Advertisement

அத்தியாயம் 36

ப்ரியம்வதா கிளம்பிச் சென்ற மூன்றாம் நாள். 

கோபாலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் வருண். அவன் மனதில் கோபால் இருக்கும் இடத்தில்தான் பிரியாவும் இருப்பாள் எனத் தோன்றிக் கொண்டே இருந்தது.

கோபாலைப் பற்றி யாரிடம் விசாரித்தாலும் அவனைப் பார்த்து மாதங்கள் ஆயிற்று என்ற தகவலே கிடைத்தது. அவன் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த விஷயம் யாருக்குமே தெரிந்ததாகத் தெரியவில்லை.

தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து யோசித்து கொண்டிருந்தவனை விஜய் அழைத்தான். 

“சொல்லுங்க பாஸ்”

“வருண்! ஆரம்பத்துல ப்ரியா பத்தி விசாரிச்சப்போ உன் ஆள் ஒருத்தன்  கோபாலுக்கும் ப்ரியாவுக்கும் இடையில் சீரியஸா ஒன்னும் இல்லைன்னு சொன்னான்னு சொன்னியே! அவன் இப்போ எங்கே இருக்கான்?”

“அதை ஏன் பாஸ் கேக்குறீங்க? அவன்…” சில நிமிடங்கள் யோசித்தவனுக்கு விஜய்யின் கேள்விக்கான காரணம் புரிந்து விட “ஓகே பாஸ்! நான் அவனைப் பத்தி விசாரிக்கிறேன்” என்று வைத்தான்.

அதை தொடர்ந்து சில அலைபேசி அழைப்புக்களைச் செய்தவன் மதுரையை நோக்கிப் பயணமானான்.

மதுரைக்கு அருகில் இருந்த பாலமேடு கிராமத்துக்கு சென்றவன் தன் வண்டியை கிராமத்துக்கு வெளியிலேயே நிறுத்தி விட்டு அங்கங்கே விசாரித்துக் கொண்டு அந்த கடையைச் சென்றடைந்தான்.

கடையின் அருகே சென்றவன் அவன் தேடி வந்த பெருமாள் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டு தொண்டையைக் கனைத்தான்.

அந்த ஒலியில் நிமிர்ந்து பார்த்த பெருமாளின் முகம் வருணை கண்டதும் இருண்டது.

“பாஸ்! நீங்களா!”

“நானேதான்! எதுக்கு வந்துருப்பேன்னும் உனக்குத் தெரிஞ்சுருக்கணுமே?”

அவன் தலை குனிந்தான்.

“நீ இப்போ கடையை மூடிட்டு என் கூட வர்றே…”

அவன் மறுபேச்சுப் பேசாமல் பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஷட்டரை இழுக்க அடுத்திருந்த பெட்டிக் கடைக்காரன் “என்ன பெருமாளு வெள்ளன கிளம்பிட்ட?” என்றான்.

“அதுண்ணே… மெட்றாஸ்ல இருந்து நமக்கு தெரிஞ்சவரு வந்துருக்காரு… வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டு வாரேன்”

“இப்பிடித்தான் நேத்து யாரோ வந்திருக்காங்கன்னு கடையைப் பூட்டிட்டுப் போனே…அடிக்கடிக் கடையை பூட்டினேன்னா வியாபாரம் படுத்துரும் பெருமாளு… சூதானமா நடந்துக்க”

“சரிண்ணே! யாராவது வந்தா நாளைக்கு வரச் சொல்லு”

இருவரும் இணைந்து நடக்க “நேத்து வந்தது கோபால்தானே!”

“ஆமா பாஸ்”

வீட்டில் தனியறைக்குச் சென்றதும் அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்தவன்,

“உக்கார் பெருமாள்! என்ன நடந்துச்சுன்னு நீயே ஆதியோடந்தமா சொல்லிட்டேன்னா எனக்கு அதிகம் வேலை இருக்காது”

“சொல்லிடறேன் சார்”

அவனுக்கு வருணைப் பற்றி நன்றாகத் தெரியும். வருணின் துப்பறியும் குழுவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வேலை பார்த்திருக்கிறான். வேலையில்லாமல் திரிந்து கொண்டிருந்தவனுக்கு ஒரு அலுவலகத்தில் பியூன் வேலை வாங்கிக் கொடுத்ததும் வருண்தான். 

தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வருண் சொல்லும் துப்பறியும் வேலைகளைப் பார்த்து வந்ததில் பியூன் வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகப் பணம் கிடைத்ததாலும் வேலையும் சுவாரசியமாக இருந்ததாலும் வாழ்க்கை வளமாகவே இருந்தது அவனுக்கு.

ஐந்து வருடங்கள் எந்தப் ப்ரச்சனையும் இல்லாமல் இருந்தது. இதுவரை எந்த சூழ்நிலையிலும் மாட்டிக் கொண்டதும் இல்லை.யாருக்கும் சந்தேகம் வந்ததும் இல்லை. அந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக அவர்கள் குழுவை நடத்திச் செல்லும் வருணின் திறமையும் அவன் கோபமும் தெரிந்ததனாலேயே மேலும் தயங்காமல் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான் பெருமாள்

கோபால் பெருமாளின் பள்ளித்தோழன்.உயிருக்கு உயிரான நண்பர்கள். பத்தாவது முடித்ததும் கோபால் சென்னை சென்று விட்டாலும் இருவரும் தொடர்பில் இருந்தனர்.

ஆரம்பத்தில் பிரியம்வதா பற்றி விசாரிக்கும் வேலை பெருமாளிடம் வந்த போது கோபால் பிரியம்வதாவைக் காதலிக்கும் விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்ததால் பெருமாள் தவித்துப் போனான்.

நண்பனா வேலையா என்ற போராட்டத்துக்கு இடையில் அவன் இத்தனை நாட்கள் செய்து வந்த தொழிலுக்கு துரோகம் செய்யத் துணிந்தான்.

கோபாலிடம் விஷயத்தைச் சொன்னான். அவனோ,

“பெருமாளு! இது ரொம்பப் பெரிய இடம்… எதுக்கு விசாரிக்கிறாய்ங்கன்னும் தெரியல. நான் ப்ரியாவைக் காதலிக்கிற விஷயம் தெரிய வந்தா என்னை மிரட்ட முயற்சி பண்ணினாலும் பண்ணுவானுங்க. அதுனால் எனக்கும் அவளுக்கும் இடையில் வெறும் நட்புதான்னு அடிச்சு சொல்லிடு. ப்ரியாவை அடைய நான் ஏதாவது வழி யோசிச்சுக்கிறேன்”

அவன் கூறியபடியே வருணிடம் கூறி விட்டவன் என்றைக்கு மாட்டி கொள்ளப் போகிறோமோ என்ற பயத்திலேயே இருந்தான்.

சில நாட்களிலேயே ப்ரியா விஜய்யை அடித்த விவகாரம் ஊடகங்களில் அடிபட அவன் பதறிப் போய் கோபாலைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான்.ஆனால் முடியவில்லை. 

அதன் பின் சில நாட்களில் கோபால் சுவடே இல்லாமல் காணாமல் போகவும் விஜய்க்கும் ப்ரியாவுக்கும் திருமணம் என்ற செய்தி அடிபடவும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தவன் இனிமேல் அங்கிருப்பது ஆபத்து என முடிவு செய்து நண்பனுக்கு உதவி செய்யப் போய் தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என நொந்து கொண்டு அதுவரை சேர்ந்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வருணிடம் தன் தாய்க்கு உடல்நிலை  சரியில்லை என்றும் கிராமத்தோடு சென்று விடப் போவதாகவும் கூறி விடை பெற்றான். 

கோபாலை வெளிநாட்டுக்கு அனுப்பும் அலுவலில் இருந்த வருணுக்கும் இரு விஷயங்களையும் தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றவில்லை.

ஆனால் இப்போது விஜய்யின் கேள்வி வருணின் மனத்திலும் சந்தேகத்தை விதைத்தது. விஜய் கோடு போட்டால் ரோடு போடுபவனாயிற்றே வருண்.

