Advertisement

அத்தியாயம் 5

காஷ்மீரில் இருந்து திரும்பி வந்த மறுநாள் காலை விஜய் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டு இருந்தான். தங்கள் அறைக்குச் சென்றவள் அவன் கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று நின்றாள். 

ஹேர்ஜெல் போட்டு அதை முடி முழுவதும் பரவுமாறு அளைந்து விட்டுக் கொண்டிருந்தவன் கவனம் சற்றும் அவள்புறம் திரும்பவில்லை.

ஒரு முறை அந்த அறைக்குள் பார்வையை சுழற்றியவள் முதலிரவன்று அவன் கூறியதை மனதுக்குள் கொணர்ந்து… “க்கும்…”  என்று தொண்டையைக் கனைத்தாள். அப்போதும் எந்த மாற்றமும் இல்லை.

“வந்து…” இப்போது சற்று அவள்புறம் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் கண்ணாடியின் புறம் திரும்பினான்.

‘மேலே சொல்’ என்று சொல்லாமல் சொல்லியாகிறதாக்கும் என மனதுக்குள் நொடித்துக் கொண்டவள்…

“நான் என்னோட வேலையை இன்னும் ராஜினாமா செய்யலை. லாங்க் லீவ் கேட்டுத்தான் கடிதம் கொடுத்திருக்கேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு… நீங்க என்ன சொல்வீங்கன்னு தெரிஞ்சுக்காம உறுதியான முடிவெடுக்கத் தயக்கமாக இருந்துச்சு.”

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் தன் வேலையில் கவனமாய் இருந்தவன்,

“இன்னிக்கு உனக்கு ஏதாவது வேலை இருக்குதா?” என்று கேட்டான்.

அவள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் திடுமென அவன் கேட்கவும், திடுக்கிட்டாலும் உடனடியாக சுதாரித்து இல்லை எனத் தலை ஆட்டினாள்.

“இன்னிக்கு என்னோட வா” என்றவன் அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்து விட்டு “உனக்கு சரியா அரைமணி நேரம் டைம். கிளம்பிக் கீழே வா” என்று விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

அவன் திடீரெனக் ‘கிளம்பி வா’ எனக் கூறவும் அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. முதல் முறையாக அவன் மனைவியாக அலுவலகம் செல்கிறாள். 

தன் வார்ட்ரோபைத் திறந்து பார்த்தவள்…அவன் காஷ்மீரில் வாங்கிக் குவித்த உடைகளும் அவள் திருமணத்திற்கென வாங்கியிருந்த உடைகளும் அழகாகத் தொங்க விடப்பட்டிருப்பது கண்டு ‘இது எப்போது நடந்தது’ என வியந்தவள் கண்ணசைவில் காரியம் நிகழ்த்தி விடுவான் போல என நினைத்துக் கொண்டே எளிமையாகவும் கௌரவமாகவும்  அதே நேரம் அழகாகவும் இருக்கும் வண்ணம் உடையைத் தேடினாள். 

ஐந்து நிமிடங்கள் பிறகு பீச் நிறத்தில் கொஞ்சம் சன்னமாக சரிகை வேலைப்பாடுடன் கூடிய பெங்காலி காட்டன் புடவையை உடுத்திக் கொண்டு தலையை எப்போதும் போல் பின்னலிட்டு அளவாக ஒப்பனை செய்து கொண்டு கீழே சென்றாள். 

பகட்டாகவும் இல்லாமல் அதே நேரம் எளிமையாகவும் இல்லாமல் கச்சிதமாக இருந்த அந்த உடையில் அவளைப் பார்த்த விஜய்யின் கண்களில் ஒரு கணம் மெச்சுதலுக்கான அறிகுறி தென்பட்டு மறைந்தது.

