Advertisement

அத்தியாயம் 4

அன்று உலகப் புகழ் பெற்ற டால் ஏரியில் படகு வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

கரையிலிருந்து ‘ஷிகாரா’ என்று சொல்லப்படும் சிறிய நான்கு பேர் மட்டுமே அமரக் கூடிய படகின் மூலம் அவர்கள் தங்கப் போகும் படகு வீட்டை அடைந்தார்கள்.

அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்தப் படகு வீடு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுத் தரையின் எல்லாப் பக்கங்களிலும் காஷ்மீரத்துக் கம்பளம் விரிக்கப்பட்டு சுவர்கள், மேஜைகள் என்று எல்லாவற்றின் மேலும் காஷ்மீரத்து எம்ப்ராய்டரி வேலைகள் செய்த கெட்டித் துணிகள் அழகுறத் தொங்க விடப்பட்டு இருந்தன.

அவள் முகத்தில் யோசனையுடன் சுற்றுவதைக் கண்டவன் ‘என்ன’ என்று கேட்க…

“இல்ல…இதுக்கு முன்னால கேரளால போட் ஹௌஸ்ல தங்கியிருக்கேன்… அங்கே படகு நகர்ந்து போய்கிட்டே இருக்கும். இங்கே நகராம ஒரே இடத்தில் நிக்குதேன்னு யோசிச்சேன்”

“கேரளா போட் ஹௌஸ் நிக்கிறது  கடல் தண்ணி ஊருக்குள்ள வர்றப்போ ஏற்படுற பேக் வாட்டர்ன்னு சொல்வாங்களே அதுல. அதுனால பயணம் பண்றதுக்கு பெரிய பரப்பு இருக்கும். அதுல படகு போய்கிட்டே இருக்கும். இராத்திரி மட்டும் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி கடல் பரப்புல வலைகள் விரிச்சு வைப்பாங்க…மீன் பிடிக்கிறதுக்காக. அதுனால ராத்திரி படகுகள் பயணம் செய்ய முடியாது.” 

“ஆனா இது அப்பிடி கிடையாது. பெரிய பரப்புன்னாலும் ஏரிதான்… ஓடுற தண்ணி கிடையாது. அதுனால படகு வீடுகள் ஒரே இடத்துலதான் இருக்கும். கரையில் இருந்து வந்து போறதுக்கும் இல்ல சுத்திப் பாக்குறதுக்கும் நாம வந்தோமே அந்த மாதிரி ஷிகாராவைத்தான் பயன்படுத்துவாங்க.”

அவள் புரிந்ததாகத் தலை அசைக்கவும்… “நீ எப்போ கேரளா போனே? காலேஜ் படிக்கும் போதா?”

அவள் லேசான முகச்சிவப்புடன் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான்  வாழ்க்கைல ஒரே தடவை போன டூர் அது. காலேஜ்ல படிச்சப்போ எத்தனையோ முறை டூர் போற வாய்ப்புக்கள் வந்தாலும் வீட்டுல பணப்புழக்கம் அதிகம் இல்லைங்கிறனால எப்படியாவது எதையாவது காரணம் காட்டிப் போகாம மறுத்துடுவேன். ஆனா வேலைக்குப் போக ஆரம்பித்த முதல் வருஷம் எங்களோட வங்கிக்கிளை ஆண்டு விழாவை முன்னிட்டு எல்லாரும் கேரளாவுக்கு மூணு நாள் போய் வரலாம்னு ஏற்பாடு செய்ஞ்சாங்க.கூட வேலை செய்த நித்திலா வீட்டுக்கே வந்து அப்பா அம்மாகிட்ட சிபாரிசு செய்யப் போக நானும் அந்த டூருக்குப் போய்ட்டு வந்தேன்.” 

“குடும்பத்தோட வந்தவங்களுக்குத் தனியான படகு வீடும் என்னைப் போல் திருமணம் ஆகாதவர்கள் ஆண்களும் பெண்களும் குழுக் குழுவாகப் பிரிந்து தனித் தனிப் படகு வீடுகளிலும் தங்கினோம். உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது அந்த ட்ரிப்.”

அவள் சொல்லி முடிக்கும் வரை அவளையே பார்த்திருந்தான். பணத்தட்டுப்பாடு இருந்தது என்பதைக் கூட கம்பீரம் குறையாமல் சொல்லி முடித்த அவளையும் சிறுமைத்தனமான செயலையும் ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பார்க்க முடியாமல் அவன் மனம் முரண்டியது.