கோபால் ப்ரியம்வதாவைக் காதலித்திருந்தால் அதைப் பற்றி விசாரித்த பெருமாளுக்கு அது தெரியாமல் போயிராது. வருண் கொடுத்திருக்கும் பயிற்சிக்கு, கண்டிப்பாக மேலோட்டமாக இல்லாமல் அடி ஆழம் வரை சென்று அவன் அலசியிருக்க வேண்டும். அப்படியானால் தெரிந்தே மறைத்தானோ என அவன் சந்தேகம் வலுத்ததன் விளைவே அவன் மதுரை விஜயம்.

வருண் தன் விசாரணையை ஆரம்பித்தான்.

“சரி கோபால் எப்போ உன்னைப் பார்க்க வந்தான்?”

“நேத்துக் காலைல” 

“எதுக்கு வந்தான்?”

“ப்ரியா மேடம் அவங்க வீட்டை விட்டுப் போயிட்டாங்கன்னும் இவன் அவங்களைப் போய்ப் பார்க்கப் போறேன்னும் சொன்னான்”

“எங்கே போறேன்னு சொன்னான்?”

“அதைச் சொல்லல பாஸ். நான் எத்தனையோ கேட்டும் சொல்ல மறுத்துட்டான்”

“சரி இதை உன்கிட்ட ஏன் வந்து மெனக்கிட்டு சொல்லணும்?”

“அவனுக்குப் பணம் தேவையா இருந்துருக்கு பாஸ். அதுக்காகத்தான் என்கிட்ட வந்தான்”

“அப்போ அவன் எங்கே போய் இருக்கான்னு உனக்குத் தெரியாது?”

“சத்தியமாத் தெரியாது பாஸ்”

“அவன் போன் நம்பர் ஏதாவது இருக்கா?”

ஒரு நிமிடம் தயங்கியவன் என்ன நினைத்தானோ “இருக்கு பாஸ்” என்று விட்டு  எடுத்துக் கொடுத்தான்.

“இப்போ மட்டும் பிரெண்டைக் காட்டிக் கொடுக்கத் துணிஞ்சுட்டே!”

“இல்ல பாஸ் அப்போ அவன் காதலுக்கு என்னால் ஆன உதவி பண்ணனும்னு நினைச்சுதான் நீங்க நம்பிக்கையா என்கிட்ட ஒப்படைச்ச வேலைக்கு துரோகம் பண்ணினேன். ஆனா இப்போ அவன் பண்றது தப்பு… இன்னொருத்தர் மனைவியை அடைய நினைக்கிறது ரொம்ப ரொம்பத் தப்பு… அதுவும் ஒரு குடும்பத்தை கலைக்க நினைக்கிறது பாவம். நான் அவங்கிட்ட எத்தனையோ சொன்னேன்…வேணாம் விட்டுடு என் கூட இங்கே கிராமத்துலயே இருந்துடு. நான் உனக்கு செட்டில் ஆக உதவி பண்றேன்னு…ஆனா அவன் கேட்கல.”

அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தவன் அதில் உண்மையே இருந்ததைக் கண்டு கொண்டான்.

“நான் இப்போ கிளம்புறேன்…நீ உன் பிரெண்டுக்கு போன் பண்ணி விஷயத்தை…”

“ஐயோ பாஸ்! நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன்…அவனே போன் பண்ணினாலும் மூச்சு கூட விட மாட்டேன்”

“உன்னை இப்போவே என் கூடக் கூட்டிட்டுப் போய் என் பாதுகாப்புல வச்சுக்க முடியும்… ஆனா உன் வார்த்தையை நம்புறேன்… அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்கோ”

…………………………………………………………………………

தினகரனின் கிராமத்தில் அன்று ஐந்தாம் நாள் திருவிழா… இருள் கவியத் தொடங்க பக்கத்துக் கோவிலில் இருந்து ஒலிப்பெருக்கியின் சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்தது. அந்த பெரிய வீட்டில் இருந்து ஜோடி ஜோடியாகவும் சிறு குழுக்களாகவும் மக்கள் வெளியேறிக் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் அந்தத் தெருவே வெறிச்சோடிப் போனது.

