன் அவனை நோக்கி நடந்தாள்.

அவர்கள் வெளியேறும் முன் “வருண்!” என்று அழைத்தவன் “இடையில் ரெஃப்ரெஷ்மென்ட்ஸ் ஏதாவது பார்த்துக்கோ… ரொம்ப டயர்ட் ஆக்கிடாதே” எனவும் “எஸ் பாஸ்” என்று விட்டு வெளியேறினான்.

மொத்தம் நாற்பது தளங்களைக் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தில் விஜய்யின் தளத்தில் இருந்தே தங்கள் சுற்றுலாவைத் தொடங்கினர் இருவரும்.

அவனது அலுவலக அறை தவிர மிகப் பெரிய கான்ஃபரென்ஸ் ஹால் இருந்தது. மேலும் ஓய்வு எடுக்க எனக் குளியலறையுடன் இணைந்த ஒரு படுக்கை அறையும் இருந்தது. அவள் கேள்வியாகப் பார்க்கவும்…

“சில நேரங்களில் வேலை அதிகம் ஆகி விட்டால் பாஸ் இங்கேயே தங்கி விடுவது வழக்கம் மேம். அது மட்டும் இல்லாம சில நேரங்கள்ல அவசரமாக ஃப்ளைட் பிடிக்க வேண்டி இருந்தால் ட்ராஃபிக்ல வீட்டுக்குப் போய்க் குளித்து உடை மாற்றி வரும் நேரம் மிச்சம்னு இங்கேயே கிளம்பி நேரா ஏர்ப்போர்ட் போய்டுவார்”. 

“ஓ! ஓகே! ஒவ்வொரு ஃப்ளோர்லயும் என்ன என்ன வேலைகள் நடக்குதுன்னு முதல்ல சொல்லிடுங்க…அப்புறம் எங்கே போகலாம்னு முடிவு செய்துக்கலாம்.”

“மொத்தம் நாற்பது ஃப்ளோர் மேம். நம்ம ப்ரேன்சஸ் ஆல் ஒவர் இண்டியா இருபத்தி ஐஞ்சு ஸ்டேட்ஸ்ல இருக்கு. சோ ஒவ்வொரு ஸ்டேட்கும் ஒரு ஃப்ளோர். அந்த ஸ்டேட் சம்பந்தமான எல்லா பரிவர்த்தனைகளும் அங்கேதான் நடக்கும். பாஸ்க்கு மட்டுமான ஃப்ளோர் இது…மூணு ஃப்ளோர்ல கேன்டீன் நடக்குது. மூணு ஃப்ளோர்ல ரெக்ரீஷன் க்ளப்…இன்னும் ரெண்டு ஃப்ளோர்ல ஹாஸ்பிடல்…ஒரு ஃப்ளோர்ல இங்கே வொர்க் பண்றவங்க குழந்தைகளுக்குன்னு க்ரெஷ் இருக்குது. ஒரு ஃப்ளோர் பொதுவான கான்ஃபரென்ஸ் ஹால்க்குன்னு இருக்கு.விழாக்கள் எல்லாம் அங்கேதான் நடக்கும். இங்கே இருக்கிற கான்ஃபரென்ஸ் ஹால் பாஸ் மட்டும் பயன்படுத்துவாரு… க்ரௌண்ட் ஃப்ளோர் மொத்தமா ரிசெப்ஷனுக்குன்னு அலாட் பண்ணி இருக்குது…சில ஃப்ளோர்ஸ் வேலை நடந்துட்டு இருக்கு.”

அவள் மயங்கி விழாத குறையாக அமர்ந்திருந்தாள். ‘இதை சுற்றிப் பார்க்கவே ஒரு வாரம் ஆகும் போலத் தெரிகிறதே… அதனால்தான் டயர்ட் ஆக்கிடாதேன்னு சொன்னான் போல…’ 

இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி அதை வெற்றிகரமாக நிர்வகித்து வரும் தன் கணவனை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஆட்களை வைத்து வேலை வாங்குவதாக இருந்தாலும்

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்” 

என்ற திருக்குறளின் படி சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து வேலை வாங்கவும் ஒரு திறமை வேண்டுமே!

“முதல்ல பொதுவா இருக்கிற ஃப்ளோர்ஸ் பாத்துருவோம். அப்புறம் ஸ்டேட்ஸ் வாரியான ஃப்ளோர்ஸ்கு போவோம்.” 