அவள் சென்ற நேரம் அவன் வரவேற்பறையில் அமர்ந்து கண்ணபிரானுடன் பேசிக் கொண்டிருந்தான்.அவள் வந்தவுடன் இருவரும் உணவுண்ணும் மேஜைக்கு வந்தனர். அவள் பரிமாறத் தயாராவதைப் பார்த்தவன் “நீயும் உட்கார். நேரம் ஆகுது” என்று சமையலறையின் புறம் ஒரு பார்வை பார்க்கவும் சமையலறை வாசலில் நின்றிருந்த கந்தன் ஓடி வந்து மூவருக்கும் பரிமாற ஆரம்பித்தான். 

“நான் இன்றைக்கு ரியாவை ஆஃபிஸ் கூட்டிட்டுப் போறேன் பெரியப்பா” என்றான். 

“நல்ல விஷயம்தான் விஜய்” என்றார் கண்ணபிரான் நமுட்டு சிரிப்புடன். 

நேற்று வரை மனைவியுடன் முழு நேரமும் கழித்தவன் மனைவியைப் பிரிய மனம் இல்லாமல் உடன் அழைத்துச் செல்கிறான் என்ற எண்ணத்தின் விளைவே அந்தச் சிரிப்பு என்பதை விஜய் கவனித்தானோ இல்லையோ ப்ரியம்வதா கண்டு கொண்டாள்.

“ஒரு வேளை அப்படித்தானோ!’ என மனம் உல்லாசக் கற்பனை செய்தது.

வெளியே வந்தவுடன் காரோட்டி காரை முன் கொண்டு வந்து நிறுத்த அவரை வெளியே வரச் சொல்லி விட்டுத் தான் ஓட்டுனரின் ஆசனத்தில் அமர்ந்தான். 

அதற்குப் பிறகுதான் மனைவி இன்னும் ஏறி இருக்காததைக் கவனித்தவன் ‘என்ன செய்கிறாள் இவள்’ என நினைத்துக் குனிந்து அவள்புறம் பார்க்க அவளோ அந்தக் காரின் தோற்றத்தை ரசித்துக் கொண்டு சிலை போல் நின்றிருந்தாள்.

திருமணம் முடிந்து… அவசரம் அவசரமாக மறுவீடு… பின் தேனிலவு… என்று சென்று விட்டவர்கள் என்பதால் அவனிடம் என்னென்ன நிறங்களில் எத்தனை வண்டிகள் இருக்கின்றன என்பதெல்லாம் அவள் அறியாத விவரங்கள். 

அதுவும் அந்த இளம் பச்சை நிற போர்ஷ்  காரை அவள் சில நேரங்கள் சாலையில் பார்த்து அதன் அழகில் மெய் மறந்திருக்கிறாள். 

வங்கியில் வேலை பார்க்கும் காலத்தில் கார் எல்லாம் அவள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்பதும், வருங்காலத்தில் ஒரு வேளை அவள் கார் வாங்கினாலும் அது ஒரு  மாருதி ஸ்விஃப்டாகவோ அல்லது ஒரு ஆல்டோ காராகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறதே ஒழிய போர்ஷ்  எல்லாம் அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதும் அவள் புத்திக்கு உறைத்தாலும் யாரோ ஒருவரின் காரை ரசிப்பதில் என்ன வந்து விடப் போகிறது என நினைத்து சில நேரம் அந்தக் கார் கண்ணுக்கு மறையும் வரை நின்று பார்த்திருக்கிறாள். 

இப்போதும் அப்படியே மயங்கி நின்றவளை “ரியா!” என்ற அவனது உரத்த குரல் கலைத்தது. 