பெரிய வீட்டில் இருந்து வெளியேறிய மங்கா கொல்லைபுற வீட்டிற்குள் சென்று விளக்கெல்லாம் போட்டு விட்டு பிரியம்வதா ஏதோ படித்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு வெளியே வந்து அமர்ந்தாள்.

சில நிமிடங்களில் கோபால் அவளை நோக்கிப் போனான்.

“நான் உள்ளே போகணும்”

“இந்த குசும்புதானே வேணாம்றது…யாருய்யா நீ? என்னமோ வந்தே… நின்னே… இப்போ உள்ளே போகணும்கிறே… நீ கேக்குறவங்க இல்லைன்னு நாந்தான் சொல்லிப் போட்டேனே… மறுக்கா மறுக்கா ஏன் இங்கே வந்து நின்னு என் உசுரை வாங்குறே?”

“அப்பப்பா! என்னா பேச்சு! கொஞ்சம் மூச்சுதான் விட்டுக்கோயேன். நீ கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே பதில் இந்த ஃபோட்டோல இருக்கு.இதை ஒரு நிமிஷம் வாங்கிப் பார்த்துட்டு அப்புறம் உள்ளே விடுறதா வேணாமான்னு முடிவு பண்ணு”

அலட்சியமாக அதை வாங்கிப் பார்த்த மங்காவின் கண்கள் விரிந்தன.

“இது…நீ…அவங்க…”

“ஆமா…நான்தான்… நான்தான் அவ புருஷன்…என் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டா…நீ உள்ளே போய் நான் வந்துருக்கிறேன்னு சொன்னாக் கூட என்னைப் பார்க்க சம்மதிக்க மாட்டா…அதுனால நானே உள்ளே போய்ப் பேசிக்கிறேனே! நாங்க ஏதாவது சத்தமாப் பேசி சண்டை போட்டாக் கூட நீ கண்டுக்காதே… என்ன?”

அதிகம் படிப்பறிவு இல்லாத, நாகரீக வாழ்க்கைக்குப் பழக்கப்படாத, ஆரம்பம் முதல் தினகரனின் வீட்டைத் தவிர அதிக வெளியுலகம் அறியாத மங்காவுக்கு   கோபாலும் ப்ரியம்வதாவும் மாலையும் கழுத்துமாக இருந்த அந்தப் புகைப்படம் பொய்யாக உருவாக்கப்பட்டது எனத் தெரியவில்லை. யார் வந்தாலும் இல்லையெனச் சொல்ல வேண்டும் என்ற ப்ரியம்வதாவின் ஆணையும் அவளை யோசிக்க வைத்தது. கணவன் மனைவி இணைய நம்மாலான உதவியைச் செய்யலாம் என நினைத்தவள் கோபால் உள்ளே  செல்ல அனுமதித்தாள்.

தன் நடிப்பாலும் பேச்சு சாதுர்யத்தாலும் மங்காவை ஏய்த்து விட்டு உள்ளே வந்திருந்த கோபாலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ப்ரியம்வதா அவன் கதவைத் தாழிடுவது கண்டு அதிர்ச்சியிலிருந்து மீண்டாள்.

இவன் எப்படி இங்கே வந்தான்? அதுவும் அவள் தனியாக இருக்கும் அறைக்குள்… மங்கா வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

 மனதுக்குள் கேள்விகள் குடைய அவனைப் பார்த்து,

“கோபால்! நீங்க இங்கே என்ன பண்றீங்க? எதுக்குக் கதவைத் தாழ் போடுறீங்க?” எனப் பதற்றத்துடன் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தாள். 

“ப்ரியா! எதுக்கு இத்தனை டென்சன்? நானென்ன அந்நியனா? எதுக்குப் பேயைப் பார்த்த மாதிரி பயப்படுறே?”

