Advertisement

“சொல்றதையும் சொல்லிட்டு இப்பிடிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம் கோபால்? என்ன நடந்ததுன்னு இப்போ சொல்லப் போறீங்களா இல்ல நான் என் கணவர்கிட்டயே கேட்டுக்கட்டுமா?”

“சொல்றேன். ஆரம்பத்துல இருந்தே உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ப்ரியா…ஆனா படிப்பு அழகு அந்தஸ்துன்னு நமக்கு இடையில பெரிய இடைவெளி இருந்துச்சு. நீங்க மிடில் கிளாஸ்தான்னாலும் நான் அது கூட இல்லையே… அதுனால எப்படியாவது ஒரு வேலையைத் தேடிக்கிட்டு உன்கிட்ட வந்து பேசணும்னு நினைச்சிருந்தேன்” 

“அப்போதான் உன் புருஷனோட ஆள் உன் புருஷன்கிட்ட என்னத் தூக்கிட்டுப் போனான்…. எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க… நான் உன்னைக் காதலிக்கிறதைச் சொன்னேன். அப்போதான் விஜய் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறது எனக்கு தெரிஞ்சுது… நான் அவன் கால்ல விழுந்து கதறினேன். நீ இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்னு கெஞ்சினேன். ஆனா அவன் காதுலயே போட்டுக்கல” 

“கடைசில கூட இருந்தவன்கிட்ட இனிமே நான் இவனைப் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டான். அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு அப்போ புரியல. அதுக்கப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னும் புரியல.பெரும்பாலான நேரங்கள் மயக்கத்துலயே இருந்தேன். நடு நடுவிலே முழிப்பு வரும். சாப்பாடு கொடுப்பாங்க…இப்பிடி எத்தனை நாள் ஓடுச்சுன்னு கூட அப்போ எனக்குத் தெரியல.” 

“அதுக்கப்புறம்தான் கிட்டத்தட்டப் பதினைஞ்சு நாள் இப்படி இருந்துருக்கேன்னு புரிஞ்சுது… எனக்கு நினைவு முழுசா தெரிஞ்சப்போ நான் இந்தியாவிலேயே இல்ல. அது என்ன நாடுன்னு கூட எனக்கு முதல்ல தெரியல. ஒரே கருப்பர்களா இருந்தாங்க…அவங்க பேசுற பாஷை எனக்குப் புரியல. நான் பேசின அரைகுறை இங்கிலீஷ் அவங்களுக்குப் புரியல”  

“ரொம்ப நாள் கழிச்சுதான் ஆப்பிரிக்கா காட்டுக்குள்ள  ஒரு சுருட்டு தயார் பண்ற பாக்டரில நான் இருக்கேன்னு எனக்குப் புரிஞ்சுது. அங்கேதான் எனக்கு வேலை… வேலை ஒழுங்கா செய்யலைன்னா சவுக்கால் முதுகைப் பிளந்துருவங்க…” என்றவன் தன் கையிலிருந்த அலைபேசியில் சில படங்களை அவளுக்குக் காண்பித்தான்…

அதை பார்த்தவள் வாயடைத்துப் போனாள்.

“இதெல்லாம் என்னன்னு தெரியுதா…? என்னோட முதுகு இப்போ இப்பிடித்தான் இருக்கு…ஒரு வேளை உன்னைத் தனிமையில் சந்திக்க முடியலைன்னாக் காட்டுறதுக்காக என் நண்பனை விட்டு போட்டோ எடுக்கச் சொன்னேன்.” 

“எப்பிடியாவது தப்பிச்சு இந்தியா வந்து உன்னைப் பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லிடணும்னு அங்கே இருந்து தப்பிக்க நிறைய முறை முயற்சி பண்ணி இருக்கேன். ஒவ்வொரு முறையும் என் முதுகில் அடையாளம் விழுந்ததுதான் மிச்சம்.”