சட்டென்று நனவுலகத்துக்கு மீண்டவள் தன்னை மறந்து நின்றதை  எண்ணி வெட்கியவாறு காரில் ஏறி அமர்ந்தாள். “என்ன நின்னுகிட்டே கனவு காண்றே?” என்றான் வண்டியை கிளப்பிக் கொண்டே…

“ஒன்றும் இல்லை”

“பொய்…”

“திருமணத்துக்கு முன்னால அதாவது நம் திருமணம் முடிவாவதற்கு முன்னாலயே இந்த நிறக் காரை சில சமயங்கள்ல ரோட்ல பார்த்து ரொம்ப அழகாக இருக்குதேன்னு நினைச்சுருக்கிறேன். அதே  மாதிரிக் காரை என் கண் முன்னால பார்க்கவும் அதுவும் நான் அதுலயே ஏறப் போறேன்னு நினைச்சதும்… ஒரு கணம் திகைச்சுப் போய் நின்னுட்டேன். வேற ஒன்னும் இல்லை” என்று கூறி விட்டு அமைதியானாள். 

அவனும் வேறு எதுவும் கூறாமல் இருக்கவும் சட்டென்று நினைவு வந்தவள் போல் “அதென்ன ரியான்னு கூப்பிடுறீங்க?”

“ஆமாம் மத்தவங்க உன்னைப் ப்ரியான்னு கூப்பிடுறாங்க… கணவன் என்றால் வித்தியாசமாக… செல்லமாகக் கூப்பிட வேண்டாமா… அதுக்குத்தான்” எனவும் “அப்போ வ…” என ஆரம்பித்தவள் தன்னை அடக்கிக் கொண்டவள் போல் அமைதியானாள்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவனும் எதுவும் சொல்லவில்லை.

அரைமணி நேரப் பயணத்தில் தாம்பரத்தில் இருந்த அவன் அலுவலக வளாகத்தை அடைந்திருந்தனர். 

காரை நிறுத்தியவன் “இங்கும் அதிர்ச்சியில் நின்னுடாதே… உணர்வுகளை நம்ம கட்டுப்பாட்டில வைத்திருப்பதுதான் வெற்றியின் முதல் படி” என்று கூறி விட்டுக் கீழே இறங்கினான். 

என்ன சொல்கிறான் என்பது புரியாவிட்டாலும் தான் காரைப் பார்த்து ‘பே’ என நின்றதைக் குத்திக் காட்டுகிறான் எனப் புரிந்ததும் ‘ஆமாம் எல்லா இடத்திலும் இவனைப் போல் கல்லுளிமங்கனாட்டம் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க முடியுமா’ என நினைத்துக் கொண்டே காரிலிருந்து இறங்கியவள் தன்னை அறியாது வாய் பிளந்து நின்றாள். 

ஏன் என்றால் அவள் கண்ட காட்சி அப்படி…

கார் அந்த வளாகத்திற்குள் நுழையும் போது முகப்பிலேயே அமைந்திருந்த சிவசக்தி ஆனந்த தாண்டவ சிலையையும் அதைச் சுற்றி அமைந்திருந்த நீரூற்றையும் பார்த்திருந்தவள் அந்தக் கட்டிடத்தின் முழுத் தோற்றத்தையும் பார்க்கவில்லை. 

காரில் இருந்து இறங்கிய பிறகோ அண்ணாந்து பார்க்க அவள் கண்ணுக்கெட்டிய தூரம் அந்தக் கட்டிடம் மட்டுமே தெரிந்தது.

அந்த அதிர்ச்சியில் நின்றவள் பிறகே அவன் கூறிய எச்சரிக்கை நினைவில் வந்து சட்டென்று வாயை மூடினாள். 

வாசலில் நின்றிருந்த காவலாளியிடம் கார்ச் சாவியைக் கொடுத்தவன் பின்னால் வர வேண்டியவளைக் காணவில்லை எனத் திரும்பிப் பார்ப்பதற்கும் அவள் வாயை டப் என்று மூடுவதற்கும் சரியாக இருந்தது. 

அவன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.அதே நேரம் கணவனின் முகம் பார்த்தவள் அவன் பார்த்து விட்டதை உணர்ந்ததும் முதலில் பயந்து போனாள். 