ஒரு பெருமூச்சுடன் “வீட்டுக்கு ஃபோன் பேசுறியா?” எனக் கேட்கவும் ஆர்வமாகத் தலை ஆட்டினாள். காஷ்மீர் வந்ததில் இருந்து அன்றுதான் தன் வீட்டிற்குப் பேசுகிறாள்.

“அத்தான் வந்தவுடனே எங்களை எல்லாம் மறந்துட்டேயில்ல…நீ ஊருக்குப் போய் இன்னையோட மூணு நாள் ஆச்சு…இன்னிக்குத்தான் பேசணும்னு தோணுச்சா உனக்கு?” மது அவளிடம் சண்டைக்கு வந்தாள்.

“இல்ல மது…இங்கே ப்ரீபெயிட் ஃபோன் வேலை பார்க்காது. அத்தான் மொபைல்ல இருந்துதான் பேசணும். அது மட்டும் இல்லாம இதுக்கு முந்தித் தங்கி இருந்த இடம் மலை உச்சிங்கிறனால டவர் கிடைக்கல. இன்னிக்குதான் காஷ்மீருக்குள்ளே வந்தோம். பேசக் கூடாதுன்னு இல்லப்பா”

அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பேசி முடிக்கவும் “தங்கை மேல ரொம்பப் பிரியமோ?” என்றான்.

தங்கையின் நினைவில் முகம் மென்மை அடைய “ஆமாம்… நானும் மதுவும் ரொம்ப க்ளோஸ்…தீக்ஷிக்கும் எங்களுக்கும் வயசு வித்யாசம் அதிகம்கிறனால நாங்க ரெண்டு பேரும் எல்லா விஷயமும் எங்களுக்குள்ளே அதிகம் ஷேர் பண்ணிக்குவோம். அதுதான் நான் இல்லாம ரொம்பக் கஷ்டப்படுறா போல” புன்னகை முகமாகவே சொல்லி முடித்தாள்.

மறுநாள் சோன்மார்கிற்குச் சென்றார்கள். 

சோன்மார்க் என்றால் தங்கச் சமவெளி என்று அர்த்தம். 

இங்கு குல்மார்க் போல் ரோப் கார் எல்லாம் கிடையாது. ஒரு எல்லைக்கு மேல் வண்டிகளில் கூடப் போக முடியாது. குதிரையில் போகலாம் அல்லது நடந்து போகலாம். முதல் நாள் குதிரை ஏற்றத்துக்கு அவள் பயந்ததால் “நடப்பியா?” என்று கேட்க அவள் சந்தோஷமாகவே தலையசைத்தாள்.

ஏறுவதற்கு வசதியாக பூட்ஸ், ஃபர் தோலினால் ஆன உடைகள் என அணிந்து கொண்டவர்கள் அங்கு சரியாக மதிய நேரம் போய்ச் சேர்ந்தார்கள்.

முழுக்கப் பனி கொட்டிக் கிடந்த பகுதிக்குச் சென்றவள் மற்ற அனைத்தையும் மறந்து பனியில் விளையாட ஆரம்பித்தாள். சிறு குழந்தை போல் பனிமனிதன் உருவம் செய்து அதை அவளது சிறிய அலைபேசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டாள். மற்றவர்கள் பனியால் உருண்டைகள்  செய்து ஒருவர் மேல் ஒருவர் அடித்து விளையாட அவளுக்கும் ஏக்கமாக இருந்தது. 

ஆனால் என்ன செய்வது என மனதைத் தேற்றிக் கொண்ட சமயம் நச்சென்று காதுப் பகுதியில் வந்து விழுந்தது ஒரு பனிக்கட்டி. சட்டென்று திரும்பிப் பார்க்க அவள் கணவன்தான் கையில் அடுத்த உருண்டையுடன் நின்று கொண்டிருந்தான். 

“ஹேய்” என்று கத்திக் கொண்டு அவளும் களத்தில் இறங்க சிறிது நேரம் இஷ்டம் போல் விளையாண்டார்கள். இதற்கு மேல் முடியாது என்பது போல் அவள் மூச்சு வாங்கிக் கொண்டு அமர அங்கே ஒரு உயரமான பனிப் பாறையில் பாதுகாப்பாக சுற்றப்பட்டு இத்தனை நேரம் அவர்கள் பனி விளையாட்டைப் படம் எடுத்துக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்து வந்தான்.

படம் எடுக்கத்தான் அவளோடு விளையாடினானா என மனது உறுத்தினாலும் இதைப் போல் அரிய சந்தர்ப்பம் எப்போது வாய்க்கப் போகிறதோ… அந்தக் காணொளிப் பதிவு அவளுக்கும் பொக்கிஷம்தானே என நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டாள்.

