Advertisement

அத்தியாயம் 33

டெல்லி போன அன்று இரவு பத்து மணி அளவில் பிரியம்வதாவை அலைபேசியில் அழைத்தான் விஜய்.

“வதும்மா!”

“ம்ம்ம்…”

“கோபமா?”

“இல்ல குளிர்ச்சியா இருக்கேன்”

அவள் குரலிலேயே அவள் கோபத்தின் அளவை உணர்ந்து கொண்டவன் “சாரிடா! என்ன பண்ணச் சொல்றே? உடனே பிளான் பண்ணி வந்தனால பாரு… மினிஸ்டர்கிட்ட சைன் வாங்கியாச்சு. இன்னிக்கு விட்டிருந்தால் இன்னும் ஒரு மாசம் கழிச்சுதான் அவரைப் பிடிச்சிருக்க முடியும். இப்போ நம்ம வேலை எந்தத் தடங்கலும் இல்லாம நடக்கும்ல.”

“ம்ம்ம் சரி! அதுதான் வேலை முடிஞ்சுடுச்சே! கிளம்பி வர வேண்டியதுதானே”

அவன் சிரித்து கொண்டான்.

“வேலை ஒரு மாதிரி முடிஞ்சுருச்சுதான்… இருந்தாலும் இங்கே தங்கி சில பல இடங்களுக்குப் போய் சில பல ஆட்களை சந்திச்சாத்தானே குஜாலா இருக்கும்.”

அவன் குரலில் அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

“என்ன சொல்றீங்க ஆதி?”

குரலைக் கிசுகிசுப்பாக மாற்றிக் கொண்டு “இங்கே பம்பாய் மாதிரி சூப்பரான இடங்கள்லாம் இருக்கு செல்லம். அங்கெல்லாம் போய்ட்டு வந்தா இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்னு தெரிஞ்சவங்க சொன்னாங்க” எனவும் அலைபேசியைத் தன் காதுகளை விட்டு விலக்கித் தன் கணவனிடம்தான் பேசுகிறோமா என அதை சந்தேகமாகப் பார்த்தாள்.

“என்னடா பதிலே இல்ல?”

“நீங்க கட் பண்ணுங்க. நான் வீடியோ கால்ல வர்றேன்”

“ஊப்ஸ்!” என்றவன் “போச்சு நல்லா மாட்டிக்கிட்டியேடா ஆதி” எனக் குரலில் சலித்துக் கொண்டவன் அதற்கு நேர்மாறாக சிரித்துக் கொண்டிருந்தான்.

அவள் வாட்ஸ்அப்பில் அழைக்க  அதை ஆன் செய்து முன்னால் வைத்தான்.

வெங்காயச் சருகு நிறத்தில் சாட்டின் இரவு உடையில் தேவதை போல் இருந்தவளை கண்டதும் அவனுக்குக் கைகள் பரபரத்தன.

அதற்குள் அவள் பேச ஆரம்பித்தாள்.

“எங்கே முதல்ல சொன்னதை இப்போ என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்?”

அவள் சவாலிலேயே என் கணவனைப் பற்றி எனக்குத் தெரியும் என்ற செய்தி மறைந்திருக்க அவனுக்கு  மனதின் ஓரத்தில் கர்வம் துளிர்த்தது.

கைகளை உயரே தூக்கியவன் “உன்னைப் பார்த்ததுமே டோட்டலா பிளாட் ஆகியாச்சு. இதுல கண்ணை வேற பார்த்துட்டா அவ்வளவுதான் எல்லாத்தயும் மறந்துட்டு மூட்டையைக் கட்டிருவேன்.”

“அது அந்த பயம் இருக்கட்டும்” என சிரித்தவளின் புன்னகையில் அவன் மனம் கொள்ளை போனது.

“சரி இப்போ சொல்லுங்க வேலை முடிஞ்சும் ஏன் அங்கே இருக்கீங்க…?”