“இத்தனை நாட்களுக்கப்புறம் இப்போதான் ஒரு வாரம் முன்னால ஒரு நல்ல வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இருந்து தப்பிச்சு இந்தியா வர்ற ஃப்ளைட்ல சரக்கு பெட்டிங்களுக்குள்ள ஒளிஞ்சு ஏறி ஒரு வழியா வந்து சேர்ந்தேன்.ரெண்டு நாளா உன் வீட்டு முன்னாலதான் மறைஞ்சு இருந்து பார்த்துட்டு இருந்தேன்.நேத்துதான் நீ வெளிய வந்தே… ஆனால் உன்னைப் பார்க்க முடியல. இன்னிக்கு உன்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே வந்தேன். நல்லவேளை பார்த்துட்டேன்… என் மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லிட்டேன்”

“உனக்குக் கல்யாணம் ஆனது ஆகிடுச்சு. இனிமே ஒண்ணும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சாலும் என்னவோ உன்னைப் பார்த்து உன்கிட்ட இந்த விஷயம்லாம் சொல்லி உன் புருஷனைப் பத்தி எச்சரிக்கணும்னு தோணுச்சு” 

“ஆயிரம் இருந்தாலும் இப்போ நீ அவன் மனைவி…அதுனால அவன் செய்ஞ்ச தப்பக் கூட மன்னிக்கலாம். ஆனா விஜய்யோட உண்மை முகம் என்னன்னு உனக்கு தெரிஞ்சாதான் நீ அவன்கிட்ட கவனமா நடந்துக்க முடியும்னு நினைச்சேன்… அதுக்காகத்தான் வந்தேன்…” 

“இந்த தலைமுறைப் பொண்ணா இருந்தாலும் மஞ்சள் கயிறு மேஜிக்தான் முதல்ல வேலை செய்யும். அதுனால உன் புருஷனை மன்னிச்சுருவேன்னு தெரியும் எனக்கு… இருந்தாலும் கொஞ்சம் கவனமா நடந்துக்கோ… எந்தக் காலத்துலயும் உன் புருஷனுக்குப் பிடிக்காத எதையும் செய்யாதே! அப்புறம் உன் கதியும் என்னை மாதிரி ஆகிடும்…”

மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தான் சொல்ல நினைத்த விஷயங்களை கவனமாக அதுவும் அவளுக்கு நல்லது நினைத்தே தான் இவ்விதம் செய்ததாகத் தோன்றும்படி மிக சாமர்த்தியமாகச் சொல்லி முடித்தான் கோபால்.

அவன் இத்தனை பேசியும் எந்த பதிலும் சொல்லாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து ‘சரியான கல்லுளிமங்கி ஏதாவது சொல்றாளா பாரு’ என மனதுக்குள் அவளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தவன் அவள் அவன்புறம் திரும்பவும் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டான்.

“நீங்க இந்தியா வந்துட்டீங்கன்னு விஜய்க்குத் தெரியுமா?”

“ம்ஹூம் தெரியாது…நீ சொல்லுவியா? சொல்லிடாதே… முதல்ல என்ன நாடு கடத்ததான் செய்தான்… இப்போ நான் உன்கிட்ட உண்மை எல்லாம் சொல்லிட்டேன்னு தெரிஞ்சா என்னைக் கொலையே பண்ணிருவான்… ப்ளீஸ் ப்ரியா! என்னைக் காட்டிக் கொடுத்துடாதே…நான் அவன் கண்ணுல படாம  நாட்டுல ஏதாவது ஒரு மூலைல வாழ்ந்துட்டுப் போய்டுறேன்.நான் சொன்ன விஷயங்களையும் அவன்கிட்டக் கேட்டுடாதே… நான் தொலைஞ்சேன். சரி ப்ரியா நான் கிளம்புறேன்” என்றவன் அவள் கையில் ஒரு சிறிய காகிதத் துண்டைக் கொடுத்தான். “இது என் நம்பர்… ஒரு வேளை என்னை தொடர்பு கொள்ளணும்னு தோணினாக் கூப்பிடு…” என்று விட்டுக் கிளம்பினான்.