மதிய நேரத்தில் ஆதவனின் கிரணங்கள் மலையின் வெள்ளைப் பனியின் மேல் விழுந்து ப்ரதிபலிக்க முழுக்க வெள்ளியால் செய்தது போல் இருந்த அந்த மலை… அவர்கள் அங்கேயே மிதமாக உண்டு முடித்து மாலை வரை காத்திருக்க மாலை நேரக் கதிர்கள் பட்டு இப்போது பொன்னை உருக்கி வார்த்தது போலத் தங்க மயமாகக் காட்சியளித்தது. 

ப்ரியம்வதா அந்தக் காட்சியில் லயித்து நிற்கும் போது அவள் தோளில் கையைப் போட்டான் விஜய்.அவள் திடுக்கிட்டுத் திரும்பி அவன் முகம் பார்க்கவும் அவள் முகவாய் பற்றித் தன் கைபேசியை நோக்கி அவள் முகத்தைத் திருப்பினான். அவன் எண்ணம் புரிந்து அவளும் அமைதியாகப் புன்னகைக்க இன்னும் நெருக்கமாக அவன் முகத்தைக் கொண்டு வந்து செல்ஃபீ எடுத்தான். 

மேலும் அவளைப் பலவாறாகத் திருப்பி நிறுத்திப் படங்கள் எடுத்த பிறகே கீழே இறங்கினார்கள். 

மறுநாள் அவளைக் கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றான். 

“எனக்கு வாங்க வேண்டியது எதுவும் இல்ல… கடைக்கெல்லாம் வேண்டாம்”

“உன் அம்மா தங்கைக்கெல்லாம் கூட வாங்க வேண்டாமா?”

இத்தனை தூரம் வந்து விட்டு அவர்களுக்கு வாங்கிச் செல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்பது புத்தியில் உறைக்க அவனுடன் சென்றாள். 

ஒவ்வொரு துணியாக அவள் விலையைப் பார்த்து அதிகம் விலை உள்ளவற்றை வேண்டாம் என ஒதுக்கிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளைத் தனியாகத் தேர்வு செய்ய விட்டவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து வந்தான்.

“நகரு…நான் எடுக்கிறேன்”

சில பல நிமிடங்கள் செல்ல அவன் தேர்வு செய்த துணிமணிகளைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை அவளால்…

கருநாவல் பழ நிறத்தில் ஆகாய நீல நிற பார்டர் வைத்த காஷ்மீர் சில்க் புடைவை. அவள் தாய்க்கு… 

மதுமிதாவும் தீக்ஷிதாவும் அவள் தந்தையின் நிறத்தைக் கொண்டு மாநிறத்தில் பிறந்தவர்கள். பேபி பிங்க் மற்றும் லாவெண்டர் நிறத்தில் மதுவுக்கு இரண்டு சுடிதார்கள், தீக்ஷிக்கு இளம் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறத்தில் இரண்டு சுடிதார்கள்… எல்லாவற்றிலும் மிக அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாடு என அவரவருக்குத் தகுந்தாற் போல் அவன் தேர்வு செய்தது அவளை மிகவும் கவர்ந்தது. 

“இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகம்தான்” என அவள் முனுமுனுத்ததை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

அடுத்து மீண்டும் அவன் துணிகளைத் தேர்வு செய்ய அவனது உறவினர்களுக்கு எடுக்கிறான் போல என சும்மா நின்றிருந்தவள் காதருகில் கேட்ட “பிடிச்சிருக்கா?” என்ற அவனது கரகரத்த குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள். 

“எனக்கா எடுத்தீங்க இவ்வளவு நேரம்?” என்றாள்.

“இல்ல…உன் பாட்டிக்கு”

அவள் கலகலவென நகைத்தாள்.

“இப்பிடி ஒரு முசுட்டுப் பேராண்டி வந்து எதையாவது எடுத்துக் குடுத்துருவானோன்னு பயந்துதான் அவங்க எச்சரிக்கையா முன்னாடியே பரலோகம் போய்ட்டாங்க போல”

கண்கள் பளபளக்க உதடுகளில் விரிந்த சிரிப்புடன் சொன்னவளையே பார்த்திருந்தவனுக்கு அவளை இழுத்துக் கைகளுக்குள் அடக்கித் தன் இதழ்களைக் கொண்டு அவளது சிரிக்கும் இதழ்களைச் சிறைப்பிடிக்க வேண்டும் போல் பேராவல் எழவும் அவன் திகைத்துப் போனான். 

Advertisement