Advertisement

சட்டென்று அவள் அருகில் நகர்ந்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“ஷ்… வது… ம்ம்ஹூம்… அழக் கூடாது… இங்கே பார் அழாதடா”

“இல்ல நான் தப்பு பண்ணிட்டேன். உங்களைத் தப்பா நினைச்சு உங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம, சொல்லாம நான் போனது தப்பு… ஆரம்பத்துல இருந்து தப்புத் தப்பா நான் பண்ணிக்கிட்டே இருக்கேன்…நீங்க கஷ்டப்பட்டுகிட்டே இருக்கீங்க”

விம்மலும் விசும்பலுமாக வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டு அவன் உடல் இறுகியது.

அவளை நன்றாக நிமிர்ந்து அமரச் செய்தவன் அவனும் அவள் பக்கத்தில் வசதியாக அமர்ந்தான்.

அவள் கண்களைத் துடைத்து விட்டவன் “இல்ல வது! தப்பு செய்தது நீ இல்ல நான்தான்”

“நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் முன்னமே சொல்லி இருந்திருக்கணும்… அட்லீஸ்ட் வனவாசம்ல இருந்து திரும்பி வந்த பிறகாவது சொல்லி இருக்கணும். அப்பிடி சொல்லி இருந்திருந்தா இந்த கோபால் நமக்கு இடையில் வந்திருக்கவே மாட்டான்”

அவள் ஏதோ சொல்ல வர, கையுயர்த்தித் தடுத்தவன் எழுந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“ நான் முதன் முதல்ல உன்னை எப்போ பார்த்தேன் தெரியுமா?”

அவள் இல்லை என்பது போல் தலையசைக்கவும்,

“ஒரு சின்ன பொண்ணுகிட்ட ஒருத்தன் சில்மிஷம் செய்தான்னு நீ அவனை அடிச்சுட்டு எடுத்த வீடியோவை வாட்ஸ் அப்பில் போட்டுருவேன்னு மிரட்டிக்கிட்டு இருந்தியே அப்போதான் ஃபர்ஸ்ட் உன்னைப் பார்த்தேன்”

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.

“அப்போவேவா?”

“ம்ம்ம்…அன்னிக்கு அழகா இருக்கிறே… ரொம்ப தைரியமும் கூடன்னு நினைச்சதைத் தவிர பெருசா ஒன்னும் தோணல”

“ஆனா அதுக்கப்புறம் அதே பாதைல அடிக்கடி உன்னைப் பார்க்க நேர்ந்துச்சு”

“உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு இதமான உணர்வு…சின்ன வயசுல எங்கப்பா என்னைத் திட்டி அடிக்கும் போதெல்லாம் அம்மாகிட்டப் போய் அவங்களைக் கட்டிக்குவேன். அப்போ பாதுகாப்பாத் தோணும். அதை எப்பிடி வார்தைகள்ல சொல்றதுன்னு எனக்குத் தெரியல… 

“நிறைய வேலை பார்த்து பசி தாகமா இருக்கிற நேரத்துல ஒரு செம்பு தண்ணி குடிச்சா வருமே…சுட்டெரிக்கிற வெய்யில்ல வேர்வைல கசகசத்து வரும் போது லேசான குளிர்ச்சியோட நம்மளைக் காத்து தடவிட்டு போறப்போ வருமே அதைப் போல…  உன்னை பார்க்கும் போதெல்லாம் அதே உணர்வு… ஒரு ஆசுவாசம்…” 

“இதுதான் நான் சேர வேண்டிய இடம்… இங்கேதான் நான் நல்லா இருப்பேன்… உன்னாலதான் என் வாழ்க்கை முழுமை அடையும்… இப்பிடி என்னென்னவோ மனசுல தோணும். உன்னைப் பத்தித் தீவிரமா நினைக்க ஆரம்பிச்ச அன்னிக்குத்தான் உன்னை கோபாலோட பார்த்தேன்”

அப்போதும் ஏதோ சொல்ல வந்தவளை “ப்ளீஸ் வது! எதுவா இருந்தாலும் நான் முடிச்சபுறம் சொல்லு” என்று விட்டு மேலே தொடர்ந்தான்.