“ஓகே மேம்”

முதலில் க்ரஷுக்குப் போனார்கள். மிக மிக அழகாக இருந்தது அந்தப் பகுதி. குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் சுவரில் வரையப்பட்டு… சிறு சறுக்குகள், ஆடும் குதிரைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இருந்த பெண்களிடம் அவள் இனிமையாகப் பேசியதுடன் அங்கிருந்த ஒரு குண்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சவும்… “சீக்கிரம் எங்க ஐயாவுக்கும் ஒரு குழந்தையப் பெத்துக் குடுத்துருங்க தாயி…” என்று வயதில் மூத்தவராகத் தெரிந்த ஒரு பெண்மணி  கோரிக்கை வைக்கவும் அவள் முகம் சிவந்து போனது… என்ன சொல்வது எனத் தெரியாமல் “ம்ம்ம்… என வாய்க்குள் முனுமுனுத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

அடுத்ததாக பொழுது போக்குப் பகுதிக்குச் சென்றவர்கள் பொதுவான அறிமுகம் முடிந்த பின் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள். 

இண்டோர் கேம்ஸ், அவுட்டோர் கேம்ஸ் மட்டுமல்லாது இந்தக் காலத்து மால்களில் இருப்பது போல் பெரிய பெரிய விளையாட்டு மெஷின்கள் வாங்கிப் போடப்பட்டிருப்பதும் அல்லாமல் சிலர் அதில் எல்லாம் அமர்ந்து விளையாடிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தவள்… “இவர்கள் வேலை நேரத்தில் இங்கே என்ன செய்றாங்க?” எனக் கேள்வி எழுப்பினாள்

“இவங்க வேலையே இதுதான் மேம்…எல்லா கேம்ஸும் சரியா வேலை பார்க்குதான்னு செக் பண்ணிகிட்டு இருக்காங்க…”

கடிகாரத்தைத் திருப்பி மணி பார்த்தவன் “இப்போ நேரம் பத்து ஆகுது…பதினோரு மணில இருந்து பதினொன்னே கால் வரை டீ ப்ரேக். அப்போ இங்கே வொர்க்கர்ஸ் வந்து விளையாடுவாங்க. அப்புறம் ஒன்னரைல இருந்து ரெண்டு மணி வரை லன்ச்  ப்ரேக் அப்பவும் வருவாங்க…அப்புறம் சாயந்திரம் ஐஞ்சு மணில இருந்து எட்டு மணி வரைக்கும் இங்கே கூட்டமாத்தான் இருக்கும்”

மூன்று தளங்களிலும் பார்த்து முடிந்த பிறகு… மருத்துவமனைத் தளத்துக்குப் போனார்கள்…ஒவ்வொரு தளத்திலும் ஒரு ஆண் மருத்துவரும் ஒரு பெண் மருத்துவரும் பணியில் இருந்தார்கள்…

சிலர் படுக்கையில் அமர்ந்து மடியில் லேப்டாப்பை வைத்து வேலையும் பார்த்துக் கொண்டிருந்தனர். பணியும் பாதிக்கப்படாமல் ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தவள்  “வேலையும் பார்க்கிறாங்க!” என ஆச்சர்யத்துடன் வினவினாள். 

“பெரும்பாலும் கணவனும் மனைவியும் வேலை பார்க்கிற இந்த காலங்கள்ல உடம்பு சரி இல்லைன்னு வீட்டில் இருந்தால், கூட இருந்து கவனிக்க ஆள் கிடையாது மேம்…சோ, உடம்பு சரி இல்லைன்னாலும் இங்கே வந்துட்டா அவங்களுக்கு ராஜ கவனிப்புத்தான்…அதுனால யாரும் லீவ் போடவே மாட்டாங்க”

”இந்த மாதிரி செய்ய யோசனை குடுத்தது யாரு?”

“எல்லாம் பாசோட யோசனைதான் மேம்…இங்கே இருக்கிற ஒவ்வொரு செங்கல்லும் அவர் யோசனைப்படிதான் வைக்கப்பட்டிருக்கு.”

அடுத்தது கேன்டீனுக்குக் கூட்டிச் சென்றான்…அவர்கள் சென்ற நேரம் பெரும்பாலான பகுதி காலியாகவே இருந்தது…

“இப்போ டீ ப்ரேக்தான் மேம்…ஆனா இன்டர்காம்ல ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு க்ளப் ஏரியாவுக்குப் போய்டுவாங்க… மதியம் சாப்பாட்டு நேரம்தான் இங்கே கூட்டம் அதிகமா இருக்கும்”

அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு ஆர்டர் கொடுத்தான். வெறும் பழச்சாறு மட்டும் அருந்தி முடித்தவளுக்கு உடனேயே கணவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. 