“மினிஸ்டர்கிட்டக் கையெழுத்து வாங்கியாச்சு…அதைச் சொல்லியே இன்னும் சிலர்கிட்ட வேலை முடிக்க வேண்டி இருக்கு… நம்ம கிளம்பிட்டாத் தூக்கிக் கிடப்புல போட்டுடுவாங்க… அதுதான் நாளை ஒரு நாளும் இருந்து செய்யுற வேலையை முழுசா செய்ஞ்சுட்டு வந்துடலாம்னு…”

“சரி எதுக்கு என்னை மதியம் வீட்டுக்கு வரச் சொன்னே? எனக்கு சுத்தமா மறந்து போச்சு. இங்கே வேலை எல்லாம் முடிஞ்சப்புறம்தான் நீ சொன்னது ஞாபகம் வந்தது.”

“அதெல்லாம் சொல்ல முடியாது. என்னைத் தவிக்க விட்டுட்டு அவசர அவசரமாக் கிளம்பிப் போனீங்கள்ல. இங்கே வந்து கேக்குற விதமா மன்னிப்புக் கேட்டாதான் விஷயம் சொல்லப்படும்”

“அதென்ன கேக்குற விதமா?”

“அது உங்களுக்குத்தான் தெரியணும்”

நிமிர்வாகச் சொல்ல முயன்றாலும் அவள் முகம் சிவந்து குரல் குழைந்தது.

“ஏய் ப்ளீஸ்டி… என்ன விஷயம்னு சொல்லு…சின்ன க்ளூவாவது குடேன்?”

“ம்ம்ஹூம்… நீங்க நேர்ல வாங்க… நான் சொல்றேன். இப்போ போய் சமர்த்தாத் தூங்குங்க.” என்று விட்டு  இணைப்பைத் துண்டித்தாள். 

மறுநாள் காலை அவள் கண்ணபிரானுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது அலைபேசி அடித்தது. 

விஜய்தான்  அழைத்திருந்தான்.

“வது! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு”

“என்ன ஆதி இது… ஹெல்ப் அது இதுன்னு… சொல்லுங்க என்ன செய்யணும்?”

“மேல நம்ம ட்ரெஸ் கப்போர்ட்ல ஒரு சீக்ரெட் லாக்கர் உனக்குக் காட்டிக் குடுத்துருக்கேன்ல. அதுல ஒரு சாவி இருக்கும். அதை எடுத்துட்டு ஆஃபீஸ் போய் அங்கே என் ட்ராவத் திறந்து அதுல இருக்கிற ஒரு ஃபைலை எடுத்து அதுல இருந்து எனக்கு கொஞ்சம் இன்பர்மேஷன் அனுப்பணும்.” 

“இதோ இப்போ உடனே கிளம்புறேன்.” 

“சாப்ட்டியா?” 

“இல்ல”

 “சாப்பிட்டுக் கிளம்பு. எனக்கு பத்து மணிக்குள்ள சொன்னாப் போதும்” 

“சரி” என்றவள் ஏற்கனவே கோவிலுக்குச் செல்வதற்காகத் தயாராகி இருந்ததனால் ஐந்தே நிமிடங்களில் உணவை முடித்துக் கொண்டு அவன் சொன்ன சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 

அலுவலகத்தில் அவன் கேட்ட கோப்பை எடுத்து அவன் கேட்ட விவரங்களைக் கொடுத்த பின் அதை மீண்டும் உள்ளே வைக்கப் போனாள்.

 அது கொஞ்சம் பெரிய கோப்பாக இருந்ததால் அடியில் வைத்து விடலாம் என நினைத்து மேலே உள்ளதைத் தூக்க அதில் புகைப்படம் மாதிரி ஏதோ தெரியவும் இயல்பான ஆர்வம் உந்த கையில் இருந்ததை உள்ளே வைத்து விட்டு அந்த புகைப்படம் இருந்த கோப்பைக் கையில் எடுத்தாள்.

அட்டையிலேயே அவள் பெயர் எழுதி இருக்கவும் ஆச்சர்யத்துடன் திறந்து பார்த்தாள்.