“அன்னிக்குத்தான் நீயும் ஆண்களோட பேசிப் பழகுவே…நீ யாரையாவது காதலிக்க வாய்ப்பு இருக்கு… அது கோபாலைன்னு இல்ல வேற யாராவது கூட இருக்கலாம்னு தோணுச்சு… அப்போதான் வருணைக் கூப்பிட்டு உன்னைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன்”

“அது உன்னை சந்தேகப்பட்டோ உளவு பார்க்கிறதுக்காகவோ செய்த விசாரணை இல்ல”

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க… உன்னைப் பெண் கேட்டு வர… உன் வீடு எங்கே இருக்கு, உன் பின்புலம் என்ன, எங்கே வேலை பார்க்குறே, இப்படியான சாதாரண விசாரணைதான்”

“அதோட முடிவுல நீ யாரையும் காதலிக்கல… உன் வீட்டுல உனக்கு வரன் தேடிட்டு இருக்காங்கன்னு தெரிய வந்துச்சு… அவசரமா குஜராத் போக வேண்டி இருந்தனால போய்ட்டு வந்து பெரியப்பாவைப் பெண் கேட்க அனுப்பலாம்ன்னு நினைச்சிருந்தேன்”

“குஜராத் போய்ட்டு வந்த அன்னிக்கு தான் நம்ம ஹோட்டல்ல சந்திச்சோம்”

“அதுக்கப்புறம் நடந்த நிறைய விஷயங்கள் உனக்குத் தெரியும். இப்போ நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்குறேன். என் மேல நம்பிக்கை வச்சு அதுக்கு பதில் சொல்வியா?”

‘உன்னை நம்பாமல் யாரை நம்ப போகிறேன் ஒரு முறைக்கு உன்னை நம்பாமல் நான் பட்ட வலிகள் போதும்’ என்ற செய்தியை அவள் விழிகள் தெரிவித்தாலும் வாயால் எதுவும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“ரைட்! கோபால் கோவில்ல உன்னை சந்திச்சு என்ன சொன்னான்?”

ஏற்கனவே கணவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் கேட்டதுதான் தாமதம் என்பது போல் கோவிலில் நடந்த எல்லாவற்றையும் மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி முடித்தாள். பின் முடிவில்,

“கோபாலை எனக்கு நான் டென்த் முடிச்சதுல இருந்து தெரியும். டியுஷன்ல கூடப் படிச்சான்.ஒரு தடவை நான் டியூஷன் முடிச்சு வீட்டுக்குப் போறப்போ நாலஞ்சு பசங்க என்கிட்ட வம்பு பண்ணினாங்க.அப்போ தலையிட்டுப் பேசி அவங்களைத் திருப்பி அனுப்பி வச்சான். அதுல இருந்து அவன் மேல ஒரு சாப்ட் கார்னர் உண்டு எனக்கு. ஆனா எந்த சூழ்நிலைலயும் லவ்னெல்லாம் நினைச்சது கூட இல்லை.”

“அவன் என்னை லவ் பண்ணி இந்த அளவுக்குப் போவான்னு நான் கனவுலயும் நினைச்சது இல்ல”

அவள் கூறிய விவரங்களை கேட்டவனுக்கு அந்த நிலைமையிலும், அவள் வாயிலிருந்தே அவளுக்கு எதுவும் தெரியவில்லை என்பதைக் கண்டு கொண்டு தனக்கு சாதகமாக விஷயங்களைத் திரித்துக் கூறிய கோபாலின் சாமர்த்தியத்தை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. 

“ஆனா நீங்க ஏன் ஆதி எங்கிட்ட இப்போ சொன்ன விஷயங்களை எல்லாம் முதல்லயே சொல்லல?”

“கல்யாணத்துக்காக உங்கிட்டக் கேட்டப்போ இதை சஸ்பென்ஸா கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன்… அப்புறம் கோபாலை சந்திச்சதுல எல்லாம் மாறிடுச்சு”

அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவள் “அப்போ… அப்போ… அந்த கோபால் சொன்னது எல்லாம் உண்மையா?”

தயங்கித் தடுமாறி மனதுக்குள் அவன் இல்லை என்று பதில் சொல்ல வேண்டும் என வாயில் வந்த தெய்வங்களிடம் எல்லாம் கோரிக்கை வைத்துக் கொண்டே கேட்டு விட்டாள்.

கணவன் மேல் உள்ள காதலாலும் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த இந்தப் பிரிவாலும் அவள் மனம் அவன் பால் இளக தொடங்கி இருந்தாலும் அவன் செய்ததாக அவள் நினைத்த தவறு அப்படியேதானே இருக்கிறது… இப்போது கோபால் பொய் சொல்லி இருப்பான் என்பதில் அவள் உறுதியாய் இருந்தாலும் அதை கணவன் வாயால் கேட்க வேண்டும் என அவளுக்குத் தோன்றியது.

“உனக்கு எல்லா விவரங்களையும் விளக்கமா சொன்னாதான் புரியும். அந்த கோபால் என்ன வேலை பார்த்தான்னு… உனக்குத் தெரியுமா?”