பிரியம்வதா எப்படிக் கோவிலில் இருந்து வெளியே வந்தாள்… எப்பிடிக் காரில் ஏறினாள்… வீட்டுக்குள் வந்து மாடி வரை எப்படிச் சென்றாள் என்று கேட்டால் அவளுக்கே அது தெரியாது. இயந்திர பொம்மை போல் தங்கள் படுக்கை அறைக்கு வந்தவள் அப்படியே யோசனையில் ஆழ்ந்து விட்டாள். 

எப்படி யோசித்தாலும் அவளுக்கு கிடைத்த பதில்கள் இரண்டு. 

ஒன்று அவர்களது ஹோட்டல் சந்திப்புக்கு முன் அவளைச் சந்தித்தது பற்றிக் கணவன் அவளிடம் வேண்டுமென்றே மறைத்திருக்கிறான்…  

இரண்டு அவளைக் காதலித்த ஒரே குற்றத்துக்காக ஒரு அப்பாவி மனிதனை நாடு நகரம் சொந்த பந்தத்தை துறந்து அந்நிய நாட்டில் படாத கஷ்டமெல்லாம் படச் செய்திருக்கிறான். 

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அவள் கணவன் அவளைச் சந்தேகப்பட்டிருக்கிறான். 

ஆம்! திருமணத்துக்கு பின்பான அவனது நடவடிக்கைகளுக்கு அது ஒன்றுதான் சரியான விளக்கம்.

கோபாலைக் காதலித்தவள் பணத்தைக் கண்டதும் தன் பக்கம் தாவி விட்டாள் என நினைத்திருக்கிறான்…அதன் விளைவே அவன் நடத்தை.

கோபால்தானே அவளைக் காதலித்ததாகச் சொல்லி இருக்கிறான்… அவள் அவனைக் காதலித்ததாக சொல்லவில்லையே! பின் அவள் கணவன் எப்படி அவளைச் சந்தேகப்படலாம்? அப்படியே ஒரு எண்ணம் தோன்றி இருந்தால் கூட  அவளிடம் கேட்டிருக்கலாம்தானே!

சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டு அவளைப் பழிவாங்க முயன்றவன், உடல்நிலை சரியில்லாத போது மனைவி நடந்து கொண்ட முறையில் சந்தேகம் போய் நம்பிக்கை வந்து விட்டது.

அப்போதாவது நடந்த உண்மைகளைச் சொல்லி இருக்கலாம்தானே!

அவன் வாய்மொழியாக விஷயம் தெரிய வராமல் அந்நியன் ஒருவன் வழியில் கணவன் குற்றம் சாட்டப்பட்டதை அவளால் தாள முடியவில்லை. 

என்ன செய்ய… என்ன செய்ய…என அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடை போட்டவள்… கணவன் வந்த பின் அவனிடம் நேரடியாகக் கேட்டு விடலாம் என முடிவு செய்தாள்.

கேட்டால் உன் மேல் உள்ள பிரியத்தினால் இப்படிச் செய்து விட்டேன் என அவன் கூறினால் என்ன செய்வது? அவளுக்கே அப்படித்தான் தோன்றியது.

அவளை எங்கோ பார்த்து அவளைத் திருமணம் செய்ய ஆசைப் பட்டிருக்கிறான். அந்த நேரம் ஹோட்டலில் சந்தித்து என்னென்னவோ நடந்து விட்டது. ஆம் ஹோட்டலில் நடந்த விஷயங்கள் முற்றிலும் எதிர்பாராதவை என்றே அவளுக்குத் தோன்றியது.

பின்பும் திருமண முடிவில் அவனுக்கு மாற்றமில்லை… ஆனால் கோபாலைச் சந்தித்த பின் சந்தேகப் பேய் பிடித்து விட்டது. 