“நீங்க எனக்கு அந்நியன்தான் கோபால்… நான் தனியா இருக்கிற ரூமுக்குள்ள நீங்க எப்பிடி வரலாம்? மங்கா “எனக் கத்தி அழைக்க முற்பட

“ஷ்…அவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் உள்ளே வந்தேன் ப்ரியா… கொஞ்ச நேரம் பேசிட்டுப் போயிடறேன்னு” 

“இல்ல இல்ல… எது பேசுறதா இருந்தாலும் வெளிய போய்ப் பேசலாம்… இங்கே தனியா இருக்க முடியாது”

“ஏன் இருக்க முடியாது? ஐஞ்சு நிமிஷம் பேசிட்டுப் போய்டறேன். வெளிய அந்தப் பொண்ணு இருக்கு. அது முன்னால சொந்த விஷயம்…அதுவும் உன் புருஷன் பத்தித் தப்பா எல்லாம் பேசணுமா? நீதான் ரொம்ப தைரியசாலி ஆச்சே…இப்போ எதுக்கு இப்படி பயப்படுறே? இல்ல உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?

வார்த்தைகளை மிக சாமர்த்தியமாக உபயோகித்து அவள் வாயை மூடினான் கோபால். அதில்தான் அவன் கில்லாடி ஆயிற்றே! ஆனானப்பட்ட விஜயாதித்தனும் வருணும் கூட அவன் வாய்சாலகத்தில் ஏமாந்துதானே போனார்கள்!

 கணவனைப் பற்றி இன்னும் என்ன தவறான விஷயம் சொல்லப் போகிறானோ என்பதில் அவள் கவனம் சென்றதும் பேச்சு தானாக நின்று விட்டது. மேலும் என்னதான் சொல்ல வந்தான் எனத் தெரிந்து விட்டால் இவன் போய் விடுவானோ என நினைத்து, 

“சரி! எதுக்கு இங்கே வந்தீங்க? அதையாவது சொல்லித் தொலைங்க” என்றாள்.

“அப்பப்பா! என்ன கோபம்! நீ உன் புருஷனை பிரிஞ்சு வரணும்னு முடிவு செய்தப்போ நான் உனக்கு என் நம்பர் குடுத்தேனே! ஏன் என்னைக் கூப்பிடலே?”

“புருஷனைப் பிரிஞ்சு வந்தேனா? அப்பிடின்னு யார் உங்ககிட்ட சொன்னது? நான் அவர்கிட்ட சொல்லிட்டுதான் இங்கே திருவிழாவுக்காக வந்தேன்”

“யார்கிட்டக் காது குத்துறே ப்ரியா? நீ சொல்லாமக் கொள்ளாமல் வராமத்தான் உன் புருஷன் ஊரெல்லாம் உன்னை வலை போட்டுத் தேடிக்கிட்டு இருக்கானா? திருவிழாவுக்கு வந்தவ இப்பிடித்தான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பாளா?”

அவள் உதட்டைக் கடித்தாள். இவனுக்குப் போய் பதில் சொல்லும் நிலை ஆகி விட்டதே என நினைத்தவள் கொஞ்சம் நிமிர்வுடனே,

“அது எங்களுக்குள் உள்ள பிரச்சனை. அதைப் பத்தி உங்களுக்கு என்ன? நான் இன்னிக்குத்தான் திருவிழாவுக்குப் போகல. கொஞ்சம் உடம்பு சரி இல்லாம இருந்தது.”

“திருப்பி திருப்பிப் பொய் சொல்றே பார்த்தியா!”

“நீ உன் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்புத்தூர் வந்த வரை நான் உன்னை ஃபாலோ பண்ணிட்டுத்தான் வந்தேன். கோயம்புத்தூர்ல இருந்து நீ கார்ல ஏறிட்டியா… அங்கேதான் உன்னை மிஸ் பண்ணிட்டேன். அப்புறம் கார் நம்பரை வச்சு ஒரு வழியா உன்னைக் கண்டுபிடிக்க அடுத்த நாள் ஆகிட்டுது. மேலும் பணத்துக்காக மதுரைக்கு வேற போய் வர வேண்டியாதாயிருச்சு” 

“அதுக்கப்புறமும் இங்கே வந்தா நீ இருக்கியா இல்லையான்னே முதல்ல தெரியல. யார்கிட்டக் கேட்டாலும் தெரியலன்னுட்டாங்க…வெளிய இருக்குதே ஒரு பொம்பளை… எமகாதகி… ப்ரியா இருக்காளான்னு எத்தனை தடவை கேட்டுருப்பேன். ‘அப்பிடி யாரும் இங்கே இல்ல’” மங்கா போலவே பேசிக் காட்டியவன் முகத்தில் குரோதம் அப்பட்டமாகத் தெரிந்தது. 