அவள் படம்தான்… அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த போது மணமகன் வீட்டாருக்குக் கொடுப்பதற்காக எடுத்தது…ஆனால் இது ஆதியின் கையில் எப்படி வந்தது…தந்தையோ அவளோ இதைக் கொடுத்ததாக நினைவு இல்லையே…

அந்தக் கோப்பில் மேலும் இரண்டு புகைப்படங்கள் இருந்தன. ஒன்றில் அவள் வங்கியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இன்னொன்றில் அவள் வண்டியில் அமர்ந்தபடி கையில் தலைக்கவசத்துடன் கோபாலுடன் பேசிக் கொண்டிருந்தாள். 

இதெல்லாம் என்ன என யோசித்தவளின் கண்ணில் அந்த புகைப்படங்களின் ஓரத்தில் தேதி இருந்தது கண்ணில் பட்டது…

இந்தத் தேதி… இது அவர்கள் இருவரும் ஹோட்டலில் சந்தித்துக் கொள்வதற்கு முந்தைய தேதி அல்லவா! அப்படியானால் ஹோட்டலில் நடந்தது முதல் சந்திப்பு இல்லையா? அதற்கு முன்பே ஆதிக்கு அவளைத் தெரியுமா…?

கொஞ்சம் நினைவுகளைக் கசக்கிப் பிழிய முதல் நாள் ஹோட்டலில் பார்த்த அன்றே பிரியம்வதா என அவன் பெயர் சொல்லி அழைத்தது நினைவில் வந்தது… அன்றே அவளுக்கு ஏதோ உறுத்தியது… பிறகு ஞாபகம் வந்த போதும் ஒரு வேளை நித்திலாவின் காதலன் தினகரன் தன்னை அழைத்ததை ஹோட்டலின் உள்ளிருந்த போது கேட்டிருக்கலாம் என நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டாளே தவிர இதற்கு இப்படி ஒரு பின்புலம் இருக்கக் கூடும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.

மேலும் பார்க்கப் பார்க்க அவளது எல்லா விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்துப் போனாள்.

அவள் காலையில்எழுந்திருக்கும் நேரம், அலுவலகம் செல்லும் நேரம், வீடு திரும்பும் நேரம் என ஒவ்வொரு விஷயமும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கோப்பை மூடி வைத்தவள் யோசனையில் ஆழ்ந்தாள். 

அப்படியானால் கணவன் திருமணத்துக்கு முன்பு அதாவது திருமணப் பேச்சு வருவதற்கு முன்பாகவே அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்திருக்கிறான். ஆனால் இத்தனை நாட்களில் அவளிடம் இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. 

திருமணத்துக்கு முன்பு தன்னைக் காதலித்தானா… இல்லை கதைகளில் வருவது போல் கண்டதும் காதல் கொண்டு சிறை எடுப்பது போல் எடுக்க நினைத்தானா… ஒருவேளை அந்த ஹோட்டலில் நடந்தது எல்லாம் நாடகமா… அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

எடுத்தது எடுத்தபடியே மேஜை இழுப்பறையில் வைத்துப் பூட்டியவள் கோவிலுக்குச் செல்வதா வேண்டாமா என யோசித்தாள். கருவுற்றிருக்கும் நிலையில் கடவுளின் ஆசி பெற வேண்டிக் கிளம்பியதைத் தள்ளிப் போட வேண்டாம் என நினைத்தவள் தன் இஷ்ட தெய்வமான வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றாள்.

கண்கள் மூடி மனமுருக வேண்டிக் கொண்டாள்.

‘பிள்ளையாரப்பா! ஆரம்பத்துல என்னென்னவோ நடந்துருந்தாலும் இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம். இதை அப்பிடியே நிலைக்க வையப்பா. என் ஆதியும் என் குழந்தையும் நல்லா இருக்கணும்’ என வேண்டிக் கொண்டவள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு பிரகாரம் சுற்றி வந்து ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் பிறகு அவள் அருகில் யாரோ அமர்வது தெரிந்ததும் இயல்பாகத் திரும்பிப் பார்த்தாள்.

‘இது… இது… எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு’ என அவள் யோசித்து கொண்டிருக்க, 

“என்னை அடையாளம் தெரியலையா ப்ரியா?”

