Advertisement

தன் மனதை அவளிடம் மறைக்க எழுந்த சிரிப்பை உதடுகள் பிரியாமல் அடக்கினான். ஆனால் அவன் முகத்தைப் பார்த்தவள் அவன் கண்கள் சிரிப்பதைக் கண்டு கொண்டாள்.

திருமணத்துக்கு முன் ஒரே ஒரு முறை அவன் இப்படிச் சிரித்ததை அவள் பார்த்திருக்கிறாள்…

மற்ற நேரங்களில் அவன் சிரிப்பது பெயரளவிற்குக்  கண்களை எட்டாத சிரிப்பாகவே இருக்கும். இன்று அவன் உதடுகள் கொஞ்சம் கூட விரியவில்லை…ஆனால் கண்களின் அந்தப் புன்னகை முகமெல்லாம் விகசிப்பது போல் தோன்றியது அவளுக்கு. 

அதற்குள் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவன் தன்னை மறந்து நின்றவளைக் கண்களின் முன் சொடக்குப் போட்டு இந்த உலகிற்குத் திருப்பி விட்டு “சந்தடி சாக்குல என்னை முசுடுன்னு சொல்லியாச்சு…” எனவும் அவள் “வந்து…அது…வந்து” எனத் தடுமாறவும்,

“சரி…எனக்கா வாங்கினீங்கன்னு கேட்டியே! பின்னே இவ்வளவு நேரம் யாருக்கு வாங்கினேன்னு நினைச்சே?”

“இல்ல உங்க சொந்தக்காரங்கள்ல நிறைய பெண்கள் இருந்தாங்களே… அவங்களுக்குன்னு நினைச்சேன்”

அவன் முகம் இறுக “எனக்கு சொந்தம்னா அது என் பெரியப்பா மட்டும்தான்…மத்தவங்க எல்லாம் நல்லது கெட்டதுக்கு வந்துட்டுப் போவாங்க. அவ்வளவுதான்” என்று விட, அவனைக் கோபப்படுத்தி விட்டோமோ என நினைத்து அவன் முகம் பார்த்தாள். அதில் கோபம் ஒன்றும் இல்லை என்பதைக் கண்ட பிறகே நிம்மதியடைந்தவளுக்கு அவன் கூறியது மனதில் ஓடவும்தான் அவன் பெரியப்பாவிற்கு ஒன்றும் எடுக்கவில்லையே எனத் தோன்றியது…

சென்னைக் காலநிலைக்குத் தகுந்தாற்போல் குளிருக்கென்று இல்லாமல் அணிந்து கொண்டால் மரியாதையாகத் தோன்றுவது போல ஒரு தூய வெண்ணிற சால்வையைத் தேர்ந்தெடுத்தாள். அதைக் கொடுக்கும் போதே அதைப் போல் இன்னொன்றையும் எடுத்து அவள் கையில் வைத்தான் அவன். அவள் கேள்வியாகப் பார்க்க “மாமாவுக்கு” எனவும் முகம் மலர்ந்தாள். 

“உங்களுக்கு ஒண்ணுமே எடுக்கலையே” எனவும் அவன் முகம் கொஞ்சம் ப்ரகாசமடைந்தது போல தோன்றியது அவளுக்கு…

“என்ன வாங்கலாம் நீயே சொல்லு”

சுற்றி முற்றித் தேடியவள் கலைப்பொருட்கள் பகுதிக்குச் சென்றாள். அங்கே மரத்தில் வேலைப்பாடு செய்த பொருட்கள் அவளது கருத்தைக் கவர்ந்தன. 

சில நிமிடங்கள் தேடிய பிறகு அவனுக்கு உபயோகமாகவும் அதே சமயம் அலுவலகத்தில் இருக்கும் போது தன்னை நினைவுறுத்துவதாகவும் இருக்கும் எனத் தோன்றிய ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்தாள். 

அது ஒரு பேனாவைக்கும் தாங்கி. ஒரு பலகையில் ஒரு பக்கம் தோகை விரித்தாடும் மயிலின் சிலையும் அடுத்த முனையில் பேனாக்கள் வைத்துக் கொள்ள ஒரு பெட்டி போன்ற பகுதியும் அமைந்திருந்தது. அந்த மயிலின் தோகையில்  கலை உணர்வுடன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆவலுடன் அதைக் கையில் எடுத்தவள் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டுப் பின் வைத்து விட்டாள்.

அவளைப் பார்த்திருந்தவன் ‘ஏன் எடுத்தாள் ஏன் வைத்தாள்’ என்பது புரியாமல் அருகில் சென்று அதைக் கையில் எடுத்துப் பார்க்கப் பேனாக்கள் வைக்கும் பகுதியின் முன்புறம் ‘ஐ லவ் யூ’ என்று செதுக்கப்பட்டு அடியில் இதயத்தின் ஊடாகச் செல்லும் அம்புக்குறியின் படமும் இருந்தது. அதை யோசனையுடன் பார்த்தவன் மீண்டும் அவள் அங்கே வருவது போல் தெரிந்தவுடன் அதை வைத்து விட்டு நகர்ந்து விட்டான்.