கணவன் தன்னைப் பற்றி விவரங்கள் சேகரித்ததை அவளால் ஒத்துக் கொள்ள முடிந்தது… ஆனால் அதை அவளிடம் சொல்லவில்லை என்பதற்கு எந்த நியாயமான காரணமும் அவளுக்குத் தோன்றவில்லை.

அதே போல் கோபாலின் மேல், தான் காதலிக்கும்… திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதில் கோபமும் பொறாமையும் தோன்றியதை நியாயம் என எடுத்து கொள்ளலாம். ஆனால் எந்த தைரியத்தில் அவனை நாட்டை விட்டுத் துரத்தும் முடிவை அவன் எடுக்கலாம்… அந்த உரிமையை அதிகாரத்தை அவனுக்குக் கொடுத்தது யார்…

வருங்கால மனைவி என்ற முறையில் அவளைத் தண்டிக்கவாவது கொஞ்சம் உரிமை இருக்கிறது…ஆனால் அவளைக் காதலித்த குற்றத்துக்கு முன்பின் தெரியாத ஒருவனை அவன் எப்படி தண்டிக்கலாம்?

ஒருவேளை கோபாலுக்கு நெருங்கிய உற்றார் உறவினர் இருந்திருக்கலாம். அவர்கள் அவனைச் சார்ந்து வாழ்ந்திருக்கலாம்… அவன் இல்லாமல் அவர்கள் கதி என்ன ஆனதோ… 

அவள் கணவன் இத்தனை மனிதத்தன்மையற்றவனா? மற்றவரைப் பற்றி நினைக்காமல் தன் சுகம், தன் மகிழ்ச்சி மட்டுமே பெரிதென நினைப்பவனா?

வனவாசத்தில் இருந்த போது அவன் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது…எனக்குத் தீங்கிழைத்தவர்களை உடனே இல்லாவிட்டாலும் எப்படியாவது பழி வாங்கி விடுவேன் என்று சொன்னானே… 

அதுதான் அவன் இயல்பு…அப்படியானால் இப்போது அவள் மீது அவன் காட்டும் நேசமும் நடிப்புத்தானா…அவளையும் பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறானா…

அவள் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

அவன் கைகளில் காதலில் கசிந்துருகிக் கிடந்து அதற்கு சமமான… சொல்லப் போனால் அதை விட அதிகமான கணவனின் காதலில்  திகட்டத் திகட்டத் திளைத்திருந்தவளுக்கு அந்தக் காதல் பொய் என அரைக்கணம் கூட நினைக்க முடியவில்லை.

இல்லை அவள் கணவனின் காதல் பொய் இல்லை…ஆனால் என்னதான் காதல் இருந்தாலும் அவன் செய்ததை சரியென அவளால்  ஒப்புக் கொள்ள இயலவில்லை.

நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க ஒரு முடிவுக்கு வந்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

கணவன் எப்போது வருகிறான் என யோசித்தாள். புதனன்று கிளம்பி இருந்தான்…அன்று வியாழன் அப்படியானால் மறுநாள் மாலை வந்து விடுவான். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தவள் மேலும் சில நிமிடங்கள் யோசித்து விட்டுத் தன் அலைபேசியை எடுத்தாள்.

கண்ணுக்குள்ள உன்னை வச்சேன்
நெஞ்சுக்குள்ள பூஜை செய்ஞ்சேன்
நித்தம் நித்தம் உன்னை என்ணி
நெருப்புக்குள்ள நானும் நின்னேன்
என்னைப் போல பாவப்பட்ட
பொண்ணு இந்த ஊரில் இல்ல
கல்லும் கூட என்னக் கண்டா
கண்ணீர் விட்டு உருகி நிற்கும்
நேசம் என் பாசம் இதில் ஏது வெளி வேஷம் 
இது என்றும் உந்தன் சொந்தமே

Advertisement