அவன் எச்சரிக்கை செய்தும் கவனக் குறைவாக இருந்து விட்டோமே என நினைத்து அவன் முகம் பார்க்க… அந்த மந்தகாசப் புன்னகையில் தன் மனத்தைத் தொலைத்தாள்.

இப்படிச் சிரித்துக் கொண்டே இருந்தால்தான் என்ன என மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்த போதே அவள் கண்ட தோற்றம் மாறி மீண்டும் அவன் முகம் சிரிப்பைத் தொலைத்திருந்தது. 

அவன் கண்கள் வா என்பது போல் சைகை செய்யப் பின் இருக்கும் இடம் புரிந்து வேகமாகச் சென்று அவனுடன் இணைந்து கொண்டாள். 

அவனுக்கென இருக்கும் பிரத்யேக மின்தூக்கிக்குள் சென்றவுடன் “மொத்தம் எத்தனை மாடி?” எனக் கேட்டாள்.

“நாற்பது…”

அவனது அலுவலகம் ஒன்பதாவது மாடியில் இருந்தது. அந்தத் தளம் முழுவதும் அவனுக்கு மட்டுமே ஒதுக்கி இருந்தான். மின்தூக்கியில் இருந்து வெளியேறியவர்களை மிஸ் மெலிஸா எதிர்கொண்டார். 

“ரியா! இது மிஸ். மெலிஸா. மெலிஸா இது…”

“தெரியும் பாஸ்… உங்கள் சரி பாதி…அதுவும் மிகச் சிறந்த பாதி” என்றவர் ப்ரியம்வதா புரியாமல் பார்க்கவும் “ஐ மீன் பெட்டெர் ஹாஃப் “என்று கண்சிமிட்டி விட்டு “வெல்கம் டு வசந்தம் க்ரூப் ஆப் கம்பனீஸ் மேம்” என்று முறையாக வரவேற்றார்.

“முதலிலேயே தெரிஞ்சுருந்தா க்ராண்டா வெல்கம் பண்ணியிருப்போம்” என்றவரிடம் “நோ ஃபார்மாலிடீஸ்” என்று விட்டுக் கைகுலுக்கினாள். 

மெலிஸாவும் அவனுமாக உள்சென்ற அறைக்குள் நுழைந்தவள் சொர்க்கத்திற்குள் நுழைந்து விட்டோமோ என ஒரு கணம் திகைத்து மீண்டும் வாய் திறந்து விடக் கூடாதே எனத் தன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தாள். 

அந்த அறையின் அழகு ஆளை அசத்துவதாக இருந்தது. 

கண்ணாடி ஜன்னலை ஒட்டி அமைந்திருந்த அவனது ஆசனத்திற்கு எதிரில் அரை வட்ட வடிவ மேஜையின்  மீது  பொருட்கள்  அழகுற அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.  சுற்றிலும் நான்கு நாற்காலிகள் அந்த அரை வட்டத்தை ஒட்டியே போடப்பட்டிருந்தன. 

அதற்கு இடதுபுறம் சுவரில் பாதி அளவுக்கு வருமாறு பெரிய தொலைக்காட்சித் திரை இருந்தது.

மேஜையின் அருகில் கண்ணாடியில் ஆன அவளது தொடை அளவிற்கு வரும் மிக பெரிய பூ ஜாடியும் அதனுள் செயற்கை அலங்கார மலர்களும் அழகாக மனதைக் கவரும் வண்ணம் அடுக்கப்பட்டு இருந்தன. 

சந்தன நிறப் பின்னணியில் காஃபி ப்ரௌன் நிறத்தில் மேஜை நாற்காலிகள், சோஃபாக்கள்… அலங்காரப் பொருட்கள் மற்றும் திரைச்சீலைகளின் நிறமும் கூட ஆண்மையின் ரசனையைப் பறைசாற்றுவதாக இருந்தது.

அந்த அறையின் அலங்காரத்தில் கனவு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் கம்பீரமான அவள் கணவனின் குரலில் நடப்புக்குத் திரும்பினாள். 

Advertisement