வேறு பொருட்கள் பார்வையிடுவது போல் நின்றிருந்தவன், “இதை நான் உங்களுக்காக செலெக்ட் பண்ணினா வாங்கிக்குவீங்களா?” என்ற அவளது குரலில் படக்கென்று திரும்பினான்.

அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை அசைத்துதான் பார்த்தது.

‘ஏக்கமா? இயலாமையா? கழிவிரக்கமா?’ அது என்னவென்று  அவனுக்குப் புரியவில்லை.

பதில் எதுவும் சொல்லாது அவள் கையில் இருந்து அதை வாங்கிக் கொண்டு பணம் செலுத்தும் பகுதிக்குச் சென்றான்.

அன்றிரவு படகு வீட்டின் முன்புறம் நிலவொளியில் அமர்ந்திருந்த போது “ஏன் என்கிட்டக் கடைல வச்சு அப்பிடிக் கேட்ட?”

“என்ன கேட்டேன்?”

“நீ செலெக்ட் பண்ணினா நான் வாங்கிக்குவேனான்னு…”

அவள் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தாள்.

சில நிமிடங்கள் பேசாமல் இருந்தவன் “கேட்டேனே?” எனவும்

“இல்ல, உங்களுக்குப் பிடிக்குமோ…பிடிக்காதோன்னு…”

“பொருள் பிடிக்காதான்னு கேட்டியா இல்ல…நீ செலெக்ட் பண்ணினது பிடிக்காதான்னு கேட்டியா?”

“நான் சாதாரணமான பொருளை எடுத்திருந்தாக் கேட்டிருக்க மாட்டேன். அதுல…அதுல…ஐ லவ் யூ ன்னு எழுதி இருந்துச்சு…”

“அதுனால?”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மற்றவர்களின் கண்ணசைவிலும் அவர்களது உடல்மொழியைக் கொண்டும் அவர்களது மனநிலையைத் துல்லியமாய்க் கணித்து விடக் கூடியவன் மனைவியின் முன் தடுமாறி நின்றான்.

கணவனுக்குக் கொடுக்கும் பரிசில் ‘ஐ லவ் யூ’ என்று இருப்பதால் அதைக் கொடுக்க அவள் தயங்குகிறாள் என்றால் அவன் என்னவென்று நினைப்பது…

ஆனால் அவளோ  பொறுமையிழந்த குரலில், “அதனால…அதனாலதான் தயங்கினேன். கல்யாணமாகி ஒரு வாரம் முடியப் போகுது…ஆனா நமக்குள்ளே காதல் இருக்கான்னு கேட்டா எனக்குத் தெரியல…அப்பிடி இருக்கும் போது திடீர்னு ‘ஐ லவ் யு’ ன்னு கிஃப்ட் குடுத்தா நீங்க என்ன நினைச்சுக்குவீங்க…எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியல…வேணாம்னு சொல்லிட்டீங்கன்னாக் கூட நான் தாங்கிக்குவேன்…ஆனா எனக்கு தண்டனை குடுக்கிறதா நினைச்சு ஏதானும் சொல்லிருவீங்களோன்னு தோணுச்சு…அதுனாலதான்…அப்பிடிக் கேட்டேன்.”

அவன் தன் மூச்சைப் பெருமூச்சாக விட்ட போதுதான் இத்தனை நேரம் மூச்சடக்கி நின்றிருந்தது அவனுக்குப் புரிந்தது. 

எங்கே, ‘நான் உங்களைக் காதலிக்கவில்லை… வேறு வழி இல்லாததால்தான் திருமணம் செய்து கொண்டேன்’ எனச் சொல்லி விடுவாளோ என அவன் மனம் துடித்தது அவனுக்கு மட்டுமே தெரியும். 

பிறகுதான் அவள் முகம் பார்க்க அவளும் தவிப்புடன் நிற்பது புரிந்தது. அவள் அருகில் சென்றவன் அவள் கன்னங்களைத் தன் கைகளால் தாங்கி அவள் கண்களையே பார்த்து, “தேவை இல்லாததை எல்லாம் நினைச்சுக் குழப்பிக்காதே… எல்லாம் சரியாகிடும்” என்று சொல்லி விட்டு அவள் கன்னத்தை ஒரு முறை அழுத்தி விட்டு உள்ளே சென்று விட்டான். 

மீத நாட்களையும் அந்தப் படகு வீட்டிலேயே கழித்து விட்டு அவ்வப்போது ஊருக்குள் சென்று சுற்றிப் பார்த்து விட்டு ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பினர் தம்பதிகள்.

நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

Advertisement