“ம்ம்ஹூம் தெரியாது… அப்பப்போ பார்க்கிறப்போ கேட்பேன். இன்னும் நிலையான எந்த வேலையும் கிடைக்கலைன்னு சொல்வான்”

“அவன் ஒரு போட்டோக்ராஃபர்”

அவள் புரியாமல் பார்க்கவும் “உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு ஹோட்டல்ல போட்டோ எடுத்து அதை மீடியாகிட்ட குடுத்தது கோபால்தான்”

அவள் விழிகள் வெளியே தெறித்து விழுந்து விடும் அளவுக்கு விரிந்தன.

“என்ன… என்ன சொல்றீங்க ஆதி? இது நிஜமா? ஆனா அவன் இதை ஏன் என்கிட்ட சொல்லல?”

“எப்படி சொல்வான்? அவன் உன் பேரைக் கெடுத்து உன்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டான். அதை உன்கிட்ட வெளிப்படையா எப்படி சொல்வான்?”

“அது மட்டும் இல்ல வது…அவன் உன்னைப் பத்தி சொன்ன பொய்கள் நிறைய… ஆனா உன்னைப் பத்தி அதிகம் தெரியாத அந்த சூழ்னிலைல அதுவும் மீடியா விஷயத்துல நான் சொல்லச் சொல்லக் கேட்காம உன்னை வெளிப்படுத்திகிட்டதெல்லாம் வச்சு நான் உன்னைத் தப்பா நினைச்சுட்டேன். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான் உன்னைப் பத்தி எனக்குப் புரிய ஆரம்பிச்சது… அப்போதான் அந்த கோபால் பொய் சொல்லி இருக்கானோன்னு சந்தேகம் வந்துச்சு. என் மனசோட நான் போராடிட்டு இருந்தப்போதான் உடம்பு சரியில்லாமப் போச்சு. அன்னிக்கு ஹாஸ்பிடல்ல நான் நினைவு இல்லாம இருக்கிறப்போ நீ பேசின பார்… என் மனைவி பத்தரை மாத்துத் தங்கம்னு எனக்கு அப்போ தெளிவா புரிஞ்சுடுச்சு. அதுனாலதான் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டேன்”

“ஆனா ஆதி… நீங்க அப்போவே எல்லாத்தையும் விளக்கமா சொல்லி இருக்கலாமே”

“நான் சொல்ல வந்தேன் வது. உன்னைப் பணத்தாசை பிடிச்சதா நினைச்சதையே உன்னால தாங்க முடியல… இன்னும் கோபாலோட சேர்த்து சந்தேகப்பட்டேன்னு தெரிஞ்சா உன்னால தாங்கிக்கவே முடியாதுன்னு தோணுச்சுடா…  அதுனாலதான்…”

அவள் முகம் குழப்பத்தைக் காட்டவும்… “இவ்வளவு நாள் கழிச்சு நாம இத்தனை நாட்கள் இத்தனை சந்தோஷமா வாழ்ந்த பிறகும் நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு நினைச்சதும் என்னை விட்டு விலகிப் போன நீ, அப்போ இந்த விஷயம் தெரிஞ்சுருந்தா என்ன செய்ஞ்சுருப்பே?”

“கண்டிப்பாக் கண்காணாமப் போய் இருப்பேன்”  வாய் விட்டே சொன்னவளுக்கு அப்போதுதான் கணவன் தயங்கிய காரணம் புரிந்தது. 

ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த பிறகும் பிரிந்து செல்லும் முடிவை எடுக்க முடிந்தவள் வனவாசத்தில் இந்த விஷயம் தெரிய வந்திருந்தால் கண்டிப்பாக அவனை மன்னித்திருக்க மாட்டாள்… ஒரு வேளை அவன் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அப்போதைக்கு அமைதியாக இருந்தாலும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையை அவனுடன் தொடர்ந்திருக்க மாட்டாள் என்றே தோன்றியது அவளுக்கு. 

கணவன் மனைவி உறவின் ஆணிவேரே நம்பிக்கைதானே! அந்த நம்பிக்கை இல்லையென்ற நிலையில் உறவின் உன்னதமே உருக்குலைந்து போய் விடுமே!

“நீங்க எங்கிட்ட நான் கோபாலைக் காதலிக்கிறேனான்னு கேட்டிருக்கலாமே ஆதி! கேட்காமலே என்னை விலக்கி வைக்க எப்பிடி முடிவு பண்ணினீங்க?”