இந்தக் குரல் இதை எங்கோ கேட்டிருக்கிறோம் என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று நினைவு வந்தது…

“கோபால்! நீங்களா… என்ன இப்பிடி மாறிப் போய்ட்டீங்க?”

கோபால் ஏழை என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நன்றாக உடை உடுத்திப் படியத் தலை வாரிப் பெரிய வீட்டுப் பிள்ளை போல் வருவான். அவன் இப்போது ஆள் மெலிந்து… கண்கள் உள்ளே போய்… கன்னம் எல்லாம் ஒடுக்கு விழுந்து… பஞ்சத்தில் அடிப்பட்டவன் போல் இருப்பதைப் பார்த்தவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

அன்று காலையில்தான் அவன் நன்றாக இருந்த புகைப்படத்தைப் பார்த்தாள். அதற்குள் அவனை இப்படி ஒரு நிலையில் சந்திக்க வைத்த விதியை என்னவென்று சொல்வது.

“என்னாச்சு கோபால்? ஏன் இப்பிடி இருக்கீங்க? என் கல்யாணத்துக்குப் பத்திரிக்கை கொடுக்க உங்களைத் தேடினேன். ஆனால் அப்போ நீங்க எங்கேன்னு யாருக்குமே தெரியல…”

“உன் புருஷன்கிட்டக் கேட்டிருந்தா சொல்லி இருப்பானே ப்ரியா”

இவன் யார் தன் கணவனை அவன் இவன் எனச் சொல்வதற்கு என நினைத்தவள், 

“முதல்ல மரியாதையாப் பேசுங்க கோபால்” என்று சட்டென்று சொல்லி விட்டாள். 

“புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரிப் பேசுறாங்கையா” என வாய் விட்டே சொன்னவன் “என்னை ஊரை விட்டுத் துரத்தினதே உன் புருஷன்கிறது மனசுல இருக்கும் போது நான் அவனுக்கு எப்படி மரியாதை கொடுப்பேன்?”

அதிர்ச்சியில் அவள் வாயடைத்துப் போக அவன் மெல்லத் தலையை ஆம் என்பது போல் ஆட்டினான்.

“என்ன சொல்றீங்க கோபால்? எனக்கு ஒண்ணுமே புரியல. என் கணவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்காது என்று அவள் வாய் சொன்னாலும் காலையில் அவள் பார்த்த புகைப்படம் இல்லை ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அவளை எண்ண வைத்தது. அதை இவன் வாயிலிருந்து வரவழைக்க வேண்டும் என நினைத்தவள்.

“சொல்லுங்க கோபால் உங்களுக்கும் என் கணவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதுக்காக உங்களை ஊரை விட்டுத் துரத்தணும்?

அவள் வார்த்தைகளில் இருந்தே நடந்த எந்த விஷயமும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை எனக் கண்டு கொண்டவன் வேகமாக சொல்ல வேண்டியவற்றைத் தன மனதுக்குள் ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

“தனக்கு மனைவியா வரப் போறவளைக் காதலிக்கிறேன்னு ஒருத்தன் சொன்னா அவனைத் தூக்கி வச்சுக் கொஞ்சவா முடியும்?”

“வாட்! நீங்க என்னைக் காதலிச்சீங்களா?”

“ஆமாம் ப்ரியா உயிருக்கு உயிராக் காதலிச்சேன்…என் உயிருக்கும் மேலாக் காதலிச்சேன்” 

“சும்மா தத்து பித்துன்னு உளறாதீங்க கோபால்! உங்களை எனக்கு ரொம்ப வருஷமாத் தெரியும். அப்படிக் காதலிச்சுருந்தா முதலிலே சொல்லி இருக்கலாமே! நீங்க அப்பிடிச் சொல்லி இருந்தீங்கன்னா என் மனசுல அப்பிடி ஒரு எண்ணம் கொஞ்சம் கூட இல்லைன்னு உங்களுக்குத் தெளிவாப் புரிய வச்சுருப்பேனே” 

கோபால் பேசாமல் இருப்பதைக் கண்டவளுக்குக் கோபம் வந்தது. 

Advertisement