“காத்திருந்து காத்திருந்து ஒரு வழியா ஜன்னல் வழியா நீ நாய்க்கு சாப்பாடு வைக்கிறதப் பார்த்து நீ இருக்கிறேங்கிறதை உறுதிப்படுத்திக்கிட்டேன். உள்ளே எப்பிடி வர்றதுன்னு தெரியல…வீட்டை சுத்திக் கம்பி வேலி. தாண்ட முடியாதபடி வாசல்ல இந்தப் பொம்பளை…கடைசியா ஒரு யோசனை வந்துச்சு” என்றவன் தன் பாண்ட் பையில் கை விட்டு மங்காவிடம் காட்டிய அதே புகைப்படத்தை எடுத்து அவள் முகத்தின் முன் காட்டினான்.

அதைக் கண்டவள் அதிர்ச்சியில் “கோபால்! என்ன இது?”

“பின்னால் எதுக்காவது உபயோகப்படும்னு மார்பிங் மூலமா உன்னையும் என்னையும் கல்யாணக் கோலத்துல இருக்கிற மாதிரி போட்டோ ரெடி பண்ணி வச்சுருந்தேன். என்னோட மெயில்ல இருந்துச்சு அது. இன்னிக்குக் காலைல மேட்டுப்பாளையம் போய் பிரௌசிங் சென்டர்ல அதைப் பிரிண்ட் போட்டு எடுத்துட்டு வந்தது நல்லதாப் போச்சு. அதை பார்த்துதான் இந்த மொரட்டுப் பொம்பளை உள்ளே விட்டுச்சு.”

“இப்போ எதுக்கு இத்தனை அதிர்ச்சி ஆகிறே? நாம கல்யாணம் பண்ணிக்கத்தானே போறோம். அதை முன்னாலேயே போட்டோ எடுத்து வச்சுருக்கேன். இனிமேலும் உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது ப்ரியா. நீயும் உன் புருஷனை விட்டுட்டு வந்துட்ட. இனிமே நமக்கு என்ன தடை?”

அவன் அலட்சியமாகச் சொல்ல அவள் மிகவும் அதிர்ந்தாள்

‘இத்தனை கேவலமான பிறவியா இவன்…அடுத்தவன் மனைவி எனத் தெரிந்திருந்தும் அவளுடன் உள்ள பொய்யான புகைப்படத்தைக் காட்டி மங்காவை நம்ப வைத்து உள்ளே வந்திருக்கிறானே! இவன் சொன்னதை நம்பியா என் கணவனை நான் பிரிந்து வந்தேன். அன்று கோவிலில் இவன் சொன்னதில் எத்தனை சதவீதம் உண்மை… இல்லை அத்தனையும் பொய்யா? கடவுளே என்ன தவறு செய்து விட்டேன்’

கழிவிரக்கத்தில் அவள் தவித்து கொண்டிருந்த அந்த நொடிகளை மிக அழகாகத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவளை நெருங்கி இருந்தான் கோபால்.

திடுமென நிமிர்ந்தவள் தனக்கு மிக அருகில் வந்து விட்டிருந்தவனைக் கண்டு, 

“கோபால்! என்ன இது… உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? காதலாம்… கல்யாணமாம்… இதுக்கெல்லாம் நான் ஒத்துக்க வேணாமா? என்னமோ நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறீங்க!”

“ஒத்துக்கணும்… ஒன்னு நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க… இல்லைன்னா இந்த இடத்துல உடம்பால நீ என் மனைவி ஆகணும்… அது உன் புருஷனுக்குத் தெரிய வரணும்… அது போதும் எனக்கு… அதுக்கப்புறம் நான் செத்தாக் கூட எனக்குக் கவலை இல்ல”

அவன் முகத்திலும் கண்களிலும் அப்படி ஒரு வெறி தாண்டவமாடியது.