“அதுதான் நான் செய்த மிகப் பெரிய தப்பு வதும்மா! ஆனா என் மனதில் தோணினது என்னன்னா நீ ஒருவேளை இன்ஃபேக்சுவேஷன்ல கோபால்கிட்ட ஈடுபாடு காட்டி, அவன் அதுனால உன் மேல காதலை வளர்த்து நீ என்னைப் பார்த்து உண்மையான காதலை உணர்ந்து கோபாலை விட்டு விலகி இருந்தா நான் கோபால் பத்திக் கேட்குறது அவன் நினைவுகளைத் தேவை இல்லாமக் கிளறி விடுமேன்னு நினைச்சேன். நாள் ஆக ஆகதான் உன் மனசுல என்னைத் தவிர யாரும் இல்லைன்னு எனக்குப் புரிஞ்சுது.”

அவள் எதுவும் பேசாமல் வெறித்தபடி அமர்ந்திருக்கவும்,

அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவன், “நான் தப்பா நினைச்சது சரின்னு நியாயப்படுத்த நான் இதை எல்லாம் சொல்லல வதும்மா. நான் செய்தது தப்புதான்… கோபால் என்ன, கடவுளே வந்து சொல்லி இருந்தாலும்  என் வதுவை நான் தப்பா நினைச்சுருக்க கூடாது…”

“அதுக்காக… அதுக்காக எனக்கு என்ன தண்டனை வேணா குடு…என்னை அடிக்கிறதுன்னா அடி… இல்ல உன் கோபம் தீருற வரை திட்டணுமா திட்டு…இல்ல என் கூடப் பேசப் பிடிக்கலையா பேசாதே… ஆனா என்னை விட்டுட்டு போகணும்னு மட்டும் நினைக்காதே வது…அதை… அதை என்னால தாங்கிக்கவே முடியாது. இத்தனை நாளும் நான் இந்த பெட்ரூம்கு வரவே இல்லை தெரியுமா… நீயில்லாத ஒரு ரூமைக் கூட என்னால பார்க்க முடியல…நீ இல்லாத ஒரு வாழ்க்கையை…” குரல் கரகரத்துவிட அதற்கு மேல் பேச முடியாமல் அவள் மடியில் கவிழ்ந்தான்.

சில வினாடிகளில் நிமிர்ந்தவன் கண்களில் நீருடன்,

“முதல்ல நமக்குள்ள பிரச்சனை இருந்தாலும் வனவாசத்துல இருந்து வந்ததுக்கப்புறம் நாம வாழ்ந்த வாழ்க்கை உன் மனசுல கொஞ்சம் கூட பாதிப்பை ஏற்படுதலையா வது? என்னை விட்டுப் பிரிஞ்சு போக உனக்கு எப்பிடி மனசு வந்துச்சு?”  

அவன் கண்களில் கண்ணீரை பார்த்ததிலேயே கலங்கி இருந்தவள் அவன் கேட்ட கேள்வியில் ஓ வென்று அலறியவாறு அவனைத் தன்னோடு கட்டிக் கொண்டாள். 

“சாரி ஆதி! சாரி! ரொம்ப சாரி! நான் மனசாரப் பண்ணல. சும்மா நித்தி வீட்டுக்கு ரெண்டு நாள் போகலாம்னுதான் நினைச்சேன் அது கோயம்பத்தூர் வரை போய் என்னென்னமோ ஆகிடுச்சு. போக மாட்டேன்… போகவே மாட்டேன் இனி உங்களை விட்டு சத்தியமா எங்கேயும் போக மாட்டேன். போதும், ஒரு தடவை உங்களைப் பிரிஞ்சு நான் பட்ட அவஸ்தை போதும்.”

அவனைத் தன் நெஞ்சோடு அணைத்து அவன் கேசத்தை இறுகப் பற்றிக் கொண்டு அரற்றினாள். 

அவனும் அவளைத் தாயைக் குழந்தை கட்டிக் கொள்வது போல் இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

நிமிடங்கள் கழிய மெல்ல அவள் அணைப்பில் இருந்து விலகியவன் எழுந்து படுக்கையை சரி செய்தபடி அவள் முகம் பார்த்தான்.

இன்னும் குழப்பம் தெளியாத அவள் முகம் கண்டு 

“சரி வது! மனசை ரொம்ப குழப்பிக்காதே! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். வா படுத்துக்கோ” என்றான். 

அவள் படுக்க வசதியாகத் தலையணைகளைச் சரி செய்தவன் தானும் அருகில் படுத்து மென்மையாய் அவளை அணைத்து கொண்டான்.

கண்களின் இமைகள் மூடினாலும் அவள் மனம் உறங்கவில்லை.

அவனும் காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டு விட்டான். அவளும் இனி அவனைப் பிரிவதில்லை என சத்தியம் செய்து விட்டாள். ஆனால் இன்னதெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று முழுமையாக எல்லாவற்றையும் மறந்து விட முடியாமல் பானகத் துரும்பாய் உறுத்திக் கொண்டே இருந்தது.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதல் சன்னிதி

Advertisement