முந்தைய நாள் வரை அவன் தோளோடு இடித்துக் கொண்டே எல்லா இடங்களிலும் சுற்றி விட்டு இன்று இத்தனை நேரம் அவனைக் காணாதது என்னவோ இழந்தது போல் இருந்தது அவளுக்கு…அதுவும் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக அவன் எழுப்பி இருந்த சாம்ராஜ்ஜியத்தைப் பார்த்து வியந்தவளுக்கு அவனைக் காணும் ஆவல் அதிகரித்தது.

நேரம் பார்த்தவள் இன்னும் நேரம் இருக்கிறதே என யோசிக்க, தேனீர் குடித்து விட்டு வந்த வருண் அவள் முகத்தைப் பார்த்து விட்டு “களைப்பா இருக்குதா மேம்… ஐயோ! பாஸ் ரொம்ப டயர்ட் ஆக்கிடாதேன்னு சொன்னாரே… நான் தெரியாம…” எனத் தடுமாறவும் “அதெல்லாம் ஒன்னும் இல்ல மிஸ்டர் வருண்” என்றவள் அவனிடம் நிரூபிப்பதற்காகவே மீண்டும் சுற்றிப் பார்க்கச் சென்றாள்.

ஆனால் அவள் மனது அதில் ஈடுபடவில்லை எனப் புரிந்து கொண்ட வருண், “ஒரு ஸ்டேட்கான ஃப்ளோர் பார்த்தீங்கன்னாப் போதும் மேம்…எல்லாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஒரே மாதிரிதான்” என்றவன் தமிழ்நாட்டுக் கிளைகள் இயங்கும் தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

அந்தத் தளத்தைச் சுற்றிப் பார்த்த போது அவள் மனதில் தோன்றிய யோசனைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

நேரம் பன்னிரண்டரையை நெருங்கிக் கொண்டிருக்க அவர்கள் மீண்டும் விஜய்யின் தளத்தை அடைந்திருந்தனர். அவளை விஜய்யின் அறையில் அமரச் செய்து விட்டு… “ஏதாவது வேணும்னா இந்த நம்பர்ல இருப்பேன் மேம்” எனத் தன் கேபின் இன்டர்காம் எண்ணையும் சொல்லி விடைபெற்றான் வருண்.

பார்ப்பதற்கு ரொம்பவும் சாதாரணமான தோற்றத்தில்…ஒரே வார்த்தையில் சொன்னால் ‘பேக்கு’ மாதிரி இருக்கும் வருண்…கம்பனியின் அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததையும் போகும் இடங்களில் எல்லாம் அவனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையையும் கண்ட ப்ரியம்வதா அசந்துதான் போனாள்.உருவத்தைப் பார்த்து யாரையும் எடை போடுபவள் அல்ல அவள்… இருந்தாலும் அவன் தோற்றம் அவளை அவ்வாறு எண்ண வைத்திருந்தது.   வித்தியாசமான மனிதன்தான் என எண்ணிக் கொண்டாள்.

கணவனுக்காகக் காத்திருந்தவள் மனது கடிவாளமிடாத குதிரையைப் போல் பல விஷயங்களை நோக்கிப் பயணித்தது…

பொறு மனமே பொறு…இப்போது யோசிக்க நேரமில்லை… அவள் கணவன் திரும்பி வரும் நேரம் ஆகி விட்டது. இடையூறற்ற தனிமையில் அமர்ந்து யோசிக்க அவள் மனம் விரும்பியது…

ஆனால்… “நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்” அவள் மனமும் பந்தயக் குதிரையாய்ப் பாய்ந்தது. பரபரப்புற்றிருந்த மனதில் தெளிவற்ற ஏதேதோ சிந்தனைகள்…மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை அவளுக்கு…

ஆனால் ஒருமுகப்படுத்தி யோசித்தால்…மட்டும் விடை கிடைத்து விடுமா?

கேள்விகளின் விடை அவளிடம் இருந்திருந்தால் இந்நேரம் அதை அவள் கண்டுகொண்டிருப்பாளே!

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நான் என்ன பெண்ணில்லையா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே உயிர் தர வா!

Advertisement