அவன் வார்த்தைகளினால் உண்டான அருவருப்பையும் தாண்டி அந்த வெறி அவளுக்குள் ஒரு குளிரை உண்டாக்கி நடுக்கத்தை உடல் முழுவதும் பரப்பினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, 

“என்ன கோபால் சும்மா பயம் காட்டுறீங்க…நீங்க மங்காவை ஏமாத்திட்டுதானே உள்ளே வந்துருக்கீங்க… இப்போ நான் சத்தம் போட்டு அவளைக் கூப்பிட்டு நீங்க என் கணவர் இல்லைன்னு சொன்னா உங்க கதி என்ன ஆகும்னு தெரியுமா…மொரட்டு பொம்பளைன்னு சொன்னீங்களே… அவ கைல அடி வாங்க வேணாம்னு நினைச்சீங்கன்னா மரியாதையாய்ப் போய்க் கதவைத் திறங்க”

அவனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் தான் தப்பித்துக் கதவுப் பக்கம் போவது எப்படி என்பதைத்தான் அவள் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

மங்காவை நினைத்து அவன் முகத்தில் ஒரு கணம் பயம் தோன்றினாலும் அடுத்த கணம் பயம் மாறி மீண்டும் வெறி தோன்றியது

“முதல்ல உன்னை விட்டாதானடி கத்துவே… கூப்பிடுவே…” என்றவாறு அவளை அவன் நெருங்க, பின்னால் கட்டில் இடிக்க, அவள் அவனைத் தள்ளி விட்டு முன்னால் செல்ல முயற்சித்தாள்.

ஆனால் இந்தியா வந்ததில் இருந்து காணாததைக் கண்டவனாக, கறியும் சோறுமாக ஆப்பிரிக்காவில் சம்பாதித்து, கையிலிருந்த மொத்த பணத்துக்கும் உண்டு கொழுத்திருந்த அவனை, கடந்த சில நாட்களாகவே சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தளர்ந்து போய் இருந்த அவளால் நகர்த்தக் கூட முடியாமல் அவன் கைகளிலேயே மாட்டிக் கொண்டாள்.

அவன் தொடுகை அருவருப்பை மூட்ட முன்னால் செல்வது முடியாவிட்டாலும் பரவாயில்லையென, தன் பலத்தை எல்லாம் திரட்டி அவனிடம் இருந்து விடுபட்டாள். 

அவள் திமிறிய வேகத்தில் கொஞ்சம் பின்னால் சென்றிருந்தான் கோபால். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கட்டிலுக்கு பின்னால் நகர்ந்து சென்று விட்டது மட்டும் அல்லாமல் முடிந்த மட்டும் சத்தமாக ‘மங்கா மங்கா’ என்று கத்த ஆரம்பித்தாள்.

அதற்குள் சுதாரித்திருந்தவன் அவள் அருகில் வந்து கையால் அவள் வாயைப் பொத்த முயன்றான்

அவனை அதைச் செய்ய விடாமல் தலையை இடம் வலமாக ஆட்டியவள் வாயைப் பொத்தியிருந்த கையைக் கடிக்க முற்பட அவன் பிடி தளர மீண்டும் அவனைத் தள்ளி விட்டு முன்னேற முயற்சித்தாள்

அதே நேரம் வெளியே கதவின் அருகே சத்தமாக ஏதேதோ குரல்கள் கேட்க அதைத் தொடர்ந்து கதவையும் யாரோ உடைக்க முற்பட கோபாலின் முகத்தில் பயமும் பிரியம்வதாவின் முகத்தில் கொஞ்சம் நிம்மதியும் தோன்றியது.

ஆனால் அந்த நிம்மதியை அவன் கைகளில் புதிதாக முளைத்த கத்தி குலைத்தது.

“இன்னையோட உன் கணக்கைத் தீர்த்துடறேன். இனி எனக்கு மட்டும் இல்ல உன் புருஷனுக்கும் நீ கிடைக்கக் கூடாது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது கதவு படாரென உடைப்படும் சத்தம் கேட்டு, மங்காவுக்கு இத்தனை பலமா என்ற ஒரு கண யோசனையில் திரும்பியவன் அங்கு அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்த விஜயாதித்தனைக் கண்டு அதிர்ச்சியில் கல்லானான்.

போடும் பொய்த்திரையைக் கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாததது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது

Advertisement